கடிதங்கள்

வணக்கம் ஜெயமோகன்,

அண்மையில் தாங்கள் எழுதிய ‘நவீனத் தமிழிலக்கிய அறிமுகம்’ வாசித்தேன். அதில் ஈழத்திலக்கியத்தின் தோற்றம் பற்றிக் குறிப்பிடும்போது அறிஞர் அ.ந.கந்தசாமி பற்றியும் ஈழத்துத் தமிழ் இலக்கிய வளர்ச்சிக்குப் பங்களித்த முன்னோடிகளிலொருவரென்றும் குறிப்பிட்டிருந்தீர்கள். தங்களது மதிப்பீடு மிகவும் சரியானது. ஒரு படைப்பாளியை அவரது பங்களிப்பினை மதிப்பீடு செய்யும்போது அவரது படைப்புகளை மையமாக வைத்தே மதிப்பீடு செய்ய வேண்டும். அறிஞர் அ.ந.கந்தசாமியைப் பொறுத்த அளவில் அவரது பங்களிப்பானது பரந்து பட்டது. குறுகிய அவரது வாழ்நாளில் அவர் கவிதை, கதை, நாடகம், விமரிசனம், மொழிபெயர்ப்பு என இலக்கியத்தின் பல்வேறு பிரிவுகளிலும் ஆழமாகக் கால் பதித்தவர். தமிழில் மட்டுமல்ல ஆங்கிலத்திலும் மிகுந்த புலமை வாய்ந்தவர். எழுத்தாளனாக, பத்திரிகை ஆசிரியனாக, தொழிற்சங்கவாதியாக எனப் பல்வேறு வழிகளிலும் பங்களிப்புச் செய்த செயல் வீரர். ஈழத்திலக்கியத்தில் அவரது பங்களிப்பினைக் குறைத்து மதிப்பிட்டுவிடமுடியாது. சிலர் அவரது பங்களிப்பினை முற்போக்கிலக்கியத்தின் முன்னோடி என்ற மட்டும் அளவில் குறைத்து மதிப்பிட முயல்வார்கள். இவ்விதமானதொரு சூழலில் ஈழத்துத் தமிழ் இலக்கியத்தின் முன்னோடிகளிலொருவராக அவரை மதிப்பிட்டிருப்பது சரியானதே. அவர் ஈழத்துத் தமிழ் முற்போக்கிலக்கியத்தின் முன்னோடிகளிலொருவர் மட்டுமல்லர் ஈழத்துத் தமிழ் இலக்கியத்தின் முன்னோடிகளிலொருவருமாவார்.

அவர் எழுதிய ஒரேயொரு நாவலான ‘மனக்கண்’ பற்றியும் குறிப்பிட்டிருந்தீர்கள். அவரது இறுதிக்காலத்தில் ஈழத்து மலையகத் தொழிலாளர்களை மையமாக வைத்து ‘களனி வெள்ளம்’ என்றொரு நாவலினையும் அவர் எழுதியிருக்கின்றார். அது எழுத்தாளர் செ.கணேசலிங்கனிடமிருந்ததாகவும், 1983 இனக் கலவரத்தில் எரியுண்டு போனதாகவும் கேள்விப்பட்டிருக்கின்றேன். மேலும் எமிலி சோலாவின் ‘நானா’ நாவல் அ.ந.க.வின் மொழிபெயர்ப்பில் ‘சுதந்திரன்’ பத்திரிகையில் ஐம்பதுகளின் ஆரம்பத்தில் தொடராக வெளிவந்துள்ளது. ”பொம்மை வீடு’ என்னும் பெயரில் சீன நாவலொன்றும் அ.ந.க.வின் மொழிபெயர்ப்பில், இலங்கைத் தகவற் திணைக்களத்தில் அவர் மொழிபெயர்ப்பாளராகப் பணிபுரிந்த காலகட்டத்தில் , தகவற் திணைக்களத்தால் வெளியிடப்பட்ட ‘சிறிலங்கா’ சஞ்சிகையில் வெளிவந்துள்ளதாகவும் அறிகின்றோம். மேற்படி சஞ்சிகையின் ஆசிரியராகவும் அக்காலகட்டத்தில் அவர் இருந்திருக்கின்றார். அவரது சிறுவர் நாவலான ‘சங்கீதப் பிசாசு’ சிரித்திரன் சஞ்சிகையில் தொடராக வெளிவந்திருக்கின்றது.

