சிற்பப் படுகொலைகள்…

‘சுத்திகரிப்பு’ என்பதற்கு ‘அழித்தொழிப்பு’ என்று பெயர் உண்டு என்று · பாஸிஸம் கற்பித்தது. சமீபத்தில் கவிஞர் சேரனுடன் திருவட்டாறு கோயிலுக்குச் சென்றிருந்தபோது அதை நினைவுகூர்ந்தேன். திருவட்டாறு கோயிலில் சீரமைப்புப் பணிகள் நடந்துவருகின்றன. மகாகும்பாபிஷேகம் நடக்கவிருக்கிறது. அதன் பொருட்டு கோயிலில் உள்ள சிற்பங்களையெல்லாம் மணல்வீச்சு முறையில் சுத்தம் செய்திருக்கிறார்கள். விளைவாக சிறுவயது முதலே என் மனதைக் கவர்ந்த சிற்பங்கள் அனைத்தும் கல்பிண்டங்களாக மாற்றப்பட்டுவிட்டிருக்கின்றன.

சிற்பங்களில் காலப்போக்கில் படியும் அழுக்கையும் எண்ணைப்பூச்சையும் களைவதற்காக இம்முறை கையாளப்படுவதாகச் சொல்கிறார்கள். நுண்ணிய மணலானது ஒரு யந்திரம் மூலம் அதிவேகமாக சிற்பங்களை நோக்கி பீச்சியடிக்கப்படுகிறது. விளைவாக சிற்பங்களின் மேல்பூச்சு அப்படியே சிதைத்து அகற்றப்படுகிறது. இந்த முட்டாள்தனமான முறையை யார் இங்கே கொண்டு வந்தார்கள் என்று விசாரித்தால் அது உலகப்புகழ்பெற்றமுறை என்றும், அறிவியல் பூர்வமானது என்றும், இந்திய ஆலயங்களை இவ்வகையில் சுத்தம்செய்வதை யுனெஸ்கோ அமைப்பு பரிந்துரைத்து நிதியும் அளிக்கப்படுகிறது என்றும் சொல்கிறார்கள்.

நடைமுறையில் நம் கண்ணெதிரே நமது சிற்பச் செல்வங்கள் சிதைந்து அழிகின்றதையே நாம் காண்கிறோம். ஆனால் அது சிற்பங்களுக்கு நல்லது என்றும்  எந்த தீங்கும் ஏற்படாது என்றும் நம்மிடமே மீண்டும் மீண்டும் சொல்கிறார்கள். ஏனெனில் அது ‘வெளிநாட்டு’ நிபுணர்கள் உருவாக்கிய முறை!

நமது சிற்பங்களைப்பற்றியோ, அவற்றுக்கு பயன்படுத்தப்பட்டுள்ள வெவ்வேறு கற்களைப்பற்றியோ எந்த விதமான புரிதலும் இல்லாத அன்னியர்களால் உருவாக்கப்பட்ட முறை இது என்பது கண்கூடு. விஷயம் அறிந்தவர்களிடம் கேட்டுப்பார்த்தபோது கற்சுவர்களையும் கட்டுமானங்களையும் மட்டுமே  இம்முறையால் சுத்தம் செய்ய வேண்டும் என்றும் சிற்பங்களை ஒருபோதும் இதன் மூலம் சுத்தம் செய்யலாகாது என்றும் சொன்னார்கள். யுனெஸ்கோ சொல்லிவிட்டதனாலேயே நிதி பெறும்பொருட்டு மூர்க்கமாக இதைச் செய்கிறார்கள். சிற்பங்கள் அழிவது அனைவருக்கும் தெரியும்.  சிற்பிகள் இதைபப்ற்றி கடுமையான மாற்றுக்கருத்துக்களைச் சொல்லிவருகிறார்கள். ஆனால் நிதிபெறும் உயர்மட்டங்களில் முடிவுகள் எடுக்கப்படுவதனால் எவருமே எதுவும் சொல்வதில்லை.

மணல்வீச்சு மூலம் சுத்தம்செய்யலாம் என்று சொல்பவர்கள் கூட தகுந்த நிபுணர்களால் சிற்பங்களின் கல்லின் இயல்பை ஆராய்ந்து மதிப்பிடப்பட்ட பின்னர் மிகுந்த கவனத்துடன் செய்யபப்ட வேண்டிய வேலை இது என்றுதான் சொல்கிறார்கள். நடைமுறையில் இரண்டாம் ஒப்பந்தம், சில்லறை மறுஒப்பந்தம் என அவ்வேலை கைமாறி எந்தவிதமான பயிற்சியும் இல்லாதவர்களால் மனம்போனபடி செய்யப்படுகிறது. கிட்டத்தட்ட சுத்தியலால் சிற்பங்களை அடித்து உடைத்து வீசுவதற்கு நிகர் இது.

