அகம்-கடிதங்கள்

பிரிய ஜெ.மோ.,

” அகம் மறைத்தல் “ படித்தேன் . ஒவ்வோரு சொற்களிலும் என்னை நான் கண்டேன் . மரியாதையை விட்டு அன்பு செலுத்தத்தான் ஒவ்வொரு நாளும் போராடிக் கொண்டிருக்கிறேன். இன்று வரை முடிய வில்லை. உங்களிடம் வார்த்தைகளால் நான் என்ன பேசி விட முடியும் . படிமங்களால் நாம் தினமும் பேசிக் கொண்டிருக்கிறோமே. மானசீகமாகத் தங்களின் இரு கைகளையும் இறுகப் பற்றிக் கொள்கிறேன்.

– பரமேஸ்வரன் பழனிச்சாமி.

/ஏனென்றால் அன்பு என்பது நாம் பிறருக்குக் கொடுப்பது அல்ல. நமக்கு நிகழ்வது. அது நம்முடைய சொந்த ஆன்மீக மலர்ச்சிக்கான வழி.//

ஜெவின் ஒவ்வொரு வார்த்தையுடனும் ஒத்துப் போகிறேன் , வேறென்ன சொல்ல !

இந்த சிக்கலை இன்னும் கொஞ்சம் எட்டி நின்று பார்த்தால் ,திறந்த மனதோடு பேசுதல் அல்லது பழகுதல் என்பதிலேயே பெரும் அடிப்படைத் தயக்கங்கள் இருப்பதைப் பார்க்கலாம்.

அன்பை மட்டுமல்ல , நன்றியை , நியாயத்தை , குழந்தைத்தனமானதை ,பணிவை,வெகுளியை, வியப்பை, கருணையை என்று எதை வெளிப்படுத்தினாலும் அது நம் சமூக வெளியில் ,( சில சமயம் உறவினர் வட்டத்திலும் கூட ) பலமின்மையாகவோ அல்லது சாமர்த்தியமின்மையாகவோ தான் கொள்ளப்படுகிறது.

அன்பு நம்மை vulnerable ஆக்கிவிடும் என்பதும் , நாம் எளிதில் மற்றவர்களால் பயன்படுத்தப்படுவோம் என்பதும் பொதுவில் புழங்கி வரும் ஒரு லௌகீக நம்பிக்கை என்று அறிந்துகொண்டேன். இது ஓரளவு உண்மையும் கூட .

இதையும் தாண்டி ஒருவர் அன்பைச் சொல்லும் பொழுது அத்தனை இழப்புகளுக்கும் ,புறக்கணிப்பிற்கும், அவமதிப்பிற்கும் தயாராக இருக்கவேண்டியிருக்கிறது.


//நம் சூழலில் தூய அன்பை மதிக்கும் மனநிலை நம்மிடமில்லை//

கண்டிப்பாக , taken for granted தான் . :(
தூய அன்பு தனக்கு பாத்தியப்பட்ட, தனக்கு உரிமைப்பட்ட ஒரு வஸ்து போலவும் , “இதா இப்படி வச்சிட்டு போ” என்ற தொனியிலுமே நடத்தப்படுகிறது.

அன்பைப் பெறுவதிலும் மகா பயம் , இதற்கு பின் ஏதும் மறைக்கப்பட்ட தேவை ஒளிந்திருக்குமோ , இது ஒரு திரும்பச் செலுத்தவேண்டிய கடனாக ஆகி விடுமோ ,அடிமைப்படுத்துமோ , இது ஒரு பாசாங்கோ நீ என் மேல் அன்பைக் காட்ட வேண்டிய அவசியமே இல்லையே,மற்றவர் யாரும் இது போல என்னிடம் நடந்து கொள்வதில்லையே ? இப்படி நம்பிக்கையின்மை, பாதுகாப்பின்மை என்று இதையெல்லாம் ஒருவாறு தாண்டி வந்து விட்டால் ,அதன் பின் Of course I deserve it ! என்ற மனப்பான்மை .

