ஜெ,
ஒழிமுறி டிவிடி வாங்க முயன்றேன். எங்குமே இல்லை என்றார்கள்.டிவிட்டரில் ozhimuri என தேடினேன். ஒழிமுறி முழுக்க விற்றுவிட்டது என்று தெர்ந்தது [ https://twitter.com/search/realtime?q=ozhimuri&src=typd ] ஏராளமானவர்கள் பாராட்டியிருப்பதைப் பார்த்தேன். one of the best in recent times.. என்றும் The power of such a terrific script. என்றும் வாசித்தபோது நிறைவாக இருந்தது. இப்போதும் முழு அரங்கில் ஓடுவதாக ஒரு டிவிட்டர் செய்தி இருந்தது. உண்மையா?
சுவாமிநாதன்
அன்புள்ள சுவாமிநாதன்
மலையாள சினிமாவில் டிவிடி விற்பனை என்பது அதன் மொத்த வசூலில் முப்பது சதவீதம் வரை அளிக்கும் ஒரு களம். முறைப்படுத்தப்பட்ட டிவிடி விற்பனை இருப்பதன் விளைவு. தமிழில் அது முழுக்க முழுக்க திருட்டு டிவிடிக்காரர்களுக்குச் செல்கிறது.
ஒழிமுறி டிவிடி 65000 பிரதிகள் விற்றுவிட்டது. இரண்டாம்பதிப்பு ஒருலட்சம் பிரதிகள் நாளை வெளிவரும் என்றார்கள். கடைகளில் கிடைக்கும்.
ஒழிமுறி மூன்றுமாதம் முன்னரே திரையரங்கை விட்டுச் சென்றுவிட்டது. இன்று திருவனந்தபுரம் திரைவிழாவில்தான் முழு அரங்கில் காட்டப்பட்டது
ஜெ
அன்பின் ஜெ,
நலம் தானே…
சென்ற வருடம் யுவன் கவியரங்கிற்கு வந்திருந்தபோது, அருண்மொழி அவர்களிடமிருந்து ‘உறவிடங்கள்’ பெற்றுச் சென்றிருந்தேன்.
ஒழிமுறி வெளிவந்தபோது, படத்தைப் பார்ப்பதற்கு முன் படித்துவிட எண்ணிக் கையிலெடுத்தேன். தங்களின் தமிழ் நடைக்குப் பழகியதாலோ என்னவோ, மலையாளத்தில் சரளமாகப் படிக்க முடிந்தது. அதன் சில பகுதிகளைத் தமிழில் ஏற்கனவே படித்திருந்தாலும், ‘எந்நிரிக்கிலும்’ என்னை மிகவும் பாதித்து விட்டது. படித்துக் கொண்டிருக்கும் போதே, நிறைய அழுது விட்டேன். மிக ஆழமான ஒரு துக்கம் 2 வாரங்களுக்கு மேல் என்னை ஆட்கொண்டது. பல இரவுகள் உறக்கம் வராமல், ‘ஏன் இப்படியெல்லாம் நடந்திருக்க வேண்டும்’ என்ற அதே கேள்வி என்னை மீண்டும் மீண்டும் அலைக்கழித்து, கோபமுறச் செய்து, இயலாமையை உணர்த்தி அழச் செய்து கொண்டே இருந்தது. இரண்டு வருடங்களுக்கு முன், ‘Lust For Life’ படித்த பொழுது வந்த அதே ஆழ்ந்த துக்கம்.
ஒழிமுறி டிவிடி குறித்த பதிவு பார்த்த உடனே இணையத்தில் வாங்கி விட்டேன். நேற்று கிடைத்தது, இரவே பார்த்து விட்டோம். படம் தொடங்கி நீதிபதி வந்ததும் ‘இது ஜெ குரல்’, ‘இது ஜெ குரல்’ என்று துள்ள ஆரம்பித்து விட்டேன். படம் முழுதுமே ஒரு உணர்ச்சி வசப்பட்ட நிலையிலேயே பார்த்து முடித்தேன். படத்தை, ஒரு திரைப் படமாகப் பார்த்து விமர்சிக்க நான் இன்னொரு முறை சமநிலையில் பார்க்க வேண்டும். இப்பொழுது படம் எனக்கு மிக அந்தரங்கமான ஒன்றாகவே இருக்கிறது. இரவு வெகு நேரம் தூங்க விடவில்லை, இன்றைய தினம் முழுதும் எதுவுமே செய்யாமல், அதிலேயே ஆழ்ந்திருந்தேன்.
