அயோத்திதாசர்- கடிதங்கள்

அன்புள்ள ஜெ.,

சில நாட்கள் முன் நான் இப்படி ஒரு கடிதம் எழுதியிருந்தேன்… அதற்குப் பதில் தங்களது அயோத்திதாசரின் உரையில் ஓரளவு கிடைத்துவிட்டது.

புராணம் அனைத்தும் உண்மை அல்லது பொய் – என்பதைத் தாண்டி நாம் இன்னும் சில அடிகள் கூட எடுத்துவைக்கவில்லை என்பது மிகவும் ஆச்சரியமான விஷயம்… தேடலை மட்டுமே அடிப்படையாகக் கொண்ட ஒரு புராண வரலாற்று விளக்கம் பல கதவுகளைத் திறக்கக் கூடும் (அயோத்திதாசரின் அசுரன் போல, தங்களின் மாபலி போல).

நன்றி
ரத்தன்

அன்பின் ஜெ..

சில நாட்கள், தொலைக்காட்சியில், மதுவினால் மக்கள் எப்படி அழிந்து போனார்கள் என்னும் ஒரு படக் காட்சியில், ஒரு பெரியவர், உங்கள் கட்டுரையின் வரிகளை அப்படியே பேசிக் கொண்டிருந்தார்.

‘சுரபானம் குடிப்பவன் சுரன். குடிக்காதவன் அசுரன்’ – திராவிட உடன்பிறப்புகள் இவ்வளவு கற்பனை வளம் கொண்டிருக்கிறார்களே என சிரித்துக் கொண்டிருந்தேன்.

நம்ப முடியவில்லை என்றுதான் சொல்வேன். ஆனால், இப்படி ஒரு பார்வையில் ஒரு ஈர்ப்பு இருக்கிறது. ஏனெனில், எனக்கு அது விவசாயம் சார்ந்து வந்தது. இயற்கையில் இருந்து, மனிதன் தனக்கு வேண்டிய அளவு மட்டும்தான் எடுத்துக் கொள்ள முடியும். அங்கே ஒவ்வொரு உயிரினத்துக்கும் ஒரு தேவையும், வாழும் உரிமையும் உள்ளது. என்று அதை, மனிதனுக்கு உணவளிக்கும் இயந்திரமாக மட்டுமே பாவிக்கத் துவங்கினோமோ அன்றே பயிர் என்றும் களை என்றும் பேதங்கள் துவங்கி விட்டன.

ஆதாரங்கள் சரியாக இல்லாததனாலேயே எத்தனை ஆப்பிரிக்க ஞானிகள் கண்டு பிடிக்கப் படாமல் மட்கி அழிந்திருப்பர்? ஆதிக்கத்தின் மொழியில் இல்லாததனாலேயே எத்தனை ரமணர்களும், பரமஹம்ஸர்களும் ஏடுகளில் நிலைப் படுத்தப் படாமல் போயிருப்பர்?

மனிதனின் உண்மையான குறிக்கோளை, பல்லாயிரம் ஆண்டுகள் முன்பே அடைந்து விட்டிருக்கிறான். எங்கோ/ என்றோ ஒரு புளித்த ஆப்பிளைத் தின்று விட்டு, அதன் போதையில், பாதையை, இலக்கை மறந்துபோனோம்.

பாலா

அன்புள்ள ஜெயமோகன் ,

நலமா? தங்களின் புத்தரின் தம்மபதம் பற்றிய கட்டுரைகளை வாசித்தேன். அந்த புத்தகத்தின் ஆங்கிலம் மொழி வடிவத்தை நான் ஏற்கனவே வாசித்திருக்கிறேன். ஆனால் உங்களின் புரிதலில் நான்கில் ஒரு மடங்குதான் எனக்கு புரியவந்தது. என்னதான் எனக்கு ஆங்கிலம் வாசிக்க தெரிந்தாலும் முழுமையாக அதன் கருத்தை உள்வாங்கமுடியவில்லை.

புத்தரும் அவரது தம்மமும் புத்தகம் தமிழில் வெளிவந்துள்ளதாக ஏற்கனவே நான் கேள்விப்பட்டு கடந்த ஆறு மாதங்களாக தேடிவருகிறேன். எனக்கு அந்த புத்தகம் கிடைக்கவில்லை. அந்த புத்தகம் எங்கு கிடைக்கும் என்று உங்களுக்கு தெரிந்தால் தெரியபடுத்துங்கள். தங்களிடம் நான் கேட்டுக்கொள்வது இது போன்று புத்தங்களை பற்றி எழுதும்போது அந்த புத்தகத்தின் online shopping link-யும் இணைத்துவிடுங்கள் .

அன்புடன்
இராஜீவ்

அன்புள்ள ராஜீவ்

புத்தரும் அவரது தம்மமும் என்பது அம்பேத்கர் எழுதிய நூல். அது தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளது. நியூ செஞ்சுரி பு ஹவுஸ் வெளியீடு

தம்மபதம் பல்வேறு நண்பர்களால் மொழியாக்கம் செய்யப்பட்டு கிடைக்கிறது. கு ஜெகன்னாதராஜா முதல் யாழன் ஆதி வரை

ஜெ

முந்தைய கட்டுரைஒரு சினிமாவே அல்ல
அடுத்த கட்டுரைதேவதேவனின் படிமங்கள்