ஓஸிபிசா, ரகுபதிராகவ…

எண்பதுகளில் ஓஸிபிஸா குழு சென்னைக்கு வந்தது. அதைப்பற்றிக் குமுதம் செய்திகளாக வெளியிட்டுக்கொண்டிருந்தது. ஒளியமைப்புகள் மட்டும் ஐம்பது லாரிகளில் கொண்டுவரப்பட்டு அரங்கை அடைந்தன என்று செய்தி வெளியிட்டிருந்தார்கள். ஆனால் நிகழ்ச்சி முடிந்தபின் குமுதம் இதழில் அரசுபதில்களில் ‘பாட்டா அது ?காட்டுக்கூச்சல்’ என எழுதியிருந்தார்கள்.

மேலும் ஐந்தாண்டு கழித்து நான் முதன்முதலாக ஓஸிபிஸாவின் பாடலைக் கேட்டேன். எனக்குப்பிடித்திருந்தது. ஏன் அதைக் காட்டுக்கத்தல் என்கிறார்கள் என்று ரமேசன் அண்ணனிடம் கேட்டேன், டேப்ரெக்கார்டர் என்ற அற்புத வஸ்துவுக்குச் சொந்தக்காரர். அப்போதுதான் வளைகுடாவிலிருந்து திரும்பியவர். ‘இதில் பாதி வாத்தியங்களை ஆப்ரிக்கச்செண்டை ஆப்ரிக்க இடைக்கா என்று சொல்லிவிடமுடியும். மலையாளக்காதுகளுக்கு இந்தச்சத்தங்கள் நன்றாகப்பழகியவை. கர்நாடக சங்கீதம் கேட்ட காதுகளுக்குப்பிடிக்காது’ என்றார்

எனக்கு எப்போதுமே ஓஸிபிஸா மனம்கவர்ந்த இசைக்குழு. எங்கோ ஒரு குமரிமாவட்ட யட்சிகோயிலில் அர்த்தராத்திரியில் அவர்களின் நிகழ்ச்சி நடப்பதாக நினைத்துக்கொள்வேன்

 

காந்தி டுடே இணையதளம் வெளியிட்ட இந்தப்பாடல் மறந்துபோன ஓஸிபிஸாவை நினைவில் மீட்டியது. அவர்களின் ஆழ்ந்த குரலில் காந்தியின் பாடலைக் கேட்கும்போது ஒரு பரவசம். எத்தன முறை கேட்டிருப்பேன்! இந்தப்பாடலை என் நண்பர் ஓப்லா விஸ்வேஷ் கண்டுபிடித்து இணையத்தில் ஏற்றியிருக்கிறார். அச்செய்தி இந்தத் தளத்தில் முன்னர் வெளியாகியிருக்கிறது

நமீபியாவில் நள்ளிரவில் கல்லூரிவிட்டு வந்துகொண்டிருந்த பெண்களிடம் பேசினேன். இந்தியா அவர்களுக்கு சரியாகத் தெரியாத நாடு. காந்தி? தெரியும். அவர்களின் அதிபர் அடிக்கடி மேற்கோள் காட்டுகிறார். ஆனால் காந்திக்கும் இந்தியாவுக்கும் என்ன தொடர்பு? அவர் ஒரு தென்னாப்ரிக்கத் தலைவரல்லவா? இனவெறிக்கு எதிராகப் போராடி சுட்டுக்கொல்லப்பட்டவர்?

இல்லை என்றபோது அவர்களுக்கு நம்பிக்கை இல்லை. காந்தி ஒரு கருப்பர் என்றார்கள். அந்நம்பிக்கையைக் கலைக்க விரும்பவில்லை.

இனமோதலால் , சுரண்டலால் நிலைகெட்டு நிற்கும் ஆப்ரிக்காவுக்கே காந்தி மேலும் சொந்தம். இந்தப்பாடலில் காந்தியின் வரிகளுடன் எப்படி இயல்பாக ஆப்ரிக்கத் தாளம் இணைந்துகொள்கிறது.

 

மறுபிரசுரம்/முதற்பிரசுரம் Dec 17, 2012 

 


காந்தி டுடே இணையதளம்

முந்தைய கட்டுரைநிஜந்தனின் ’நான் நிழல்’
அடுத்த கட்டுரைஅமெரிக்க நூலகச் சந்திப்பு