ஒழிமுறி, மிகுந்த சமநிலையுடன் காட்டப் பெற்ற ‘உறவிடங்கள்’. வசனங்களும் காட்சிப் படுத்துதலும் சிறப்பாக வந்திருக்கிறது. நிறைய விஷயங்களைப் போகிற போக்கில் சொல்லிச் செல்கிறது.
‘ஆர்க்கு வேணம் சந்தோஷம், இவர்க்கொக்கே வேண்டது ஜெயமானு’ – மனதில் திரும்பத் திரும்ப ஒலித்துக் கொண்டேயிருக்கிறது…
நான் இவ்வளவு உணர்ச்சிவசப் படுவதற்கு, என் சொந்த வாழ்வில் நடந்த சம்பவங்களும் காரணமாக இருக்கலாம். என் பெற்றோரின் உறவும் இதுபோன்ற ஒரு ‘power struggle’ ஆகவே இருந்தது. உங்களுக்கு அம்மா போல, எனக்கு அப்பா. நிறைய படிக்கும், எழுதும், என் மீது உயிராக இருந்த, எனக்கு எல்லாமுமாக இருந்த என் அப்பா. என் 20 வயதில்…. நாங்கள் புதிதாகக் கட்டிமுடித்த வீட்டு திறப்புவிழாவிற்கு, ஒரு வாரம் இருக்கும் போது மாரடைப்பு வந்து இறந்தார். அப்பொழுது நான் திருவனந்தபுரத்தில் வேலை செய்து கொண்டிருந்தேன். 9 மணி நேரம் பயணம் செய்து, வீடு வந்து, ஒரு மணி நேரமே கிடைத்தது அவரது உடலைப்பார்க்க… அவருக்கு உடல் நிலை சரியில்லை என்று தான் எனக்கு போன் வந்தது. அந்த 9 மணி நேரமும், மனதில் ஏதேதோ நப்பாசைகள், தீவிரமான வேண்டுதல்கள். அப்பாவிற்கு ஒன்றும் ஆகியிருக்கக் கூடாது, அந்த வீடு முழுதும் இடிந்து விழுந்திருக்கலாம், அப்பாவிற்கு விபத்தில் சுமாரான அடிபட்டிருக்கலாம், தங்கை யாரையாவது காதலித்து வீட்டை விட்டு ஓடியிருக்கலாம் இப்படி ஏதாவது நடந்திருக்க வேண்டுமே என்ற பிரார்த்தனைகள்.
இந்த பத்து வருடங்களில், எவ்வளவோ முறை திரும்பத் திரும்ப, அந்த வீட்டைக் கட்டாமலே இருந்திருந்தால், அல்லது நான் அவருடன் இருந்திருந்தால், இப்படியெல்லாம் நடந்திருக்காதோ என்று கேட்டுக்கொண்டே இருக்கிறேன்,ஏதோ ஒரு குற்ற உணர்வும் அவ்வப்போது வந்து என்னைக் கலைத்து விட்டுச் செல்லும்.
//ஆனால் உண்மையிலேயே முக்கியமான சிலவற்றையும் மறக்கிறோம். மறக்க முயல்கிறோம். நான் என் இளமைப்பருவ வீடு, அம்மா, அப்பா எல்லாவற்றையும் மறக்க முயல்பவன். நினைவில் அம்மா முகம் வந்தாலே தீயால் சுட்ட அதிர்ச்சி வரும். ஆகவே மறக்க முயன்றுமுயன்று இன்று பெரும்பகுதியை நினைவிலிருந்து நீக்கிவிட்டேன். அப்படி நீக்குவதன் வழியாகவே அந்த அனுபவங்கள் அளித்த வதையில் இருந்து மீண்டுவந்தேன். // – நினைவுகூர்தல்
எனக்கும் இது பொருந்தும். இன்று பழைய நினைவுகளில் இருந்தெல்லாம் வெகுதூரம் வந்துவிட்டேன். இருப்பினும், உறவிடங்களும் ஒழிமுறியும் என்னை அந்தக் காலகட்டத்திற்கு இழுத்துச் சென்று விட்டன. அதிலிருந்தே எழுகிறது இவ்வளவு அழுகையும், வலியும், பெரும் துக்கமும் எனப் படுகிறது. படம் பார்த்து முடித்த கணம் தோன்றியது, உங்களை இளமையில் அலைக்கழித்த நிகழ்வுகளை, இவ்வளவு தூரம் தள்ளி நின்று பார்க்க முடிவதும் அதிலிருந்தெல்லாம் வெவ்வேறு தரப்புகளைக் காண முடிவதுமே ஆத்ம பலம் என்று. என்றாவது ஒருநாள் எனக்கும் அது சாத்தியப் படலாம் :-)
