வசை:கடிதங்கள்

அன்புள்ள ஜெ ,

இந்த கடிதம் உங்கள் வலைத்தளத்தில் சாரு நிவேதிதா பற்றியும் அவர் வலைத்தளத்தில் உங்களை பற்றியும் படித்த பிறகு ஏற்பட்ட எண்ணம், இந்த எண்ணமேதான் உங்களின் மற்ற வாசகர்களுக்கும் ஏற்பட்டிருக்கும் என்று எண்ணுகிறேன்.

உங்களுடைய சாரு பற்றிய விமர்சனங்களுக்கும் , உங்களின் எண்ணங்களை பகிர்ந்து கொள்ள நீங்கள் எழுதும் நடைக்கும்  ஒரு விதமான தரம் இருக்கிறது , ஆனால் அதனை எதிர்த்து சாரு எழுதும்போது அதன் தரம் மிகவும் தாழ்ந்து விடுகிறது.

எனக்கு பொதுவாக தற்கால இலக்கியம் படிக்கும் ஆர்வம் இருந்தபோதும், மிகத்தீவிரமான படிப்பு இருந்ததில்லை, அதனால் ‘கொட்டையை பிடித்து கசக்கும்’ நடை எனக்கு மிகவும் ஆபாசமாக படுகிறது.

அதனால், நீங்கள் இனிமேல் சாரு பற்றி எழுதாமல் விடுவதே நல்லது என்று நினைக்கிறேன், ஒரு வாசகனாக இதை சொல்கிறேன்.நீங்கள் சாருவை சீண்டாமல் விட்டு விடுங்கள், உங்கள் இடம் வேறு , அதை காலம் பார்த்துக்கொள்ளும்.

நான் சாருவின் எழுத்துக்களையும் விடாமல் படிப்பவன் , என்னை பொறுத்தவரை சாரு ஒரு connoisseur , அவரின் இடம் இந்த உலகில் வேறு மாதிரியானது. அவர் பல்வேறு உலக சினிமாவை, இலக்கியத்தை,உணவை , இசையை, வேறு பல நுண்கலைகளை ரசிக்கலாம், அதற்கென அவர் பல்வேறு உணவை , இசையை , இலக்கியங்களை ரசிக்கலாம், ருசிக்கலாம், அதனை மற்றவருக்கு தரலாம், சமுதாய அவலத்தை பார்த்து கோபப்படலாம், ஆனால் அதனை தாண்டி அவருடைய ‘படைப்பு’ என்பது உங்களுடன் ஒப்பிடக்கூடியது அல்ல.அது தவறுமில்லை,அம்மாதிரியான உலக இலக்கியத்தை, உணவை, இசையை மறந்து வாழும் இந்த மாக்கான்களின் கூட்டத்தில் அவர் இருப்பது பெரும் ஆசுவாசம்.அவர் மூலம் நான் நிறைய கற்றுக்கொண்டு இருக்கிறேன் என்பதையும் நான் இங்கே பதிவு செய்கின்றேன்.

ஆனால் உங்கள் இடம் வேறு , நீங்கள் ஒரு படைப்பாளி, creator ஆக நீங்கள் இன்னொரு creator-இடம் மோதலாம், அதுவும் மிக உயர்ந்த தளத்தில், அப்போதுதான் ருசிக்கும் , வாசகருக்கும் ஒரு பயன் இருக்கும். இப்போது இருக்கும் சண்டை பொருந்தா சண்டை, விட்டு விடுங்கள். மீண்டும் சொல்கிறேன், எல்லோருடைய இடத்தையும் காலம் முடிவு செய்யும்.

ஆனால் சாரு / ஜெ சண்டை ‘சும்மா’ ஒரு மசாலாவிற்கு, போர் அடிக்கும்போது மட்டுமென்றால் , ok, தள்ளி நின்று ரசிக்கலாம். ஆனாலும் இதற்காக நீங்கள்  ஆபாசமான  மொழியை எதிர்கொள்ளும்போது உங்கள் வாசகருக்கு வலிப்பது நிச்சயம்.

