புல்வெளிதேசம் 17,ரயிலில்

தொல்லியல் ஆய்வாளரான செந்தீ நடராஜன் என் வீட்டுக்கு வந்திருந்தபோது கேட்டேன், நாகர்கோயிலுக்கு ரயில் வந்த நாள். அவர் உடனே அவரது மனைவிக்கு ·போன் போட்டு கேட்டுவிட்டு ஆகஸ்ட் ஆறு 1972 ல் ரயில் விடுவதற்கான கால்கோள் விழா நடந்தது என்றார். நான் ஆச்சரியப்பட்டபோது தன் மகள் அன்றுதான் பிறந்தாள் என்று சிரித்துக்கொண்டே சொன்னார்.

திருவனந்தபுரத்துக்கு ரயில் வந்து அரைநூற்றாண்டு கழிந்துதான் நாகர்கோயிலுக்கு ரயில் வந்தது. குமரிமாவட்டத்தின் மேடுபள்ளமான நில அமைப்பு காரணமாக இங்கே ரயில்பாதை அமைப்பது மிகவும் கடினமாக கருதபப்ட்டது. பாதி இடங்களில் ரயில் ஆழமான குழிக்குள் ஓடும். மிச்ச இடங்களில் அது பாலங்கள் மேல் ஓடும்.. பலகோடி ரூபாய் செலவில் பாதை அமைத்தால் அதற்கேற்ப வருவாய் இருக்காதென்று சொல்லப்பட்டது.

ஆனால் குமரிமாவட்டத்தில் உள்ள கன்யாகுமரி முனை என்பது ஒரு பண்பாடுப்புள்ளி என்றும் அது ரயிலால் இணைக்கப்பட வேண்டும் என்றும் குமரிமுனையில் உருவான விவேகானந்த கேந்திரம் கோரிக்கை விடுத்து வலியுறுத்தியபடியே இருந்தது. அதன் நிறுவனரான ஏக்நாத் ரானடே பலமுறை இந்திராகாந்தியைச் சந்தித்து கோரிக்கை விடுத்தார். ஏற்கனவே குமரிமாவட்டத்துக்கு ரயிலுக்காக குமரிமாவட்ட காங்கிரஸ் மட்டுமே முயன்றுவந்தது. அதில் வங்க லாபியும் மராட்டிய லாபியும் இணைந்தபோது தேர் நகர்ந்தது.

அப்போது கன்யாகுமரியின் பாராளுமன்ற உறுப்பினர் கு.காமராஜ். அவர் இந்திராவுக்கு எதிரணியை உருவாக்க முயன்று தோற்றவர். பழைய காங்கிரஸ் தலைவராக, அரசியலில் ஓரம்கட்டப்பட்டு அவர் இருந்த அந்திம காலம் அது. ஆகவே இந்திராகாந்தி கன்யாகுமரி தொகுதியை மாற்றாந்தாய் மாதிரி நடத்தினார். ஆனாலும் வலுவான அழுத்தம் காரணமாக ரயிலுக்கு ஒத்துக்கொண்டார். ஆனால் அதன் பெருமை காமராஜுக்குப் போகாமல் பார்த்துக்கொண்டார்.

ஆகவே துவக்க விழாமேடையில் காமராஜ் மிக ஓரமாக ஒரு சாதாரண எம்பியாக அமரச்செய்யப்பட்டார்.  அவர் புறக்கணிக்கப்பட்டு கூனி அமர்ந்திருந்தார். இந்திரா காந்தி காமராஜை பொருட்படுத்தவே இல்லை. காமராஜ்தான் எழுந்து சாதாரணமாக வணக்கம் சொன்னார். அந்த நிகழ்ச்சி குமரிமாவட்டத்தினரை– குறிப்பாக நாடார்களை- பெரிதும் பாதித்தது. பின்பு தமிழக காங்கிரஸ் ஒன்றானபிறகும் கூட இங்குள்ள காங்கிரஸ்காரர்களில் கணிசமானவர்கள் அதில் இணையவில்லை. அவர்கள் ஜனதா ஆக மாறினார்கள்.  அவர்களின் மன அமைப்பு திராவிடக்கட்சிகளில் அல்லது கம்யூனிஸ்டு, பாரதியஜனதா கட்சிகளில் சேர அனுமதிக்காது. ஆகவே இன்றும் அவர்களில் ஒருசாரார் தேவகௌடாவின் மதசார்பற்ற ஜனதாதளமாக நீடிக்கிறார்கள். தமிழகத்தில் அக்கட்சி வேறெங்காவது இருக்கிறது என்று நான் நினைக்கவில்லை.