திருவட்டாறு ஆலயத்தின் சுற்றுப்பிராகாரத்தில் உள்ள தீபபாலிகை சிலைகள் மிக நுட்பமானவை. சற்று மென்மையான மணல்கல்லில் செதுக்கபப்பட்டவை. நூற்றுக்கணக்கான சிற்பங்களில் ஒரு சிற்பத்தின் காதணி, கழுத்தணி, தலையலங்காரம் எதுவும் இன்னொரு சிற்பத்தில் இருக்காது. இதை நான் பல நண்பர்களுக்குக் காட்டியிருக்கிறேன். இன்று எந்தச் சிற்பத்திலும் நகைகளோ அணிகளோ தென்படாமல் மொத்தையான உருவங்களாக மாறிவிட்டிருக்கின்றன. எல்லா சிற்பங்களிலும் மூக்கு முழுமையாகச் சிதைந்து போய்விட்டிருக்கிறது. உதடுகளை சிறு குமிழ் போல அமைப்பது நம் சிற்ப மரபு. இச்சிற்பங்களில் இப்போது உதடுகளும் இல்லை. முகங்கள் நீள்கோள வடிவத்தில் மொத்தையாக மாறிவிட்டன. பல சிற்பங்கள் உடைந்தும் பிளந்தும் நிற்கின்றன

முகமண்டபத்தில் உள்ள அர்ஜுனன், கர்ணன், கங்காளர், கோபாலகிருஷ்ணன் சிலைகள் மிக அபூர்வமான சிற்ப நுட்பங்கள் கொண்டவை. முன்பு அவற்றைப்பார்த்தால் அவை உலோகச்சிலைகள் என்று தோன்றும். மிகுந்த கவனத்துடன் அவற்றுக்கு ஒரு பளபளப்பை சிற்பி அளித்திருப்பான். கன்னங்கள் பக்கவாட்டு ஒளியில் மின்னும். சிலைகளின் உடைகளிலும் நகைகளிலும் உள்ள நுண்ணிய வேலைப்பாடுகள் பிரமிக்க வைக்கும். இப்போது அவை அப்படியே உரிக்கப்பட்டு எந்த விதமான நுட்பங்களும் இல்லாமல் நிற்கின்றன. பல இடங்களில் கைகளும் கால்களும் உடைந்து சிமிண்டால் செய்து இணைக்கப்பட்டிருக்கின்றன. சிலைகளின் கண்கள் நகங்கள் போன்றவற்றில் இருந்த நுண்ணிய கோடுகள், வரிகள் எதுவுமே இல்லை.

அ.கா.பெருமாள் எழுதிய ‘தென்குமரியின்கதை’ என்ற நூல் [தமிழினி] அட்டையில் வசந்தகுமார் எடுத்த ஒரு நல்ல புகைப்படம் உள்ளது. சிதறால் மலைமீது பார்ஸ்வநாதரின் சிலை அருகே நிற்கும் பத்மாவதி யக்ஷ¢யின் அழகிய சிலை. குமரியின் முகவடிவமாக முன்வைக்கப்பட்ட அச்சிலையை இன்று பார்க்கமுடியாது. சிதைந்து முலைகளும் முகமும் உடைந்து நிற்கிறது. இருவருடங்களுக்கு முன் மாவட்ட ஆட்சியர் தலைமையில் அங்கே சீரமைப்புப் பணிகள் தொடங்கி நடந்த போது மணல்வீச்சு மூலம் அந்தச்சிலை சுத்தம் செய்யபப்ட்டதன் விளைவு. இரண்டாயிரம் வருடங்களாக இருந்து வந்த ஒரு கலைப்படைப்பு. அதன் கீழ் நான் சிறுவனாக இருந்தபோது போய் அமர்ந்து மாங்காய் அடித்து தின்றிருக்கிறோம். அப்போதெல்லாம் ஆட்டிடையர்கள் மட்டுமே வருவார்கள். அவர்களிடமிருந்து அது தப்பி அரசு கையில் மாட்டியது துரதிருஷ்டமே.

இதை சென்ற சில வருடங்களாக தமிழகம் முழுக்க கண்டு வருகிறேன். இப்படி சிற்பங்கள் சீரழிக்கபப்ட்ட இன்னொரு ஆலயம் கும்பகோணம் கோதண்டபாணிஸ்வாமி ஆலயம். போகும் இடங்களிலெல்லாம் முக்கியமான சிற்பங்கள் எந்தவிதமான குற்ற உணர்வும் இல்லாமல் நாசம் செய்யப்பட்டிருப்பதையே காண்கிறேன். சிற்பங்களின் வதைக்கூடம் போல் இருக்கின்றன நம் கோயில்கள்.ஆயிரம் வருடங்களாக நம் முன்னோர் பேணி நமக்களித்த சிற்பங்களை சுரண்டி மொத்தையான பிண்டங்களாக மாற்றி நம் வாரிசுகளுக்கு அளித்துக் கொண்டிருக்கிறோம்.

