வயிறு ஒரு கடிதம்

சார்,

கடந்த வார காலமாக உங்கள் தளத்தைப் பார்க்க முடியவில்லை.நான் தளத்தைப் பார்ப்பது அலுவலகத்தில் தான்.

கடந்த வாரம் விடுப்பு எடுத்துக்கொண்டேன். என்னை நான் மாத்திரைகளால் நிரப்பிக்கொண்டு இருந்தேன்.

வெளியே ஓட்டலில் சாப்பிட்டதால் முதலில் வயிற்றுக் கோளாறு. அது ‘ஆனல் பிஷ’ராக மாறியது. பேரணியால் எமடோமா(Peranal Hematoma) என்று சொன்னார்கள்.

உயிர்போகும் வலி. ஒரு வார காலம் துடித்துப் போனேன். வலி தாங்க முடிய வில்லை என்றால் அறுவை சிகிச்சைக்குப் போகலாம் என்று சொன்னார்கள். நான் கூட ஒப்புக்கொண்டேன். எப்படியோ வலி குறைய ஆரம்பித்தது.இரண்டு நாட்களில்.. வயிற்றுப் போக்கு.மீண்டும் மாத்திரைகள். தீவிர சோர்வு.

மொத்தம் 15 நாட்கள் இடை விடாமல் ஆண்டி பயாடிக்ஸ் சாப்பிட்டுக் கொண்டு இருக்கிறேன்.
உடல் வலிமை இழந்து விட்டு இருக்கிறது.பிரசவத்துக்குப் பிறகு என் மனைவி பாப்பாவுடன்… அரக்கப் பறக்க வந்து விட்டார்கள்.

எல்லாற்றுக்கும் காரணம் ‘நேரம் தவறி சாப்பிடுவது தான்’ என்கிறார்கள் வைத்தியர்கள்.
உண்மைதான். கடந்த 10 வருடங்களாக நான் இப்படித்தான். தீவிர அசிடிட்டி காரணமாக.. ஆசுபத்திரியில் வாரம் நாட்கள் படுத்து என் குடும்பத்தைப் பாடாய்ப் படுத்தி இருக்கிறேன்.
எல்லாப் பத்திரிகையாளர்களுக்கும் இது இருக்கத்தான் செய்யும் என்பார்கள்(சற்றுப் பெருமையாகவே !)

எல்லோரையும் போலவும் “இனிமேல் நல்ல பழக்கங்களைக் கடைப் பிடிக்க வேண்டும் என்று முடிவெடுப்பேன். மெல்ல அந்த முடிவெல்லாம் தகர்ந்து போகும். ஆனால் இந்த வாட்டி தீர்க்கமாகவே முடிவெடுத்து விட்டேன். எப்படியும் இதுபோன்ற பிரச்சனைகள் வராமல் பார்க்க வேண்டுமென்று.

‘நலம்’ புத்தகத்தை சென்னையிலிருந்து வரவழைத்துப்  படித்துகொண்டு இருக்கிறேன்.
அது மருத்துவ நூல் என்ற நோக்கத்தில் இல்லை.

ஒரு நுகர் பொருளாக என் உபாதைகளைக் குறைக்கும் என்ற எண்ணங்கள் கூட இல்லை.
அந்த விவாதங்கள் என் உடலை நான் அறிய.. உற்று நோக்க.. ஒரு வழியைக் காட்டும் என்கிற ஒரு நம்பிக்கை. ஒரு தெளிவைக் கொடுக்கலாம் என்ற ஆசை.

ஏற்கனவே உங்கள் தளத்தைப் பார்த்துப் பால் குடிப்பதை நிறுத்திவிட்டேன். சர்க்கரையும் குறைத்துவிட்டேன்.

ஆயுர்வேதம், இயற்கை மருத்தவம், ஓமியோபதி… போன்ற முறைகளைப் பார்க்கலாமென்று நினைக்கிறேன். நலம்’ படித்துவிட்டு எழுதுகிறேன் சார்.

