கேயுமாமா என அழைக்கப்படும் கேசவ மாமனை சந்தித்தேன். ஒரு கோயில்பூஜை நடந்துகொண்டிருந்தது. ‘நாட்டு விசேஷம்’ பேசிக்கொண்டிருந்தபோது ‘மாதவன் மாமா பெண் கல்யாணத்திற்குப் போயிருந்தால் நீங்கள் பரமு மாமனைப் பார்த்திருக்கலாமே’ என்றேன்.
‘நான் கல்யாணத்துக்கே போகவில்லை’ என்றார்.
ஆச்சரியம் தாளவில்லை. இருவரும் எழுபது வருடங்களாக நண்பர்கள். அவர் செய்த தப்புக்காக இவரை ஒருமுறை யாரோ அடித்திருக்கிறார்கள், அப்படி ஒரு ‘சொருமிப்பு’ .
கொஞ்சம் தயங்கிவிட்டு ‘…என்னதான் இருந்தாலும்..’ என ஆரம்பித்தேன்.
‘டேய், சண்டை ஒன்றுமில்லைடா…நான் என் கண்ணாடிப்பிம்பத்துடன் சண்டை போடமுடியுமா? கல்யாணத்துக்கு ஒருநாள் முன்னால்சென்று குழந்தையை ஆசீர்வாதம்செய்துவிட்டு வந்தேன். கல்யாணம் முடிந்த மறுநாள் போய் மீண்டும் ஆசீர்வாதம் செய்தேன்..’ என்றார்.
நான் புரியாமல் விழிக்க ‘…நான் இப்போதெல்லாம் கல்யாணத்துக்கே போவதில்லை.’ என்றார் ‘என் சொந்தப் பேத்தி கல்யாணத்துக்குக் கூடப் போகவில்லை. வரும் ஆவணியில் இரண்டாவது மகனின் மகளுக்கு திருமணம். அதற்கும் போகமாட்டேன்’
‘ஏன்?’ என்றேன். பொதுவாக சாமியார்கள்தான் திருமணங்களுக்குப் போகும் வழக்கமில்லை. எனக்குத்தெரிந்து நாலைந்து பிறவிகளில் கேயுமாமா துறவு பூண முடியாது, அவ்வளவு வம்பான லௌகீகம் கொண்டவர்.
‘டேய், பந்தி மரியாதை இல்லாமல் சாப்பிட அச்சானியமாக இருக்கிறதுடா..’ என்றார். எனக்கு சட்டென்று அவர் என்ன சொல்கிறார் எனப் புரிந்தது. நானே அந்த சிக்கலில் தவித்துக்கொண்டிருப்பவன்.
குமரிமாவட்டத்தில் நூற்றாண்டுகளாக உருவாகி நிலைபெற்று வந்த சில பந்தி மரியாதைகள் உண்டு. அவை வெற்றுச் சம்பிரதாயங்கள் அல்ல. பலநூறு பேர் ஓர் இடத்தில் கூடி சாப்பிடும்போது ஒருவர் இன்னொருவரை சங்கடப்படுத்தாமல், ஒவ்வொருவருடைய தனிப்பட்ட ருசிகளும் கவனிக்கப்பட்டு, சிக்கலில்லாமல் உணவு பரிமாறப்படுவதற்கான விதிகள். காலாகாலமாக அவை நடைமுறைஞானம் வழியாகக் கண்டறியப்பட்டுக் கட்டாயமாக ஆக்கப்பட்டுள்ளன.
இந்த ஒழுங்குமுறைகள் சாதிக்கொரு விதமாக அமைந்திருக்கும். பொதுவாக நாடார் திருமணங்களில் மணமகன் வீட்டினரின் கடைசி ஆணும் சாப்பிடாமல் மணமகள் வீட்டின் மூத்தவர்கள்கூட கைநனைக்க முடியாது. ஆசாரிமாரில் மூத்தாசாரிமார் அத்தனை பேரும் சாப்பிட்டபின்னரே மணமகனுக்குச் சோறு. நாயர் சாதியில் பழங்காலத்தில் பெண்வீட்டாருக்குத்தான் முக்கியத்துவம். இப்படி வேறுபாடுகள் இருந்தாலும் பரிமாறுவதிலும் உண்பதிலும் ஓர் ஒழுங்குமுறை என்பது கண்டிப்பாக இருக்கும்.
