பின் தொடரும் நரியின் ஊளை :ஜெகத்

[ஜெகத் அவரது இணையதளத்தில் எழுதிய அங்கதக்கட்டுரை]

 

பழம்பெரும் இலக்கியங்களை குறுக்கித் திரித்து வசைபாடுவதே வழக்கமாகிவிட்ட தமிழ் சூழலில் பாட்டி வடை சுட்ட கதையின் உண்மையான இலக்கிய மதிப்பீட்டை முன்வைப்பது எளிதல்ல. எதையுமே உழைத்துத் தெரிந்துக்கொள்ள வேண்டியதில்லை, பழிப்புக் காட்டினாலே போதும் என்ற எண்ணம் இங்கு வேரூன்றியிருக்கிறது. இந்திய தான்தோன்றிவாதச் சிந்தனையாளர்களில் முதன்மையானவரான ஒடுக்கத்தெ கேசவன் பிள்ளையை நான் முதன்முதலில் சந்தித்தபோது எதையும் ஆராயாமல் நிராகரிக்கக்கூடாது என்பதே அந்த பேராசான் எனக்குச் சொன்ன முதல் அறிவுரை. [மலமானாலும் கிளறிப் பார்த்துவிட வேண்டும்.] இதை நான் விமரிசகர் உறக்கப்பரம்பில் வர்கீஸிடம் தொலைபேசியில் சொன்னபோது அவர் ஒரு சிறு மௌனத்திற்குப் பின் சொன்னார், “உண்மைதான், நாற்றத்தைப் பார்த்தால் முடியாது”.

நுண்ணுணர்வற்ற வாசகர்களால் பாட்டி வடை சுட்ட கதை ஒரு எளிய நீதிக்கதையாகக் குறுக்கப்பட்டுவிட்டது. இது கதையின் மேற்பரப்பை மட்டுமே வாசிக்கும் எளிய வாசக மனப்பான்மையின் விளைவு. உண்மையில் இலக்கியம் பல அடுக்குகளைக் கொண்டது. ஒவ் அடுக்கும் ஒவ்வொருவிதமானக் கதையைச் சொல்லிச் செல்லும். இது பல்லடுக்குப் பரப்படிவாதம் (multiplexed subterraneanism) எனப்படுகிறது. தமிழில் ஒன்றேமுக்கால் அடுக்குக்கு மேற்பட்ட சிறுகதை எழுதப்பட்டதில்லை என்று முன்பு நான் ஒரு விரிவானக் கட்டுரை எழுதினேன். அடுத்த இரண்டு மாதத்தில் மட்டும் அதற்கு நாற்பத்தி இரண்டு எதிர்வினைகள் வெளியாயின. இவற்றில் முப்பத்தி ஒன்பது அக்கப்போர் மொழியில் எழுதப்பட்ட வசைக்கட்டுரைகள். அவற்றை நான் படிப்பதோ பொருட்படுத்துவதோ இல்லை. எண்ணிக்கையை கணக்கு வைத்திருப்பதோடு சரி.

இக்கதையின் துவக்கம் முற்றிலும் யதார்த்தத்தன்மை உடையதாக இருக்கிறது. [அன்இமேஜினபிள் ரியலிசம் என்பார் இந்திர குமாரசாமி.] தனியே வடை சுட்டுக்கொண்டிருக்கும் பாட்டி ஒரு ஆழமானப் படிமம். ஒருவகையில் அது பழமையின், இயற்கை சார்ந்த வாழ்வுமுறையின் குறியீடு. அத்தகைய வாழ்வுமுறை இயற்கையை எதிர்த்து வெற்றிக்கொள்ளத் துடிக்கும் மானிட இயக்கத்தின் முன் தோல்வியுறுவதே பாட்டியின் இழப்பின் மூலம் உருவகப்படுத்தப்படுகிறது என்பதை தேர்ந்த வாசகன் அகவயமாக உணர்ந்துக்கொள்ளமுடியும். வாசகனுக்கு மட்டுமல்லாமல் படைப்பாளிக்கும் மன நெகிழ்ச்சியை அளிக்கத்தக்க இடம் அது. ஜூலியட் தற்கொலை செய்துக் கொள்ளும் கட்டத்தில் ஷேக்ஸ்ப்பியர் மேசையில் தலையை முட்டி அழுதிருப்பார். அது அப்படித்தான் இருக்கமுடியும். வேறு வழியில்லை.

கதையில் நரிக்கும் காகத்துக்கும் இடையே நிகழும் உரையாடல் யதார்த்தவாதத் தளத்திற்கு ஒவ்வாத மிகைத்தன்மை கொண்டதாக இருக்கிறது என்று பொதுவாக சொல்லப்படுவதுண்டு. இங்குள்ள முற்போக்காளர்கள் உடனே அதை தென்னமெரிக்க மாய யதார்த்தவாதத்துடன் முடிச்சு போடுவார்கள். அவர்களுக்குப் படிக்கக் கிடைத்த ஐரோப்பியத் துண்டுப் பிரசுரங்கள் மூலம் அவர்கள் அந்த முடிவுக்கே வரமுடியும். உண்மையில் பாட்டி வடை சுட்ட கதை நம் காவிய மரபில் உறுதியாக காலூன்றி நின்று நம்முடன் பேசுகிறது. பெரும்பாலும் யதார்த்தத் தளத்தில் நிகழும் நம் காவியங்கள் சில உச்சத் தருணங்களில் மட்டும் சாகச, மாயாஜாலத் தளங்களுக்குச் சென்றுத் திரும்புவதை நாம் பார்க்கலாம். கிழக்கு ஐரோப்பிய பூடகவாத எழுத்தாளர்களான டிமிட்ரி காரசேவ், ஹென்ரிக் சீவல், ஸ்லோபடோன் பூந்தி ஆகியோரது சில கதைகளிலும் இந்தப் போக்கைப் பார்க்கலாம். கறாரானத் தர்க்கவாதியான விமரிசகர் ஆதி குலோத்துங்கன் மற்றொரு கோணத்தை முன்வைக்கிறார். நரி பேசியது என்பதை அப்படியே பொருள் கொள்வது புனைவு உண்மையை பொது உண்மையாக எண்ணும் போக்கு என்கிறார் அவர். நரி உண்மையில் ஊளையின் மூலமே பேசியிருக்கவேண்டும். [அவ்வ்வ்வ்வ் ம்ம்ங்ஊஊஊய்ய்ய் – நீ ரொம்ப அழகா இருக்கே]

எல்லையற்றக் காலப் பெருவெளியின் முன் மானிட முயற்சிகள் எத்தனை அற்பமானவை என்பதையே இக்கதை உணர்த்தும் உச்சத் தரிசனமாக நான் காண்கிறேன். கிருஷ்ணநகரத்தில் அவ்வப்போது எட்டிப்பார்க்கும் கரிய நாயைப் போல இக்கதையில் நரி காலத்தின் குறியீடாகவே வருகிறது. நரி ஓடிப் போய்க்கொண்டிருப்பதாகச் சொல்லி கதையை முடிப்பது அகத்தூண்டலை ஏற்படுத்தும் பலம் வாய்ந்த புனைவு உத்தி. யுகம் யுகமாக முடிவின்மையை பின்தொடர்ந்து செல்கிறது நரி. கூடவே அதன் ஊளையும்

http://kaiman-alavu.blogspot.com/2008/03/blog-post.html

முந்தைய கட்டுரைசாரு
அடுத்த கட்டுரைஜெகத்:மலையாள எழுத்துரு மாற்றம்