பௌத்தமும் வேதாந்தமும்

அன்புள்ள ஜெ,

அம்பேத்கரின் தம்மம் கட்டுரை அற்புதமாக இருந்தது. பௌத்த தரிசனத்தை இன்னும் ஆழமாகப் புரிந்து கொள்ள உதவியது. சரளமாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கும் பல சொற்களை நின்று கவனிக்க வைத்தது. இந்தக் கட்டுரையை ஒரே வீச்சில் படித்து விட முடியவில்லை. நிறுத்தி நிறுத்தி, படித்த வரிகளையே மீண்டும் படித்து மனதில் இருத்திக் கொண்டு தான் தொடர்ந்து போக முடிந்தது. கட்டுரையின் பொருள் செறிவு ஒரு காரணம் என்றால் இன்னொரு காரணம், கட்டுரை பேசும் முக்கியமான சில விஷயங்களைப் பற்றி ஏற்கனவே உங்கள் தளத்திலும் (முக்கியமாக கீதை உரை), வேறு நூல்களிலும் படித்துச், சிந்தித்து வைத்திருந்த கருத்துக்கள் இடைமறித்ததால்.

குறிப்பாக “தர்மம்” என்னும் சொல் குறிக்கும் பொருள் பற்றி விளக்கங்கள்.

//பௌத்தம் பேசும் தம்மம் என்பது என்ன? நான் முன்னர் சொன்ன அத்தனை நிலைகளிலும் இருக்கும் ஒன்று. என்னுள் இருந்து என்னை உருவாக்கும் நியதி. இவையனைத்தையும் ஆளும் நெறி. காலத்தையும் வெளியையும் உருவாக்கி நிறுத்தும் விதி. அனைத்துமாக ஆகி நிற்கும் பிரபஞ்சமெனும் ஒழுங்கு. அதுவே பௌத்த தம்மம். (அம்பேத்கரின் தம்மம்-பகுதி-1)//

ஆம், வேதங்களின் ஆப்தவாக்கியங்கள் போல, பௌத்த தரிசனம் ‘தர்மம்’ என்பதை தனது ஆப்த வாக்கியம் போலவே – தர்மம் சரணம் கச்சாமி- என முக்கியத்துப்படுத்தி முன்னிறுத்தியிருக்கிறது.

பௌத்தம் பேசும் இந்த மகாதர்மத்திற்கான அடிப்படை இந்து மதம்/வேதாந்த மரபிலும் ஏற்கனவே இருந்த ஒன்றாகவே நான் கருதுகிறேன். குறிப்பாக உங்கள் கீதை உரையைப் படித்ததில் இருந்து.

//கீதையின் முதல் சொல்லே ‘தர்மஷேத்ரே’ என்று இருக்கிறது. ”அறநிலமாம் குருநிலத்தில்” என்று தொடங்கும் கீதை குருஷேத்ர களத்தை அறம் திகழ் மண்ணாகக் குறிப்பிடுகிறது. அது உண்மையா என்ன? அது அறத்திற்கும் அதற்கு எதிரான சக்திகளுக்கும் இடையேயான போர் என்று கூறுவதுகூட சற்று மிகைதான். பாண்டவர் தரப்பிலும் அறமீறல்கள் பல உள்ளன. அப்படி யோசிக்கும்போது இங்கு கூறப்படும் அறம் என்பது சாமானிய தளத்தில், நீதி என்ற பொருளில், நாம் குறிப்பிடும் மானுட அறம் அல்ல என்றே கொள்ள வேண்டும். பிரபஞ்சப் பேரியக்கத்தின் நியதியாக உள்ள ‘மகாதர்மம்’தான் இங்கே அறம் என்று கூறப்பட்டது. அதை மானுடம் சார்ந்த நன்மை தீமைகள், சரிதவறுகள் மூலம் அளக்க இயலாது. அது எளிய தர்க்க நியாயங்களுக்கு அப்பாற்பட்டது. ‘பிரபஞ்ச நியதியின் களமேயான குருஷேத்ர ரணபூமியில்’ என்று கீதை தொடங்குகிறது என்று வாசிக்கலாம். (கீதை:1 மகத்தான மனத்தடுமாற்றம்)//

மகாபாரதத்தின் குருக்ஷேத்ர யுத்தம் – தர்ம யுத்தம் என்றே அழைக்கப்படுகிறது. மகாதர்மத்தின் ஒரு பகுதியாக நடந்த யுத்தம், அதில் அர்ஜுனன் உள்ளிட்டோரின் சுதர்மமும் அடங்கும். குருமார்களையும், சொந்தங்களையும் கொன்றாவது நிலை நிறுத்தியாக வேண்டிய மகாதர்மத்தின் பொருட்டே ஒவ்வொருவரின் சுதர்மமும் செயல் பெறுகிறது. இந்த தர்ம யுத்தத்தில், தர்மம் என்பது ‘இவை அனைத்தையும் ஆளும் நெறி’ என்று பொருள் கொள்ளப்படும் போதே, அதனுள் ஒவ்வொருவரின் சுதர்மமும் அடங்குவதைப் புரிந்து கொள்ளமுடிகிறது.