ஒரு குமரிமாவட்டத் திருமண விருந்து எப்படி இருக்கும்? முதல் விஷயம், பந்திப்பந்தல் என்னும் சாப்பாட்டுக்கூடத்தில் விருந்தை ஏற்பாடுசெய்யும் வீட்டாரின் பிரதிநிதியாக ஒரு பெரியவர் முழுப்பொறுப்பில் தொடக்கம் முதல் கடைசிவரை இருப்பார் என்பதுதான். பந்திமுறைகள் அறிந்தவராகவும் நிர்வாகத்தோரணை கொண்டவராகவும் அவர் இருப்பார். அவரது கட்டுப்பாட்டில்தான் பரிமாறுதல் நிகழவேண்டும். பெரும்பாலும் அவர் பெண்ணுக்குத்தாய்மாமனாக இருப்பார்.
சாப்பாட்டுக்கூடத்தில் எத்தனை இலைபோடமுடியும் என முதலில் கணக்கிடுவார்கள். அந்த அளவுக்கு இலைபோட்டு அதேயளவுக்கு ஆட்களை மட்டுமே உள்ளே விடுவார்கள். உணவுக்கூடத்தில் உள்ளே நுழையும் வழி ஒன்றே. வெளியேறும் வழி இன்னொன்று. உள்ளே நுழையும் வழியில் எப்போதும் ஆள் காவலிருக்கவேண்டும். உள்ளே ஆளனுப்பலாமெனத் தகவல் வந்ததும் அந்தப் பெரியவர் வந்து வாசலில் நிற்பார். மரியாதைக்குறைவு தெரியாவண்ணம் மனதுக்குள் எண்ணிக்கொண்டு உள்ளே ஆளனுப்புவார்
அதில் நிறைய கணக்குகள் உண்டு. முந்நூறு இலை போட்டிருந்தால் இருநூற்றைம்பது பேர் உள்ளே சென்றதும் பத்துப் பத்துப் பேராக உள்ளே அனுப்பவேண்டும். இருநூற்றித்தொண்ணூறானதும் ஒருவர் ஒருவராக உள்ளே அனுப்பவேண்டும். அதாவது உள்ளே செல்வதற்காக எழுந்துவந்துவிட்ட ஒருவரை உள்ளே பந்தி நிறைந்துவிட்டது என்று திரும்பிச்செல்ல சொல்லக்கூடாது. அது மரியாதைக் குறைவானது.
விருந்தினருக்கும் அந்த மரியாதை தெரிந்திருக்கவேண்டும். ஒருபோதும் அவராக எழுந்து உணவு உண்ண வந்து நிற்கக் கூடாது. பந்தி அறிவிப்பு வந்ததும் விருந்தளிக்கும் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வந்து தனித்தனியாக உணவுண்ண அழைக்கும் வரை அமர்ந்திருக்க வேண்டும். ஏனென்றால் அதற்கு சில வரிசைகள் உண்டு. பொதுவாக உள்ள முறை என்பது வயதில் மூத்தவர்களுக்கு முதலிடம். மாப்பிள்ளை வீட்டாருக்கு அடுத்த இடம். ஊர்க்காரர்களுக்கு அதற்கு அடுத்த இடம். பெண்வீட்டார் கடைசியாக. அழைக்காமல் உண்ணச் செல்வது இழிவு. முண்டியடித்து சாப்பிடச் செல்வதென்பது இழிவினும் இழிவு.
