ஊமைச்செந்நாய் ஓர் எதிர்விமரிசனம்

அன்புள்ள திரு. ஜெயமோகன்,இதை விட சிறப்பான சிறுகதைகளை உங்களிடமிருந்து கிடைக்கப்பெற்றிருக்கிறோம் என்பது என் அபிப்ராயம். முன்னொரு கடிதத்தில் நான் குறிப்பிட்ட (நீங்கள் எழுதி மறந்திருந்த !) உற்றுநோக்கும் பறவை ஒரு உதாரணம்.

நம் வாழ்வின் அன்றாடம் நடக்கும் நிகழ்வுகளுக்கு உள்ளர்த்தம்  தேட வைக்கும் அளவுக்கு இலக்கியம் சில சமயம்  நம்மை  இட்டுச்செல்கிறது. ஒரு நிமிடம் நிதானித்து விலகி நின்று பார்த்து, உள்ளர்த்தம் என்பது அனேக இடங்களில் நிகழ்வின் இயல்பா அல்லது நாம் கற்பிப்பதா என்று யோசிக்க வேண்டி இருக்கிறது ! வாழ்வை ஒத்த இயல்பான தோற்றத்தை (verisimilitude) கதைகளில் ஏற்படுத்தி, அதே சமயம் அந்தக்களத்தை மீறிய பறந்த relevance-ஐ சாத்தியமாக்குவது தான் எழுத்தாளர்களுக்கு முக்கியமான சவால் என்று தோன்றுகிறது.

கதைமாந்தரின் வாழ்க்கை நிகழ்வுகளை படம்பிடித்து காண்பித்து விட்டு, கதையின் அடிச்சரடுகளை எங்களுக்கு விட்டுவிடும் கதைகளை அதிகம் ரசிக்க முடிகிறது.   அடிச்சரடு வாசகனை சென்றடையாமல் தொலைந்துவிடும் பிரச்சனை இருப்பது மறுப்பதற்கில்லை தான். ஆனால் அதற்காக, கதை நிகழ்வுகளை/உரையாடல்களை  ‘வசதியாக வார்த்துக்கொள்வது கதையின் நம்பகத்தன்மையை சற்று பாதிக்கிறது.

இக்கதையில் எனக்குப் பெருங்குறையாகப் பட்டது துரையின் சித்தரிப்பும்உரையாடல்களும். ஒரு ஸ்டிரியோடைப்புக்கு (stereotype) உயிர்கொடுத்தார்போல இருந்தது. உதாரணமாக : Stupid country fool  என்பதெல்லாம் தமிழ்ச்சினிமாவில் காணக்கிடைக்கும்கிராமத்தில் கூலிங்கிளாஸ் அணியும் பண்ணையார் மகளின் ஆங்கிலத்திமிர் திட்டு. இங்கிருந்து  ‘அவர்களைப்பார்த்து. அவர்கள் இப்படிப்பட்டவர்கள்என்று நாம் ஒரு புரிதலை ஏற்படுத்திக்கொண்டு, அதன்படி அவர்களைசித்தரிப்பது.

வெள்ளையர்கள் ஜீஸஸ் என்று அலுத்துக்கொள்வார்களே ஒழிய, அனேகமாக ஜீஸஸ் என்று சொல்லி ப்ரார்த்தித்து இருக்க வாய்ப்பில்லை (வேட்டைக்கிளம்பும்போது சிலுவைக்குறி இட்டுக்கொள்கிறான் துரை).  இப்படி சில…