மற்றொன்று , இதன் மூலம் கமல் X ரஜினி ரசிகரின் மனோ நிலையை உங்கள் வாசகர் அடைகிறார்கள் , தமிழருக்கு அது அல்வா சாப்பிடுகின்ற மாதிரி ,என்பதும் உங்களுக்கு தெரியாததில்லை. அதை சாரு ஆமோதிக்கிறார் என்று அவரே அவரின் வலைத்தளத்தில் சொல்லி இருக்கிறார் (அவரின் நெருக்கடியான வாழ்வில் இந்த hero worship ஒரு ஆசுவாசம் என்று சொல்லி இருக்கிறார்) , நீங்கள் இந்த ரசிகர் மன்ற மனப்பான்மையை ஊக்குவிக்காதிர்கள்.

பி.கு. ஒரு வேலை இந்த கடிதத்தை நீங்கள் உங்கள் வலைத்தளத்தில் வெளியிட்டால் என் பெயரை வெளியிட வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.

உங்கள் வாசகன்
ஸ்ரீ

 

அன்புள்ள ஸ்ரீ

உங்கள் கருத்துகக்ள் உண்மை . நான் அவரைப்பற்றிக் கருத்து சொல்வதென்பது  எல்லா எழுத்தாளர்களையும் பற்றி என் கருத்தை பதிவுசெய்வதற்கு அப்பால் ஏதுமில்லை. அதையும் விட்டுவிடலாம் என்றே எண்ணுகிறேன்
ஜெ

 

அன்பு ஜெமோ சார் ,

சிறு பத்திரிக்கைகள் குறித்தான உங்கள் விமர்சனத்திற்க்கு சாரு அவரே கேள்வி கேட்டு அவரே எழுதிக்கொண்ட கேவலமான பதிவை பார்த்தேன் , யவு செய்து எதுவும் எதிர்வினை வேண்டாம் ,

யானை , பூரான் , பசு , பன்றி என நிறைய நினைவுக்கு வருகிறது , ங்கள் தாய் தந்தையின் இறப்பை பற்றிக்கூட கேவலபடுத்தும் மனநிலைக்கி அவர்
வந்துவிட்டார் ,

யாரென்றே தெரியாத ராஜநாயகம் உங்களை தாக்கிதான் வெளிச்சம் அடைந்தார் ,ஏழாம் உலகமும் , நான் கடவுளும் பார்த்தவர்கள் உண்மை அறிவர் ,மனுஷ்ய புத்திரன் மகிழவார் என நினைத்து எழுதுகிறார் போல , அவர் பற்றிஅப்படி எண்ணமுடியவில்லை ,

சை , மனம் வருந்துகிறது , ஆனாலும் இப்போதெல்லாம் காந்தி தினமும்நினைவிற்க்கு வந்து தொலைக்கிறார் ,

அறிவுறை எல்லம் இல்லை , ஒரு எளிய வாசகனின் பகிர்தல்தான் ஜெ சார்,

அரங்கசாமி

 

With Best Regards,

For Universys,

Arangasamy.K.V
 

அன்புள்ள அரங்கசாமி அவர்களுக்கு

இத்தகைய மனச்சிக்கல் எப்போதுமே சிற்றிதழ்ச் சூழலில்  இருந்து வருகிறது. ஒன்று எழுதுபவனுக்கு மனம் ஆற்றுபடுகிறது. இரண்டு  எதிரியின் எதிரிகளின் நட்பு கிடைக்கிறது.மூன்று பொதுவாக தெருச்சண்டைகளை ரசிக்கும் கூடத்தின் ஆதரவும் சிக்குகிறது.

ஒரு கருத்துநிலையை முன்வைத்து நடத்தப்படாத இத்தகைய வசைகளை எழுதுபவர்தான் சுமந்தலையவேண்டும்

ஜெ

 

 

 

அன்புள்ள ஜெ,

இன்னொரு என்ற இணைய தளத்தில் யமுனா ராஜேந்திரன் எழுத்தாளர்களை வசைபாடியிருக்கிறாரே வாசித்தீர்களா?