அதே பாரதத்திலேயே பீஷ்மர் (பீஷ்மோபதேசம் ) சொல்கிறார், “தர்மோ ரக்ஷதி ரக்ஷித: தர்மமேவ ஹதோ ஹந்தி” – தர்மத்தைக் காப்பவனை தர்மம் காக்கும், தர்மத்தை அழிப்பவனை அதுவே அழிக்கும். தன்னறம் அல்லது சாமான்ய தளத்தில் கூறும் மானுட அறத்தை காக்காததினால் ஒருவன் அழிவான் என்பதை விட இந்த வாக்கியம் முழுமையான பொருளைத் தருவது “இந்தப் பிரபஞ்சம் உட்பட இங்குள்ள அனைத்தையும் நிலைநிறுத்தியிருக்கும் நியதி காக்கப்பட்டால் அதுவே அதன் அங்கமான நம்மையும் காத்துக் கொள்வதாகும், அதை அழித்தால் அது நமது அழிவாகத் தான் இருக்கும்” என்று பொருள் கொள்ளும் பொழுது தான்.

பௌத்த தரிசனத்தின் சில விஷயங்களை என்னால் வேதாந்த தரிசனத்திலிருந்து மாறுபட்டிருப்பதாக நினைக்க முடியவில்லை, அதன் இன்னொரு கோணமாகத் தான் எனக்குத் தெரிகிறது.

உதாரனமாக,

//நிர்வாணம் என்பது அனைத்தையும் களைந்துவிடல் அல்ல என்று அம்பேத்கர் சொல்கிறார். நிர்வாணம் என்பது அறிவின் நெருப்பில் நம்மைக் களைந்து எரிப்பது மூலம் அடையப்பெறுவது. ஒரு தூய்மையாக்கல் அது. ஆனால் அந்நெருப்பில் அனைத்தையும் எரிப்பதைப்பற்றி புத்தர் பேசவில்லை. அதில் திருஷ்ணையை- ஆசைகளை – எரிப்பதைப்பற்றியே பேசுகிறார். ஆம், அனைத்தையும் துறந்து அமைவதல்ல நிர்வாணம். அது இங்கே இந்த வாழ்க்கையில் ஆசைகள் மீதான அறிவின் கட்டுப்பாட்டுடன் வாழும் முழுமையான வாழ்க்கை மட்டுமே (அம்பேத்கரின் தம்மம், பகுதி-3)//

என்னும் பௌத்த சிந்தனை, பகவத் கீதையின் நாலாம் அத்தியாயமான ஞான கர்ம சந்யாச யோகம் கூறும் ‘செயலின் பலன் மீதான விருப்பத்தைத் துறந்த (கர்ம பல சந்யாசம்) நிலையை’ப் போன்று தான் எனக்குத் தோன்றுகிறது. குறிப்பாக இந்த அத்யாயத்தின் 14வது ஸ்லோகத்தில் இருந்து கடைசியான 42வது ஸ்லோகம் வரை, அதிலும் முக்கியமாக, ” எவனுடைய செய்கைத் தொடக்கங்களெல்லாம் விருப்ப நினைவு தவிர்ந்தனவோ, அவனுடைய செயல்கள் ஞானத் தீயால் எரிக்கப்பட்டனவாம்; அவனை ஞானிகள் அறிவுடையோனென்கிறார்கள் (கீதை, 4:19)” என்னும் ஸ்லோகம் மேலே சொன்ன பௌத்த சிந்தனைக்கு மிகவும் நெருங்கியது.