எட்டு வருடம் கழித்துத்தான் ரயில் வெள்ளோட்டம் ஓடியது. அதைக்காண மக்கள் இருபக்கமும் திரண்டார்கள். அந்தக்கூட்டம் நெடுநாள் நீடித்தது. ரயிலில் சென்றால் ஜனங்கள் ஓடிவந்து ரயிலைப்பார்ப்பதை மேலும் பத்து வருடங்களுக்கு காணமுடிந்தது. மேயக் கட்டப்பட்ட பசுக்கள் ரயிலைக் கண்டு மிரண்டு கயிற்றை இழுத்து திமிறி ஓடி சுற்றி வருவதைக் காண முடிந்தது. பல வருடங்கள் விபத்துக்கள் நடந்தன. இப்போது பசுக்கள் திரும்பியே பார்ப்பதில்லை

நான் ரயிலை வேடிக்கை பார்த்த தலைமுறை. அன்றுமுதல் இன்றுவரை ரயில்மேல் அபாரமான மோகம் உண்டு. ரயிலில் தனியாக பல ஆயிரம் கிலோமீட்டர் சுற்றியிருக்கிறேன். இந்திய ரயில்வே என்பது உலகின் அற்புதங்களில் ஒண்ரு. இத்தனை மாறுபட்ட நிலங்கள் மொழிகள் பண்பாடுகள் வழியாக செல்லும் ஒரு ரயில்பாதை உலகில் குறைவாகவே இருக்கும். கொஞ்சம் கவனித்தால் ஒரு ஸ்டேஷனில் இருந்து அடுத்த ஸ்டேஷனுக்குள் நிலமும் பண்பாடும் மாறிவிட்டிருப்பது தெரியும். நாகர்கோயிலுக்கும் நெல்லைக்கும் இடையே இரு நாடுகளுக்கு இடையே உள்ள வேறுபாடு உண்டு

ரயில் பிரியத்தால் ஆஸ்திரேலியாவில் ஒரு நீண்ட ரயில்பயணம்செய்யவேண்டும் என்ற எண்ணம் கொண்டிருந்தேன். சிட்னியில் இருந்து மெல்பர்னுக்கு வருவது ரயிலில் ஆகலாம் என்றேன்.ஆனால் ரயில் கட்டணமே விமானத்துக்கும் என்றார்கள். ரயில் போதும் என்றேன். நிலத்தை பார்க்கலாம். மேலும் ரயிலில் இருப்பது என்பதே ஒரு உற்சாகமான விஷயம்.

21.4.2009 அன்று காலை ஆறுமணிக்கு எங்களை ஆசி கந்தராஜா கொண்டுவந்து ரயில் ஏற்றிவிட்டார். விடிந்தும் விடியாத காலையில் ரயில் நிலையத்தில் சீனப்பெண்கள் கனத்த மேக்கப்புடன் சிதல்கூட்டங்கள் போல பிலுபிலுவென்று ஓடிக்கொண்டிருந்தார்கள். பெட்டியை ரயிலின் சரக்குப்பகுதியில் போடலாம் என்று போனோம். குறிப்பிட்ட எடைக்கு மேலே இருந்தால்தான் எடுப்போம் என்றாள் அங்கே இருந்த ஒரு பெண். ஒரு கனமான லாப்ரடார் நாய் ‘வாழ்க்கையிலே இதெல்லாம் சகஜமப்பா’ என்ற பாணியில் கொஞ்சம்கூட கவலைப்படாமல் கூண்டுக்குள் அமர்ந்திருந்தது. பயணம்செய்து ஐநூறு கிலோமீட்டரை தாண்டினாலும் அது சொந்த வீட்டிலேயே இருப்பதாக நினைக்கும்.