அழைக்கப்பட்டவர்கள் கூட்டமாகச் செல்லாமல் ஒருவர் ஒருவராக உள்ளே செல்லவேண்டும். முதலில் உள்ளே செல்பவர்கள் கூடத்தின் மறு எல்லையில் கடைசி இலையில்தான் அமர வேண்டும். அங்கிருந்து நிரம்பியபடியே வந்து கடைசியாக உள்ளே செல்பவர் வாசலருகே உள்ள இலையில் அமர்வார். நடுவே இடைவெளி விடக்கூடாது. உள்ளே செல்லும்போதே அருகே அமரவேண்டியவர்களை சேர்த்துக்கொள்ளலாம். உள்ளே அமர்ந்தபின்னர் அருகே அமர ஆளைக்கூப்பிடுவது மரியாதைக்குறைவு. முற்றிலும் நிசப்தமாகவே உள்ளே அமரவேண்டும்.
மிக எளிய நியாயம்தான் இது. வரிசையாக உணவுண்ண அமர்ந்த பின்னர் வரிசையைத் தாண்டிச்செல்வதும் நடுவே நுழைவதும் எல்லாம் பிறருக்கு மிக அசௌகரியமாக இருக்கும். கைகால்கள் பிறர் மேல் படும். அனைத்துக்கும் மேலாக ஒருவர் அமர்ந்த இலையில் இருந்து அவர் எழுந்து விலகி இன்னொன்றில் அமர்வதென்பது மிக சங்கடமான விஷயம்.
குமரிமாவட்டத்தில் பந்தியில் விருந்தினர் அமர்வதற்கு முன்னரே எல்லாத் தொடுகறிகளையும் இலையில் வைத்துவிடுவார்கள். தண்ணீரும் பப்படமும் மட்டும் விருந்தினர் அமர்ந்து முடித்தபின்னர் பரிமாறப்படும். தண்ணீர் கைபட்டுக் கவிழலாம், பப்படம் பறக்கலாம் என்பதே காரணம். ஏராளமான தொடுகறிகள் இருக்கும் என்பதனால் விருந்தினர் அமர்ந்தபின் பரிமாறினால் அதுவே ஒரு பெரிய நேர விரயமாக ஆகும் என்பதனால் முன்னரே பரிமாறுகிறார்கள்.
அதிலும் சில முறைகள் உண்டு. இலையின் குறுகலான நுனியில் குறைவாகத் தொட்டுக்கொள்ளக்கூடிய ஊறுகாய் போன்றவை. இலையின் அகலமான பக்கத்தில் அவியல், கூட்டு போன்றவை. இலையின் பெரிய பகுதி வலது கைப்பக்கம் வரவேண்டும். ஒருபோதும் கீற்றிலையில் உணவு பரிமாறமாட்டார்கள். அது கிழியும். நுனிவாழை இலை கண்டிப்பாகத் தேவை. சாப்பிட அமர்ந்தபின் இலையைக் கழுவுதலும் துடைத்தலும் அநாகரீகம். காலடியில் அந்த நீரை சொட்டவிடுதல் அசிங்கம். அதை நீவிக் கையை விசிறுதல் காட்டுமிராண்டித்தனம்.
அனைவரும் அமர்ந்தபின்னர் பந்தி விசாரணை செய்யும் தாய்மாமா சைகை காட்ட, உணவு பரிமாறப்படும். முதலில் குடிநீர். பின்னர் பப்படம். அதன் பின்னர் சோறு. பரிமாறப்படும்போதே உணவை எடுத்துத் தின்ன ஆரம்பிப்பது கூடாது. ஏனென்றால் எது பரிமாறப்பட்டது, எது விடப்பட்டது என்றே கண்டுபிடிக்க முடியாமலாகும்.
சோறு பரிமாறப்பட்டபடியே செல்லும்போது பின்னால் பருப்புக்கறி வரும். அதைத்தொடர்ந்து நெய் வரும். இந்த வரிசையை மீறி எதையும் கேட்கக்கூடாது. ஏனென்றால் அப்படிக் கொண்டுவரவேண்டும் என்றால் முன்னால் செல்பவர்களைத் தாண்டிச்சென்று பரிமாறவேண்டியிருக்கும். குழம்புக்கரண்டியை சாப்பிடுபவர்களின் தலைமேல் சுழற்றி திரும்ப வேண்டிவரும்
ஒரு வரிசையில் அனைவரும் ஒரே சமயத்தில் சாப்பிடவேண்டும் என்பது விதி. ஆகவே வரிசையின் தொடக்கத்தில் எப்போதும் கொஞ்சம் விவரம் தெரிந்த பெரியவரைமட்டுமே அமரச் செய்வார்கள். அவர் சாப்பிடுவதற்கு முன் மென்மையாக கனைப்பார். எல்லாரும் சாப்பிட ஆரம்பிப்பார்கள். அதற்கு முன் உணவைத் தொடமாட்டார்கள்.