ஜாஸ்

அன்புள்ள ஜாஸ்,

உற்சாகமாக புனைபெயரில் கேட்டு இணைப்பையும் அனுப்புவதில் இருந்தே உங்கள் ஆர்வம் தெரிகிறது. வாழ்க. இணையத்துக்கு புதியவர் என்றால் கொஞ்ச நாள் வரை தப்பில்லை.

எழுத்தாளர்களை அவர்களின் எழுத்துகக்ளில் ஈடுபடும் வாசகர்களுக்கு மட்டுமே மதிப்பிருக்கும். மற்றவர்களுக்கு இவன் யார் சும்மா வந்து பேசிக்கொன்டிருக்கிறான் என்றுதான் தோன்றும். அப்படிப்படவர்கள்தான் நம்மிடம் அதிகம்

யமுனா ஒரு 75 சதவீத சாரு. அவர் குருவிடம் கற்க இன்னும் நிறைய இருக்கிறது
ஜெ

 

ஜெ,

 

எங்கே இருக்கீங்க??

 

நான் இப்பத்தான் 3 ஜெயமோகன் எதிர்ப்புக் கட்டுரைகள் வாசித்து விட்டு ஒரு லேசான மப்புல இருக்கேன். நான் மும்பை போவது ஓரளவு உறுதியாகிவிட்டது. எனவே, இங்கே வேலை செய்யும் மனநிலை குறைந்து விட்டது..

 

பாலா

அன்புள்ள பாலா,

நாகர்கோயிலில்தான். அற்புதமான குளிர், இளமழை. ஏஸி வாய் முன் இருப்பது போல் இருக்கிறது ஜன்னலை திறந்தால்.

மப்புக்கு காசு மிச்சம். அதை ஏழை எழுத்தாளர்களுக்கு அன்பளிப்பாக தாகசாந்திக்கு அளிக்கலாமே
ஜெ

 

அன்புள்ள ஜெ,

 

மப்புக்கு காசு மிச்சம் செய்த மணிவண்ணன் என்ற பட்டத்தை உங்களுக்கு வழங்கிச் சிறப்பிக்கலாம் என்று முடிவெடுத்திருக்கிறேன்.  ரெண்டு நாளா (சிவகுமார) கவுண்ட ராமாயணம் கேட்டுக் கொண்டிருக்கிறேன்

பாலா

 

 

அன்புள்ள ஜெ

கொஞ்ச நாள் உங்களுக்கு வசை இல்லாமல் இருந்தது. என்னடா நம்மாளுக்கு ஏதாவது உடம்பு கிடம்பு சரியில்லாமல் ஆகப்போகிறதே என்று நினைத்தேன். ஆரம்பிச்சுட்டாங்கய்யா ஆரம்பிச்சுடாங்ய..

சென்னை வருகிறீர்களா? நான் சென்னையில் ஜூலை இருபது வரை

சிவம்

அன்புள்ள சிவம்,

உடம்பு கிண் என்று இருக்கிறது.

வசைவு ஒரு கலை.  வாழ்க.

இங்கே எனக்குப்பிடித்த குளிர். இளமழை…முஸாஃபிர் [அகமது]  என்ற மலையாள எழுத்தாளர் சாட்டில் வந்தார். சவூதியில் . அங்கே 53 டிகிரி என்றார். இந்த ஊர் குளிரை வருணித்து வருணித்து நாலைந்து பழைய மலையாள சினிமாப்பாட்டுகக்ளையும் ஞாபகப்படுத்தி ஓட ஓட அடித்துவிட்டு வெற்றியுடன் இருக்கிறேன் இப்போது. சென்னை இல்லை. பூனா போய்விட்டு வாருங்கள் அக்டோபரில் பார்ப்போம்.