ஆஸ்திரேலியாவில் ரயில் அவ்வளவாக பரவவில்லை. விரிந்த நிலப்பரப்பு கொண்ட நாடுகளில் ரயில் பெரிய சக்தியாக வளர்ந்திருக்கும். அவ்வாறு நடக்காததற்குக் காரணம்  அந்நாட்டில் மக்கள் பரவல் மிகவும் குறைவு என்பதே. அதன் கடற்கரை பகுதிகளில்தான் குடியேற்றம்.  அந்நகரங்களை ரயில் இணைக்கிறது. அதன் பின் வடக்குக் கடற்கரையில் உள்ள எடிசன் போன்ற பகுதிகளில் மக்கள் வாழ்கிறார்கள். மற்றபடி ஆஸ்திரேலிய மையநிலம் என்பது காலியான ஒரு பொட்டல். எடிசனுக்கு ஆஸ்திரேலிய மையநிலம் வழியாக ஒரு ரயில் போடுவது பைத்தியக்காரத்தனம். கடல்வழியாக கண்டத்தைச் சுற்றிக்கொண்டு போவதே எளிது. பின்னர் விமானம் வந்து விட்டது.

சிட்னி- மெல்பர்ன் ரயிலை பயன்படுத்துபவர்கள் மிகவும் குறைவு.  ஆங்காங்கே வழியில் இறங்குபவர்கள்தான் அதிகமும் அந்த ரயிலில் செல்கிறார்கள் என்ற எண்ணம் ஏற்பட்டது. மெல்பர்ன் வரை வந்தவர்கள் ஐந்து சத பயணிகள் கூட இல்லை. ஆசி கந்தராஜா சிட்னியில் இருந்து மெல்பர்னுக்கு விமானத்தில், நேரம் இருந்தால் காரில்தான் வருவேன் என்றார். காரில் வந்தால் அந்தக்காரிலேயே மெல்பர்னில் சுற்ற முடியும் என்ற வசதி. ரயிலை விட வேகமாக காரில் சென்றுவிடலாம். எண்ணூறு கிலோமீட்டரை அதிகபட்சம்  எட்டு மணி நேரத்தில் காரில் கடக்கலாம். ரயில் பன்னிரண்டு மணிநேரம் எடுத்துக்கொண்டது.

வசதியான ரயில். நல்ல இருக்கைகள். நான் வசதியாகச் சாய்ந்து அமர்ந்துகொண்டேன். வெளியே அமைதி பரவிய புல்வெளிகள் மெல்ல சுழன்று சென்றன. வால் சுழற்றியபடி குதிரைகள் மேய்ந்தன. சரிவுகளில் குதிரைக்குழு ஒன்று தலை குனித்து உந்தி ஏறிச்சென்றது. மரக்கிளைகளில் பெருங்காக்கைகள் சிறகடித்துச் சென்றமர்ந்தன. மீண்டும் மீண்டும் வேலியிடப்பட்ட புல்வெளிகள். ஆனால் அவை சலிப்புக்குப் பதில் ஒருவகையான தியான மனநிலையை உருவாக்கின. அதிலேயே மூழ்கி கனவு கண்டவன் போல அமர்ந்துகொண்டிருப்பது அலாதியான அனுபவமாகவே இருந்தது. அருண்மொழியிடம் நீண்ட காதல்மொழிகளைச் சொன்னேன்.

ரயிலில் எங்களுக்கு நேர்முன்னால் ஒரு கருப்பு இனப் பெண்மணி தன் நான்கு குழந்தைகளுடன் பயணம்செய்தாள். அவளுக்கு முப்பது வயதுதான் இருக்கும். பெரிய பெண்ணுக்கு பன்னிரண்டு அடுத்தவனுக்கு எட்டு அடுத்தவனுக்கு ஆறு சின்னப்பெண்ணுக்கு நான்கு என்று வயது இருக்கும். ஏறியதுமுதலே சின்னப்பெண் எதற்காகவோ அடம்பிடித்தாள். ‘நோ நோ’ என்று சிணுங்கல். அம்மாக்காரி அவளை ரகசியமாகக் கிள்ளினாள். சத்தமில்லாமல் மிரட்டினாள். உருட்டி விழித்தாள். குட்டிப்பெண் மேலும் மேலும் அடம்பிடிக்கவே பளீர் என்று ஒன்று வைத்தாள்.