நான் உன்னைக் கொல்வேன்என்று துரை சொல்லும் உரையாடலும், காப்பாற்றப்பட்டபின் வரும் உரையாடலும், இரண்டுமே கதைக்கு முக்கியம் என்பதற்காக  இடம்பெற்றிருக்கின்றனவே ஒழிய, அவன் அவ்வாறு பேசியிருப்பது அவனது இயல்புக்கு பொருந்தவில்லை என்றே தோன்றுகிறது. இதில் இயல்பு- அதுவரை  அவன் சித்தரிக்கப்பட்ட இயல்பு என்பது மட்டுமல்ல, அவனைப் போன்றவர்களைப் பற்றி வாசகனிடம் இடம் இருக்கும் முன்தீர்மானத்தையும் சேர்த்தே சொல்கிறேன். இது  அவனைப் போன்ற‘ – என்பதும் ஒரு பொதுமைப்படுட்த்துதல் தான் என்பதை உணர்கிறேன். ஆனால் இந்த அளவு பொதுமைப்படுத்துதல்கள் கூட இல்லாமல் இருக்க இயலாது என்பதால், இதை நீங்கள் எதிர்பார்த்து இன்னும் சிறப்பாக கையாண்டிருக்கலாம் என்று தோன்றுகிறது.

குடித்திருப்பதும், சாவை நெருங்கியதும் சேர்ந்து அவனை vulnerable-ஆக்கியதால் தான் அவன் அவ்வாறு பேச நேர்ந்தது என்று காட்டப்படுகிறது. இருந்தாலும் அந்த உரையாடல் மிகையே. எங்களை வெறுப்பவர்களை நாம் வெறுக்கமுடியாது ஆகையால்..” என்ற விளக்க மெல்லாம் கதைக்கு மிகை வசதியைத் தருகிறது.

 
அக்காலத்தில் இனவெறியை இவ்வாறு வெளிப்படையாகத் தன் பேச்சில்  காட்டும் மனிதர்கள் இருந்திருக்கமாட்டார்களா ?’ என்று கேட்டால்  என்னிடம் பதில் இல்லை. இருந்திருக்கலாம் ஆனால் இந்த சித்தரிப்பின் நேரடித்தன்மை நம்பகத்தன்மையை பாதிக்கிறது என்ற ஒரே பல்லவியைத் தான் திரும்ப பாடுவேன்.தான் செய்வதை நிறவெறிஎன்று தானே சொல்வது எந்த தருணத்திலும் நிகழ்ந்திருக்காது என்றே நினைக்கிறேன்.

சுஜாதாவைப் பற்றி எழுதும்பொழுது அவருடைய கூர்மையான அறிவின் தொடர்ந்த  வெளிப்பாடு, பல கதைகளில் ஆழத்தை எட்டுவதற்குத் தடையாக இருப்பதாக எழுதியிருந்தீர்கள் (நான் சரியாகப் புரிந்து கொண்டேன் என்றால்). இந்தக் கதையிலும் சில இடங்களில் கதைமாந்தரை மீறிய  ஒரு அறிவும்/பார்வையும் காணக்கிடைப்பதாகப்படுகிறது. உதாரணமாக:  மிருகங்கள் செத்து மனிதனை வெல்கின்றன என்பது பற்றிய பிரமாதமான வரி. ஆனால் அதை ஊமைச்செந்நாயின் சிந்தனையோட்டமாக ஏற்றுக்கொள்வது எனக்குச் சிரமமாக இருக்கிறது.

உற்றுநோக்கும் பறவை கதையிலும் கதையின் முக்கிய முடிச்சு, ஒரு பாத்திரத்தின் உரையாடலில் வருகிறது.  பங்கஜகாக்ஷன் நம்பி கதைசொல்லியிடம் பேசும் கடைசி உரையாடல். அதை சொல்லும்போது அவர் ஒரு தீவி்ர நிலையை அடைகிறார். அவர் வாழ்க்கையின் மையமான ஒரு விஷயத்தைப் பற்றிப் பேசும்போது அதீத உணர்ச்சியிலும் அவரால் சீராகப் பேச முடிகிறது என்று காட்டப்படுகிறது. அது மிகுந்த நம்பகத்தன்மை வாய்ந்ததாக இருந்தது.   அறிவியல் சிறுகதை வரிசையில்  சில கதைகளில் இது அவ்வளவு சீராக நிகழவில்லை  (உம். ஐந்தாவது மருந்து கதையில் வரும் உரையாடல். இதில் தகவல் பகிர்தலே மேலிடுகிறது. உ.நோ.பவிலோ தகவல்களும்-கதைமாந்தரும் மிகச்சிறப்பாக பிணைக்கப்பட்டிருக்கின்றன.)