ஏற்கனவே இங்கே ஒரு பேரழிவு நடந்து கொண்டிருந்தது. கற்சிற்பங்கள் மீது வெள்ளையடிப்பது. எத்தனையோ நூற்றாண்டுகளாக நம்மிடம் அப்படி ஒரு வழக்கமே இருந்தது இல்லை. இருபது வருடங்களுக்குள் தொடங்கிய முறை அது. ஆழ்வார்திருநகரி போன்ற கோயில்களில் சிற்பங்கள் வருடம்தோறும் வெள்ளையடிக்கபப்ட்டு சுண்ணாம்புப் பிண்டங்களாக நிற்பதைக் காணலாம். சென்ற ஆட்சியின்போது கற்சிற்பங்கள் மீது ஏஷியன் பெயின்ட் அடிக்கபப்ட்டது. சிலநாட்களுக்கு முன்னர் குமரிமாவட்டம் குமாரகோயிலில் சிலைகள் மீது டிஸ்டெம்பர் அடிப்பதைக் கண்டேன்.

இதைப்பற்றி பக்தர்கள் கவலைப்படுவதில்லை. அவர்கள் கோயிலுக்குள் குப்பைகளை குவித்துப்போட்டு சிலைகள் மீது விபூதிகுங்குமத்தையும் எண்ணையையும் அப்பிவிட்டு போகும் மனநிலை கொண்டவர்கள். மதுரை கோயிலின் மகத்தான வீரபத்ரர் சிலைகள் மீது வெண்ணையை வீசினால் ஏதோ பரிகாரம் என்று  பத்துப்பதினைந்து வருடங்கள் முன்னால் யாரோ கிளப்பி விட்டனர். முன்பெல்லாம் நான் பல மணிநேரம் மெய்மறந்து பார்த்திருந்த அச்சிலைகள் இன்று அழுகி நாறும் வெண்ணெய் அப்பிய பிண்டங்களாக நிற்கின்றன. ஒவ்வொருநாளும் இரவில் சிலர் அச்சிலைகள் மீது ஏறி நின்று கத்தியால் அப்பியிருக்கும் வெண்ணையை வழிக்கிறார்கள். அதையே மறுநாள் விற்கிறார்கள். அச்சிலைகள் இனி தமிழ்க்கலை வரலாற்றில் இல்லை என்று முடிவுகட்ட வேண்டியதுதான்.

காஞ்சீபுரம் தேவராஜ ஸ்வாமி ஆலயத்திற்குள் நுழையும்போது இடப்பக்கம் வரும் பெரிய மண்டபம் ஒரு அற்புதமான கலைக்கூடம். ஒவ்வொரு தூணையும் நின்று ஒரு மணிநேரம் நோக்கலாம். சமீபத்தில் ஒரு வெளிநாட்டு நண்பரை கூட்டிக் கொண்டு அங்கே சென்றேன். மண்டபம் முழுக்க மூங்கில்கள் ஓலைகள் மற்றும் உடைந்த மரச்சட்டங்களை குவித்து வைத்திருக்கிறார்கள். அவற்றை சிற்பங்களுடன் கயிறுபோட்டு கட்டி வைத்திருக்கிறார்கள்.

இன்று எந்தவிதமான பொறுப்பும் இல்லாமல் தமிழின் மகத்தான கலைச்செல்வங்கள் அழிய விடப்பட்டிருக்கின்றன.தமிழ்நாட்டில் எந்த கலை விமரிசகரும் இதழாளரும் இவற்றைப்பற்றி எல்லாம் எழுதி நான் வாசித்ததில்லை. அவர்கள் மீண்டும் மீண்டும் மேலைநாட்டு ஓவியங்களைப் பற்றி எழுதுகிறார்கள். உள்ளூர் ஓவியர்களின் முயற்சிகளைப்பற்றி புரியாத வரிகளை உருவாக்குகிறார்கள்.

நான் என் இளமையில் அலைந்து திரிந்து ரசித்த சிற்பங்களில் கணிசமானவற்றை இன்று போனால் பார்க்க முடியாது என்பதே நிலை. ஆனால் நாள் தவறாமல் இதழ்களில் கும்பாபிஷேகச் செய்திகள். புதுப்புது ஆலயங்களைப்பற்றிய சோதிடக்குறிப்புகள். ஏராளமான பக்தி இதழ்கள்.

தமிழகத்துக்கு அதன் மன்னர்கள் அளித்துப்போன செல்வங்கள் என்றால் ஏரிகளும் கோயில்களும்தான். அவற்றின் விலைமதிப்பை இன்றைய சூழலில் கணக்கிடவே முடியாது. அவை இரண்டும் ஒருவிதமான கொலைவெறியுடன் அழிக்கப்படுகின்றன இன்று. கேட்க எவருமே இல்லை.

முந்தைய கட்டுரைஜெகத்:மலையாள எழுத்துரு மாற்றம்
அடுத்த கட்டுரைமூன்று கடிதங்கள்