ஒருவகையில் அது நல்ல உத்தி. குட்டி கதறியழுது, தாயைப்பிராண்டி, அடித்து, கைகால்களை உதைத்து, பிலாக்காணம் வைத்து முடித்ததும் தெளிந்து உற்சாகமாகி அடுத்த வேலையை கவனிக்க ஆரம்பித்தது. அதன் பெயர் லாரா. அம்மா கோழி தன் குஞ்சுகளிடம் கோ கோ என்று சொல்லிக்கொண்டே இருப்பதுபோல ”லாரா நோ லாரா” என்று சொல்லிக்கொண்டே இருந்தாள். மூத்த இரு குழந்தைகளுக்கும் அவர்களின் வீட்டுப்பாட நோட்டுகளையும் பென்சில்களையும் கொடுத்து எழுதும்படிச் சொன்னாள். அவர்கள் வாய் ஓயாமல் பேசியபடி அவ்வப்போது ஓரு சில எழுத்துக்களை எழுதினார்கள்

முன்னால் இருந்து சமுராய்கொண்டை போட்ட ஒரு குண்டு ஜப்பானியப்பையன் – இல்லை பெண்ணா?- வந்து சேர்ந்தான். நீலக்கண் கொண்ட ஒரு வெள்ளைக்காரப்பயல். சாக்லேட் தின்று கொண்டே இருந்த ஒரு சின்னப்பெண். பயலின் தங்கையாக இருக்கும். இரு சீனக்குழந்தைகள் . ஜமா சேர்ந்து விட்டது. சீட் வழியாக ஏறி மறுபக்கம் தலைகுப்புறக் கவிழ்தல்தான் முதல் விளையாட்டு. அபப்டி கவிபவர்களை பிடித்து இழுத்து போடுதல் உதைத்தல் கூச்சலிடுதல் என அது விரிவுபெற்றது. கொஞ்சம் பெரிய ஜப்பானியப்பெண் வந்ததும் தங்களை பெரிய பெண்களாக உணர்ந்த இரு சிறுமியரும் தனியாக ஒதுங்கி கிளுகிளுச் சிரிப்புடன் பேசிக்கொள்ள ஆரம்பித்தார்கள். சட்டென்று கைகளை தட்டிக்கொண்டு பாட்டு. பாப் பாட்டா இல்லை நர்சரி ரைமா?

கருப்பி ஏதோ கடும்வெப்பநாட்டு பிறவிகொண்டவள். குளிர் இல்லை என்றே சொல்லலாம். அனால் அவள் ஏற்கனவே போட்டிருந்த பிளாஸ்டிக் ஜாக்கெட்டுக்கு மேல் நல்ல கம்பிளி ஒன்றை போர்த்திக்கொண்டு தூங்க ஆரம்பித்தாள். லாரா கைதட்டி ‘ஜெய்ஹோ ‘ என்று பாடினாள். ஏ.ஆர்.ரஹ்மான் தான் அப்போது ஆஸ்திரேலிய பரபரப்பு. இதன் நடுவே வீட்டுப்பாட நோட்டுகள் தாள்களாகி கிழிசல்களாக மாறி சிம்புகளாக உருப்பெற்றன. ஒரு சீனப்பெண்மணி பெரிய பிளாஸ்டிக் கூடையுடன் குப்பைசேகரிக்க வந்தபோது  ஜப்பானிய வளரிளநங்கை பொறுப்புணர்வுடன் அதையெல்லாம் சுருட்டி பொறுக்கி அதில்போட்டு கைகளை தட்டினார். கதை நிறைவு. அதற்குள் பசி. பெரிய பைகளை திறந்து ரோல்கள் ஹாம்பர்கர்கள் கோக் என எடுத்து தின்ன ஆரம்பித்தார்கள். ஜப்பானிய குழந்தை கிட்டத்தட்ட பைக்குள்ளேயே  நுழைந்து விட்டது. பையில் உள்ள அனைத்தையும் இழுத்து வெளியே போட்டு மீண்டும் உள்ளே திணித்தார்கள்.