மேலும், //பௌத்தம் சொல்லும் ஆசைகளைத் துறத்தில் என்பது இயல்பான உலகியலாசையை நிராகரித்தல் அல்ல. பேராசையைத் துறத்தல் மட்டுமே. ஏனென்றால் பேராசை அறிவுத்தேடலுக்கு எதிரானது. அறிவு அளிக்கும் விடுதலையை மறுப்பது. பௌத்தமோ அறிவின்விளைவான விடுதலையைப்பற்றிப்பேசும் ஒரு ஞானப்பாதை (அம்பேத்கரின் தம்மம், பகுதி-4) என்னும் பௌத்த சிந்தனையை, உங்கள் கீதை உரையில் //பற்றில்லாமல் பலன் கருதாமல் செயலை ஏன் செய்ய வேண்டும் என்பதற்கான காரணம் கீதையிலேயே தொடர்ந்து மிகத் தெளிவாகச் சொல்லப்பட்டுள்ளது. வெற்றியிலும் தோல்வியிலும் நிலை குலையாத சமநிலைக்காகவே. இங்கே வரும் ‘விருப்பத்தால் கறைபடிந்த அறிவு’ என்ற சொல்லாட்சி தத்துவார்த்தமாகச் சிந்திக்கும் பழக்கம் உள்ளவர்களை வெகு தொலைவுக்கு இட்டுச் செல்லக் கூடியதாகும். வெறுப்பால் கறைபடிந்த அறிவு இழிந்தது. ஏனெனில் அது ஒரம் சார்ந்தது. நடுநிலை இல்லாததனாலேயே அது அதிதமான உணர்ச்சி வேகத்தையும் தீவிரத்தையும் கொண்டிருக்கும். அது அழிவுச்சக்தி. இதை ஒவ்வொருவரும் அறிவர்.( செயலெனும் யோகம் சாங்கிய யோகம் 4) // என்று நீங்கள் விளக்கியிருந்ததுடன் தொடர்புபடுத்திப் புரிந்துகொள்கிறேன். கைவல்ய உபநிஷதம், “ந கர்மணா, ந ப்ரஜயா, தனே ந, த்யாகேனைகே அம்ருதத்வமானசு:” என்கிறது- “கர்மங்களால் அல்ல, மக்கட்பேறால் அல்ல, செல்வத்தினால் அல்ல, தியாகத்தாலேயே அமரத்துவம் எய்தப்படுகிறது” -இதுவும் கீதையும், பௌத்தமும் சொல்லும் அதே மனநிலையைத் தான் பேசுகிறது.

சூன்யவாதம் குறித்தும் மிகவும் புதிதான ஒரு கோணத்தில் (சூனிய வாதம் வெறுமையைச் சொல்வதல்ல, அறியமுடியாமையைச் சொல்வது) இந்தக் கட்டுரையின் மூலம் அறிந்து கொண்டேன் (இருந்தாலும் என் மனதின் இயல்பிற்குப் வேதாந்தத்தின் பூரணத்துவமே நெருக்கமாக இருக்கிறது).

மொத்தத்தில் இந்தக் கட்டுரைத் தொடர், என்னளவில், என்னை மிகவும் யோசிக்க வைத்த, ஒவ்வொரு சொல்லிலும் என் கற்பிதங்களைப் புரட்டிப் போட்ட, நான் வாசித்த மிக முக்கியமான கட்டுரை. அதற்காக மிக்க நன்றிகள் ஜெ.

இந்தக் கடிதத்தை எழுதும் முன் ஒருவாரத்திற்கும் மேலாக எழுதுவதா வேண்டாமா என யோசித்துக் கொண்டிருந்தேன். இந்து/வேதாந்த மரபில் இருப்பதாக என் மனதில் படுவதைச் சொல்ல வேண்டும் ஆனால் எக்காரணத்தைக் கொண்டும் இந்திய ஞான மரபில் பௌத்த தரிசனத்தின் தாக்கத்தையும், பங்களிப்பையும் குறைத்துச் சொல்லிவிடக் கூடாது என்ற எண்ணமே காரணம். எனக்கு புத்தர் மீது பெரும் பக்தி உண்டு. நான் சங்கர வேதாந்த மரபைச் சேர்ந்தவன். சங்கரரே பௌத்தம், மீமாம்ஸை, ஸாங்கியம், நியாயம் எல்லாவற்றையும் ஒரு நிலையில் முரண்பட்டு இன்னொரு நிலையில் ஏற்றுக்கொண்டு, இவற்றின் சிறந்த அம்சங்களையெல்லாம் வேதாந்த ஞானத்துடன் தொகுத்துக் கொடுத்தவர் தானே?