ஒழிமுறியில் என்னைக் கவர்ந்த விஷயம், பெண்மை குறித்துப் படம் முழுதும் இழையோடும் மெல்லிய அவதானிப்புகளும் வசனங்களும். மிகச்சிறப்பாக, பெண்மையை, அதன் வலிமையை, மென்மையை எல்லாம் சொல்லிச் செல்கிறது. கடந்த ஒரு வருடமாக ஏதாவது ஒரு வகையில் பெண்மை குறித்தே சிந்தித்தும், வாசித்தும் உரையாடியும் வருகிறேன். எனக்குப் பெண்ணியவாதிகளுடன் உடன்பாடில்லை. பெண்ணியவாதம் உலகிற்கு செய்ததை விட, அதன் பின் விளைவுகளே அதிகம் என நினைக்கின்றேன். தன்னை உணர்ந்த, பெண்மையை அறிந்த எந்தப் பெண்ணும், ஆணுக்கு சமம் பெண்ணென்று சொல்லி, ஆணைப் போலவே தன்னையும் மாற்றி, இயற்கை அவளுக்கு அளித்திருக்கும் பண்புகளையெல்லாம் துறந்து, ஆண்களின் அங்கீகாரத்திற்காகப் போராட மாட்டாள். அவள் பலம் வேறு ஒரு தளத்தில் உள்ளது. இது குறித்த விரிவான உரையாடல் ஒன்றைத் தங்களுடன் துவக்க வெகுநாட்களாக எண்ணிக்கொண்டிருக்கிறேன். ஒழிமுறி பார்த்ததும், கண்டிப்பாகப் பேசவேண்டும் போலிருக்கிறது. அடுத்த மடலில் விரிவாக எழுதுகிறேன்.
மிக்க நன்றி ஜெ! நீங்கள் நீங்களாக இருப்பதற்கு, உங்கள் வாழ்க்கையைத் திறந்த புத்தகமாக வைத்திருப்பதற்கு, இணையம் மூலம் எங்களுடன் தொடர்ந்து உரையாடலில் இருப்பதற்கு…
உங்கள் பயணத்தில் தன்னை இணைத்து, உறுதுணையாக இருந்துவரும் அருண்மொழி அவர்களுக்கு என் வணக்கங்கள்…பெண்மையின் திருவுரு!
அன்புடன்,
கிருஷ்ணபிரபா
அன்புள்ள பிரபா,
ஒழிமுறியின் திரைக்கதை உத்தேசிப்பது ஒரு வலையை. உறவுகளின் வலை. ஒன்றிலிருந்து ஒன்றுக்கு விருப்பு வெறுப்பின் ஊடும்பாவுமாக அது பின்னியிருக்கிறது. அதிலிருந்து எவருக்கும் மீட்சி இல்லை
என்னைப்பொறுத்தவரை ஒழிமுறி சொன்னவற்றைவிட சொல்லாதவையே அதிகம். ஏதேனும் ஒரு கதையைத் தொட்டுச் சென்றாலே சொல்லப்படாத ஒரு படத்தை அடைய முடியும். மூன்று தலைமுறைப்பெண்கள். காளிப்பிள்ளை, மீனாட்சிப்பிள்ளை, பாலாமணி மூவரும் ஆணை எதிர்கொள்ளும் முறையை மட்டுமே பார்த்தால்போதும்.
ஆம், நீங்கள் சொல்வதுசரிதான். ஆணின் அங்கீகாரத்துக்காகவோ ஆணை வெல்வதற்காகவோ போராடவேண்டியதில்லை என மீனாட்சியம்மா உணர்கிறாள். முழு அன்புடன், எந்த வெறுப்போ பகையோ இல்லாமல், எந்த எதிர்றை மனநிலையும் இல்லாமல் அவள் ஒழிமுறி கேட்டுப் பெறுகிறாள் என்பதே கதை. அவள் திறக்கும் சாளரம் ஒரு ஆன்மீக விடுதலைப்பயணத்தின் முதல் கணம்
ஜெ
ஒழிமுறி பார்த்தேன். படம் வசனத்தாலேயே அதிகம் சொல்லப்படுகிறது. மிகத் துல்லியமான பல வசனங்கள். என்னுடைய சிறுவயது அனுபவங்கள் பலதையும் பார்க்க நேர்ந்ததால் கண்ணீரை அடக்க முடியவில்லை. இன்னும் ஒருமுறையேனும் பார்த்தால்தான் இதை ஒரு திரைப்படமாக, அல்லது ஜெ’யின் ஒரு நாவலைப் போல உணரமுடியும். கதையை சுவாரஸ்யமாகக் கொண்டு செல்வது வசனங்களே.