ரயில் நிற்கும் இடங்கள் எல்லாம் சிறிய ஸ்டேஷன்கள். பல ஸ்டேஷன்களில் பத்துபேர்தான் இறங்கினார்கள். பல இடங்களில் — அது விடுமுறைக்காலம் என்பதனால் — இறங்கியவர்கள் சிறுவர் சிறுமியர். காத்து நின்றவர்கள் அனேகமாக பாட்டிகள். சிலசமயம் தாத்தாக்கள். பாட்டிகளை பேத்திகள் ஆரத்தழுவிக்கொள்வதை கட்டிப்பிடித்து கொஞ்சியபடியே செல்வதைக் கண்டேன். சின்னஞ்சிறு ரயில் நிலையங்களில் காலப்பழமை  இருந்தது. பெரிய இரும்புத்தூண்கள். கருங்கல் போட்ட பிளாட்பாரங்கள்.

லாரா திடீரென வந்து என்னருகே வந்து என்னை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தாள். பின்பு சென்று தன் தோழியைக் கூட்டி வந்தாள். அவர்கள் இருவரும் அபாரமான ஆர்வத்துடன் என்னை வேடிக்கை பார்த்தபின் தங்களுகுள் புன்னகைசெய்து கொண்டார்கள். நாங்கள் ஆசி.கந்தராஜா கொடுத்த டியூனா மீன் நடுவே வைத்த  சண்ட்விச்சை சாப்பிட்டோம். ஜூஸ் குடித்தோம். ரயிலிலேயே ஒரு உணவுக்கடை இருந்தது. நான் போய் கொஞ்சம் பர்கர்  வாங்கி வந்தேன்.

ரயில் ஒரு விசித்திரம். அதன் உட்பக்கம் சட்டென்று ஒரு சிறிய கிராமமாக ஆகிறது. வெளியே காலம் நகர்வது போல வெளி ஓடிச்செல்கிறது. நான் இந்தியப்பெருநிலத்தை ஊடுருவிச்செல்லும் நம் ரயிலின் அனுபவத்தை எண்ணிக்கொண்டேன். அது ஒரு பெரும் ஜனக்கொந்தளிப்பு. சில இடங்களில் மக்கள் கூச்சலிட்டுக்கொண்டு கிட்டத்தட்ட ஒரு கோட்டையை படைகள் கைப்பற்றுவது போல ரயிலை நோக்கி பாய்ந்து முற்றுகையிட்டு அகழிகளை தாண்டி வாசல்களை ஊடுருவி  வென்றெடுப்பார்கள். திடீரென முந்நூறு பேர் ஒரு முன்பதிவுப்பெட்டியில் ஏறி எல்லா இடங்க¨ளையும் நிரப்பி வழிவதுண்டு. இந்திய ரயில் என்பது மனித வாழ்க்கை தளும்ப தளும்ப நிர்ப்பப்பட்ட ஒரு பாத்திரம் போல.

ஜம்முதாவியில் இருந்து டெல்லி வழியாக சென்னைக்குள் செல்லாமல் அரக்கோணம் வழியாக மதுரை வரை வரும் ஒரு ரயில் உண்டு – ஜம்முதாவி எக்ஸ்பிரஸ். கொஞ்சம் நிதானமான ரயில். ஆகவே இடம் கிடைப்பது எளிது. டெல்லியில் அதில் ஏறுபவர்களில் எழுபது சதவீதம்பேர் மதுரைக்கு தெற்கே உள்ள தமிழர்கள். மிச்சம்பேர் மனவாடுகள். முன்பதிவுகள் ஒட்டுமொத்தமாகச் செய்யப்படுவதனாலும் ஒரு பெட்டி நிறைய ஒரே ஊருக்கு டிக்கெட் அளிக்கப்படுவதனாலும் பெட்டிகள் கிராமத்தன்மை கொண்டுவிடும்.  ஆந்திரபெட்டிகள் ஆந்திராவிலேயே கழன்றுவிடும். திருப்பதி பெட்டி கழன்றுவிட்டால் மிச்ச எல்லாமே மதுரைதான்.