கடைசியாக சுவாமி விவேகனந்தரின் வார்த்தைகளுடன் இந்தக் கடித்தை முடித்துக் கொள்கிறேன். “சாக்கிய முனி ஹிந்துமதத்தை அழிக்க வந்தவரல்ல, அவரே அதை முழுமை செய்தவரும், அதன் தர்க்கபூர்வமான நிறைவும், வளர்ச்சியும் ஆவார். இந்து மதமும், பௌத்தமும் ஒன்றில்லாமல் மற்றொன்று இருக்க முடியாது. ஹிந்து மதத்தின் அற்புதமான மெய்ஞான மூளையும், பௌத்தத்தின் மனிதாபிமானமும் கருணையும் மிக்க இதயமும் பிரிந்ததனால் தான் இந்தியா வீழ்ந்தது. இவை இரண்டும் மீண்டும் ஒன்றிணையட்டும்”

என் புரிதல்களில் பிழை இருந்தால் பொறுத்துக் கொண்டு, அவற்றைத் தெளிவுபடுத்த வேண்டுகிறேன்.
நன்றி,
அன்புடன்
பிரகாஷ் சங்கரன்.

(பி.கு. – ஒரு சிறிய தகவல்- வேதங்களின் முதல் பாகமாகிய கர்மகாண்டத்தின் ஸம்ஹிதையில் சொல்லப்பட்டுள்ள கர்மங்களை விளக்கும் ‘பிராம்மணங்கள்’ என்னும் விளக்க நூல்களை அடியொற்றி எழுந்ததால் தான் பூர்வமீமாம்ஸை ‘பிராம்மண மதம்” என்றழைக்கப்படுகிறது. அது யாகங்கள் முதலான சடங்குகளைச் சொல்வதால் பிராமணர் என இன்று அழைக்கப்படும் சாதியினருடைய மதம் என்று பொதுவில் தவறாகப் புரிந்து கொள்ளப்படுகிறது).

அன்புள்ள பிரகாஷ்,

இந்தியாவின் தத்துவ- ஞான விவாதமென்பது ஓர் ஒற்றைப்பெரும்பரப்பு. அதிலுள்ள எல்லா கருதுகோள்களும் தொடர்ந்து நிகழ்ந்த உரையாடல் மூலம் கொண்டும் கொடுத்தும் வளர்ந்துவந்தவை. ஆகவே பொது அம்சங்களை தேடிப்பார்க்க ஆரம்பித்தால் வந்துகொண்டே இருக்கும்.

நம்முடைய நோக்கம் என்ன என்பதே பார்வையை தீர்மானிக்கவேண்டும். உதாரணமாக ஒருவர் இந்தியாவின் சிந்தனை மரபுகளுக்குள் எந்த விதமான உறவும் இல்லை, அவை ஒன்றையொன்று கொல்லத்துடித்தவை என்று சொன்னாரென்றால் நாம் அவற்றுக்குள் உள்ள ஒற்றுமையைச் சுட்டிக்காட்டுகிறோம். அதேசமயம் ஒவ்வொன்றையும் அவற்றின் தனித்தன்மையுடன் அறிய விரும்பினோமென்றால் வேறுபாடுகளை கவனப்படுத்துகிறோம்

நாராயணகுருவிடம் இதைக் காணலாம். கேரளத்தின் ஆசாரவாதிகள் வேதாந்தத்தை ஆசாரவாதம் நோக்கி கொண்டுசென்று அங்கே அதை முளையடித்துக் கட்டியிருந்த காலகட்டத்தில் குரு வேதாந்தத்தை பௌத்தம் நோக்கி நகர்த்தினார். குருவின் ஆடை, அவருக்கு வைக்கப்பட்டிருக்கும் சிலை, அவர்களின் கொடி உள்ளிட்ட அனைத்திலும் உள்ள பௌத்த செல்வாக்கு வெளிப்படையானது. வேதாந்தத்துக்கும் பௌத்ததுக்கும் உள்ள பொதுத்தன்மைகளை அதிகமாக குரு முன்வைத்தார். அவரது வெதாந்தநூல்களின் வாசிப்பு அந்த இயல்பு கொன்டது

ஆனால் வேதாந்தமும் பௌத்தமும் தத்துவ அணுகுமுறையிலும் மையத்தரிசனத்திலும் நுட்பமான வேறுபாடுகள் கொன்டவை. அந்தவேறுபாடுதான் அவற்றை இருவேறு தத்துவக்கட்டுமானங்களாக நிலைநிறுத்துகிறது. அம்பேத்கரின் தம்மம் கட்டுரையில் அந்த வேறுபாடுகளை நான் சுட்டிக்காட்டியபடியே செல்கிறேன். அவை இரண்டும் பயன்படுத்தும் கலைச்சொற்கள் அனேகமாகக ஒன்றே. ஆனால் அவற்றுக்கிடையே அழுத்தமான ஆனால் மிக மெல்லிய பொருள் வேறுபாடு உண்டு. அந்த வேறுபாட்டை கவனித்தாலொழிய அவற்றை சரியாகப்புரிந்துகொள்ள முடியாது

