ஊசி – நூல் – ஸ்வெட்டர் பற்றிய அந்த வரியைப் படித்ததும் எனக்குக் காளிதாசனின் கவிதை மின்னலிட்டது..
மணௌ வஜ்ர ஸமுத்கீர்னே ஸுத்ரஸ்யேவ அஸ்தி மே கதி:
முன்னிருந்த கவிஞர் செய்த சொல்லெனும் துளையில் என் மொழி செல்லும், ரத்தினத்தை ஊடுருவி வைரம் இட்ட துளை வழியே நூல் செல்வது போல்.
இந்தியப் பண்பாடு உருவாக்கிய சொற்களிலேயே மகத்தானது தர்மம் என்ற சொல்தான் போலும்…
இந்தச் சொல் மூன்று முக்கிய பரிணாமங்களைக் கடந்திருக்கிறது..
அ) வேத உபநிஷத இலக்கியங்களில், நியதி / சுழல் / மாறாத லயம் என்ற பொருளில் ‘ரிதம்” என்ற கோட்பாட்டுடன் இணைத்து பேசப்படுகிறது. ரிக்வேதத்தில் 50க்கும் மேற்பட்ட இடங்களில் தர்மம் என்ற சொல் உள்ளது.
ஆ) இதிகாசங்களில், குறிப்பாக மகாபாரதத்தில், தர்மம் அனேகமாக அதன் அனைத்து விதமான கோணங்களிலும் பகுத்தும் தொகுத்தும் ஆராய்ந்தும், விளக்கப் படுகிறது.. ஜெ. அந்தக் கட்டுரையில் சொல்வதற்கு மாறாக, இந்திய மனம் தர்மம் என்ற சொல்லுக்கு உருவகிக்கும் அனைத்து பொருள்களையும் அதன் மீது முதலில் ஏற்றியது மகாபாரதமே, பௌத்தம் அல்ல. மகாபாரதத்தின் ஸ்தூலமான, சூட்சுமமான படிமங்கள்தான் பௌத்தத்தை விட மிகப் பரவலாக மக்களிடம் சென்றடைந்தன.
இ) பிறகு, பௌத்தம் அந்தச் சொல்லுக்கு ஒரு உயர் தத்துவார்த்த தன்மையை அளித்து, இன்னும் புதிய தளங்களுக்கு எடுத்துச் சென்றது.. வேதாந்தத்தின் பிரம்மம் என்ற முழுமைக் கோட்பாட்டுக்கு மாற்றாக தர்மம் என்பதை அது முன்வைத்தது.. அம்பேத்கார் நவீன கருத்துத் தளத்தில் அதனை இன்னும் சிறப்பாக வளர்த்தெடுக்கிறார்..
அன்புடன்,
ஜடாயு
வணக்கம். தம்மம் குறித்த கட்டுரைகள் குறித்து ஏதேனும் சொல்ல வேண்டும் என்று ஆர்வம் கொண்டு இரண்டு நாட்கள் கடுமையாக யோசித்தும் ஒன்றும் வார்த்தை கூடவில்லை. மிக பெரிய திறப்பாக இருந்தது. எஸ்.ரா இங்கு வரும் பொழுது கவிதை குறித்துப் பேசும் பொழுது தனி உரையாடலில் கவிதை ஒரு உடைப்பு , அது வெளிச்சத்தினை நிரப்பும் ஒரு உயிர்த் துடிப்பு என்று சொன்னார். அவர் சொன்னது போன்றதொரு ஒரு உணர்வினை தம்மம் குறித்த கட்டுரைகள் கொண்டு வந்தன என சொல்லலாம். இந்த உரையை நேரில் கேட்க முடியாமல் போனது இழப்பே.
உங்கள் உணவு கட்டுரையின்படி நாக்கை விடுத்து வயிறை நினைத்து உண்ணத் திட்டமிட்டுள்ளேன். உங்கள் பதில் இந்த வகைப் பழக்கத்தின் அவசியத்தினை சொல்லுகின்றது.
நன்றி
நிர்மல்
த்ருஷ்னை எனும் சொல்லை ஆயுர்வேதம் ஒரு நோயாக நோய்க் குறியாகக் குறிக்கிறது. தாகம் என்று பொருள். ஜெ பனி மனிதனில் த்ருஷ்னையைப் பற்றிப் பேசுவார். அடங்காத தாகம், மாரன் எனும் அசுரனின் வெளிப்பாடு. வளர்ச்சி , முன்னேற்றம் என நாம் சூட்டும் அனைத்துமே இந்த த்ருஷ்னையின் விளைவு தான். இன்று நெருங்கிய நண்பரின் தந்தை ஒருவர் புற்று நோயில் இறந்தார். யோசித்துப் பார்த்தால் உடல் கொள்ளும் முன்னேற்ற வெறி, வளர்ச்சி வெறி, ஒவ்வொரு செல்லின் அடங்காத பெரும் தாகம், த்ருஷ்னை தான் புற்று நோய் என்று கூடத் தோன்றியது.
//என்னைப்பொறுத்தவரை இந்தத் தெளிவு மிகமிக முக்கியமானது. ஒரு திருப்புமுனை என்றே சொல்வேன். பௌத்தம் மீதான என் முக்கியமான விமர்சனமாக இருந்ததும் அது முழுமையான விடுபடல்நிலையை மட்டுமே முன்வைக்கிறது என்பதுதான். ஆகவே அது உலகியல்வாழ்க்கைக்கு உகந்த நெறி அல்ல என்றுதான் நான் நினைத்திருந்தேன். அத்தனைபேரையும் சாமியாராக ஆக்க முனையும் மதம் என்ற மனப்பிம்பம் உருவாகியிருந்தது.//
இது மிக முக்கியமான விஷயம் என்று எண்ணுகிறேன். ஓஷோ கிருஷ்ணரை புது யுக முழு முதல் கடவுளாக முன்மொழியும் புத்தகத்தில் புத்தரை மேற்சொன்ன காரணத்திற்காகவே நிராகரிக்கிறார். புத்தரையும் ஏசுவையும் உலகியலுக்கு எதிரானவர்கள், வாழ்வின் கொண்டாட்டடங்களை ப் புறக்கணிப்பவர்கள் என்கிறார்.
சுனீல் கிருஷ்ணன்