ஏழிலம் பால பூத்து, பூமரங்ஙள் புடவை சுற்றி

வெள்ளிமலையில்.. வேளி மலையில்…

உண்மையிலேயே வேளிமலையில் யட்சிகளின் மரமான எழிலைப்பாலை பூத்திருக்கிறது. கொல்லும் மணம்

ஜெ

 

 

 அன்புள்ள ஜெமோ,
மன்னிக்கவும், இன்று காலை தங்களை தூற்றுபவரின் அந்த மிக அநாகரிகமான பதிலை பார்க்காமல், உங்கள் பொறுமையான நிலை குறித்து பாராட்டி விட்டேன். இன்று அவரது வலைமனையை படிப்பதற்க்காக வெட்க்கபடுகிறேன்.

நான் சிறுவனாக இருக்கும் பொது, எங்கள் தெருவிற்கு பறை அடித்து பாடிக்கொண்டு ஒருவர் வருவார், மிக அருமையான அல்லாவை பற்றிய பாடல்களை பாடுவார். எனக்கு அப்போது அவை பிடிப்பதில்ல. எங்கள் வீட்டின் அரை கதவில் (குழந்தைகளுக்காக பிர்க்கப்பட்ட கீழ் கதவு) சாய்ந்து கொண்டு என் அப்பா மட்டும் கேட்டுக்கொண்டு இருப்பார்.

நான் அதே அரை கதவில் சாய்ந்து(தொங்கிக்) கொண்டு இரவு ஒருவர் அதே தெருவில் பாட்டு பாடிக்கொண்டு வருவார் அவருக்காக காத்திருப்பேன். இரவு பத்து மணிக்கு மேல் அவரை எங்கள் தெருவில் பார்க்கலாம்(எல்லா தெருவிலும் அவரை போல் ஒருவரை பார்க்கலாம்) அவர் பெயர் கோவாலன்(கோபாலன் தான்).

கெட்ட வார்த்தைகளாலேயே பாட்டு பாடும் திறமை கொண்டவர் அவர், எல்லா பாடல்களும் கெட்ட வார்த்தைகளாய் மாற்றி பாடிக்கொண்டு வருவார். எப்பொழுதும் இந்த மாதிரி ஆட்கள் நம்மை சட்டென திரும்பி பார்க்க வைப்பது இயற்கையே.
கோவாலன் கெட்ட வார்த்தை பாடல்களை பாடினாலும், அடிகடி தத்துவமும் பேசுவார். எங்கள் வீடு முன், ஆனந்த விநாயகரின் (அவர் பெயர் தான் எனக்கு வந்தது)  சிறு கோவில் முன் உட்கார்ந்து கொண்டு, உலக அரசியல் பேசுவார், எம்ஜியார் பற்றி புகழ்வார்,  ஒரு நாள் சாமியை கொஞ்சுவார், மறுநாள் சாமியை கெட்ட வார்த்தைகளாலேயே திட்டுவார்.

இரவில் எல்லோரும் தூங்கிய பின், யாருமே இல்லாத தெருவில் யாரையோ சண்டைக்கு கூப்பிடுவார், யாருடைய அம்மாவையோ விளிப்பார். கத்தியால், அங்கே உள்ள முருங்கை மரத்தை குத்துவார்.
பகலில் ஒன்றும் நடக்காதது போல் அலைவார், சில சமயம் பகலிலும் இந்த கூத்துக்கள் அரங்கேரும். அவரை போன்ற நண்பர்களுடன் சண்டைகளும், உரையாடல்களும் நடக்கும்.

இப்படியே வாழ்ந்த கோபாலன், பின் ஒரு நாள் செத்து போனார்!

கோவலனை ரசிப்பதற்கு இப்படி நிறைய விஷயம் இருந்ததாலும், நானும் ஒரு நாள் கோவலனை பற்றி கவலை பட்டேன். போதையில் இருப்பவனிடம் என்ன சொல்லி என்ன பயன், அதுவும் என்னை போல் சிறுவன் கோவாலனை போல் பெரிய ஆட்களிடம் என்ன சொல்வது!??

கோவாலனிடம் என்ன கற்றுக்கொண்டேன்? அப்போது கெட்ட வார்த்தை பாடல்களையும்,  இப்போது கோவாலனை போல் வாழ கூடாது என்பதையும், இதற்க்கு பதில் இசையை கேட்டிருக்கலாம் என்பதையும்.