சாப்பிடும்போது ஒரே வேகத்தில் சாப்பிட வேண்டும். சிலர் மெதுவாக சாப்பிடுவார்கள். அவர்களுக்காகப் பிறர் வேகம் குறைத்தே ஆகவேண்டும். அவர் ருசித்து சாப்பிடுவதற்கு நம்முடைய வேகம் தடையாக இருக்கக்கூடாதென்பதே பண்பாடு. அனைவரும் ஒரே நேரத்தில் பருப்புக்குழம்பு சாப்பிட்டு முடிந்ததும்தான் சாம்பார் வரும். பருப்பு சாப்பிடும்போது நடுவே ஒருவர் சாம்பார் கேட்பதை அநாகரீகத்தின் உச்சமென்றே கொள்வார்கள். அப்படி ஒருவர் கேட்டால் உறவை அன்றே முறித்துக்கொள்வார்கள், மேற்கொண்டு ஒரு திருமணத்துக்கும் அவருக்கு அழைப்பு வராது.
ஏனென்றால் பருப்புச்சோறு உண்டுகொண்டிருக்கும் முந்நூறு பேரைத்தாண்டி ஒரே ஒருவருக்காக சாம்பார்வாளி வருவதென்பது அத்தனைபேருக்கும் அசௌகரியம். நாம் பருப்புச்சோறு சாப்பிடும்போது பக்கத்து இலையில் சாம்பார் வாசனை வருவது உணவின் சுவையையே இல்லாமலாக்கிவிடும். மேலும் குமரிமாவட்டப் பந்திகளில் பரிமாறுபவர் ஒரு சந்தர்ப்பத்திலும் எதிர்த்திசையில் செல்லக்கூடாது. சம்பந்தமில்லாத இலையில் ஒரு துளி குழம்பு சொட்டுவதைத் தனிப்பட்ட அவமதிப்பாகவே எடுத்துக்கொள்வார்கள்.
சாம்பாருக்குப் பின் புளிசேரி எனப்படும் புளிக்குழம்பு அதன்பின் எரிசேரி அதன் பின் காளன் ஓலன் என வந்துகொண்டே இருக்கும். அனைவரும் ஒரே வேகத்தில் உண்டு ஒவ்வொன்றுக்கும் இடமளிக்கவேண்டும். நடுவே ஒரு உணவு தேவை இல்லை என்றால் மறுக்கலாம். ஆனால் இன்னொன்று கேட்கக்கூடாது. அதுவே வரிசையாக வரும் வரை மௌனமாகக் காத்திருக்கவேண்டும். அப்போதுதான் பரிமாறுவது சீராக நிகழ முடியும்.
சாப்பிடும்போது பேசுவதும் சிரிப்பதும் கூடாது. ஒருபோதும் பரிமாறுபவர்களை நோக்கிக் கத்தக்கூடாது. எச்சில் தெறிக்கும் என்ற எளிய காரணம்தான். கைநக்குவது, உரக்க ஏப்பம் விடுவது சொறிந்துகொள்வது கூடாது. எச்சில்கையை நீட்டுவது, மேலே தூக்குவது பெரும் பிழை. வாய்க்குள் கைவிடுவது, வாயில் இருந்து எதையாவது எடுப்பது, துப்புவது எல்லாம் ஆபாசம். சம்பந்தமில்லாதவற்றைக் கலந்து பிசைந்து சாப்பிடக்கூடாது. இன்னொருவர் சாப்பிடும் இலையைப் பார்க்கக் கூடாது. அதாவது நம் பக்கத்தில் அமர்ந்து சாப்பிடுபவருக்கு அருவருப்புத் தோன்றும் எதையும் செய்யலாகாது.
