கலையறிதல்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

சிதார் மேதை பண்டிட் ரவி சங்கர் பற்றி பல கட்டுரைகள் ஹிந்து நாளிதழில் படித்தேன். கிராம்மி வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கிருக்கிறது. முதல் முறையாக ஒரு இந்தியர் இந்த விருதை பெறுகிறார்.

இதை எல்லாம் படிக்கும்போது ஒரு பெரிய கவலை என்னை சூழ்ந்தது. நான் ரவி சங்கர் என்ற மேதையை இப்பொழுதுதான் கேள்விப்படுகிறேன். இசை பற்றி எனக்கு பெரிய ஞானம் கிடையாது. நல்ல சினிமா பாடல்களை மெய்மறந்து ரசிப்பதோடு சரி. ஆனால் எனக்குள் ஒரு பேராசை உண்டு. பல கலைகளை அறிந்து, அதில் பெரிய படைபாளிகளின் படைப்புகளை ரசித்து நெகிழ வேண்டும் என்று. ரசனைதான் ஒரு மனிதனின் பெரிய சொத்து என்று நம்புகிறேன். ஆனால் இலக்கியத்தில் மட்டும் ஓரளவுக்கு இதை என்னால் சாதிக்க முடிந்தது.

இசை, ஓவியம் போன்ற கலைகள் உயர்மட்ட மக்கள் மட்டுமே ரசிக்க முடியும் என்ற எண்ணம் என்னுள் உள்ளது. இது சரிதானா? ஒரு கலையை எவ்வாறு அணுகுவது? ஒருவனுடைய ரசனை என்பது அவன் வளர்ந்த சூழலை சார்ந்ததா?

கேள்வி அர்த்தமில்லாமல் இருக்கலாம். ஆனால் என்னுடைய எந்த ஒரு சிந்தனையும் உங்கள் கருத்துக்களால் மட்டுமே முழுமை பெறுகிறது.

நன்றி,
பாலா

அன்புள்ள பாலா,

பெரும்பாலான வாசகர்கள் இந்த வினாவை என்னிடம் கேட்டிருக்கிறார்கள். அவர்களுக்கு அளித்த பதிலையெ மீண்டும் சொல்கிறேன். நம்முடைய குடும்பச்சூழலில் நமக்கு கலைகளும் இலக்கியமும் அறிமுகமாவதே இல்லை.

கலாப்ரியாவின் நினைவுகளை வாசித்துக்கோண்டிருந்தபோது எழுந்த எண்ணம் இது. இளமையில் தமிழி சினிமா மீது வெறிபிடித்தவராக வாழ்ந்திருக்கிறார். சினிமாபோஸ்டர்கள் பார்ப்பது, பாட்டு கேட்பது, நடிகர்களை வழிபடுவது என அவர் தன் இளமையை சினிமாவாலேயே அறிமுகம் செய்கிறார்.

அது ஏன் என யோசித்தேன். அந்த சோமசுந்தரத்துக்குள் இருந்தது கலாப்ரியா என பின்னாளில் மலர்ந்த கவிஞன். உணவை விட, உறவைவிட கலையை விரும்பிய ஓர் ஆன்மா. ஆனால் அதற்கு அன்றைய சூழலில் தீனி இல்லை. அதற்குக் கிடைக்கும் ஒரே கலை சினிமாதான். இலக்கியம், ஓவியம், நாடகம், இசை என எல்லாவற்றையுமே அது சினிமாவில் கண்டுகொள்கிறது. சினிமாமீது அந்த இளம் மனம் கொண்ட பித்து என்பது கலைமீது கொண்ட நாட்டம் மட்டுமே.

