உருகிப் படிமமாகி ஒளிரும் உலகம்

”அறிவியல்புனைகதைகள் அறிவியல்ன் சோரக்குழந்தைகள், அவை அறிவியலும் அல்ல இலக்கியமும் அல்ல” என்றார் மலையாளக்கவிஞர் ஆற்றூர் ரவிவர்மா என்னிடம். நெடுநாள் அந்த எண்ணம் என் மனத்திலும் இருந்தது. ஏன் நாம் அறிவியலை இலக்கியமாக எழுதவேண்டும்? அதன் மேல் நீங்கள் அறிவியல் கேள்விகளைக் கேட்டால் ”அய்யய்யோ, நான் இலக்கியம், வெறும் கற்பனை” என்று அது சொல்லும். இலக்கியக்கேள்வி கேட்டால் ”இதெல்லாம் அறிவியல், சும்மா இரு” என்று அதட்டும்.

கொஞ்சநாள் கழித்து சுந்தர ராமசாமி குமரிமாவட்ட வரலாறு சார்ந்து ஒரு நாவலை எழுதிய எழுத்தாளர் பற்றிச் சொல்லும்போது ”வரலாற்று நாவல் என்று அவர் சொல்வது ஒரு ஹம்பக். வரலாற்றுத்தகவலை கேள்விகேட்டால் இலக்கியம் என்பார். இலக்கியத்தை கேள்விகேட்டால் வரலாறு என்பார்” என்றார். அப்போது எனக்கு ஒரு மணி அடித்தது.

இவர்களெல்லாம் ஒரு சுத்த இலக்கியத்தை கற்பனைசெய்கிறார்களா? இதையே சமூகவியல் மானுடவியல் சார்ந்தும் சொல்ல ஆரம்பித்தால் அப்புறம் இலக்கியம் எதைத்தான் பேசும்?

அதைச்சார்ந்து இன்னொரு விவாதம் அப்போது உருவானது. சென்னை சார்ந்த ஒரு இதழியல் எழுத்தாளர் வட்டார வழக்கு ஒரு ஹம்பக் என்று சொல்லி அதெல்லாம் வெறும் தகவல்கள் என்றார். அதைச்சார்ந்து நாஞ்சில்நாடன் கதைகளை பற்றி பேசும்போது கி ராஜநாராயணன் ‘தகவல்கள்தான் இலக்கியம். எதைச் சொல்லவேண்டும் சொல்லக்கூடாது எப்படிச்சொல்லவேண்டும் என்று தீர்மானிப்பதுதான் அதிலே உள்ள கலை’ என்று சொல்லி நாஞ்சில் அளிக்கும் விரிவான வேளாண்மைத்தகவல்கள்தான் அவரது இலக்கியத்தின் தனிச்சிறப்பு என்றார்.

ஆனால் அது கலைஞனின் பதில். விமரிசகனுக்கு மேலும் விளக்கம் தேவை. எதற்காக கலைஞன் தன் படைப்பில் தகவல்களை பயன்படுத்துகிறான்? தகவல்கள் இலக்கியத்தில் என்ன பங்களிப்பை ஆற்றுகின்றன? கலைக்களஞ்சியத்தை அள்ளி வைத்தால் நாவலாகுமா? ஆனால் மேலான நாவல்கள் எல்லாமே கலைக்களஞ்சியத்தன்மையும் கொண்டிருக்கின்றனவே. வெறும்தகவல்கள் எங்கே எப்படி இலக்கியத்தகவல்கள் ஆகின்றன?

எனக்கான விளக்கங்களை நான் என்னுடைய நாவல் வழியாகவே உருவாக்கிக்கொண்டேன். விஷ்ணுபுரம் ஒரு குட்டிக்கலைக்களஞ்சியம். ‘கலைக்களஞ்சிய நாவல்’ என்று சொல்லப்படும் வகைக்கு கச்சிதமாகப் பொருந்தும் ஆக்கம் அது. அதில் உள்ள தகவல்கள் என்னவாக ஆகின்றன?

முதலில் அவை தகவல்களுக்காக படைப்பில் இடம்பெறுவதில்லை. மிகமுக்கியமான ஒரு தகவல் விடுபட்டிருக்கும். சர்வசாதாரணமான ஒரு தகவல் விரிவடைந்திருக்கும். அங்கிருந்து யோசிக்க ஆரம்பித்தேன். ஒரு தகவல் வேறு ஒன்றுக்கான பிரதிவடிவமாக, விரிவான அர்த்தத்தில் குறியீடாக, நிற்கும்போது மட்டுமே அது இலக்கியத்தில் இயல்பான இடம் பெறுகிறது.