 மடல் நீண்டுவிட்ட பின்னும் நான் சொல்ல வந்ததைத் தெளிவாக சொல்ல முடியவில்லை என்று தோன்றுகிறது. மேலும் நீட்டாமல் இத்துடன் முடிக்கிறேன்.

 ஊமைச்செந்நாய் கதைக்களத்தின் விவரணைகள் மிகச்சிறப்பாக இருப்பதால் கதைக்காட்சிகளின் மிக எளிதாக ஆழமுடிகிறது. பலபேர்  விரும்பிப் படுத்திருப்பதிலிருந்தே நம்பகத்தன்மைபலருக்கு பிரச்சனையாக இருக்கவில்லை என்றும், பல விதமான வாசக அனுபவங்களை இந்தக் கதை தந்திருப்பதும் தெரிகிறது.  வாழ்த்துகள்.

அன்புடன்
பிரபு ராம்
.

 

அன்புள்ள பிரபுராம்

நன்றி. பொதுவாக இலக்கியத்தில் நம்பகத்தன்மை என்பது  வாசகரை உள்ளே சென்று ஒரு கற்பனை வாழ்க்கையை வசச்செய்வதில் உள்ளது. அது ஊமைச்செந்நாயில் உள்ளது என்றே நான் எண்ணுகிறேன். அதற்குமேல் ஒவ்வொரு வாசகரும் அவரவர் சொந்த அனுபவம் அல்லது அனுமானங்களை அடிபப்டையாகக் கொன்டு படைப்பை நம்பகமானதா இல்லையா என்று பார்ப்பார்கள். அதற்கு படைப்பாளி பதில் சொல்ல முடியாது.

படைப்பின் நம்பகத்தன்மை அல்லது யதார்த்தம் என்பது எப்போதுமே ஒரு பாவனை. அதன் உச்சத்தை அது தடுக்கக் கூடாது. அதை கிளாசிக் படைப்புகளில் நாம் மீண்டும் மீண்டும் பார்க்கலாம். உச்சம் என்பது — உச்சகட்ட பேச்சு நிகழ்ச்சி உணர்வு – மிக அபூர்வமாகவே வாழ்க்கையில் நிகழ்கிறது. அல்லது நிகழ்வதே இல்லை. ஆகவே இலக்கியம் அந்த இடம் நோக்கி யதார்த்தத்தின்  பிடியை விட்டு விலகித்தான் செல்ல முடியும்– செல்ல வேண்டும். அந்த உச்சம் வரை நம்பவைத்து கொன்டுவருவதே எழுத்தின் திறன்

உங்கள் கருத்துக்களை தெரிந்துகொண்டேன். நன்றி

ஜெ

 

உங்கள் பதிலுக்கு நன்றி.

// உச்சம் என்பது — உச்சகட்ட பேச்சு நிகழ்ச்சி உணர்வு – மிக அபூர்வமாகவே வாழ்க்கையில் நிகழ்கிறது. அல்லது நிகழ்வதே இல்லை. ஆகவே இலக்கியம் அந்த இடம் நோக்கி யதார்த்தத்தின்  பிடியை விட்டு விலகித்தான் செல்ல முடியும்– செல்ல வேண்டும். //

சிந்தனைக்குரிய விஷயம். இதை முன்பே ஒருமுறை நீங்கள் எழுதிப் படித்த நினைவு. சு.ரா அவர்களுடன் இது பற்றி நீங்கள் விவாதித்தது பற்றி எழுதியிருந்தீர்கள் என்று நினைக்கிறேன்.
 