நீ என்னைத் தேடி வந்து அன்பு செய்கிறாய் என்றால் , நீ எனக்குக் கீழே , அன்பைக் காட்டுதல் உன் தேவை அதை நீ பூர்த்தி செய்து கொள்கிறாய் , அதற்குத் தகுதியான ஒருவனாக என்னைத் தேர்ந்தெடுத்திருக்கிறாய் . என் பெருந்தன்மை, நீ என் மீது அன்பு செய்ய நான் அனுமதிப்பது, புரிந்துகொள் ! அன்பு அளவில்லாமல் அவமதிக்கப்படுவதை நாள் தோறும் பார்க்கிறோம்.

இதில் வேறொரு சிக்கலும் இருக்கிறது ,அன்பு நுட்பமான தளங்களில் ஒரு power dynamics ஆகவே உறவுகளில் அமைந்துவிடுகிறது.நீங்கள் அன்பைச் சொல்லாத வரை தான் உங்கள் அன்புக்கு மதிப்பு அதிகம் , சொல்லி விட்டால் இவ்வளவு தான் என்று.

இன்னுமொரு தளத்தில் சில சமயம் அன்பு, செலுத்துபவரைப் பெருந்தன்மை மிக்கவராகவும் மற்றவர்களை சிறுமையாக்கியும் காட்டுகிறது (projection )என்ற பைத்தியக்காரத்தனமான நம்பிக்கை.

இப்படி சமூகத்தில் வடிக்கப்படும் அன்பின் மீதான அவநம்பிக்கை தனி மனித ஆளுமையை ஆட்கொண்டு பின்னர் வீட்டிலும் குடும்ப உறவுகளிலும் நுழைந்து வேரூன்றி விடுகிறது.

இந்தக் குறுகல்களையும் , சிறுமைகளையுமெல்லாம் தாண்டித் தயங்காது சாதாரணமாக எதிர்பார்ப்பின்றி அன்பைச் செலுத்துபவர் போன்று வலிமையானவர்,மனவிரிவு கொண்டவர் யாரும் இருக்க முடியாது.

நான் அன்பின் ஊற்றை வலிமையாகவே கொள்கிறேன் ,உளவலிமையாக ஆன்மவலிமையாக.

கார்திக்

அன்பின் ஜெ.எம்.,

அகம் மறைத்தல் கட்டுரை உலகியல் வாழ்வுத் தளத்தில் மிகவும் முக்கியமானது.

நாம் அன்பு செய்கிறோம் என்பது கூடப்பெரிதல்ல…அவ்வாறு அன்பு செய்வதை வாய்ப்பு நேரும்போதெல்லாம் காட்டிக்கொண்டே இருக்கவேண்டியதும் கூட அந்த அன்பைத் தக்க வைத்துக் கொள்ள அவசியம்தான் என்பதை அழகாய்ச்சொல்லும் கட்டுரை.

ஜே கேயின் ’ஒரு நடிகை நாடகம் பார்க்கிறா’ளில் இது நுட்பமாகவும் உணர்த்தப்பட்டிருக்கும்;உரையாடலிலும் சொல்லப்பட்டிருக்கும்.

இக்கட்டுரை சார்ந்த இரு பகிர்வுகள்,

சில மாதங்களுக்கு முன் அம்பை தில்லி வந்திருந்தபோது சந்தித்து நெடுநேரம் உரையாடிக் கொண்டிருந்தோம்;
பிரிய மனமே இல்லை..

எனினும் அந்தக்கணம் வந்தபோது அவர்களது கையை இறுகப்பற்றியபடி நான் விடை பெற்றபோது’’ஐயே இப்படியா வெறுமனே கைகுலுக்கிட்டுப் போறது?’’என்றபடி என்னை நெஞ்சோடு ஆரத் தழுவிக்கொண்டு விடை தந்தார்கள். நான் பழகிப்போன விதம் வேறு என்பதாலோ என்னவோ சற்றுக் கூச்சமாகவே உணர்ந்தேன்…
மற்றும் ஒன்று..