நம் பெற்றோருக்கு கலைகளையோ இலக்கியத்தையோ அளிக்க வேண்டும் என்ற எண்ணமே இல்லை. நம்முடைய பழைய பாரம்பரியத்தில் மரபிசையும் பக்தி இலக்கியமும் நமக்கு கிடைத்திருக்கும். கோயில்கலைகளும் நாட்டார்கலைகளும் அறிமுகமாகியிருக்கும். ஆனால் நாம் வளர்ந்துவர ஆரம்பித்தபோது அவையெல்லாமே அழிந்துவிட்டன. எங்கோ கொஞ்சம் இருந்தாலும் அவற்றை ரசிப்பதற்கான பயிற்சி நமக்கு அளிக்கப்படவுவில்லை.

நம் பெற்றோர் லௌகீகவாழ்க்கைக்கான நவீனக்கல்வி மட்டுமே குழந்தைகளுக்கு தேவையானது என நினைத்தார்கள். அதைப்பயில்வதற்கு மற்ற எல்லா ஈடுபாடுமே தடையானவை என நம்பினார்கள். நாம் கல்வி அல்லாத எதையும் தலைமறைவாக குற்றவுணர்வுடன் மட்டுமே அறிந்திருக்கிறோம். விளையாடுவதுகூட தவறு என்றே நமக்குச் சொல்லப்பட்டிருக்கிறது. ஆகவே நம் இளமையில் நம்மையறியாமலேயே நமக்கு கிடைக்கும் சினிமா மட்டுமே நாமறியும் கலையனுபவம்.

இன்று இணையத்தைப்பாருங்கள், படித்த இளைஞர்கள், சம்பாதிக்கும் இளைஞர்கள் எழுதுவதை. திரும்பத்திரும்ப தமிழ்சினிமாதான்.. கொஞ்சம்பேருக்கு கிரிக்கெட். அதைத்தவிர அவர்களுக்குள் பேசிக்கொள்ள பொதுவாக எதுவுமே இல்லை.

அரசியல்பற்றி பேசுபவர்கள் மிகச்சிறுபான்மையினர். அரசியலீடுபாடு இளைய தலைமுறையினரில் மிகவும் குறைந்துவிட்டது. ஆகவே அரசியல்சார்ந்த விவாதங்கள் மிகமிகக் குறைவு. அரசியல் கோட்பாடுகள் அவர்களுக்குத் தெரியாது. அவர்கள் பேசுவது கொஞ்சம் அரசியல் வம்புகள். அதுவும் கணிசமானவர்களின் அரசியல் சென்ற இருபதாண்டுகளில் வலுப்பெற்ற சாதியரசியல் அல்லது இனவெறியரசியல். அதை மூர்க்கமான வசைகளாக மட்டுமே வெளிப்படுத்தக் கற்றிருக்கிறார்கள். ஆரோக்கியமான அரசியல்விவாதம் எங்கேனும் நிகழ்ந்து நான் வாசித்ததே இல்லை. தமிழில் அது சாத்தியமா என்றே சந்தேகப்படுகிறேன்.

ஆனால் இதற்காக நாம் நம் பெற்றோரை குறைசொல்லலாமா? கூடாதென்றே நான் நினைக்கிறேன். நான் பலமுறை சொல்லியிருப்பது போல நம்முடைய சமூக உளவியல் பற்றாக்குறையால், வாழ்க்கைக்கான போராட்டத்தால் மட்டுமே வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

நம் வரலாறு சென்ற இருநூறாண்டுகளில் நம் சமூகத்தை உலுக்கிய மாபெரும் பஞ்சங்களையே மையமாகக் கொண்டது. நம் சமூகத்தின் கால்வாசிபெப்ர் பட்டினியால் மடிந்தனர். கால்வாசிபெபெர் அகதிகளாக பிழைப்புதேடி உலகமெங்கும் சென்றனர்.எஞ்சியவர்களின் ஆழ்மனதில் இருபப்து அள்ளிப்பதுக்கும் பண்பாடு. இந்த உலகில் எப்படியேனும் போராடி வாழ்வது, அவசிய அன்றாடத்தேவைக்கு மேல் எஞ்சியதை முழுக்க சேமிப்பது- இதுதான் நம்முடைய சமூகத்தின் பொதுமனநிலை.

