மூன்று கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன்

பக்தி இயக்கத்தைப்பற்றிய ‘மதிப்பற்ற’ தொனி கொண்ட உங்கள் கட்டுரை ஆர்வமூட்டுவதாக இருந்தது.   எந்த ஒரு சமூகத்திலும் மதத்திலும் அமைப்பிலும் ஓர் எல்லை வரை ‘அவமதிப்பு’ அம்சத்திற்கு இடமிருக்க வேண்டும். ஓர்ளவு சிலையுடைப்பு என்பது ஒரு பண்பாட்டின், மதத்தின் வளர்ச்சிக்கு இன்றியமையாததாகும். சீர்திருத்த வாதிகளான புத்தர், பூலே, அம்பேத்கார் , போன்றவர்கள் இவ்வகையில் இந்து மரபுக்கு பெரும் பங்களிப்பாற்றியிருக்கிறார்கள். பெரியார் ஓரளவுக்கு எல்லைகளை மீறியே சென்றார் என்று படுகிறது.   அழகியலும் அவநம்பிக்கையும் சமூகத்தின் இரு முக்கியக் கூறுகள். உங்கள் கட்டுரைகளை இலக்கிய இதழ்களில் படித்திருக்கிறேன். இந்த அவநம்பிக்கை- அவமரியாதை கோணத்தை பண்பாடு மதம், இலக்கியம் எல்லா தளங்களிலும் சற்றே நீங்கள் நீட்டிக்கலாம் என்று எண்ணுகிறேன். 
  ஆர்.வெங்கட்ராமன் [email protected]

அன்புள்ள ஆர் வெங்கட்ராமன் அவர்களுக்கு

உங்கள் கடிதம் உற்சாகமூட்டுவதாக இருந்தது. இக்கட்டுரைகளின் இயல்பை மிகக்குறைவானவர்களே சரியான நோக்கில் புரிந்துகொண்டிருக்கிறார்கள் என்று எண்ணுகிறேன். என் வாழ்க்கையின் இத்தருணத்தில் நான் கற்ற ,நம்பிய, முன்வைத்த அனைத்தையும் ஒருமுறை கலைத்து நோக்கி சிரிக்க வேண்டும் என்று எனக்கு தொன்றியது. அதன்பின் என்ன எஞ்சுகிறது என்று நோக்க. நான் சார்ந்திருப்பவை ஒரு கேலிக்குத் தாங்குமா என்று கணக்கிட.

இத்தகைய நோக்குக்கு வேதாந்தத்தில் எப்போதும் இடமுண்டு என்பதே என் எண்ணம். நாராயணகுரு அப்படிபப்ட்டவராக இருந்தார். நடராஜ குருவும் நித்யாவும் அப்படித்தான். வேதாந்தம் பக்தியை, மதத்தை நோக்கி சிரிப்பதாக அமையலாம். வேதாந்தத்தையே நோக்கி அது சிரிக்கலாம்.

ஒரு தரப்பைப் பற்றி அங்கதமாக எழுதும்போது ரசிப்பவர்கள் இன்னொரு பக்கத்தைப் பற்றி எழுதும்போது சீறுகிறார்கள். ஆனால் அந்த குரல்கள் மேலும் எழுத வேண்டும் என்ற வேகத்தையே உருவாக்குகின்றன. அதேசமயம் நான் எவரையும் தனிப்பட்ட முறையில் புண்படுத்த விரும்பவில்லை. ஆகவே முடிந்தவரை மென்மையான முறையிலேயே எழுதுகிறேன். பொதுவாக முன்வைக்கபப்ட்ட ஆளுமைகளையும் கருத்துக்களையும் மரபுகளையும் மட்டுமே கருத்தில் கொள்கிறேன். வசைபாடலாக ஆகிவிடலாகாது என்பதில் கவனம் கொள்கிரேன். பெரிதும் விவாதமாக ஆக்கபப்ட்ட சிவாஜி,எம்.ஜி.ஆர் கட்டுரைகள் கூட அத்தகையவையே என்பதை சற்று காலம் கழிந்தபின் வாசகர்கள் உணர முடியும்

இது எங்கே எதுவரை போகிறது என்று பார்த்துவிடுவோம் என்று ஓர் எண்ணம்

நன்றி

 அன்புடன்
ஜெயமோகன்

*****

ஜெகத்தின் லிபி மாற்றம் பற்றிய குறிப்புக்கு பதிலாக ரஜினி ராம்கி அவர்கள் தன் நண்பரிடமிருந்து பெற்று அனுப்பிய கடிதம்

ராம்கி,

ஜெகத் எப்படி செய்திருக்கிறார் என தெரியவில்லை. என் கருத்தில் இது போன்ற தேவைக்கு ஒரு பயர்பாக்ஸ் நீட்சியே செய்ய வேண்டும். செய்யும் எண்ணம் உள்ளது எனினும் செயல்பாட்டுக்கு வர கொஞ்சம் காலம் பிடிக்கும்.