சாப்பிட்டு முடித்தபின்னர் தனித்தனியாக எழுவது தவறு. ஒரு பந்திமண்டபத்தில் அனைவரும் ஒன்றாகவே எழுந்து செல்லவேண்டும் என்பதே முறை. நாம் சாப்பிடும்போது நம் தலைமேல் ஒரு எச்சில்கை கடந்துசெல்வதைப்போல அருவருப்பூட்டும் இன்னொன்று இல்லை. அனைவரும் ஒன்றாகவே எழவேண்டும். மெதுவாக சாப்பிடும் ஒருவரை இருபக்கமும் எச்சில் இலைகள் நடுவே அமர்ந்து சாப்பிட விட்டுவிட்டு எழுந்து செல்வதைப் பண்பாடுள்ளவர் செய்யமாட்டார்கள்.
கடைசி நுனியில் இருப்பவர்கள் முதலில் எழுந்து வெளியே செல்ல வரிசை வரிசையாகச் செல்ல வேண்டும். ஒருபோதும் எச்சில்கையுடன் இன்னொருவரை முந்தக்கூடாது. கைகழுவுவதும் அவ்வாறே வரிசையாகக் காத்து நின்றபின்னர்தான்.
மொத்தப் பந்தியும் எழுந்து சென்றபின் இலைகளை எடுக்கவேண்டும். இலைகளை சாப்பிடுபவருக்கு எதிர்த்திசையில் மடிப்பதே வழக்கம். அப்போதுதான் இருப்பிடத்தில் எச்சில் சிந்தாமல் இலையை எடுக்க முடியும். இலைகளை எடுத்து மண்டபத்தை சுத்தம் செய்து முந்தைய பந்தியின் உணவு வாசனை எஞ்சியிருக்காமல் இருக்க சாம்பிராணிப்புகை போட்டு அதன்பின் அடுத்த பந்திக்கான இலை போடுவார்கள்.
சென்ற கால்நூற்றாண்டாக இந்தப் பந்தி மரியாதைகளை எல்லாம் பழைய சம்பிரதாயங்கள் என ‘நாகரீகமானவர்கள்’ நிராகரித்துவிட்டார்கள். மெல்லமெல்ல இன்று இந்த ஆசாரங்கள் எவருக்கும் தெரியவில்லை. விளைவாக லட்சக்கணக்காகச் செலவிட்டு நடத்தப்படும் திருமணங்கள்கூட சோற்றுக்கலாட்டாக்களாக ஆகிவிட்டிருக்கின்றன. படித்தவர்கள் கூடக் கூட்டம் கூட்டமாகப் பந்திவாசலில் முட்டி மோதுகிறார்கள். வயதானவர்க்ளைப் பிடித்துத் தள்ளுகிறார்கள். குழந்தைகளை நசுக்குகிறார்கள். ஏற்கனவே சாப்பிட்டவர்களின் எச்சில் இலைகளுக்கு முன்னால் சென்று அமர்ந்து இடம்பிடிக்கிறார்கள். சாப்பிடஅமர்ந்தவர்களின் முன்னால் இருந்து எச்சில் இலைகளை எடுக்கிறார்கள்.
ஒருவர் சாப்பிட்டுக்கொண்டிருக்க அவர் முன்னால் எச்சில் குவிந்த குப்பைத்தொட்டி போன்ற நாற்றமடிக்கும் பெரிய எச்சில்கூடைகளைக் கொண்டு வைத்து இருபக்கமும் உள்ள எச்சில் இலைகளை அழுக்கும் பரட்டையுமான வேலைக்காரர்கள் அள்ளிக்கொண்டு இழுத்துச்செல்வதை நான் எங்கும் காண்கிறேன். சில இடங்களில் எச்சில் இலையை எடுத்தவர் அதே கையுடன் பரிமாறுகிறார். பந்தியில் கூச்சலிடுகிறார்கள். எச்சில்கையை வீசி வீசி அழைக்கிறார்கள்.எச்சில் நடுவே அமர்ந்து எச்சில் தெறிக்கத்தெறிக்கத்தான் இன்று எந்தக் கல்யாணத்திலும் சாப்பிடமுடியும்.
