அன்புள்ள ஜெ,
நீங்கள் உங்கள் வலைத்தளத்தில் பரிந்துரைத்த காரணமாக திரு. சாரு அவர்களின் வலைத்தளத்தை படிக்க நேரிட்டது. வன்முறையின் தோல்வி அழகாக எழுதியிருந்தார். அதற்கு கருத்து சொல்ல வேண்டுமென்று நினைத்தேன். ஆனால் அதை அவருக்கு அனுப்பலாமா அல்லது உங்கள் வழியாக அனுப்பலாமா என்னும் குழப்பம் காரணமாக அதை விட்டுவிட்டேன். சாருவின் எழுத்து நன்றாக இருக்கின்றது என்று கருதி அவரைப்பற்றி தெரிந்து கொள்ளலாமென்று அவர் பெயரை கூகிள் செய்தேன். எனக்கு அதிர்ஷ்டவசமாக கிடைத்ததென்னவோ 49 பக்க உங்களை குறித்த அவதூறு. சில பக்கங்களைப் படித்தேன். மீதியை ரொம்பத் தேவையென்று விட்டுவிட்டேன். அதன் பின்னர் அவரது கட்டுரைகளில் சிலவற்றை படிக்க நேரிட்டது. அவற்றில் ஒற்றில் பீப்பிரியாணி பற்றி சுவையாகச் சொல்லியிருப்பார். பீக்கும் அவருக்கும் ரொம்பப் பொருத்தம் போலிருக்கின்றது. அதனால் தான் அவரது உடம்பில் பீப்பீ கொஞ்சம் ஜாஸ்தி. மட்டுமன்று கடந்த சில நாட்களாக அவரது வலைத்தளம் பீப் பொட்டலமாக மாறிப்போனதாக உணர்கின்றேன். அதற்குக் காரணம் அவரது வலைத்தளத்தில் உங்களை திட்டுகின்றார் என்று நினைத்தால் ஏமாற்றம்தான்.
அனைத்து எழுத்தாளர்களுக்கும் ஒரு புதிய தமிழ் வாசகனின் வேண்டுகோள். உங்கள் எழுத்தாளர்களுக்குள் கருத்து வேறுபாடுகள் காரணமாக என்னவேண்டுமானாலும் செய்துகொள்ளுங்கள். வெட்டுங்கள், குத்துங்கள், கொலையும் செய்யுங்கள். எமக்கு அதுகுறித்து கவலையில்லை. காரணம் நீங்கள் அனைவரும் ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள். நாங்கள் வாசகர்கள் ஏன் என்றால், நீங்கள் அனைவரும் ஒன்று சேர்த்து எங்களை ஒன்றுமில்லாமல் ஆக்கிவிடுவீர்கள். காரணம் நாங்கள் நிராயுதபாணிகள். உங்களிடம் தானே எழுத்தென்னும் ஆயுதமிருக்கின்றது.
எனது ஆதங்கம் இதுதான். உங்கள் எழுத்தாளர்களின் சண்டையில், வாசகர்களை ஏன் இழுக்கின்றீர்கள்? நாங்கள் என்ன பாவம் செய்தோம்? ஏன் ஒரு குறிப்பிட்ட எழுத்தாளர்களின் வாசகர்களைக் குறிவைத்துத் தாக்குகின்றீர்கள்? அனைத்து எழுத்தாளர்களும் கவனிக்க வேண்டும். திரு. சாரு அவரது (வாசகர் எழுதிய) கட்டுரையில் திரு. ஜெயமோகனின் வாசகர்களை திட்டி எழுதியிருப்பார். இது அநாகரீகமான மிகவும் கண்டிக்கத்தக்க ஒன்று. வாசகர்கள் இல்லையேல் திரு சாரு போன்ற எழுத்தாளர்களுக்கு எங்கே வாழ்வு?
கடிதமெழுதிக்கொடுக்க
ஏதாவதொரு குப்பத்தில் நாற்காலி போட்டு உட்காரலாம். புண்ணியமாவது கிடைக்கும் .