ஏறியதுமே மேலே ஸ்பீக்கர் வைத்து கட்டி டேப் ரெக்கர்டரில் பாட்டு போட்டு விடுவார்கள். எம்ஜிஆர் ,சிவாஜி பாடல்கள். இளையராஜா ஹிட்ஸ். விஜய் தத்துவப்பாடல்கள். பெண்கள் அறிமுகம் முடிந்ததுமே தரையில் உட்கார்ந்தும் படுத்தும் பேசிக்கொள்ள ஆரம்பிப்பார்கள். பேன் பார்ப்பது கதைபுஸ்தகம்படிப்பது. ஆண்களில் பெரும்பாலானவர்கள் சீட்டு. சிலர் தண்ணீர்ப்புட்டிகளில் கோக்குடன் ரம் கலந்து மெல்லவே அருந்தி  வானில் பறந்தபடி கூட வருவார்கள். ஒட்டுமொத்தமான சாப்பாட்டுக்கடைகள். ஒருநாள் முழுக்க புளி-எலுமிச்சை சாதம். அதன்பின் ரயில்வே சாப்பாடு. நான் எப்போதுமே முதல்நாள் முழுக்க ஓசிச்சாப்பாடுதான். ”தம்பிக்கு எந்த ஊரு? நம்மளுக்கு கொக்கிரகுளம் பக்கமாட்டு பாத்துக்கிடுங்க…”

இரவில்தான் மெல்பர்ன் வந்து சேர்ந்தோம். எங்களைக் கூட்டிச்செல்ல முருகபூபதி வந்திருந்தார்.  ஒரு ரயில் நிலையத்தில் இறங்கி அடுத்ததில் ஏறி அவரது ஊருக்குச் சென்று இறங்கி காரில் அவரது வீட்டுக்குச் சென்றோம். அங்கே தெளிவத்தை ஜோசப் இல்லை, எனக்கு ஒரு வாழ்த்துக்கடிதம் எழுதிக்கொடுத்துவிட்டு ஊருக்குத் திரும்பிச்சென்றிருந்தார். நள்ளிரவில் நோயல் நடேசன் வந்தார். ஒரு நாய்க்கு அறுவை சிகிழ்ச்சை செய்ததாகச் சொன்னார்.

மறுநாள் காலை நானும் அருண்மொழியும் தயாராக இருந்தோம். காலையில் நோயல் நடேசன் வந்து கூட்டிச்சென்றார். அவரது வீட்டில் அவரது மனைவியும் பையனும் மனைவியின் அம்மாவும் அப்பாவும் இருந்தார்கள். நோயல் நடேசனின் மனைவி சியாமளா மருத்துவர். தமிழ்ப்பண்பாட்டுடனான உறவென்பது சன் டிவி சீரியல்கள். தமிழைக் காதால் கேட்பதற்காகவே அதை அவர் பார்க்கிறார் என்று பட்டது.

சியாமளாவின் அம்மா அப்பா இருவருக்கும் முதிர் வயது. தாத்தாவுக்கு தொண்ணூற்று ஆறு. சதமடிக்க மூன்று வருடம் போதும். நடமாட்டம் இருந்தது. காலையில் ஷ¥க்கள் அணிந்துகொண்டு நடைக்கான ஒரு ஊன்றுகோலுடன் அருகே உள்ள தெருக்களில் நடந்துவருவார். இலங்கையிலும் சிங்கப்பூரிலும் உயர் பதவிகளில் இருந்தவர். முதுமையில் மூளை கூர் இழக்கவில்லை. நுண்மையான நகைச்சுவை உணர்ச்சியும் பொது அறிவும் உடையவர். அருமையான சிரிப்பு. நினைவு மட்டும் ஆங்காங்கே மங்கி மங்கி மீண்டது.

