இயக்குநர் பரதனுடன் சேர்ந்து சினிமாக்களில் பணியாற்றிய நாட்களைப்பற்றிப் பேசும்போது பாராட்டுகளைக்கூட பரதன் தனக்கே உரிய முறையில்தான் வெளிப்படுத்துவார் என்று சொன்னார் இசையமைப்பாளர் ஜான்சன். ஏதாவது ஒரு பாடல் அல்லது ஒரு நடிப்பு மிகவும் நன்றாக இருப்பதாகத் தோன்றினால் ‘நல்லது…நீ செய்தது என்று சொல்ல முடியாது’ என்று சொல்வாராம் அவர். புகழ்ச்சியும் இகழ்ச்சியும் கலந்த ஒரு வரி அது என்றார் ஜான்சன்
ஆனால் ஒருவன் தன்னால் செய்ய முடியக்கூடியதன் எல்லையைத் தாண்டிச் செல்வதைத்தான் அவர் சொல்கிறார் என்று நான் புரிந்துகொள்கிறேன். ஒழிமுறி என்ற படம் என்னை அத்தகைய ஒரு பரதவாக்கியத்தை நினைவுறுத்தியது. சினிமா என்னும் கலையின் இலக்கணத்தையும் அளவுகோல்களையும் கொண்டு வைத்துப் பார்த்தால் ஒழிமுறிக்குப் பல குற்றங்களும் குறைவுகளும் இருக்கக்கூடும். ஆனால் ஒழிமுறியைப் பார்க்கும்போது நம் முன் நிறைவது சினிமாவுக்கு அப்பால் விரியும் ஒரு சமூகத்தின், அதன் மூன்று தலைமுறைகளின் சித்திரம்
பெண்களுக்கு முழு சொத்துரிமையும் தன் வீட்டிலேயே வாழ உரிமையும் இருந்த முதல் தலைமுறைப் பெண் இன்னொரு வீட்டுக்குச் சென்று அங்கே அடிமையாக சுருங்கிவாழும் இரண்டாம் தலைமுறை. அவர்களின் வரலாறுகளை முன்வைக்க இயக்குநர் தேர்ந்தெடுத்து முன்வைக்கும் இன்றைய மூன்றாம்தலைமுறை. திறமையாக எழுதி இயக்கப்பட்ட இந்தப் படத்தில் அவை மூன்றும் நிரம்பியிருக்கின்றன
மொழியும் நிலப்பகுதியும் காலமும் பெரும்பாலும் பழக்கமற்றவை. ஆனால் நம் முன் தெளிந்துவரும் கதைமாந்தர்கள் மனதிற்குள் சென்று அமைபவர்கள். எவரையும் அஞ்சாத, எந்த நள்ளிரவிலும் தனித்து நடக்கத் தயங்காத, யாரங்கே என்று கேட்டால் நான் தான் இங்கே என்று திரும்பிநின்று சொல்லக்கூடிய பாட்டிகளை நான் கண்டிருக்கிறேன், இளமையில். ஆறுமணி ஆனபின்னர் தனியாகப் பெண்கள் வெளியே இறங்கி நடக்கமுடியாத ஒரு காலகட்டம் இன்று வந்திருக்கிறது. பாயும் தலையணையும் கையிலேந்தி வயல் வெளியில் தனியாகக் கதகளி காணச்செல்கிற அந்தப் பாட்டிகள் ஒரு வரலாற்று விந்தையாக ஆகிவிட்டனர்
நடிக்கத்தெரியாது என்று மலையாளி நிராகரித்த ஸ்வேதா மேனோன் என்ற நடிகை சென்ற நான்கு வருடங்களில் அடைந்த மாற்றம் ஆச்சரியமளிப்பது. எவரையும் அஞ்சாத அம்மச்சியாக ஸ்வேதா மிகச்சிறப்பாகச் செய்திருக்கிறார். இளமையிலிருந்து முதுமைக்குச் செல்லும்போது நடையிலும் தோற்றத்திலும் வரும் கவனமில்லாமை மிக இயல்பாக அவரில் நிகழ்ந்திருக்கிறது
அன்பை வசையாக மட்டுமே வெளிப்படுத்தக்கூடிய, வீம்புக்குக் குறைவில்லாத , தன்னை அஞ்சக்கூடியவர்களுக்கு முன்னால் சிம்மமாகவும் தன்னைவிட மேலானவர்களுக்கு முன்னால் ஆட்டுக்குட்டியாகவும் ஆகக்கூடிய, சாதாரணமான ஒருவரின் கதாபாத்திரம் லால் வழியாகக் கச்சிதமாக நிகழ்ந்திருக்கிறது. நட்சத்திரப் புகழில் நிலைகொள்வதனால் மம்மூட்டியும் மோகன்லாலும் இழப்பது இதைப்போன்ற கதாபாத்திரங்களைத்தான்
வாழ்க்கை முழுக்க சண்டைபோட்டு விலக்கி நிறுத்திய அம்மாவிற்கு நீர்க்கடன் கொடுக்கும்போது நினைவின் எடை தாளாமல் மனமுடைந்து கதறும் மைந்தர்கள் நமக்குப் புதியவர்கள் அல்ல. வாழும்போது எதற்காக அந்த வெறுப்பும் வேகமும் என்று நாம் எத்தனையோ முறை நினைத்திருப்போம்
ஒருவரோடொருவர் மனம் திறந்து பேசாத , அஞ்சியும் அஞ்சவைத்தும் வாழ்ந்து வாழ்க்கையை இழந்த ஒரு தலைமுறையைச் சேர்ந்த தந்தையும் அவர் மகனும் கொள்ளும் உறவின் சித்திரம் இப்படத்தில் மிக நுட்பமாக சித்தரிக்கப்பட்டிருக்கிறது. டிராஃபிக் படத்துக்குப்பின் ஆசிஃப் பெற்ற மிகச்சிறந்த கதாபாத்திரம் இது.
