வரலாற்று வெறுப்பு- ஓர் ஆதாரம்

அன்புள்ள ஜெயமோகன்

உங்கள் அவதானங்களை நானும் பொதுவாக கவனித்துள்ளேன்.

அது தமிழக சூழலில் சரித்திர ஆர்வத்தையோ , திறமையையோ வளர்ப்பது அல்ல. கண்மூடித்தனமான துதிபாடல் எந்த அறிவுசார்ந்த விவாதங்களையும் சிந்தனைகளையும் அடக்குவது

‘செத்துப்போனவர்களைப்பற்றி எதிர்மறையாகச் சொல்லக்கூடாது’ என்ற வரி என்னிடம் விவாதங்களில் சொல்லப்பட்டுள்ளது. ஆனால் இதில் ஒரு நேர்மை இல்லை. சில செத்துப்பொனவர்களைக் கண்மூடித்தனமாகத் துதிபாடி, தன் புனித பிம்பங்களை மற்றவர்கள் மேல் சுமத்தலாமாம் , ஆனால் அப்பிம்பங்களை மற்றவர்கள் தர்க்கத்தோடு அலசினால் , உடனே “செத்துப்பொனவர்களைப் பழிக்காதே” என்ற கூச்சல்தான் பலர் போடுகின்றனர் . சமீபத்தில் ஒரு கூகிள் விவாதக்குழுவில் ஞானமுத்து தேவநேசன் எப்படி கட்டுக்கதைகளையும், சயன்ஸ் ஃபிக்சன்களையும் எழுதி தமிழ் பற்றிய சிந்தனைகளின் தரத்தை மட்டமாக்கினார் என தேவநேசனைக் கண்டித்தேன் – இது அடிக்கடி பாவாணர், மொழிஞாயிறு போன்ற துதிபாடல்களின் எதிர்மறை. இதற்கு யாரும் அறிவுசார்ந்ததாக ஒரு பதிலும் தரவில்லை.

22 ஆகஸ்த் 2012 மாலைமுரசுப்படி (அட்டேச் செய்யப்பட்டுள்ளது) தேவநேசனை விமர்சிக்கும் கூகிள் குழுக்களையும், விக்கிபீடியாவையும் தமிழ்நாடு அரசு மூட வேண்டும் என – கேட்டால் அதிர்ந்து போய்விடுவீர்கள் – பல தமிழ் அகாதமிக்குகள் கோரிக்கை விட்டுள்ளனர். மாலைமுரசுப்படி இந்தக் கோரிக்கையின் கையெழுத்தாளர்கள் (பொன்னுசாமி கோதண்டம் என்ற) முன்னாள் துணைவேந்தர் பொற்கோ, பொன்னவைக்கோ, இறையரசன், பூங்குன்றன், அரமமுறுவல், இறைஎழிலன், சுந்தர ஜெயபாலன், பெஞ்சமின் லெபோ (பிரான்சு), இளங்குமரன் என்ற சகாயராசு, தஞ்சை கோ. கண்ணன், தெக்கூர் தமிழ்தென்றல் ஆகிய “அறிஞர்கள்” . அவர்கள் கோரிக்கையில் ”……… வலைத்தளத்தில் மறைந்த தமிழ்ச்சான்றோர்களை இழித்தும், பழித்தும் குழு மடலாடல் என்ற பெயரில் இழிசெயல்கள் தொடர்ந்து நடை பெற்றுவருகின்றன. … இதன்மூலம் எங்களுக்கு தீராத மனவலியையும் கொந்தளிப்பையும் ஏற்ப்படுத்திவிட்டார்கள்… “

இதைப்போல் சரித்திரம், மொழியியல் ஆகிய துறைகளில் அதீத துதிபாட்டு மனப்பான்மை – அதுவும் சீனியர் தமிழ் அகாதெமிக்குகளே செய்வது – எப்படி விவாதங்களை அடக்க முயற்ச்சிக்கின்றது எனக் காட்டுகிறது. முக்கியமாக ஈவேரா துதி, தேவநேசன் துதி பாரதிதாசன் துதி மறைமலை அடிகள் துதி வரலாற்று பிரக்ஞையை நசுக்குவது மட்டுமல்ல, ஒரு rational approach ஐப் பொதுவெளியில் கொன்றுகொண்டு வருகிறது.

மதிப்புடன்

வன்பாக்கம் விஜயராகவன்

அன்புள்ள விஜி,

இச்செய்தியை நான் முன்னரே மீடியா வாய்ஸ் இதழிலும் வாசித்தேன். பாவாணரை இழிவுசெய்யும்’இணையதளங்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காவல்துறையினரிடம் புகார் கொடுத்துள்ளதாகவும் அதன் மேல் நடவடிக்கை இல்லை என்றும் ‘தமிழறிஞர்கள்’குமுறியிருந்தார்கள்’.அடைமொழி இல்லாமல் அவர் பெயரை சொல்லியிருந்ததுதான் இழிவுபடுத்தலாம்.

அப்பட்டமான ஃபாசிசம் இது. ஓர் ஆய்வாளர் முன்வைத்த கருத்துக்கள் அறிவுபூர்வமானவை அல்ல, அவை காழ்ப்பு கொண்ட கருத்துக்கள் என இன்னொரு ஆய்வாளர் ஆய்வின் அடிப்படையில் சொல்வது குற்றவியல் சட்டப்படி சிறையிலடைக்கப்படவேண்டிய குற்றம் என்றால் இந்த நாட்டில் கருத்துரிமை என என்ன இருக்கிறது? அம்பேத்கர் மாய்ந்து மாய்ந்து எழுதிவைத்த வரிகளுக்கெல்லாம் என்ன அர்த்தம்? நல்ல வேளையாக இந்த ஃபாசிஸ்டுகள் கோரும் தமிழ் தேசியம் இன்னும் வரவில்லை. வந்தால் இஸ்லாமிய நாடுகளை விட கருத்தடக்குமுறை மிக்க ஒரு தேசம் உலகுக்கு கிடைத்திருக்கும்

இந்த அபத்தமான கோரிக்கை பற்றி இதழ்களிலும் இணையத்திலும் வாய்கிழிய ஜனநாயகம் பேசும் பெரியாரியர்களும் இடதுசாரிகளும் ஏதேனும் சொல்வார்களோ என்ற நப்பாசை ஒரு பத்துப்பதினைந்துநாள் எனக்கும் இருந்தது

ஜெ

முந்தைய கட்டுரைசொல்லுடன் நிற்றல்
அடுத்த கட்டுரைதினமணி செய்தி