ஆம், தகவல்கள் என்பவை புற உலகில் இருந்து நாம் எடுத்துக்கொள்ளும் புலன்சார்பதிவுகள், மற்றும் அவற்றின் மீதான விளக்கங்கள். ஆனால் அப்படி எடுத்துக்கொள்ளும் தகவல் அதனுடன் சம்பந்தப்பட்ட ஏராளமான விஷயங்களை உணர்த்துவதாக இருக்கும்போது அது ஒரு குறியீடாகிறது. இலக்கியத்தின் மொழி குறியீடுகளால் ஆனது. ஓர் இலக்கிய ஆக்கத்தின் அடிப்படை அலகென்பதே குறியீடுதான். அந்தக் குறி£டுகளை அது புறவுலகில் இருந்து எடுத்துக்கொள்கிறது. அவற்றைப்பயன்படுத்தி மொழிக்கு நிகரான ஒரு தனிமொழியை [ Metalanguage] அது உருவாக்கிக் கொண்டு அதனூடாக பேசுகிறது

இலக்கிய ஆக்கத்தில் உள்ள தகவல்கள் எல்லாம் ஆசிரியன் அறிந்தோ அறியாமலோ குறியீடுகள்தான். அவை அவற்றுக்கு மட்டுமாக நிலைகொள்ளவில்லை. அவை பிற எதையோ உணர்த்தி நிற்கின்றன. துயரம் கப்பிய மனத்துடன் அன்னா கரீனினா வந்திறங்கும் ரயிலும் ரயில் நிலையமும் தல்ஸ்தோயின் பார்வையில் துல்லியமாக வடிக்கப்படுகின்றன. அந்த தகவல்கள் மூலம் அந்த ரயில்நிலயம் அவளுடைய துயரம் படர்ந்த புற உலகமாக ஆகிறது.

அந்தக் குறியீடுகளை அப்படி வாசிக்க முடியாத நிலையில் இருந்துதான் ஏன் இந்த தகவல்கள் என்ற மனநிலையை ஆழமில்லாத வாசகன் அடைகிறான். நாஞ்சில்நாடனின் வயல்கள், ரயில்கள், ஆறுகள், சாப்பாட்டுப்பந்திகள் எல்லாமே மீண்டும் மீண்டும் நுட்பமாக அவரது அக உலகின் குறியீடுகளாக நிற்பதை அவரது ஆக்கங்களில் காணலாம்.இலக்கியம் அறிவியலில் இருந்து தன் புறத்தகவல்களை எடுத்துக்கொணால் அது அறிவியல்புனைகதை. வரலாற்றில் இருந்து எடுத்துக்கோண்டால் அது வரலாற்றுப்படைப்பு. எங்கிருந்தும் அது தன் புறவுலகை அள்ளிக்கொள்ளலாம்.

இவ்வாறு புற உலகம் கவிதைக்குள் குறியீடுகளாக வந்தமைவதென்பது ஒரு மொழிச்சூழலில் ஓயாது நிகழ்ந்துகொண்டிருக்கவேண்டிய ஒரு செயல்பாடு. இதுவே கலையாக்கம் என்பது. அதற்கு கலைஞன் புறவுலகில் குழந்தையின் கண்களுடன் ஈடுபடுபவனாக இருக்க வேண்டும். அகத்தை புறத்தில் படிய வைப்பதும் புறத்தை அகமாக ஆக்கிக்காட்டுவதும்தான் சொல்லப்போனால் இலக்கியத்தின் கலை. கவிதை என்பது அது மட்டுமே

சங்க காலம் முதலே தமிழ்க் கவிதையில் நாம் காண்பது இதுவே. நிலம் ஓயாது கலையாக ஆகிக்கொண்டிருக்கிறது. நிலத்தின் நுண்ணிய தகவல்கள். சிட்டுக்குருவியின் நகம் தாழைமடலின் முள் போலிருக்கும் என்ற தகவல். அதுவே மீனின் பல் போலிருக்கும் என்ற அடுத்த தகவல். மழையில் பெய்யும் அருவி ஓடை நீர் நோக்கி நீண்ட வெள்ளிய மரவேர் போலிருக்கும் என்ற தகவல். சங்கக் கவிதையின் அழகே புற உலகச் சித்திரங்கள்தான். ஆழம் அச்சித்திரங்கள் அகத்தைக் காட்டுவன என்பதுதான். மிக அதிகமாக புற உலகச் சித்திரங்கள் சங்ககாலத்து அகத்துறைப் பாடல்களிலேயே உள்ளன என்பதைக் காணலாம்.