நான் ட்ரெய்லர் பார்க்கும்போது ரெம்ப இம்ப்ரெஸ் ஆகவில்லை ஆனால் படம் பார்க்கும்போது ரெம்பவும் ஒன்ற முடிந்தது. பாத்திரப் படைப்பு அற்புதமாயிருந்தது. 80களில் வந்த மலையாள சினிமாக்களின் எளிமையுடன் கூடிய படம். எந்த கிமிக்கும் இல்லை.
ஜெயமோகனின் மரபு மீதான ஆளுமையைப் படம் முழுக்க காண முடிகிறது. சின்னச் சின்ன முறைகள் துவங்கி வேத வரிகளை மேற்கோளிடுவதுவரை.
லால் குறித்து அதிகம் சொல்லத் தேவையில்லை. மல்லிகாவின் நடிப்பு எனக்கு ரெம்பப் பிடித்திருந்தது. ஸ்வேதாமேனனின் பாத்திரம் அற்புதமாயிருந்தது. எப்போதும் புதுச் சேலை கட்டியிருக்கும் பாவ்னா, கண்களில் எப்போதும் இளைமை பொலியும் ஸ்வேதா கொஞ்சம் உறுத்தல்தான். அதுக்கெல்லாம் சேர்த்து லால், மல்லிகா, ஆசிஃப் கலக்கியிருந்தார்கள். அந்த வேலைக்காரராக வருபவரும் நல்ல நடிகர். ஸ்பிரிட் படத்திலேயும் நன்றாக செய்திருந்தார்.
மொத்தத்தில் ஒழிமுறி அடிச்சு கலக்கி.
சிறில் அலெக்ஸ்
சிறில்,
மலையாளத் திரை எழுத்தாளர் ஒருவர் கூப்பிட்டார். ’ஜெயேட்டா உங்களுக்கு — ஐ தெரியுமா? ‘என்றார். தெரியாதே என்றேன். ’அவரைப்பற்றித்தான் ஒழிமுறி என்ற படத்தை எழுதியிருக்கிறீர்கள். என் அப்பா அவர்’ என்றார்.
ஒழிமுறி சென்ற பத்தாண்டுகளில் மலையாளம் கண்ட முக்கியமான படம் எனத் தொடர்ந்து எழுதப்படுவதை காணமுடியும். இன்னும்கூடக் கட்டுரைகள் வந்துகொண்டே இருக்கின்றன. அதற்குக் காரணம் அது சினிமாக்கதை அல்ல, கேரளத்தின் நேரடி வாழ்க்கை யதார்த்தம் என்பதுதான்.
ஆம், அது வசனப்படம்தான். கதையமைப்பு பற்றி விவாதிக்கையில் வசனம்- நடிப்பு வழியாகவே படம் சொல்லப்படவேண்டும் என்ற தெளிவு எனக்கும் மதுபாலுக்கும் இருந்தது. மதுபால் மனதில் இருந்தது முழுக்க முழுக்க வசனத்திலேயே நிகழும் சில இங்க்மார் பர்க்மான் படங்கள். படங்களுக்கு இலக்கணங்கள் ஏதுமில்லை. உலகத்தின் மகத்தான படங்கள் பல வசனப்படங்கள்தான். அது ஒரு வகை அவ்வளவுதான். குடும்ப உறவுகள் உணர்ச்சிகள் சார்ந்த படங்கள் அப்படித்தான் அமையமுடியும்.
ஆனால் இன்னொருமுறை பார்க்கும் ரசிகனுக்கு படம்முழுக்க குறியீடுகள் நிறைந்திருப்பதும் தெரியும். அவற்றை முன்னிறுத்திக்காட்டக்கூடாதென்று மதுபால் பிடிவாதமாக இருந்தார். உதாரணமாக மீனாட்சியம்மா கதவை மூடுவதில் ஆரம்பிக்கும் படம் அவர் அதைத் திறப்பதில் முடிகிறது. படம் முழுக்க யானையைப்பற்றிய பேச்சு இருந்தபடியே இருக்கிறது. பெண்ணையும் யானையையும் பற்றிய ஒப்புமை. யானை அடிமையானதன் வரலாறு. யானைமேல் தாணுபிள்ளைக்கு இருக்கும் மோகம். ஒடுக்கப்பட்ட ஒரு விதவையின் குரலின் ஊடுருவல் படம் முழுக்க ஒலிக்கிறது
ஆனால் எதையும் ஊன்றிக்காட்ட வேண்டாம் என்றார் மதுபால் ஏனென்றால் இது எல்லாருக்குமான படம் அல்ல
ஜெ