நீங்கள் மலையாளம், தமிழ், பிரஞ்சு மற்றும் உலகின் அனைத்து மொழிகளிலும் கொடிகட்டிப் பறக்க விரும்புங்கள். தவறில்லை. வாசகர்கள் வேண்டுமல்லவா? காற்றில்லா வெற்றிடத்திலா சத்தமிடப் புறப்படுகின்றீர்கள்? வாசகர்கள் ஒரு எழுத்தாளனை மட்டும் படிக்கவில்லை. அனைத்து எழுத்தாளர்களையும் தான் படிக்கின்றார்கள். புதிய எழுத்தாளர்களைப் படிக்க ஒரு பரிந்துரை வேண்டும் அவ்வளவே. இன்றைய ஜெயமோகனின் வாசகன் நாளை சாருவின் வாசகன் என்பதை மனதில் இருத்தி எழுத்தாளர்களாகிய நீங்கள் வாசகர்கள் குறித்து எழுதுங்கள்.
வாசகர்களை மதியுங்கள். வாசகர்கள் உங்களை சமுதாயத்தில் முக்கியமானவர்களாக நினைக்கின்றார்கள். எனவே உங்களுக்கு சமுதாயச் சிந்தனை வேண்டும். அவர்கள் உங்களிடமிருந்து நல்லவை சிலவற்றை எதிர்பார்க்கின்றார்கள். அவர்களுக்கு எதுவும் கொடுக்கமுடியாவிட்டாலும் தீயவையைக் கொடுக்காதீர்கள். எழுத்தாளர்களை பின்தொடராதீர்கள் என்று பயத்தில் அறிவிலிபோல் ஓடாதீர்கள். அப்படி ஓடினீர்கள் என்ன்றால் நீங்கள் எழுத்தாளரல்ல. படிக்காத மக்களுக்கு
இப்போது திரு. சாருவின் வலைத்தளத்தைப் திறக்கும்போது மலப் பொட்டலத்தை பிரிப்பது போன்ற ஒரு உணர்வு.. யாரையாவது ஒருவரை வசைபாடிய கட்டுரை ஒன்று கண்டிப்பாக இருக்கும். உங்கள் வலைத்தளம் உங்களுடையதே. நீங்கள் எதுவும் எழுத உரிமை இருக்கின்றது. ஆனால் வாசகர்களை முகம் சுளிக்க வைக்காதீர்கள். இதையே உங்கள் வீட்டின் வெளிச்சுவரில் ஒட்டிவையுங்கள். பார்க்கலாம். அல்லது அண்ணா சாலையில் ஓரத்திலுள்ள சுவரில் ஒட்டுங்கள். சில நேரங்களில் நினைப்பதுண்டு, இப்படியும் தமிழ் இலக்கியம் படிக்க முயல வேண்டுமா? காலத்தின் கொடுமை.
சாரு வன்முறை பற்றி எழுதுகின்றார். ஒருமுறை நேருவின் தாய் தன்மகனின் இனிப்பு பதார்த்தங்களின் மேலுள்ள விருப்பை விட்டுவிட காந்தியை உபதேசிக்கச் சொன்னபோது, காந்தி தான் இனிப்புப் பதார்த்தங்கள் சாப்பிடுவதை விட்டுவிட்டு பின்னர் நேருவுக்கு அறிவுரை கூறியதாக செவிவழிக் கேட்டிருக்கின்றேன். சாரு மேற்க்கோள் காட்டும் காந்திக்கும் இவருக்கும் என்னே பெரிய ஒற்றுமை பாருங்கள். சாரு தன்னைத் தானே சுய பரிசோதனை செய்யவேண்டிய காலமிது. வாசகர்கள் எழுத்தாளர்களிடமிருந்து நல்லவை சிலவற்றை எதிர்பார்க்கின்றார்கள். அதே நேரம் வாசகன் எழுத்தாளர்களுக்கு அறிவுரை சொல்வதை என்னவென்பது? காலத்தின் கொடுமை.
வாசகர்களை படிக்கவிடுங்கள். இல்லையேல் நிம்மதியாக இருக்க விடுங்கள். தமிழில் எழுத்துக்குப் பஞ்சமில்லை.
பின்குறிப்பு: 1. ஏன் எங்கள் வலைத்தளத்தைப் படிக்கின்றீர்கள் என்று கேட்கலாம். சைபர் கிரைம் ஒன்று இருப்பதையும் மறவாதீர்கள்.
2. இந்த கடிதத்தை எழுத்தாளர்கள் சங்கத்துக்கு (அப்படி ஒன்று இருந்தால்) அனுப்பினால் சந்தோசப்படுவேன். குறிப்பாக ஞானி மற்றும் ராமகிருஷ்ணனுக்கு.
3. நாங்கள் வெளிநாட்டிலிருந்தும் எங்கள் குழைந்தைகளுக்கு தமிழை ஊக்கப்படுத்துகின்றோம். ஆனால் தமிழ்நாட்டிலிருந்து தமிழுக்கு உயிர் கொடுக்கும் நீங்கள் என்ன செய்துகொண்டிருக்கின்றீர்கள்?
