வடகேரள வன்முறை-ஒரு கடிதம்

அன்புள்ள ஜெயமோகன்

வடகேரளத்து வன்முறைகள் பற்றிய உங்கள் கட்டுரை சூப்பரான மழுப்பல். வடகேரள வன்முறைகளைப்பற்றி கவனிக்கும் எவருமே கண்டடையும் ஒரு விஷயம் உண்டு. அங்கே நிகழும் வன்முறைகளில் எப்போதும் ஒரு தரப்பாக இருப்பது மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்டுக் கட்சிதான். இது நாற்பது வருடங்களாக நடந்து வருகிறது. பாரதீய ஜனதா கட்சியும் முஸ்லீம் லீக் கட்சியும்கூட இந்த வன்முறையாளர்களிடம் இருந்து தப்பிப்பதற்காக ஒன்றுபட்டுள்ளன அங்கே. இதைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

சஸிதரன்

அன்புள்ள சஸிதரன்

நீங்கள் சொல்வது பாதி உண்மை. அதாவது வடகேரள வன்முறைகளில் எப்போதுமே இடது கம்யூனிஸ்டுக் கட்சி ஒரு பங்கு வகிப்பது உண்மையான நிலவரமே. ஆனால் அதற்கான காரணம் வேறு. வடகேரளத்தில் உள்ள முக்கியமான அரசியல் கட்சி இடது கம்யூனிஸ்டுக் கட்சி மட்டுமே என்பதுதான் உண்மை. பிற கட்சிகள் பெரும்பாலும் குழுக்களாகவே உள்ளன என்பதுதான் உண்மை. மலைப்பிராந்தியங்களில் கேரளா காங்கிரஸ் கட்சி. நகரங்களில் காங்கிரஸ். இஸ்லாமிய கிராமங்களில் முஸ்லீம் லீக். எல்லா இடத்திலும் உள்ள ஒரே கட்சி இடது கம்யூனிஸ்டுக் கட்சியே.

நூறுவருடங்களுக்கு முன்னர் இப்பகுதியின் நிலங்கள் முழுக்கவே நூறுக்கும் குறைவான நிலக்கிழார்களுக்கு [நம்பூதிரிக்கள், நம்பியார்கள், முஸ்லீம் பிரபுக்கள்] சொந்தமாக இருந்தன. அவற்றை மீட்டு மக்களுக்கு வழங்க கம்யூனிஸ்டுக் கட்சி பெரும் போராட்டத்தை நடத்தியது. பல ஊர்களில் ஆயூதக் கலகங்கள் நிகழ்ந்தன. இந்நிகழ்வுகளை கன்னட ஆசிரியர் நிரஞ்சனா அவரது சிரஸ்மரணா என்ற நாவலில் விரிவாக எழுதியிருக்கிறார். அந்நாவல் தமிழில் ‘நினைவுகள் அழிவதில்லை’ என்ற பேரில் மொழியாக்கம் செய்யபப்ட்டுள்ளது. அப்போராட்டங்களின் விளைவாகவே அம்மகக்ளுக்கு நிலம் கிடைத்தது. வாழ்வுரிமை கிடைத்தது

ஆகவே வடகேரள மகக்ளுக்கு கம்யூனிஸ்டுக் கட்சி என்பது ஓர் அரசியல் இயக்கம் அல்ல. ஒரு மதம் போல. தலைமுறை தலைமுறையாக அவர்கள் கம்யூனிஸ்டுகள். கம்யூனிஸ்டுக் கட்சியின் ஊர்வலத்துக்கு குடும்பமே கிளம்பிச் செல்வதைக் கண்டிருக்கிறேன். அங்கே வேறு கட்சிகள் இல்லை என்பதே உண்மை.

கம்யூனிஸ்டுக் கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்கள், எதிர்ப்பாளர்கள், சாதி மத ரீதியான கட்சிகள் என்ற ஒரு பெரும் கூட்டணி கம்யூனிஸ்டுக் அக்ட்சிக்கு எதிராக உள்ளது. அது தேர்தல்களில் கம்யூனிஸ்டுக் கட்சியை தோற்கடித்தும் உள்ளது என்பது ஓர் உண்மை.

வன்முறைக்கு எல்லா கட்சிகளும் சமமான காரணம். கம்யூனிஸ்டுக் கட்சி ஒரு மதம் போல வேரூன்றியிருக்கிறது என்றேன். அதுவும் ஒரு காரணம். அங்குள்ள அரசு அமைப்புகள், கூட்டுறவு அமைப்புகள் எல்லாமே கட்சிகளால் ‘பிடித்துஎ டுக்கபப்டுகின்றன’ அவர்களை எதிர்ப்பவர்கள் அதே பாணியில் பிடித்துஎ டுக்கிறார்கள். ஆகவே தான் வன்முறை நிகழ்கிறது

ஜெயமோகன்

முந்தைய பதிவு

கேரள வன்முறைஅரசியல்

முந்தைய கட்டுரைநித்யா கவிதை அரங்கு
அடுத்த கட்டுரைசாரு