இது எழுதுவதா வேண்டாமா என்ற தயக்கத்துக்குப் பிறகு எழுதுகிறேன்…

தீவிர வலி, நோய் உற்ற நேரங்களில் – அந்தத் தனிமையின் போது நமக்கு நம்பிக்கை தரும்… நெருக்கமாக நினைக்கும் நபர்களை நினைத்துப் பார்ப்பது சகஜம் தானே?
அப்படி நான் நினைத்துப் பார்த்த நபர்களில் நீங்களும் ஒருவர் சார்.

‘என்னடா இது அன்புத் தொல்லை!’ என்று நினைக்க மாட்டீர்கள்தானே?

அன்புடன்,
ராஜு

அன்புள்ள ராஜூ,

உங்கள் வயிற்றுக்கடுப்புக்கு எண்டமூரி வீரேந்திரநாத் வகை தெலுங்கு அமர இலக்கியங்களை வாசித்தது காரணமில்லையே?

நேரம்தவறி உண்பது என்பது உடல்நலக்குறைவை உருவாக்கும். ஆனால் அது ஒரு பெரிய விஷயமல்ல என்றுதான் இயற்கை மருத்துவர்கள் சொல்வார்கள். மனித உடம்பு சரியான நேரத்தில் உணவை உண்டேயாகவேண்டிய கட்டாயத்தில் உருவாக்கப்பட்ட ஒன்றல்ல. காட்டில் வாழும் உயிர்கள் சரியான நேரத்தில் உணவை உண்டுகொண்டா இருக்கின்றன? பசிதாங்கவும் பட்டினி கிடக்கவும்தான் குடல் படைக்கப்பட்டுள்ளது. நான் வருடக்கணக்காகப் பசியுடன் பட்டினியுடன் அலைந்தவன். எனக்கு வயிறு உபாதை ஏதும் இல்லை.

நம்முடைய சூழலில் உள்ள முக்கியமான பிரச்சினை அசுத்தமான உணவுதான். உணவு தயாரிப்பதில் இந்தியா அளவுக்குப் பொறுப்பின்மை நிலவும் இன்னொரு தேசம் உண்டா என்பதே சந்தேகம்தான். நான் எங்குமே உணவகங்களில் இதைக் கவனிப்பேன். நான் பல உணவகங்களில் ஒருகாலத்தில் பணியாற்றியிருக்கிறேன் என்பதே காரணம். நம் சமையலறைகள் அழுக்கும் குப்பையும் ஈரமும் நிறைந்தவை. சமையலறையையும் சமையல்பாத்திரங்களையும் கழுவக்கூடிய உணவகங்கள் மிகக்குறைவு. கழுவாமல் திரும்பத்திரும்ப ஒரே பாத்திரத்தில் சமைப்பார்கள். மிஞ்சிய உணவைப் புதிய உணவுடன் கலந்து மறுசுழற்சி செய்வார்கள். எண்ணை முதலியவற்றை மீண்டும் மீண்டும் பயன்படுத்துவார்கள்.

நாம் அசுத்தமான, கெட்டுப்போன உணவைத்தான் உணவகங்களில் உண்டுகொண்டிருக்கிறோம். நட்சத்திர விடுதிகளின் உணவகங்களில்கூட அதுவே நிலை. நான் பெரிய விடுதிகளில் தங்கிய ஆரம்பகாலத்தில் அங்கே பரிமாறப்படும் இடத்திலுள்ள உயர்தரச்சூழலில் பிரமித்திருக்கிறேன். பின்னர் ஒருமுறை அங்கே பணியாற்றும் ஒரு மலையாள ஊழியரிடம் பேசியபோது உண்மை தெரிந்துகொண்டேன். அவ்விடுதியில் ஒருநாளைக்கு ஐந்நூறு வகை உணவுகள் பரிமாறப்படுகின்றன என்றார் அவர். அவ்வளவு உணவை அங்கே சமைப்பதாக இருந்தால் சமையலறை ஒரு தொழிற்சாலை அளவுக்கு இருக்கவேண்டும். எங்கே அது என்று கேட்டார். ஆமாம், உணவுகள் வெளியே இருந்து வாங்கப்படுகின்றன. அவற்றை சமைத்துக்கொடுக்கும் ‘கேட்டரிங் சர்வீஸ்’கள் நகரின் இடுங்கிய வீடுகளின் கொல்லைப்பக்கங்களில் செயல்படுகின்றன. எந்த சுத்தமும் இல்லை. தரக்கண்காணிப்பும் இல்லை. அதன்பின் நான் நட்சத்திர விடுதிகளில் காய்கறிகளையும் பழங்களையும் தேனையும் ரொட்டியையுமே அதிகம் உண்ண ஆரம்பித்தேன்.