தமிழ் நவீனக் கவிதையின் மிகப்பெரிய பலவீனம் என்பது அது புற உலகத்தை முற்றாகப் புறக்கணித்து தன்னை ‘தூய’ அகத்தின் குரலாக முன்வைக்க ஆரம்பித்தது என்பதே. தமிழின் நவீனக்கவிதை நவீனத்துவக் கவிதையாகவே உருவானது. இருத்தலியம் அதன் தத்துவ ஆழமாக இருந்தது. தன்னுள் தான் சுருங்குதல் என்ற அம்சம் அதன் இயல்பு. ஆகவே அதில் புற உலகமே இருக்கவில்லை. புற உலகை அது திட்டமிட்டு நிராகரித்தது

ஆகவே மீண்டும் மீண்டும் அது தனகென்றே உள்ள குறைவான படிமங்கள் வழியாக பேச ஆரம்பித்தது. அறை அதன் முக்கியமான படிமம். அறைக்குள் தனித்திருக்கும் ஒருவன் என்பதே தமிழ் நவீனக்கவிதை நமக்களிக்கும் படிமம். ஓரளவுக்கு இயற்கையின் பரவசம் நோக்கி திரும்பியவர்கள் பிரமிள், அபி, கலாப்ரியா, தேவதேவன் போன்ற சிலரே. சமீபமாக முகுந்த் நாகராஜன்

இன்றும் இந்நிலையை நாம் நவீனக்கவிதைகளில் காணலாம். இங்கே  நடுத்தர வற்க வாழ்க்கையில் இருந்து பெற்றுக்கொண்ட மிகஎளிமையான சில புறப்பொருட்களுடன் கவிதையின் படிம உலகம் முடிந்துவிடுகிறது. அதன்பின் இலக்கியத்தில் இருந்தே பெற்றுக்கொண்ட  ‘அந்த பறவை’ ‘வண்ணத்துப்பூச்சி’ போன்ற சில கவியிருவகங்கள் [metaphors]

இன்று தமிழில் கவிதைக்கிருக்கும் சலிப்பூட்டும் தேக்கநிலையை தாண்டிச்செல்வதற்கு அவசியமானது கதவுகளை திறந்து விடுவது என்று படுகிறது. புற உலகம் அதன் முடிவில்லாத காட்சிகளுடன் உள்ளே வரட்டும். அது கவிதைகளில் அழகையும் அர்த்தத்தையும் நிரப்பட்டும். தமிழில் இன்னமும் கவிதை சென்று தொடாத வாழ்க்கை பரந்து விரிந்து கிடக்கிறது. கொல்லனும் கணியனும் கவிதை எழுதிய மரபுள்ள நமக்கு கவிஞன் என்ற தனி தொழிலாளி  உருவாகியுள்ள இன்றைய நிலை மிக அன்னியமானது. எல்லா மக்களும் தங்கள் உலகை நம் கவிதையின் தனிமொழிக்குள் கொண்டு வந்து சேர்க்கட்டும்

சமீபத்தில் ஆச்சரியமான ஒரு கவிதைத்தொகுதி கண்ணுக்குப் பட்டது. அது ஒரு பொற்கொல்லரால் எழுதப்பட்டது. பொற்கொல்லரின் வாழ்க்கை பொன்னுடன் இணைந்தது. கலையையே அன்றாடச் செயலாகக் கொண்டது. மானுட வாழ்க்கைக்கு அதன் பங்களிப்பென்பது அதற்கு அழகுசேர்ப்பதுதான். மிக நுண்மையான அலகுகளுடன் மிக நுண்மையான பொருட்களுடன் சம்பந்தப்பட்டது.  அது கவிதைக்குள் கொண்டுவரும் புற உலகம் முற்றிலும் வித்தியாசமானது. தாணுபிச்சையா எழுதிய ‘உறைமெழுகின் மஞ்சாடிப்பொன்’

ஏற்கனவே தமிழில் ஒரு பொற்கொல்லர் எழுதியிருக்கிறார் – தேவதச்சன். ஆனால் அவர் எழுதியவை நவீனத்துவக் கவிதைகள். அவர் அபூர்வமான அழகுள்ள கவிதைகள் பலவற்றை எழுதியிருந்தாலும் புற உலகம் அற்ற தத்துவப்பரப்பு அவரது கவியுலகம். தாணு பிச்சையா என்ற இந்த பொற்கொல்லரின் கவிதைகளில் அவர் அன்றாடம் புழங்கும் பொன்னின் நுண்ணுலகம் எழுந்துவரும்போது அது முற்றிலும் புதிய அனுபவமாக இருக்கிறது.

