அன்புள்ள ஜெ.,
“இன்றும்கூட தமிழ்ப் பெண்களால் ஏற்றுக்கொள்ளப்படும் ஒருவிஷயம் ஒரு அடாவடி ஆண் பெண்ணை வேட்டையாடி அடைவது”
இப்போது கூட போடா போடி என்று ஒரு படம் இதே வரிசையில் வெளிவந்துள்ளது. சல்சா டான்சரான பெண்ணை ஹீரோ மணந்து, அம்மாவாக்கி, ஆடவிடாமல் செய்து “திருத்தும்” கதை.. நல்ல கதையா இருக்கு இல்லை… தமிழகத்தின் அனைத்து விமர்சகர்களாலும் படம் பாராட்டப்பட்டுவிட்டது. ஒருவருக்குக் கூடக் கதையின் அபத்தம் உறைக்கவில்லை…
நினைத்தது போலவே கதாநாயகன் நாயகியைக் கர்ப்பமாக்கி, ஆட விடாமல் செய்து, குழந்தை விபத்தில் இறந்தாலும் மனம் தளராமல் இரண்டாவது குழந்தைக்கும் அம்மாவாக்கி விடுகிறான். சுபம்…
நன்றி
ரத்தன்
அன்புள்ள ரத்தன்
ஒரு சமூகத்தை அறிந்துகொள்ள அதன் வணிகக் கேளிக்கைப் படைப்புகளைக் கூர்ந்து கவனிக்கவேண்டும் என்பது அண்டோனியோ கிராம்ஷியால் முன்வைக்கப்பட்டு உலகமெங்கும் ஏற்கப்பட்ட ஒரு அணுகுமுறை. தமிழ்சினிமா அந்த நோக்கில் உண்மையான கூர்மையுடன் ஆராயப்படவேயில்லை என்றே நினைக்கிறேன்.
ஜெ
*
அன்புள்ள ஜெய மோகன்
உங்கள் பார்வைக்கு,
லாரி பேக்கர் கட்டிட முறை பற்றி சில தகவல் ,
_வீடு என்பது மனிதன் நலமுடன் வாழ உருவாக்கும் கட்டுமானம் . அது இயற்கை சார்ந்ததாக அமை ய வேண்டும் . அந்த வகையில் லாரி பேக்கர் உருவாக்கும் கட்டுமானம் ஒரு சிறந்த இயல்பான உருவாக்கம் . நமது பழைய வீடுகள் கோடையில் குளிர்த்தும் , குளிர் காலத்தில் வெது வெதுப்பாகவும் இருக்கும் . அது ஒரு மிக சிறந்த உருவாக்கம் . சுண்ணாம்பில் இருந்து சிமெண்ட் உருவானது, ஆனால் அது உஷ்ணம் உருவாக்கும் தன்மை கொண்டது .
மண்ணாலும் சுண்ணாம்பாலும் கட்டுகிற கட்டிடம், வெளி சீதோஷ்ணத்திற்கு மாறாக உள் புறம் செயல் படும் தன்மை. அதன் இயல்பு ஆகும் .
சிமெண்ட் முதலில் மிக பலமான ஒரு இணைப்பாக (bonding ) தெரிந்தாலும் காலபோக்கில் காறையை விட மிக மிக பலம் இல்லாத பொருள்தான் . காறை பலம் மிலாத பொருளாக தெரிந்தாலும் நாள் பட நாள் பட இறுகும் தன்மையும் இணைக்கும் (bonding ) தன்மையும் அதிகம் ஆகும் .
தற்போது கட்ட படுகிற கட்டிடத்தில் மிக மிக பலம் என்று இடப்படுகிற கம்பி தான் . அதன் வாழ்நாளை குறைக்கும் பெரிய எதிரி .
லாரி பேக்கர் கட்டுமானத்தில் கம்பி அதிகம் பயன் படுத்துதல் இருக்காது .
மேலும் ,அவரின் rattrapbond (எலிவளை இணைப்பு ) என்ற செங்கல் அடுக்கும் முறையில் இரு செங்கல்லுக்கு இடையில் சிறிது இடைவெளி இருக்கும் . அதில் காற்று ஓட்டம் இருக்கும் . வெளி தன்மை உள்ளே தாக்காமல் இருக்கும் .
ஜன்னல் கதவு அமைப்பு மேல் வளைவு கொண்டதாகதான் அதிகம் இருக்கும். இதனால் கட்டிடத்தின் எடை தடை இன்றி பூமிக்கு செலுத்த படுகிறது . நாம் தற்போது அமைக்கும் முறையில் எடை பல இடங்களில் சேர்ந்து பின் பூமிக்கு செல்கிறது . எடை சேரும் இடம் எல்லாம் காலப்போக்கில் பலம் இழந்து விரிசல் உண்டாகிறது .
சிமெண்ட் ஆயுல் காலம் 60 ஆண்டுதான்.சுண்ணாம்பு ஆயுல் காலம் முடிவு இல்லாதது .
சுட்ட செங்கல் நிலைத்த பொருள் .கான் கிரிட் நிலைப்பு தன்மை சிமெண்ட் டை விட குறைவு .
நன்றாக விளைந்த மரம் இரும்பை விட நீரில் அதிக வருடம் தாக்கு பிடிக்கும் .
சுண்ணாம்பில் வெல்லம் கடுக்காய் பொடி கலந்த நீரால் தெளித்து அடிக்கும் போது, அதன் மேல்பரப்பில் நீரை உட்புகாமல் தடுக்கும் ஆற்றல், எந்த ஒரு ரசாயனத்துக்கும் இல்லை .
எந்த பொருள் மிக இறுக்கமாக உள்ளதோ அது சீக்கிரம் உடையும் தன்மை கொண்டது ,
எது இளக்க மானதோ அது நீடித்து நிற்கும் ஆற்றல் உடையது .
அது தறபோதைய கட்டிட் முறைக்கும் பொருந்தும்.
இன்னும் விரிவாக எழுத (டைப் அடிக்க ) முடியவில்லை .
(இதை தமிழில் டைப் செய்ய 2 மணி நேரம் ஆனது .)
அன்புடன்
பாஸ்கரன் .
அன்புள்ள பாஸ்கரன்
நன்றி. ஆனால் பெரும்பாலும் தவறில்லாமல் அடித்திருக்கிறீர்கள். அதிகபட்சம் ஆறுமாதத்தில் கை மனதுடன் நேரடி இணைப்பை அடைந்துவிடும்
சென்னையில் நூறாண்டு பழைய பல கட்டிடங்கள் இன்றும் அழகுடன் உள்ளன. நான் அடிக்கடி செல்லும் கட்டிடம் ஆந்திர மகிளா சபாவின் உள்ளே உள்ள உணவகம். ராஜ்பேலஸ் சுந்தரில் தங்கும்போது அங்கே உணவருந்துவேன்.
அந்தக் கட்டிடத்துக்கு நூறு வயது தாண்டிவிட்டது. இன்று பெரும்பொருட்செலவில் கட்டப்படும் கான்கிரீட் கட்டிடங்கள் 2100 ல் எப்படி இருக்கும்?
சமீபத்தில் துபாய் சென்றிருந்தபோது எழுபதுகளில் மல்லுக்கள் சென்று ரத்தம் சிந்திக் கட்டிய கட்டிடங்களை எல்லாம் உடைத்துக்கொண்டிருப்பதைக் கண்டேன்
ஜெ