தற்போதைக்கு உமர் பன்மொழி மாற்றி (http://umar.higopi.com) மூலம்

1) ஒன்பது இந்திய மொழிகளிலும் ஒரே சாளரத்தில் தட்டச்சிடலாம்
2) ஒரு மொழியில் தட்டச்சிட்டதை இன்னொரு மொழிக்கு மாற்றிடலாம்
3) வலைப்பக்கங்களில் இருந்து வெட்டி உமர் மாற்றியின் சாளரத்திற்குள் ஒட்டி அதை தேவையான மொழிக்கு மாற்றிப் படிக்கலாம்.

எனவே, ஜெமோ வின் தேவைக்கு உமர் மாற்றி தற்காலிக தீர்வாய் அமையும். (கன்னடப் பக்கங்களிலிருந்து காப்பி செய்து உமர் மாற்றியில் பேஸ்ட் செய்து பின்னர் தமிழை தெரிவு செய்து Convert all existing text to selected language செக்பாக்ஸை க்ளிக் செய்தால் கன்னட எழுத்துக்கள் தமிழுக்கு மாறும்)

ப்ரியமுடன்,

கோபி

***

 சிற்பங்கள் அழிவு பற்றி ஜெயராஜன் அனுப்பிய கடிதம்

அன்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு,

சிற்பங்கள் குறித்த தங்கள் பதிவினை கண்ட பின்பு இதனை எழுதுகிறேன். என்ன செய்தாலும் நேர் செய்ய முடியாத மாபெரும் பிழை ஒன்றை நமது கண்முன் நடத்திக் கொண்டிருப்பதனை எதிர்த்து நாம் என்ன செய்ய வேண்டும்

? சோறு தின்பதை தவிர வேறேதெற்கும் என்னென்ன இடர் வந்தாலும் கொஞ்சமும் கவலைப்படாத நமது மனப்போக்கு, ஒருவேளை இந்த இனம் அழிவதற்கான ஆரம்ப அறிகுறியோ? கஞ்சி குடிப்பதற்கு இல்லார்- அதன் காரணம் இவை என்னும் அறிவுமிலார்; என்னத்த சொல்ல. படிப்பறிவில்லாத சாதாரணன் ஒருவன் செய்யும் காரியமென்றால் ஒருவேளை புரிந்து கொள்ளக்கூடியதாயிருந்திருக்கும். படித்தவர்கள், அரசின் பிரதிநிதிகள் செய்வதை என்ன சொல்ல. உண்மைதான்., கோயில் என்பது பக்தி செய்ய, பக்தி செலுத்தினால் ‘ புள்ள குட்டியள் எல்லாம் நல்லாயிருக்கும்’ .. அவ்வளவுதான். நூற்றியைம்பது மீட்டர் உயரத்தில் பிரமிடை கட்டியவன் எல்லாம் முட்டாளா?

www.varalaaru.com சென்று பாருங்கள். வலஞ்சுழிவாணர் கோயில் வளாகத்தில் அமைந்திருந்த காலபைரவர் கதி என்ன ஆனது தெரியுமா? ராஜராஜ சோழனின் கல்லறை என்ன கதியில் இருக்கிறது தெரியுமா? எனக்கு நாங்குநேரி சொந்த ஊர். அங்கு வானமாமலை பெருமாள் கோவிலின் உள் பிரகாரத்தில் இருந்த கல்வட்டுகள் அனைத்தும் சுண்ணாம்பு பூச்சுக்குள் சென்று விட்டன. நாங்கள் ஆளப்படுவது தமிழினக்காவலரால். முக்கி முக்கி மேடையில் சொல் மழை பொழிவதுதான் தமிழ்த் தொண்டு என்றான பிறகு நமது கலை வடிவங்களை மணல் வீச்சுக்கள் அழித்து விட்டுத் தான் போகும். செய்வதறியாது…

அன்புடன்…

ஜெயராஜன்

[email protected]

முந்தைய கட்டுரைசிற்பப் படுகொலைகள்…
அடுத்த கட்டுரைசிற்பப் படுகொலைகள்-இரு கடிதங்கள்