//ஒருநாளில் நூற்றுக்கணக்கான முறை நீ என் செல்லம் என்று என் பிள்ளைகளிடம் சொல்வேன். என் நாய்களிடம் சொல்வேன்//.

என்று பிள்ளைகளோ,நண்பர்களோ,நாய்களோ எல்லோருக்கும் அன்பைக் கொட்டுகிறீர்கள் நீங்கள்.
ஆனால் ஒரு சிலரைப்பார்த்திருக்கிறேன்.செல்லப்பிராணிகளிடம் வர்ஷிக்கும் அன்பில் ஒரு சிறிய பகுதியைக்கூடச் சொந்த மனைவி மக்களிடம் அவர்களால் காட்ட முடிவதில்லை. காட்டவேண்டுமென்பது அவர்களுக்குத் தோன்றுவதும் இல்லை.

ஆஸ்கார் விருது பெற்ற ஆர்டிஸ்ட் திரைப்படத்தில் அந்த மனநிலை அழகாகச் சொல்லப்பட்டிருந்தது.ஒவ்வொரு முறையும் சந்தோஷமாகவோ சலிப்பாகவோ வீடு வரும் கணவன் தன் வளர்ப்பு நாயிடம் அன்பைப்பொழிவான்.ஆனால் வீட்டுக்குள் மனைவி என்று ஒரு ஜீவன் வளைய வருவதே அவன் கண்ணுக்குத் தெரியாது. அதில் சலிப்புற்றுப் போனவளாக ஒரு கட்டத்தில் அவள் அவனிடமிருந்தே விலகியும் போய் விடுவாள்.

எம் ஏ சுசீலா

புது தில்லி

என் அப்பாவும் ஜெ போன்றவர் தான் . இப்படி ஒரு குடும்ப சூழலுக்குப் பழக்கப்பட்டு , நண்பர்கள் வீடுகளுக்குச் செல்லும் போது ரொம்பக் கஷ்டம் . பல வீடுகளில் நண்பர்கள் அப்பா அவர் மட்டும் பேசிக்கொண்டே இருப்பார் .

மற்றவர்கள் அடிமை சிக்கிட்டான்னு ஜூட் விட்டு விடுவார்கள் .
இப்படி எங்க அப்பா எப்போதாவது பேசினால் கூட , என் தங்கை ‘மொக்கையப் போடாத பா ! ‘ என்று கூறிவிடுவார் .

என் தங்கையை அப்பா உச்ச ஸ்தாயில் ‘பட்டு செல்லம் !!!’ என்றே அழைப்பார். என்னை ‘என்ன அண்ணா கண்டுக்கவே மாட்டேன்கறீங்க என்பார் . அன்பின் மொழி அது ஒரு பேரானந்தம் .
நாங்கள் பெரும்பாலும் sannthu என்போம் .

நான் திருமணம் ஆகும் வரையில் வீட்டில் தங்கும் போது அப்பா – அம்மாவுடன் தான் உறங்குவேன் .
தனி அறை கிடையாது .

பெரும்பாலும் அம்மாவின் தன்மை முக்கியம் . கணவன்களை எதிர்த்துப் பேச வேண்டியது அவர்கள்
கடமை . வீடுகளில் ஒரு சகஜ தன்மை உருவாக உதவும் . நகைச்சுவை இல்லாத வீடுகள் ஒரு பெரும் சுமை , ஒருவரை ஒருவர் வம்பு இழுத்து கொள்ள வேண்டும் . சில வீடுகளில் அப்பா கிண்டல் அடிப்பார் , மகன் தேமேன் என்று கேட்டு கொண்டு இருப்பான் . பல நண்பர்கள் என்னிடம் தனிப் பட்ட முறையில் சொல்வார்கள் ‘அப்பா ரொம்ப மொக்க போட்டாரோ ‘ ?