அவரது படைப்புகளில் இதுவரை இரு படைப்புகளே நூலுருப் பெற்றுள்ளன. அவரது புகழ்பெற்ற நாடகமான ‘மதமாற்றம்’ பன்முறை வெற்றிகரமாக மேடையேற்றப்பட்ட நாடகம். அந்நாடகம் நூலுருப்பெற்றுள்ளது. ‘இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் ‘எழுத்தாளர் கூட்டுறவுப் பதிப்பகம்’ 1989இல் வெளியிட்டுள்ளது. அவரது இன்னுமொரு நூலான ‘வெற்றியின் இரகசியங்கள்’ தமிழகத்தில் பாரி பதிப்பகத்தினரால் 1966இல் வெளியிடப்பட்டது. இதற்கு எழுத்தாளர் செ.கணேசலிங்கனே முதற் காரணம். அறிஞர் அ.ந.க.வின் இறுதிக் காலகட்டத்தில் எழுத்தாளர் செ.கணேசலிங்கன் மிகுந்த உதவியாக இருந்திருக்கின்றார். அ.ந.க.வின் இறுதிக் காலகட்டம் பற்றியும் தனது ‘குமரன்’ சஞ்சிகையில் தொடரொன்றினை எழுதியிருக்கின்றார். அ.ந.க. மறைந்த பின்னர்,அவரது இறுதி அஞ்சலியின்போது அவரது தலைமாட்டில் ‘வெற்றியின் இரகசியங்கள்’ நூலினை வைத்திருந்த புகைப்படமொன்றினை அக்காலகட்டத்தில் வெளியான ஈழத்துத் தமிழ்ப் பத்திரிகையொன்றில் பார்த்திருக்கின்றேன். மேற்படி இரு நூல்களையும் ‘நூலகம்’ இணையத்தளத்தில் நீங்கள் வாசிக்கலாம். அவற்றின் இணையதள முகவரிகளைக் கீழே காணலாம்:

மதமாற்றம்: http://noolaham.net/project/06/548/548.pdf
வெற்றியின் இரகசியங்கள்: http://noolaham.net/project/54/5322/5322.pdf

அன்புடன்,

வ.ந.கிரிதரன்

அன்புள்ள கிரிதரன்

நலம்தானே?

அ.ந.கந்தசாமி பற்றி நான் அறிந்தது இங்கே ஈழ இலக்கியத்தில் முனைவர் பட்ட ஆய்வுசெய்த ஒருவரிடமிருந்து. அதன்பின் உங்கள் பதிவுகள் இணையதளம் வழியாகவே விரிவாக அறிந்தேன். ஈழஇலக்கியம் பற்றி அதிகமான தகவல்கள் கிடைக்காதிருந்த காலகட்டத்தில் பலவற்றையும் தேடித்தேடி வாசிக்கவேண்டியிருந்தது. இணையம் வந்தபோது தகவல்களை இணையத்தில் ஏற்றியவர்கள் நன்றிக்குரியவர்கள். நீங்கள் அதில் ஒருவர்

ஜெ

அன்புள்ள ஜெமோ அண்ணாவுக்கு, வணக்கம்.

