மனதை அமைதிப்படுத்தும் தேவதேவனின் கவிதைகள்
இசையமைப்பாளர் இளையராஜா
கோவை, டிச. 22: பாடலில் மனது ஒருமைப்படுவது போன்ற அமைதி தேவதேவனின் கவிதைகளில் உள்ளது என்று இசையமைப்பாளர் இளையராஜா கூறினார்.
கோவை விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் அமைப்பு, தமிழின் மூத்த படைப்பாளுமைகளைக் கெüரவிக்கும் விதமாக, சிறந்த எழுத்தாளர்கள், கவிஞர்களைத் தேர்ந்தெடுத்து, கடந்த 2010ஆம் ஆண்டு முதல் விஷ்ணுபுரம் விருதுகள் என்ற பெயரில் விருதுகள் வழங்கி வருகிறது.
அவ்வகையில் கடந்த 2010ஆம் ஆண்டு எழுத்தாளர் ஆ.மாதவனுக்கும், 2011ஆம் ஆண்டு எழுத்தாளர் பூமணிக்கும் விருது வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து நிகழாண்டுக்கான விருது, கவிஞர் தேவதேவனுக்கு வழங்கப்பட்டது.
இவ்விருது வழங்கும் விழா, கோவை மாநகராட்சி கலையரங்கில் சனிக்கிழமை நடைபெற்றது. விஷ்ணுபுரம் இலக்கிய வட்ட அமைப்பாளர் கே.வி.அரங்கசாமி வரவேற்றார். விழாவுக்குத் தலைமை வகித்த எழுத்தாளர் நாஞ்சில் நாடன் பேசியது:
தமிழுக்கு சேவையாற்றிய அற்புதமானவர்களை மட்டுமே தேர்வு செய்து இந்த விருது வழங்கப்படுகிறது. இதுவரை விருது பெற்றவர்கள் அந்த வகையைச் சேர்ந்தவர்களே, தேவதேவனும் இந்த விருதுக்கு உரித்தானவரே.
1986 காலகட்டத்தில் நான் எழுதிய ஒரு நாவலுக்கு தேவதேவன் எழுதிய ஒரு கவிதை வரிகளை தலைப்பாக வைக்க அனுமதி கேட்டுக் கடிதம் எழுதினேன். அவரது வரிகள் அத்தகைய அழகுடையவை.
சமூகத்தின் பால் அக்கறை கொண்ட எழுத்தாளர். இயற்கை, சுற்றுச்சூழலை நேசிக்கும் ஒரு கவிஞர். கூர்மையான தன்மை கொண்ட எழுத்துகள் இவருடையவை. இவரை ஒரு வாழும் கவிதை என்று கூறலாம்.
இளையராஜாவை நான் முதல் முறையாக சந்திக்கச் சென்றபோது அவரது காலில் விழுந்து, உங்களை நான் சரஸ்வதி வடிவமாகப் பார்க்கிறேன் என்றேன். பதிலுக்கு அவர், நீங்கள் மட்டும் என்னவாம் என்றார். அவரது பண்பு அத்தகையது.
அவரது இசையில் வெளிவந்த பிச்சைப் பாத்திரம் ஏந்தி வந்தேன் என்ற ஒரு பாடலில் இதை உணரலாம். தமிழில் தற்போது வரும் நவீனக் கதவிதைகளின் இலக்கு, சங்க காலக் கவிதைகளை நோக்கி இருக்க வேண்டும் என்றார்.
இசையமைப்பாளர் இளையராஜா பேசியது: ஒரு குழந்தை தன் தாயை அம்மா என்று அழைக்க எவ்வாறு அருகதை வேண்டுமோ, அதைப் போல் ஓர் எழுத்தாளரைப் பற்றிப் பேச நமக்கு அருகதை வேண்டும்.
தேவதேவனுக்கு விருது வழங்க எனக்கு என்ன அருகதை உள்ளது? எவ்வளவு கவிதைகள் எனக்குத் தெரியும் என்பது இங்கு முக்கியமான ஒன்று. எனவே கவிஞர்களையும், எழுத்தாளர்களையும் பற்றிப் பேச அருகதை வேண்டும்.
தன் வாழ்க்கைக்கும் எழுத்துகளுக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லாமல் எழுதுபவரே உண்மைக் கவிஞர் ஆவார். அத்தகைய இயல்பு தேவதேவனிடம் உள்ளது.
எழுத்து, பேச்சு, இசை இவற்றில் எது முதலில் தோன்றியது என்று என்னைக் கேட்டால், முதலில் தோன்றியது இசைதான்; அடுத்து தோன்றியது இசைதான்; அதற்கடுத்து தோன்றியதும் இசைதான் என்பேன். காரணம் எழுத்து, பேச்சு இவை இரண்டிலுமே இசை உள்ளது.
தாய், தந்தை, மனைவி உள்ளிட்ட யாராலும் செய்ய முடியாததை இசை செய்யும். கழுதை மாதிரி சுற்றித் திரியும் மனது (தன் மனது பற்றி) எவ்வாறு ஒரு பாடல் மூலமாக ஒருமைப்படுகிறதோ, அதைப் போன்ற அமைதி தேவதேவனின் கவிதைகளில் உள்ளது என்றார். பின்னர் கவிஞர் தேவதேவன் ஏற்புரையாற்றினார்.
முன்னதாக, ‘ஒளியிலானது – தேவதேவன் படைப்புலகம்’ என்ற பெயரில் எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய நூல் வெளியிடப்பட்டது. பிறகு கவிஞர் தேவதேவனுக்கு இசையமைப்பாளர் இளையராஜா விருது வழங்கி கெüரவித்தார்.
எழுத்தாளர்கள் ஜெயமோகன், ராஜகோபாலன், விமர்சகர் மோகனரங்கன், இயக்குநர் சுகா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
———————————————————
பட விளக்கம்:
கோவை, ஆர்.எஸ்.புரம், மாநகராட்சி கலையரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் விஷ்ணுபுரம் விருதை கவிஞர் தேவதேவனுக்கு வழங்குகிறார் இசைஞானி இளையராஜா. உடன் (இடமிருந்து) விஷ்ணுபுரம் இலக்கிய வட்டச் செயலர் கே.வி.அரங்கசாமி, மலையாளக் கவிஞர் கல்பற்றா நாராயணன், எழுத்தாளர் நாஞ்சில் நாடன், கவிஞர் மோகனரங்கன், எழுத்தாளர் ஜெயமோகன்.
நன்றி: தினமணி- கோவை பதிப்பு (23.12.2012)