தாத்தா தினமும் தொலைக்காட்சியில் ஈழச்செய்திகளை பார்த்துக்கொண்டிருந்தார். இரவில் மெல்ல ரேடியோ வைத்து செய்திகளை கேட்டுக்கொண்டிருந்தார். முதியவர்களுக்கு உள்ள வழக்கப்படி அவருக்கு சரியான தூக்கம் இல்லை. நான் நள்ளிரவில் பாத்ரூம் போக எழுந்தபோது கூடத்தில் தொலைக்காட்சி முன்னால் தரையிலிருந்து சூடான காற்றுவரும்  துளைக்கு மேலே நின்றுகொண்டு கால்பந்தாட்ட்டம் பார்த்துக்கொண்டிருந்தார்.

தாத்தாவும் பாட்டியும் முதுமையில் ஒருவருக்கொருவர் அனுசரணையாக ஆகிபோன தம்பதிகள். தாத்தா தினமும் காலையில் திருவாசகம் ஓதுவார். பாட்டி ‘பார்ன் எகெய்ன்’ கிறித்தவர். தீவிர விசுவாசி. அவரது ரேடியோவில் எந்நேரமும் கிறித்தவ ஜெபங்களும் பாட்டுகளும்தான். நினைவுகளை கிளர்த்தும் தகவல்கள் இருவர் முகங்களையும் மலரச்செய்வதைக் கண்டேன். ஆனால் இருவருக்குமே இந்தியா சார்ந்து நினைவுகள் அதிகமில்லை. அவர்கள் வாழ்வது இலங்கை மண்ணில்தான்.

பாட்டியும் தாத்தாவும் முதியவர்கள் ஆதலினால் ஆஸ்திரேலிய அரசு அவர்களுக்கு பரமரிப்பு நிதி வழங்குகிறது. வீடுகளில் அவர்களை வைத்துப் பார்த்துக்கொள்வதை ஊக்குவிப்பதற்காக. வாரம் இருமுறை ஒரு வெள்ளைக்கார அம்மணி வந்து புயல்வேகத்தில் தாத்தாபாட்டியின் அறையைச் சுத்தம்செய்து செல்வார்.  ஒவ்வொருநாளும் தாத்தாவையும் பாட்டியையும் காலைமுதல் மாலைவரை கூடவே இருந்து கவனித்துக்கொள்வதற்காக ஒருவர் சம்பளம் ஆஸ்திரேலிய அரசே வழங்கும். அவர்களின் மகன் ஓய்வுபெற்று சும்ம இருக்கிறார். ஆகவே அந்தவேலையை அவர் செய்கிறார்.

முதுதாத்தாபாட்டிகளை வீட்டில் வைத்திருப்பது இயலாத காரியமாக ஆகிக்கொண்டிருக்கிறது. இன்று எல்லாருக்குமே அவரவர் உலகம். அவரவர் சவால்கள். முதியவர் தனித்து விடப்படுவதை தவிர்க்கவே முடியாது. அவர்கள் அவர்களின் உலகைச்சேர்ந்தவர்களுடன் சரியான மருத்துவ நிபுணர் கண்காணிப்பில் அதற்கென்றே கட்டப்பட்ட முதியவர் விடுதிகளில் இருப்பதே யதார்த்தமாகப் பார்த்தால் சிறந்தது. ஆனால் அவர்கள் தாங்கள் கைவிடப்பட்டவர்களாக் உணரக்கூடும். மேலும் அடிக்கடி நிகழும் மரணங்கள் அவர்களை வெகுவாக  தளர்த்துகின்றன.தைது இந்நூற்றாண்டின் ஒரு சமூகச்சிக்கல்.