பின் தொடரும் நிழலின் குரல் போய்க்கொண்டிருக்கிறது. என்னை இழுத்துக்கொண்டு செல்கிறது என்று சொன்னால் தான் சரியாக இருக்கும். கடுமையான லௌகிக நெருக்கடிகளுக்கி்டையில் சாத்தியப்படும் எல்லா சந்தர்ப்பங்களிலும் நாவல் என்னைப் படிக்கக் கூப்பிட்டுக்கொள்கிறது. வீரபத்ரன் (பிள்ளையின்..!!) கண்களுக்கு அல்லது மனதுக்கு சைபீரிய ஓநாய்கள் பிரசங்கம் ஆவதுவரை வந்திருக்கிறேன். முழுதும் முடித்துவிட்டு உங்களுக்கு எழுதுகிறேன். இன்று சி.சு.செல்லப்பா பற்றிய உங்கள் எஞ்சும் இருள் படித்தேன். அவரைப்பற்றிய ஒரு தெளிவான மனச்சித்திரம் கிடைத்தது. நேர்நிறையான உணர்வுடன் எழுதியிருக்கிறீர்கள்.

“இலக்கியம் அதைவிடப்பெரிய ஒரு தெய்வத்தின் அறிவிப்பாளன் மட்டுமே.”

நன்று.

நான் உங்களுக்கு நான்கைந்து நாட்களுக்கு முன் குறுச்செய்தியாக எழுதியனுப்பிய கடிதம் உங்கள் பார்வையில் படவில்லை என்று நினைக்கிறேன்.

மற்றபடி ஏதுமில்லை. உங்கள் பதிவுகளை இனி தினமும் படிக்க முடியும் என்ற சந்தோஷமே இன்றைய விஷேசம்.

ப்ரியமுடன்

-வீரகுமார்

அன்புள்ள வீரகுமார்

மன்னிக்கவும். பயணத்தில் இருந்தமையால் மின்னஞ்சல்களை வாசிக்கத் தாமதமாகியது.

நலம்தானே? மாட்டுத்தீவனத்தில்தான் இருக்கிறீர்களா? [உங்கள் செல்பேசியில் அழைத்ததும் பதில்கொடுக்கும் அந்த மாடு எனக்கு எப்போதுமே பிரியமானது]

தொடர்ந்து கதைகள் எழுதுகிறீர்கள் அல்லவா? அலைச்சல்கள் அலைபாய்தல்கள் நடுவே அதுதான் நம்மை நிலையாக வைத்திருப்ப்பது

ஜெ

திரு ஜெயமோகன்,

பொதுவெளியில் பெண்

உங்களுடைய மற்றும் இன்றைய எதிர் வினைகளில் வந்த பெரும்பாலான கருத்துக்களுடன் ஒத்துபோகிறேன். இவை போன்ற தாக்குதல்கள் பொது வெளியில் உக்கிரமாகவும் தனிப் பேச்சுகளில், குடும்ப சூழ்நிலையில், அவரவர் மன விசாலத்தைப் பொறுத்தும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. தரக்குறைவான வசை மட்டுமே தாக்குதல் அல்ல. மிகவும் அக்கறையோடு சொல்வதாக எண்ணப்படும் அறிவுரைகளும் தான்.

அது “இப்படித்தான் இருக்க வேண்டும் பொம்பளை.” என்பதில் இருந்து, “please be circumspect.” என்பது வரை — இந்த இரு முனைகளுக்கிடையே வெவ்வேறு விகிதாசாரத்தில் அறிவுரைகள், அபிப்ராயங்கள் இன்ன பிற தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது.

நம்ம வீட்டுப் பையன், வேற வீட்டு, சாதி, சமூகப் பொண்ணக் காதலிச்சுக் கல்யாணம் பண்ணா ‘i see that as acquisition’ ஆனா நம்ம பொண்ண இன்னொரு வீட்டுப் பையன் காதலிச்சுக் கல்யாணம் பண்ணா ‘i see that as invasion’ அப்படின்னு சொன்னா என்னுடய கசின்ஸ்…

நல்லா படிக்கிற, தனக்கு தெரிஞ்ச அளவுல குடும்பம் தவிர்த்த மற்ற வேறு விஷயங்களப் பத்திப் பேசுற பொண்ண விட, கொஞ்சம் blush பண்ணிக்கிட்டு, வீட்டு வேலை பகிர்ந்து கிட்டு (இந்தப் பொண்ணு படிச்சும் இருக்கும், மருத்துவம், பொறியியல்), ரொம்ப உபத்திரவம் இல்லாத (மேக்கப், உடை, முகநூல்) விஷயங்களில் மட்டும் ஆர்வம் இருக்குற பொண்ணுதான் நெறைய பேருக்கு (ஆண்களுக்கு மட்டும் அல்ல, பெண்களுக்கும்) வசதியாக இருக்கிறது.