உங்கள் அனைவரின் (ஜெமோ, சாரு, ஞானி , ராமகிருஷ்ணன்) ஒரு புதிய வாசகன்,
கிறிஸ்டோபர்.
அன்புள்ள கிறிஸ்டோபர் ஆண்டனி,
கடந்த இருபது வருடங்களாக நான் இலக்கிய விமரிசகனும்கூட. எல்லா எழுத்தாளர்களைப்பற்றியும் என் கறாரான கருத்துக்களை முன்வைத்து வருகிறேன் – கேட்கப்படும்போது சொல்கிறேன். அவ்வளவுதான், அதற்குமேல் என்னைப்பொறுத்தவரை சாரு குறித்து சொல்ல ஏதுமில்லை.
சீரோடிகிரி வந்தபோது அது ஒரு குறிப்பிடத்தக்க முயற்சி என்று நான் எழுதினேன். அந்த குறிப்பை மேடையிலே தூக்கி வீசிக்காட்டி இனி ‘தமிழிலே ஒருவரும் என்னை வாசிக்க வேண்டியதில்லை, என் இலட்சியக்கனவே இதுதான்’ என்று சொன்னார் சாரு. அதைப்பற்றி அவரது நண்பர்கள் காலச்சுவடு பற்றிய இதழ்களில் பக்கம் பக்கமாக புலம்பியிருக்கிறார்கள்.
அதேபோல அவருக்கு இலக்கியம் படைப்பதற்கான கற்பனை இல்லை, கேட்டதையும் கண்டதையும் அப்படியே முன்வைக்க மட்டுமே முடியும். அவை கிசுகிசு தளத்தைவிட்டு மேலெழாது என்பதையும் நான் சொல்லியாகவேண்டியிருக்கிறது. ஏன் என்றால் நான் இலக்கிய விமரிசகன்.
அவரது ஒரு கருத்து எனக்கு உடன்பாடென்றால் அதைச்சொல்ல எனக்கு தயக்கமில்லை. நாளையே அவர் ஒரு நல்ல ஆக்கத்தை எழுதினால் அதை அங்கீகரிப்பதில் பெருமகிழ்ச்சியே அடைவேன்
ஒரு பத்தி எழுத்தாளராக அவர் வெற்றிகரமானவர். அதற்கான காரணங்கள் மூன்று. ஒன்று பாலியல் சினிமா போன்ற வெகுஜன அம்சங்களை எழுதுவது இரண்டு எப்போதும் தமிழ்நாட்டில் பிரபலமாக ஓங்கி ஒலிக்கும் கோஷங்களை எதிரொலிப்பது. மூன்று., சுந்தர ராமசாமி முதல் யுவன் சந்திரசேகர் வரை இவர் சென்று தொடவே முடியாத அளவுக்கு படைப்பிலக்கியத்தில் சாதித்தவர்களை கடுமையாக வசைபாடி அவர்களின் எதிரிகளை தன்னை வாசிக்கச் செய்வது.
இவ்வளவுதான் அவர். இதுதவிர அவரைப்பற்றி எதுவுமே சொல்வதற்கில்லை. இதை நான் சொல்லாவிட்டாலும் அவரைப்பற்றிய கணிப்பாக எப்போதும் இருந்துகொண்டிருக்கும். மற்றபடி அவரது வசைகளை நான் என்றுமே ஒரு பொருட்டாக எண்ணியதில்லை.
இதற்காக ஒருவர் வயிற்றிலும் வாயிலும் அடித்துக்கொண்டு அழுது, சாணி அள்ளி வீசி, புழுதிவாரி தூற்றி, மண்ணில் விழுந்து புரண்டு, சாக்கடையை அள்ளிதானே முகத்தில் பூசிக்கொண்டு கதறி ஆர்ப்பாட்டம்செய்கிறார் என்றால் அது அவரது உளச்சிக்கல். அதை எண்ணி எனக்கும் வருத்தமாகவே இருக்கிறது, ஆனால் பொதுவெளியில் வந்து ஒருவர் கருத்துச் சொல்லும்போது வேறு வழியில்லை.
நீங்கள் சொல்வதைப்போல இந்த விவாதத்தை நிறுத்திக்கொள்ள வேண்டியதுதான். பாவம், பரிதாபத்துக்குரிய மனிதர் என்ற அளவில்
ஜெ