கோவாலன் உலக விசயங்களை உளரும்போது அதைப்பற்றி அக்கறையுடன் அவரிடம் வாதிடுவோர் பற்றியும், கோவாலன் சம்பந்தம் இல்லாமல் தெருவில் இருப்பவரின் பேர் கூறி கெட்ட வார்த்தையில் திட்ட, திட்டு வாங்கிபவரின் எதிர் வீட்டு் அரை கதவில் நகைப்போர் பற்றியும் இபோது பரிதாபம் ஏற்படுகிறது.

கோவாலன்கள் இருந்துவிட்டு போகட்டும். அறைகதவில் தொங்கும் சிறுவருக்கு அன்றய பொழுது போக்கு இந்த கோவாலன்கள்.

நாம் இசை கேட்போம்.

நன்றி!

அன்புடன்,
ஆனந்த்

நியூசிலாந்து

அன்புள்ள ஆனந்த்

ஒருவகையில் இம்மாதிரி ஆட்களுக்கு ஒரு பணி இருக்கத்தான் செய்கிறது– இவர்கள் வித்தியாசத்தை தெளிவாக்கிக் கொன்டே இருக்கிறார்கள்
ஜெ

ஜெ,

சாரு , யமுனா ராஜேந்திரன்  அப்புறம் சன்னாசின்னு ஒருத்தர்– மூணு பேத்தையும் வாசிச்சேன். சாருதான் டாப். மத்தபேருக்கு சுதி ஏறலே. ரவுசு உடுறதுன்னு முடிவு பண்ணி வேட்டிய அவுத்து தலையில கட்டி, கோடு போட்ட டவுசரோட ரோட்டுமேலே நின்னாச்சு. கொய்யால, அப்றம் என்னத்து தத்துவமும் சித்தாந்தமும்? போட்டு பொளக்க வேணாமா? தாரை தப்பட்டையெல்லாம் சொம்மா கிழிஞ்சு நார் நாரா தொங்க வேணாமா? ஐ லவ் சாரு…மனுஷன் பின்றார்

செல்வம்

அன்புள்ள செல்வம்,

இப்டி உசுப்பேத்தி உசுப்பேத்தியே வேடிக்க பாக்கிறீங்க மாப்பூ…

ஜெ

 888

அன்புள்ள ஜெ,
 
நன்றி!.  “சாருவின் அவதூறு”வை உங்கள் வலைப்பக்கத்தில் படித்து தெரியாத்தனமாக அவர் வலைப்பக்கத்தில் உள்ள அவரின் பதிலை வாசித்து விட்டேன். அந்த பின்குறிப்பை வாசித்ததிலிருந்து பெரிதும் மன உளைச்சலடைந்தேன். கவலைகள் பற்றிய உங்கள் பதிலை படித்த பின் கொஞ்சம் அமைதியடைகிறேன். தயவு செய்து இது போன்ற இடுகைகளை பிரசுரிக்காதீர்கள். அவரின் பினாத்தல்களுக்கு வீண் விளம்பரங்கள் கிடைக்காமலேயே இருக்கட்டுமே…Please!
 
ரா.சுப்புலட்சுமி

ரா,சு

பாவம், வேறு என்னதான் எழுதுவார்? எழுதட்டுமே. நம்ம ஜனங்களும் படிக்கட்டுமே என்றுதான் இங்கே விளம்பரம் கொடுப்பது…

ஒன்று தெர்ந்து கொள்ளுங்கள்- தமிழ்நாட்டில் என் எழுத்துக்களின் மிகச்சிறந்த ரசிகர்களில் ஒருவர் சாரு. அதுதான் அவரது சொந்த நரகம்

ஜெ

 

சாருவின் அவதூறு

சாருவின் வசைகள்

முந்தைய கட்டுரைசுதாகர் ஃபெர்னான்டோ
அடுத்த கட்டுரைஆஸ்திரேலியாவில் இனவெறித்தாக்குதல்