தினமும் தாத்தா விரிவாக செய்திகளை வாசிக்கக் கேட்டு தெரிந்துகொள்வார். அதன்பின் பிபிசி செய்திகளைப் பார்ப்பார். தாத்தாக்கள் அன்றாடச்செய்திகளை அப்படி கவனிப்பது நமக்கு கொஞ்சம் ஆச்சரியமாக இருக்கும். ஆனால் அது வாழ்க்கைமீதான பிடிப்பின் ஆதாரம். அன்றாட விஷயங்களில் அக்கறை காட்டுகிறவர்கள் ஆரோக்கியமாக நெடுநாள் வாழ்கிறார்கள். தாத்தா மானசீகமாக காலாவதியாகவே இல்லை.

அன்று என்னுடைய பிறந்தநாள். நாற்பத்தி ஏழு முடிகிறது. எனக்கே எனக்கு அவ்வளவு வயதாகிறதென்பதை நம்ப முடியவில்லை. இன்னும் கொஞ்சநாளில் ஐம்பது. ஐம்பதுக்கு மேலே கிழவன்  என்பது நம்மூர் வழக்கம். சால் பெல்லோ போல எழுபதுக்குமேல் கல்யாணம்செய்யும் திராணியெல்லாம் நம்மிடம் இருப்பதில்லை.

பிறந்தநாள் அன்று காலை நடேசன் வீட்டுக்கு அருகே உள்ள பூங்காவுக்கு காலைநடை சென்றோம். பச்சை பொங்கி விரிந்திருந்த தனிமையான அழகான பூங்கா. ஒரு ஸ்பானியல் நாய் உற்சாகத்தை ஒழுங்குப்பயிற்சியால் கட்டுப்படுத்த முயன்று அடிக்கடி துள்ளிக்குதித்துக்கொண்டு அவ்வப்போது சந்தேகத்துடன் புதர்களை நோக்கி மோப்பம் பிடித்து ”யார்ரா?” என்று கேட்டுக்கொண்டு ஒரு இளம்பெண்ணின் கூடவே போயிற்று

பூங்காவில் எழுபதுக்கு மேல் வயதான ஏழெட்டு மூத்தகுடிமக்கள் பூப்பந்தாட்டம் ஆடிக்கொண்டிருந்தார்கள். உற்சாகமாக ஓடி ஓடி பந்தை அடித்தார்கள். துள்ளி துள்ளி விழும்போது மார்புச்சதைகள் ஆடின. குடித்த பீரை எல்லாம் வியர்வையாக ஆக்கி விடுவார்கள். மீண்டும் பீர் பீப்பாய்முன் அமர. வாழ்க்கைமேல் விருப்பு கொண்ட எல்லாரையுமே நாம் உடனே விரும்ப ஆரம்பித்துவிடுகிறோம். ஏனென்றால் இந்த பூமியில் நிறைந்து நிற்கும் மாபெரும் ஆற்றல் ஒன்றை அவர்களில் நாம் கண்டுகொண்டிருக்கிறோம். இந்த பூமியின் நைட்ரஜன்-கார்பன் குழம்பிலிருந்து  உயிர்க்குலத்தை உருவாக்கி எடுத்த ஆற்றல் அது

தாத்தாவை இதை எழுதும்போது எண்ணிக்கொள்கிறேன். நடேசன் வீட்டில் இருந்து விடைபெறும்போது அவர்களை வணங்கினோம். என் கைகளை பற்றி முத்தமிட்டு வாழ்த்தினார். தாத்தா சென்ற ஜூன் பத்தாம் தேதி மரணமடைந்துவிட்டதாக நடேசன் தொலைபேசியில் கூப்பிட்டுச் சொன்ன போது அதைத்தான் எண்ணிக்கொண்டேன்

 

புல்வெளி தேசம் 16 நீலமலை

 

புல்வெளிதேசம்: 15,மண்ணின் மனிதர்கள்

 

புல்வெளிதேசம் 14,துறைமுகம்

புல்வெளிதேசம் 13அறைகூவலும் ஆட்டமும்

 

புல்வெளிதேசம் 12,வேட்டையும் இரையும்

 

புல்வெளிதேசம் 11, பிலம்

 

 

 

முந்தைய கட்டுரைநிறம் இனம்:கடிதங்கள்
அடுத்த கட்டுரைவாசிப்பறை கடிதங்கள்