உதாரணமாக தர்மம் என்ற சொல். வேதாந்தமும் பிரபஞ்சதர்மம் பற்றிப் பேசுகிறது. ஆனால் அது வேதாந்த நோக்கில் மகாபிரம்மத்தின் ஒரு லீலை. பிரம்மத்தின் ஒரு வெளிப்பாடு. பௌத்தம் மகாதர்மம் பற்றிப்பேசுகிறது. ஆனால் அங்கே அதை மீறிய ‘சத்’ஏதும் இல்லை. மகாதம்மம் என்பது மட்டுமே முதல்முடிவானது. அது எதன் லீலையும் அல்ல. அது நிகழ்வதனால் அது இருக்கிறது.

இப்படிச் சொல்லலாம். பம்பரம் சுழல்கிறது. அப்போது ஒரு மையம் உருவாகிறது. அது சுழல்வதனால் அந்த மையம் உருவாகிறது. சுழற்ச்சியின் ஆதாரவிதியே அந்த மையம். அவ்வளவுதான். நாம் சுழற்சியைப்பார்க்கிறோம். ஆகவே நமக்கு மையம் என்ற அனுபவம் உள்ளது. மற்றபடி அங்கே மையமென ஒன்றுண்டா என்பதெல்லாம் நம் அறிதலுக்கு அப்பாற்பட்டவை- இது பௌத்தம். சுழற்சியின் மையம் என்பது பம்பரத்தின் ஆதாரமான அமைப்பு, சுழற்சியை நிகழ்த்துவதே அதுதான் – இது வேதாந்தம். இருவேறு தரிசனங்கள்

இவ்வாறு எல்லாவற்றிலும் வேறுபாடுண்டு. பௌத்தம் பொருளை நிராகரிப்பதில்லை. பொருண்மை என்ர நிகழ்வாக அது பொருளை அணுகுகிறது என்று சொல்லலாம். இகம் அதைப்பொறுத்தவரை பொருள்வயமானதே. ஆனால் வேதாந்தம் பிரம்ம சத்யம் ஜகன் மித்யை என உணரக்கூடியது. பொருள்வய பிரபஞ்சமென்பது வேதாந்த நோக்கில் பிரம்மம் அளிக்கும் மயக்கநிலைதோற்றம் மட்டுமே.

ஆனால் வேதாந்தத்துக்கும் பௌத்ததுக்கும் நடுவ்cஏ மிகச்சிறந்த ஓர் ஒருமையை நாம் கண்டடையவும் முடியும். பிரம்மம் என்பதை சத் என்றல்லாமல் தத் என்று புரிந்துகொண்டால் அது பௌத்ததை அடைந்துவிடுகிறது என்று நாராயனகுரு சொல்லியிருக்கிறார். நடராஜ குருவும் நித்ய சைதன்ய யதியும் அதை விரிவாகவே விளக்கியிருக்கிறார்கள். விவேகானந்தர் முதலிய எல்லா நவீன வேதாந்திகளிலும் அந்த சமன்வய நோக்கை நாம் காணமுடியும்

நாராயணகுரு பௌத்தத்துக்கும் வேதாந்தத்துக்கும் நடுவே ஒரு சமரசவேதாந்தத்தை உருவாக்கியவர். வேதாந்தம் கயிற்றரவு என்கிறது. அது கயிறு என நாம் தெளியும்போது அங்கே பாம்பு இல்லை. ஆனால் நாராயணகுரு மலரும் மாலையும் என்கிறார். மலரைப்பார்க்கையில் மாலை இல்லை. மாலையைப்பார்க்கையில் மலர் தெரிவதில்லை, ஆனால் இருக்கத்தான் செய்கிறது

இப்படிச் சொல்கிறேன். வேதாந்தம் பௌத்தம் சமணம் போன்றவற்றை கற்கையில் அவற்றுக்க்டையேயானவேறுபாடுகளை கவனித்து கற்பதே தேவையானது. ஆனால் நம் அகத்தில் இறுதியில் ஓர் ஒருங்கிணைவுநோக்கு உருவாகி வரவேண்டும் — சமன்வய நோக்கு

கவனிக்கவும், கடைசியில்தான் அது உருவாகவெண்டும்

ஜெ

முந்தைய கட்டுரைவரலாறு-கடிதம்
அடுத்த கட்டுரைபத்மவியூகம் – சிறுகதை