நடிகர் மர்லன் ப்ராண்டோ பற்றி ஒரு தகவல் : அவர் நடிக்கும்போது எப்போதும் முணுமுணுத்துப் பேசுவாராம். முழு வாக்கியங்கள் இல்லாமல் உடைத்துப் பேசுவாராம். வாழ்க்கையில் சீராக ஒரே தொனியில் யாரும் பேசுவதில்லை என்பது அவரது வாதம். மார்க் ஆண்டனியாக அவர் தான் வந்து “Friends, Romans, Countrymen” பேசினார். ஆனால் அது ஒரு க்ளாசிக். அதற்குத் தோதாகவே செய்யவேண்டும். ஆனால் பொதுவாக  யதார்த்தம் என்பதைப் பொறுத்தவரை முணுமுணுப்பே அவர் தேர்வு. அதே சமயம், தீவிரமாக யதார்த்தத்தை பிடித்துக்கொள்வதால் வரும் படைப்புச்சிக்கல்களை உணர்கிறேன். வரலாற்று காலத்தில் மக்களின் பேச்சுமொழி எப்படி இருந்தது என்று நமக்கு இன்று தெரியாத பட்சத்தில், நமது ஆகச்சிறந்த யூகம் கூட அபத்தமாக இருக்கலாம். படைப்புக்கு அது தடையாக இருத்தலாகாது என்று புரிகிறது.

இருந்தாலும் நிஜத்தில் நடக்க இயலாத உரையாடல்களை புனைவில் நிகழ்த்திக்கொள்வதற்கான வாய்ப்புகளை வலிய உருவாக்கிக்கொள்வதைப் பற்றிய தயக்கம், லேசில் கறைவதாக இல்லை.

 

அன்புடன்
பிரபு ராம்
.

 

 

 

 அன்புள்ள பிரபுராம்

நான் அக்கதையில் நீங்கள் சொல்லும் அச்சிக்கல் இருப்பதாக நினைக்கவில்லை. அந்தக்கதையின் இயல்பு அது, அது பேசும் கதை. வெறுமே காட்டும் கதைகள் பேசாது. மத்தகம் கதை வெறுமே காட்டுகிறது– எந்த சிந்தனைக்குள்ளும் செல்வதில்லை. ஏனென்றால் அந்தக் கதை சொல்லிக்குச் சிந்தனை இல்லை. ஊமைச்செந்நாய் அப்படி அல்ல. சிந்தனையால், அதன் ஆழத்தால் ஊமையாகிப்போனவன் அவன். துரை கதாபாத்திரமும் ஒரு பிரிட்டிஷ் அதிகாரியின் பலவகையான குணங்களின் கலவையாக வந்திருக்கிறது என்றே நான் நினைக்கிறேன். ஒருவன் உச்ச நிலைகளில் அவன் இயல்பில் இருந்து பிறழ்ந்து இன்னொன்றாக ஆவது, தன்னை திறந்துகொள்வது, அல்லது தன்னை ரத்துசெய்துகொள்வதுஎன்பது புனைவு எப்போதுமே எடுத்துக்கொள்ளும் ஒரு விஷயம். அவனுடைய ஆங்கிலம் உட்பட …

நீங்கள் கூர்ந்து வாசித்தமைக்கு மீண்டும் நன்றி
ஜெ
 

 

அறிவியல்கதைகள்:கடிதங்கள்

 

 

மத்தகம்,ஊமைச்செந்நாய், கடிதங்கள்

விஷ்ணுபுரம்,ஊமைசெந்நாய்:கடிதங்கள்

ஊமைச்செந்நாய், கடிதங்கள் மீண்டும்

ஊமைச்செந்நாய், கடிதங்கள் இன்னும்

ஊமைச்செந்நாய்:மேலும் கடிதங்கள்

ஊமைச்செந்நாய்:கடிதங்கள்

 

ஊமைச்செந்நாய்

 

ஊமைச்செந்நாய் வாசித்த கையோடு எழுதிகிறேன்.

தனது வெற்றிக்கு உள்ளர்த்தங்களை பெரிதாக நம்பும் ஒரு கதைசில பொதுமைப்படுத்துதல்களை (generalizations) கையில் எடுக்கிறது. வரலாற்றில் ஒரு இடத்தில் நடக்கும் கதைவரலாற்றின்/மானுடவியலின்  ஒரு முக்கிய இழையையே குறிக்கவேண்டிய பாரத்தை ஏற்கும்போது படைப்பில் அதன் சிரமம் தெரியாமல் இருப்பது  முக்கியம் ஆகிறது.
முந்தைய கட்டுரைலோகி:கடிதங்கள்
அடுத்த கட்டுரைமருத்துவம்:கடிதங்கள்