இந்தியாவில் வயிற்றுநோய்களுக்குத் தொண்ணூறு சதவீதம் பொதுச்சுகாதாரம் பற்றிய பிரக்ஞையே இல்லாத உணவகங்கள்தான் காரணம். அதிலும் இந்தியாவிலேயே கேரளம் போன்ற அராஜகமான உணவுக்கூடங்கள் எங்குமே இருக்காதென நினைக்கிறேன். கேரளத்தில் எங்கும் ஒரு நல்ல உணவகம் இருப்பதாக நான் கண்டதே இல்லை. எங்குமே ‘சாவுங்கடா’ என்ற வகையிலான அணுகுமுறைதான் . சமையல் -பரிமாறுதல் இரு தளங்களிலும்

கடுமையான அரசுக் கண்காணிப்பு, தண்டனைகள் மூலமே இந்நிலையை மாற்ற முடியும். நுகர்வோர் அமைப்புகள் உண்மையான தீவிரத்துடன் செயல்பட்டாகவேண்டும். ஆனால் அதற்கெல்லாம் இப்போது வாய்ப்பிருப்பதாகத் தெரியவில்லை. அரசுக் கண்காணிப்பு என்பது இன்று சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு மாதாமாதம் லஞ்சம் கொடுத்து அதே கெட்ட உணவை ஓசியாகப் பொட்டலம் கட்டிக் கொடுத்தனுப்புவது என்ற அளவிலேயே உள்ளது

வயிற்றுப்புண் , குடல் அழற்சி உட்படப் பல்வேறு நோய்களுக்குப் பூஞ்சை போன்ற நுண்ணுயிர்கள் காரணம் என்று இன்று ஏராளமான ஆய்வுகள் வந்துவிட்டன. ஆனாலும் நம் மருத்துவர்கள் நேரம்தவறி உண்பது என்ற காரணத்தையே முக்கியமாகச் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.

வெளியே உணவுண்பதாக இருந்தால் மொத்த உணவுப்பழக்கத்தையே கட்டுக்குள் வைத்திருப்பது மட்டுமே ஒரே வழி. பழங்கள், காய்கறிகள், தேன், எளிமையான மாவு உணவுகள் மட்டும் போதும். பொரித்தவை,வறுத்தவை, அசைவம் முழுமையாகத் தவிர்க்கலாம். அனைத்து வகையான ரசாயன உணவுகளை, பாதுகாக்கப்பட்ட உணவுகளைத் தவிர்த்துவிடலாம்

காந்தி சொன்னார் ‘சிந்திக்கும் மனிதன் தன் வயிற்றை கவனித்துக்கொண்டிருப்பான்’ .அது தன்னைப்பற்றிய அவதானிப்புகளில் முக்கியமானது. நவீன ஆய்வுகள் வயிறு மூளைவழியாக அல்லாமல் நேரடியாகவே நம் உணர்ச்சிகளுடனும் உடலியக்கத்துடனும் தொடர்புகொண்டுள்ளது என்று சொல்கின்றன. வயிற்றை இரண்டாம் மூளை என்று கூடச் சொல்கிறார்கள். வயிற்றின் நிலைமை நம் உணர்ச்சிகளையும் சிந்தனைகளையும் நேரடியாகப் பாதிக்கிறது என்பதனால்தன் அனேகமாக எல்லா யோக மரபுகளிலும் உணவைப்பற்றிய பிரக்ஞை இருக்கிறது.

ஆகவே நாக்கை விடுத்து வயிற்றை நினைத்து உண்ணுவதே ஒரே வழி.

ஜெ

முந்தைய கட்டுரைமாறுதலுக்கான அரசியல் :அயோத்திதாசர் ஆய்வரங்கம்
அடுத்த கட்டுரைதேவதேவன் ஒரு பேட்டி