வீட்டில் அம்மா / அப்பாவைக் கிண்டல் செய்யாத நாட்களே கிடையாது . அப்பா அதிகம் கைபேசியில் பேசுவார் . அவரைப் போல நான் மிமிக்ரி செய்து காட்டுவேன் , அவர் பேசும் விதத்தில் இருந்து நான் ஒரு ஆய்வு நடத்தி இருக்கிறேன் . ஒரே வார்த்தையைத் தொடர்ந்து பல முறை சொல்வார் , உதாரணமாக ‘இல்லப்பா இல்லப்பா இல்லப்பா’ ‘ரைட் ரைட் ரைட் ‘ இது போல் . மூன்று முறைக்கு பதில் ஒரு முறை சொன்னால் ஒரு நாளைக்கு நீங்கள் ஒரு மணி நேரம் மிச்சம் பிடிக்கலாம் என்று சொன்னேன் . வீட்டில் ஒரே வெடிச்சிரிப்பு . எனக்கு இதுவே எதார்த்தம்

செய்யாத விஷயம் இல்லை , மல்யுத்தம் செய்து இருக்கிறோம் , லுங்கியைக் கழட்டி விடுவேன் ,

நெகிழ்ச்சியுடன்
அசோக்

“அப்படி அன்பைச் சொல்லிக்கொண்டே இருப்பதனால் நான் இழப்பதென்பது என் அப்பாவுக்கு அவரது சூழலில் கிடைத்துவந்த மரியாதையை. என் வீட்டில் நான் வந்தால் எவரும் அமைதியாக எழுந்து நிற்பதில்லை. நான் ஏவினால் என் மனைவியோ குழந்தையோ ஓடிப்போய் அதைச் செய்வதில்லை. எனக்கு எவரும் பணிவிடைகள் செய்வதில்லை. உரையாடல்களில் எப்போதும் சமமான இடமே எனக்குக் கிடைக்கும். அந்த மரியாதையை எதிர்பார்த்தால் அங்கே அன்பு இருக்க முடியாது.

ஆனால் அவர்களுக்கு நான் நெருக்கமானவனாக இருக்கிறேன். அவர்களின் அப்பாவாக மட்டுமல்லாமல் ஆசிரியனாகவும் இருக்கிறேன். அந்த இடம் முக்கியமானது.”

முழுக் கட்டுரையும் முக்கியமாக மேலே குறிப்பிட்டுள்ள வரிகளைப் படித்தவுடன், “கவலையற்றிருத்தலே வீடு” என்ற பாரதியின் சொற்கள்தான் ஞாபகம் வருகிறது.

ஜெயமோகன், நீங்கள் மரியாதையை இழந்தீர்களா பெற்றீர்களா? நாம் சிலவிதமாக மட்டுமே சிந்திக்கப் பழக்கப்படுத்தப்பட்டு இருக்கிறோம் என்று நினைக்கிறேன். நீங்கள் நடந்துகொள்வது போல் நடக்க முதலில் நிறைய தன்னம்பிக்கை, தெளிவு, எல்லாவற்றையும் விட தொட்டாசிணுங்கித்தனமோ கர்வமோ இல்லாமல் இருக்க வேண்டும் தானே.

அப்படியே நடந்து கொண்டாலும் “நான் எப்படி எல்லாம் தன்மையா ஒங்ககிட்ட நடந்துக்கிறேன் பாருங்க. நீங்க எவ்வளோ கொடுத்து வச்சு இருக்கணும்.” அப்படியென்று நம் மனைவி குழந்தைகளிடமே constant ஆக நிறுவிக் கொண்டே இல்லாமல் இருக்க கொஞ்சம் நாகரிகம் கனிவெல்லாம் வேண்டும். உறவுகள் ஒரு விதமான இணக்கமற்ற, விறைப்பான கட்டமைப்புகளாக மாறி எவ்வளவு காலங்கள் ஆகி இருக்கும். எங்கள் குடும்பத்தில் எனக்கு சற்று முந்தைய தலைமுறை வரை இதை பார்த்திருக்கிறேன். எங்களுடன் கொஞ்சம் இணக்கமாக இருந்த என் பெற்றோரே, அவர்கள் வளர்ப்பு முறையில் கொஞ்சம் feudalism மிச்சம் இருந்தும், அவ்வப்போது உறவினர்களின் கேலிக்கு (under the disguise of a friendly banter) ஆளாகியிருக்கிறார்கள் .