கணவன் மகன் ஆகிய இருவரை விட இன்னொரு உலகம் இல்லாத, அவர்களுக்காக மட்டும் வாழ்ந்து அதற்காகத் தன் பிறந்தவீட்டைக்கூட விலக்கிவிட்ட அம்மாக்களின் ஒரு தலைமுறையும் நாமறிந்ததே. என்னதான் தியாகம் செய்தாலும் கடைசியில் பிறர் அளிக்கும் குற்றவுணர்ச்சியை மட்டுமே திரும்பிப்பெறும் விதி கொண்டவர்கள். அவர்களுக்குக் கருத்துக்கள் இருக்கக்கூடாது எனக் கட்டாயப்படுத்துபவர்களே அவர்களுக்குக் கருத்துக்கள் இல்லை என்று கிண்டல்செய்வதையும் கண்டுகொண்டிருக்கிறோம். இதெல்லாம் இன்றைய கேரளத்தின் உண்மைச்சித்திரங்கள்
மலையாளசினிமாவில் தன் காலடிகளை நிலைநாட்ட ஆரம்பித்திருக்கும் நந்துலாலுக்கு மீண்டும் ஒரு நல்ல கதாபாத்திரம். இரண்டு நிமிடங்கள் மட்டுமே திரையில் தோன்றும் கோபகுமாரின் கதாபாத்திரமும் சிறப்பு. மலையாளசினிமா இந்த நடிகனை இன்னும்கூட நன்றாகப் பயன்படுத்திக்கொள்ளவேண்டும்
இதற்கெல்லாம் அப்பால் சற்றே கவனம் கலைந்தாலும் துண்டுதுண்டாக ஆகி மிக சலிப்பூட்டுவதாக ஆகக்கூடிய அபாயம் கொண்ட ஒரு கதையை மிகச்சிறப்பாக இயக்கியிருக்கிறார் மதுபால். படம் முழுக்க வரக்கூடிய குறியீடுகளை முடிந்தவரை நுட்பமாக, நல்ல ரசிகன் மட்டுமே அடையக்கூடியதாக ஆக்கியிருப்பது படத்தை அழகானதாக ஆக்குகிறது
தீயவர் எனத் தோன்றுபவர்களின் நன்மையும் பலவீனர் எனத் தோன்றுபவர்களின் அகவலிமையும் மெல்ல கதை விரிய விரிய நம்மை வந்தடைகிறது. மரணத்தையும் வாழ்க்கையையும் பற்றியுள்ள நுட்பமான வரிகள் மிக முக்கியமானவை என்று தோன்றியது.
தீனிப்பிரியம், எதையும் குற்றம் சொல்வது முதலிய நாயர்குணங்களை விரிவாகவே படம் கேலிசெய்கிறது என்றாலும் ஒரு சினிமாவுக்கு அப்பால் ஒரு சமூகத்தின் ஒட்டுமொத்த பரிணாமத்தையே காட்டமுடிந்த இந்த சினிமா என்னை மிகவும் கவர்ந்தது
பரதனின் மொழியில் சொல்லப்போனால் ‘நன்றாக இருக்கிறது. ஒரு சினிமா என்றே சொல்லமுடியாது’
வாயனசாலா இதழ் [ http://vayanashala.info/cinema/blog-post-3890-html45359927co9/?utm_source=twitterfeed&utm_medium=twitter ]