ஒரு ஆண் மாதிரி எத்தன பொண்ணு ‘கொஞ்சம் வெளில போயிட்டு வரேன்.’ அப்படின்னு சாதரணமா சொல்லிட்டுப் போக முடியுது. தான் டிவி பார்த்தா, கூட இருந்து கம்பெனி குடுக்கணும், தான் படுக்கப் போய்ட்டா அவளும் படுக்க வரணும், (வேறு தேவை இருக்கோ இல்லையோ) இப்படி யோசிக்கும் ஆண்கள் இல்லையா?

என்னோடைய கசின்ஸ் எல்லாம் MCPs கிடையாது. இவர்கள் பெரும்பாலும் உபத்ரவம் இல்லாத, கண்ணியமானவர்கள் தான். இருந்தாலும் ஆங்கிலத்தில் சொல்வது போல், breathing down my neck என்பது கொஞ்சம் மூச்சு முட்ட வைக்கும் விஷயம் தானே. இதைத்தானே உங்களுடைய ‘குடும்பத்தில் இருந்து விடுமுறை’ என்ற கட்டுரை நகைச்சுவையாகச் சொல்ல முற்பட்டது.

பண்டைய போர் முறைகளில் ஆநிரை கவர்தல், மண் கவர்தல், பெண்களைக் கவர்தல் போன்றவை இருந்ததாமே. இன்னும் நாங்கள் புனித பசுக்கள்தான் போல.

மங்கைசெல்வம்

அன்புள்ள மங்கை

பழங்குடிகளில் இன்றும்கூடப் பெண்ணைக்கவர்தல் சடங்குகள் உண்டு. பல சமூகங்களில் நிகழும் திருமண்ச்சடங்குகள் பழங்காலத்தில் நடந்த பெண்கவர்தல் வேட்டைகளை குறியீட்டுச்செயல்பாடாக ஆக்கிக்கொண்டவைதான். அந்த மனநிலை இன்றும் நம் சமூகத்தில் உள்ளது

திரைவிவாதங்களில் அதிகம் ஈடுபடும் ஒரு பழையதலைமுறை எழுத்தாளாரிடம் பேசிக்கொண்டிருந்தேன். நான் கேட்டேன், ஐம்பதுகளில் தமிழில் சினிமா வந்த காலம் முதலே நாயகன் நாயகியை ஏமாற்றித் தாலிகட்டுவது, மிரட்டித் தாலிகட்டுவது, பந்தயத்தில் வெல்வது முதலியவை தொடர்ந்து இடம்பெற்று வந்துள்ளன. அந்தப்பெண்கள் ஆரம்பத்தில் எதிர்த்த பின் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்பதே முறையாகக் கருதப்பட்டது [உதாரணம் சவாலே சமாளி] இன்று அந்த மனநிலை மாறிவிட்டதா என

அவர் சிரித்தபடி சமீபத்திய பல படங்களைப்பற்றிச் சொன்னார். இன்றும்கூட தமிழ்ப் பெண்களால் ஏற்றுக்கொள்ளப்படும் ஒருவிஷயம் ஒரு அடாவடி ஆண் பெண்ணை வேட்டையாடி அடைவது. ‘அது நம்ம சமூகத்திலே வேரோடிப்போன விஷயம் சார். எப்டி மாறும்?’ என்றார். ஆண்கள் அந்த மனநிலையிலேயே வளர்க்கப்படுகிறார்கள்

ஜேன் குடால் போன்றவர்களின் ஆய்வுகள் இந்த வழக்கத்தையும் மனநிலைகளையும் இப்படியே சிம்பன்ஸிகள் கொண்டிருப்பதாகச் சொல்கின்றன

ஜெ

முந்தைய கட்டுரைபிழை [சிறுகதை] -2
அடுத்த கட்டுரைநதிக்கரையில்