“நான் ஒன்னு சொல்வேன் தப்பா எடுக்க மாட்டீங்களே.” இதை சொல்லாமல் பேசும் அளவுக்கு நம் உறவு நம்முடைய கணவன்-மனைவி, பெற்றோர்-குழந்தைகள், சமயத்தில் நண்பர்களுடன் கூட இருக்கிறதா என எனக்கு எப்போதுமே சந்தேகம். இடம் கொடுக்காத கொடுக்க மறுக்கும் இறுக்கமே நம் உறவின், நட்பின் தனிக்கூறாகி விட்டதோ?

Lord of the Flies என்று ஒரு நாவல். கல்லூரியில் படித்தது. இரண்டாம் உலகப் போர் சமயத்தில் ஒரு விமான விபத்தில் பிரிட்டிஷ் பள்ளி சிறுவர்கள் ஓர் ஆள் இல்லாத் தீவில் மாட்டிக்கொள்வார்கள். அந்த நாவலில் ஒரு அத்தியாயத்தில் இப்படி ஒரு விவரணை வரும். சிறுவர்கள் குழுவில் வயதில் பெரிய சிறுவர்கள் அவர்களுக்கு இளையவர்களை அதிகாரம் செய்து கொண்டும் மிரட்டிக்கொண்டும் இருப்பார்கள். ஒரு நாள் அந்த சிறுவர்களிலேயே மிகவும் இளையவன் கடலோரத்தில் நின்று கொண்டு கால்களால் மண்ணில் சிறு பள்ளம் பறித்து அதில் அலையடித்து கொண்டுவரும் சிறு பூச்சிகளை மிரட்டிக்கொண்டு இருப்பான். கொஞ்சம் கொஞ்சமாக நாகரிகத்தின் மிச்சங்கள் அவர்களை விட்டு விலகி குழுக்களாகப் பிரிந்து சண்டையிட்டு, ஒரு கட்டத்தில் Piggy என்ற ஒரு சிறுவனைக் கொன்றும் விடுவார்கள். கீழே நான் கொடுத்திருக்கும் பகுதிகள் வெவ்வேறு அத்தியாயங்களில் இருந்து எடுக்கப்பட்டவை. ஆனால் அதில் நாவலாசிரியர் படிப்படியான சரிவைக் காட்டி இருப்பார்.

“‘We’ve got to have rules and obey them. After all, we’re not savages. We’re English, and the English are best at everything.”
“He began to dance and his laughter became a bloodthirsty snarling.”
“Piggy, for all his ludicrous body, had brains. The world, that understandable and lawful world, was slipping away.”
The desire to squeeze and hurt was over-mastering.”
‘Kill the beast! Cut his throat! Spill his blood!'”
The rock struck Piggy a glancing blow from chin to knee; the conch exploded into a thousand white fragments and ceased to exist.”

பணியிடப் பாசாங்குகள் கொஞ்சம் புரிந்து கொள்ளக் கூடிய விஷயங்கள். ஆனால் இதிலும் எனக்குக் கேள்விகள் உண்டு. கடிதம் நீண்டு கொண்டே போவதால் முடித்துக்கொள்கிறேன்.

நான் உங்கள் கட்சி

மங்கை

முந்தைய கட்டுரைஅணு-ஒருபடம்
அடுத்த கட்டுரைகோவையில் இளையராஜா தேவதேவன்