ஆகவே இலக்கியம், கலைகள் எல்லாமே பொருளிழந்து உதிர்ந்தன. ஆன்மீகம் வெறும் உலகியல்பேரங்களாகவும் சடங்குகளாகவும் ஆகியது. மத்தின் ஞானமும் தத்துவமும் தேவையற்றவையாக ஆயின. மரபில் எது உடனடியாகச் சோறாக ஆகுமோ அது மட்டுமே எஞ்சியது.

சென்றதலைமுறை வரை நம்முடைய பெற்றோர் அந்த பெரும்போராட்டத்திலேயே இருந்தனர். படிப்பு என்பது வேலைக்கான தகுதியை ஈட்டிக்கொள்ளுதல் மட்டுமே. வேலை என்பது தன்னையும் குடும்பத்தையும் கரையேற்றுதல். வாழ்க்கை என்பது பிள்ளைகளை முன்னுக்குக் கொண்டுவருதல் மட்டுமே. அதற்குமேல் எதைப்பற்றிச் சிந்தித்தாலும் அது பாவம். ஒரு குடும்பத்தலைவன் ஒரு புத்தகத்தை வாசித்தால், ஒரு கலையைக் கற்றுக்கொள்ள முயன்றால் குடும்பத்துப் பெண்கள் பதற்றமடைகிறார்கள். அம்மாக்களும் மனைவிகளும் கதறி அழுவதை நானே பார்த்திருக்கிறேன்.

இந்தச்சூழலில் நமக்கு எதற்கும் தொடக்கம் இல்லை. கலைகளிலும் இலக்கியத்திலும் உரிய தருணத்தில் உருவாகவேண்டிய தொடக்கம் மிகமிக முக்கியமானது. அந்த தொடக்கத்தை பெரும்பாலும் எவரேனும் நமக்குத் தற்செயலாகவே அளிக்கிறார்கள். அந்த தற்செயல் நிகழாவிட்டால் நமக்கு ஒரு கலையோ இலக்கியமோ அறிமுகமாவதே இல்லை.

நான் வாழ்ந்த சூழல் வேறு. காரணம் கம்யூனிசம், அதில் வளர்ந்த என் அம்மா. என் அம்மா என்னுடைய ஐந்தாவது வயதிலேயே இலக்கியத்தை அறிமுகம்செய்தாள். ஆனால் எனக்கு மரபிசை அறிமுகமானது என்னுடைய இருபத்தொன்பதாம் வயதில் தஞ்சாவூர்க்காரியான என் மனைவி வழியாக. அது மிகவும் பிந்திய வயது. நான் இலக்கியத்தில் வெகுதூரம் சென்றுவிட்டமையால் இசையை முழுமையான ஈடுபாட்டுடன் பின்தொடர்ந்ததில்லை.

ஆகவே வெட்கப்படவேண்டியதில்லை. இது நாம் வளர்ந்த சூழல். நம் யதார்த்தம். நாம் இதைத் தாண்டிச்செல்லமுடியும். அதற்கு தேவை தேடல்தான். நாம் அறியும் சிறிய வட்டத்துக்கு அப்பால் அறிவும் கலையும் விரிந்து கிடக்கின்றன என்ற பிரக்ஞ்ஞை நமக்கிருந்தால்போதும். ஒவ்வொருநாளும் கற்றுக்கொள்ளும் ஆர்வத்தை தக்கவைத்துக்கொண்டால் போதும். நம் எல்லைகளை விரித்துக்கொள்ள முயன்றபடியே இருந்தால்போதும்.

நாம் அனைத்துக்கலைகளையும் கற்பதும் தேர்வதும் சாத்தியமல்லாமலிருக்கலாம். ஆனால் அதர்கான பயணத்தில் இருக்கிறோம் என்ற நிறைவு இருந்தால்போதும் நம் வாழ்க்கை நிறைவுகொண்டதுதான்

ஜெ

முந்தைய கட்டுரைஅண்ணா ஹசாரேவின் தோல்வி
அடுத்த கட்டுரைஅருகர்களின் பாதை 15 – அகமதாபாத்,லோதல்