நாம் சாம்பார் சாப்பிட நம்மருகே ஒருவர் வேறுவாசனையுடன் வேறு ஒன்றைச் சாப்பிடுகிறார். நம் தலைக்குமேலே குழம்பு வாளிகள் செல்கின்றன. பரிமாறுபவர்கள் முன்னும் பின்னுமாக முட்டி மோதுகிறார்கள். ஆகவே எவருக்கு என்ன கொடுத்தோம் என அவர்கள் மறந்து விடுகிறார்கள். சாப்பிடுபவர்கள் கூச்சலிட்டுக் கேட்கிறார்கள். பரிமாறுபவர் கூச்சலிட்டு ஒவ்வொருவரையாகக் கைகாட்டிப் பரிமாறச்சொல்லி உபசரிக்கிறார். ஆட்கள் வந்தபடியும் சென்றபடியும் இருக்கிறார்கள். ஒரு ரயில்நிலையம் கூட இன்னும் ஒழுங்குடன் இருக்கும்
இன்னும் மோசம் என்னவென்றால் சாப்பிடுபவர்களுக்குப் பின்னால் அடுத்து சாப்பிடுபவர்கள் வந்து காத்து நின்று இலையையே பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். சில திருமணங்களில் சாப்பிடுபவரின் நேர் முன்னால் தெரிந்தவர்கள் அல்லது விருந்து நடத்தும் குடும்பத்தினர் வந்து நின்று பேசி சிரித்து சாப்பாடு பரிமாறு உபசரிக்கிறார்கள். அதிலும் சமீபமாக முழுப்போதையில் சாப்பிட வந்து அமர்வதும் போதையில் வந்து பந்தியில் நின்று பேசுவதும் சாதாரணமாக உள்ளது. கூடிச்சாப்பிடுவதென்பதே ஒரு பெரும் அவமானமாக ஆகிவிட்டிருக்கிறது இன்று
சாப்பாட்டு மரியாதைகள் இல்லாத சமூகம் உலகில் எங்கும் இல்லை. ஐரோப்பியரும் சீனரும் மிகமிக விரிவான சாப்பாட்டு மரியாதைகளைக் கடைப்பிடிப்பவர்கள். சமீபத்தில் நமீபியா சென்ற போது ஆப்பிரிக்காவின் சாப்பாட்டு ஆசாரங்களை அறிய நேர்ந்தபோது இன்னும் நுணுக்கமான மரியாதைகளைக் கண்டு பிரமித்துப்போனேன். நமக்கும் எல்லா மரியாதைகளும் இருந்தன. எல்லா சமூகங்களும் அவற்றை கடைப்பிடித்தன. இன்று நாம் எச்சில் உண்ணும் நாய்களைப்போல விருந்துண்கிறோம். ஒரு அன்னியர் நம்மைப் பார்த்தால் நாம் உயர்தர உடை அணிந்து வந்த காட்டுமிராண்டிகள் என்றே நினைப்பார்.
சமூகத்தலைவர்கள் ,மதத்தலைவர்கள் இந்த விஷயத்தில் தலையிடவேண்டிய நேரம் வந்துவிட்டிருக்கிறது. இது அடிப்படைநாகரீகம் சார்ந்த ஒரு விஷயம். ஆனால் யார் எங்கே தொடங்கமுடியும்?
கேயுமாமா அந்தப் பழைய காலகட்டத்தை நினைத்து வீட்டிலேயே சாப்பிட வேண்டியதுதான். நானும் பெரும்பாலும் திருமண விருந்துகளைத் தவிர்த்து விடுகிறேன். உணவு என்னும் அரிய விஷயத்தை வெறுக்கும் ஒரு தருணமாக விருந்து ஆகிவிடுவதை நான் விரும்பவில்லை.
[குமுதம் இதழில் வெளிவந்த கட்டுரை]
பசியாகிவரும் ஞானம்