மினுக்கம்
=======

குச்சியைப்பிடித்து
எழுதத்தெரியாத பிராயத்தில்
ஊதுகுழலையும்
உலைக்குறடையும்
பற்றிப்பிடிக்கவைத்த தாத்தா
காய்ச்சவும்
உருக்கவும்
மின்னூதவும் என
பொன்னைப்பழக்கியதும்
தேடத்தொடங்கிற்று
காணும் யாவினுள்ளும்
மினுக்கத்தை

என்று தன்னை பற்றிய சுய உணர்வை அடைந்து எழுத ஆரம்பித்த கவிஞனின் இக்கவிதைகள் தமிழ்ப்புதுக்கவிதையின் பரப்பில் ஒரு முதிரா இளம்கவிஞனின் கால்வைப்புகளாகவே இருக்கின்றன. இவற்றின் சிறப்பு என்பதே இவற்றில் உள்ள இந்த புற உலகம் உருவாக்கும் வியப்புதான்.

கங்கினுள் கசடறுத்து
சுழன்றுருகும் பொன்னென
மினுங்கும் இந்த வேனற்பொழுது

என மிக இயல்பாக அந்த தனி அனுபவத்தை மொழிக்குள் நிகழ்த்த அவ்வப்போது தாணுபிச்சையாவால் முடிகிறது. தன் மொழி உலோகமொழி என்று இயல்பாக கவிதை கண்டுகொள்கிறது.

 
உலோக மொழி
============

வெற்றிலையைக் குதப்பியபடியே
வினைபுரியும் பொன்தச்சனின்
நீட்டிய கரத்தின்
சமிக்ஞை புரியாமல்
சுத்தியல் சாமணம்
படிச்செப்பு என
எதையெதையோ
எடுத்துக் கொடுத்து
தடுமாறிக் கொண்டிருந்த
காலம்
கனல் பொருதும்
பெரும்பகல்கள் பல கடந்து
எடுத்துத் தந்ததிதை

 
என்ற கவிதை முதல் வாசிப்பில் நேரடியான தகவல். ஆனால் அந்த பெரும் தச்சனுக்கு  எடுத்துக் கொடுத்து எடுத்துக்கொடுத்து கற்றுக்கொண்டதுதான் எல்லாருடைய மொழியும் என்ற புரிதலில் இருந்து வெகுவாக முன்னகர்கிறது இக்கவிதை.

நகைகள் வழியாகவே வாழ்க்கையை அளக்க முயலும் இக்கவிதைகள் கவிதைக்குரிய வகையில் அபூர்வமான தாவலை அடைந்து மேலே செல்லும் இடங்களும் உள்ளன. மழைத்துளி போல உள்ள கல் வைத்த தொங்கட்டானுக்காக கேட்டுக் கேட்டுச் சோர்ந்து போனவளின் காதில் தூர்ந்து விடாதிருக்க மாட்டிய வேப்பங்குச்சி மழையில் நனைகையில்

 

ஒடித்துரசி போட்டுக்கொண்ட
வேப்பங்குச்சியால் உகுக்கிறாள்
தொங்கட்டானைப்போலுள்ள
மழைத்துளிகளை


இந்த வரிகளில் சங்கக்கவிதையின் நுண்மையை தொடுகிறது தாணுபிச்சையாவின் கவிதை. சிறப்பான படிமம் என்பது அனைவராலும் காணமுடிகிற அபூர்வமான ஒரு காட்சி. ஒரு காட்சியாகவே பரவசத்தை அளிப்பது. குறியீடாக விரிகையில் அர்த்தங்களை அள்ளி வைப்பது.

இயற்கையை நடிக்கிறது ஆபரணம். ஏதோ ஒரு மனவெளியில் ஆபரணத்தை நடிக்கிறது இயற்கை. கவிதை வாழ்க்கையை நடிக்கிறது, ஆனால் உச்சத்தில் வாழ்க்கை கவிதையை நடிக்கவும்கூடும்.

[ ‘உறைமெழுகின் மஞ்சாடிப்பொன்’ தாணு பிச்சையா திணை வெளியீடகம். 23, பகவதி லாட்ஜ், நாகர்கோயில். குமரிமாவட்டம். 629001 ]

முந்தைய கட்டுரைகன்னிநிலம் கடிதங்கள்
அடுத்த கட்டுரைநூல் வெளீயீட்டு விழா