வயிறு- கடிதம்

அன்புள்ள ஜெ,

பெங்களூர் இந்த விஷயத்தில் பல வகைகளில் மேம்பட்டது. இங்குள்ள “தர்ஷனி” என்ற வகை சைவ உணவகங்கள் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள் (”கண்காண சமைக்கும் இடம்” என்ற பொருளில்தான் அந்தப் பெயர் வைக்கப்பட்டது). இவை ஒருவகையாக துரித உணவகங்கள். பெரும்பாலான தர்ஷனிகளில் நின்று கொண்டே சாப்பிடும் வகையிலேயே கல் மேசைகள் அமைக்கப்பட்டிருக்கும். சிலவற்றில் ஒரு பகுதியை மட்டும் உட்கார்ந்து சாப்பிடும் வகையில் அமைத்திருப்பார்கள்.

இவற்றின் சிறப்பு அம்சம், திறந்த சமையலறை. நீங்கள் உணவை வாங்கும் counter top வழியாக, உள்ளே இட்லி அவிக்கப் படுவதை, தோசை சுடப்படுவதைப் பார்க்கலாம். வடைகளை ஈ மொய்க்காதபடி கண்ணாடிப் பெட்டிக்குள்ளிருந்து எடுத்துத் தருவார்கள். எல்லா தர்ஷனிகளிலும் குடி தண்ணீருக்காக water purifier / chiller உண்டு. ஸ்பூன்களைக் கொதி நீரில் போட்டு வைத்திருப்பார்கள். தட்டுகள் சுத்தமாக இருக்கும். இவற்றை நடத்துபவர்கள் பெரும்பாலும் மங்களூர் – உடுப்பிக்காரர்கள்.

இத்தனைக்கும் பெங்களூர் தரப்படி, இந்த உணவகங்களில் சாப்பாடு விலை மிக மலிவானது – 25 ரூபாயில் உங்கள் காலை உணவை முடித்து விடலாம். பெங்களூரின் பல பகுதிகளில் காலை நேரத்தில் சாப்ட்வேரர்களும் கூலித் தொழிலாளர்களும் அருகருகே நின்று கொண்டு தர்ஷனிகளில் சாப்பிடும் காட்சியைக் காண முடியும். பெரும்பாலான தர்ஷனிகளில் சுவையும் சீரானதாக, தொடர்ச்சியாக நன்றாக இருக்கும்.

விதவிதமான ரெஸ்டாரண்டுகள் எல்லாப் பகுதிகளிலும் அங்கங்கே முளைத்து வந்தாலும் தர்ஷனிகள் மவுசு குறையாமல் இருக்கின்றன – இவை பெங்களூர்க்காரக்ரளுக்கு உண்மையிலேயே ஒரு “வரப் பிரசாதம்”.

அன்புடன்,
ஜடாயு

வயிறு-ஒரு கடிதம்

முந்தைய கட்டுரைதேவதேவனின் கவிதைகளை ரசிப்பது பற்றி…
அடுத்த கட்டுரைதேவதேவனின் பித்து..