[மதுபால், லால், மல்லிகா., கோவா திரைவிழாவுக்குப்பின் நிகழ்ந்த சிறப்பு இதழாளர் சந்திப்பில்]
இந்த நாட்களில் மிகுந்த மனநிறைவடையச்செய்த விஷயம் கோவா திரைவிழாவிலிருந்து வந்துகொண்டே இருந்த அழைப்புகள். ஒழிமுறி கோவா திரைவிழாவின் முதல்நாள் திரையிடப்பட்டது. அதன்பின் மீண்டும் 28 ஆம்தேதி திரையிடப்பட்டது. ஒவ்வொருமுறையும் நிறைந்த அரங்கில். பெரும்கரவொலியுடன் படம் வரவேற்கப்பட்டது. விழாபற்றிய குறிப்புகள் கோவா திரைவிழாவில் இவ்வருடத்தைய முக்கியமான படமாக ஒழிமுறியைக் குறிப்பிட்டன.
ஒழிமுறியின் அடிப்படைச் சிறப்பே அதன் எளிமைதான் என ஓர் இதழாளர் சொன்னார். அந்த எளிமைக்குக் காரணங்களில் ஒன்று மிகக் குறைவான பணம். அது கதைமாந்தரின் உணர்ச்சிகளை மட்டுமே நம்பி படத்தை எடுக்க இயக்குநரைக் கட்டாயப்படுத்தியது. அது ஒரு நல்ல விஷயம் என நானும் நினைக்கிறேன்.
ஒழிமுறி வெளிவந்து மூன்றுமாதங்களாகின்றன. வாரந்தோறும் ஐந்தாறு படங்கள் வெளிவரும் மலையாளச்சூழலில் எத்தனையோ படங்கள் வந்துசென்றுவிட்டன. ஆனால் ஒழிமுறி இன்றும் டிவிட்டரிலும் பிற சமூக வலைத்தளங்களிலும் பேசப்பட்டுக்கொண்டே இருக்கிறது. பாராட்டுக்கள், வாழ்த்துக்களுடன்.
கேரளத்தின் முன்னணி இதழ்கள் எல்லாமே நீண்ட ஆய்வுக்கட்டுரைகளை வெளியிட்டுவிட்டன. இந்த வாரம்கூடக் கட்டுரைகள் வெளிவந்துள்ளன. ஆரம்பத்தில் வந்தவை சினிமா விமர்சனங்கள். இப்போது சினிமா ஆய்வுகள் வருகின்றன. சினிமா பற்றி எப்படி எழுதப்படவேண்டும் என்பதற்கான முன்னுதாரணமாக அமையும் கட்டுரைகள்
லால் கோவாவில் இருந்து கூப்பிட்டு மீண்டும் ஒருமுறை நன்றி சொன்னார், அந்தக் கதாபாத்திரத்துக்காக. அவருக்கு நான் தான் நன்றி சொல்லவேண்டும்
Lal Pal in goa