கேரள இதழ்கள்

அன்புள்ள ஜெயமோகன் சார்,

இது நான் உங்களுக்கு எழுதும் இரண்டாவது கடிதம்.  முதல் கடிதம் போன வருஷம் எழுதினது.

நீங்கள் எழுதிய பண்பாடு பற்றிய போஸ்ட் படித்தேன்.  அதில் தமிழ் சிற்றிதழ்குறித்து உங்கள் கருத்தை சொல்லிஇருன்திர்கள். அதேமாதிரி  மலையாள இதழ்கள் குறித்தும் உங்கள் அபிப்ராயம் அறிய ஆசை.   எழுதுவீர்கள் என்று
எதிர்பார்க்கிறேன். கொஞ்சம் கூடுதலாக கேட்டுவிட்டேன் என்றால்மன்னிக்கவும்.

இப்படிக்கு.
சீதாராம்

அன்புள்ள சீதாராம் நெல்லிச்சேரி,

சிலவருடங்களுக்கு முன்பு கேரளப்பிறவின் ஐம்பதாமாண்டுக் கொண்டாடத்தின் போது மலையாள இதழான ‘சமகாலீன மலையாளம்’ என்னிடம் மலையாளப் பண்பாட்டுத்தளம் குறித்த என்னுடைய மனப்பதிவைக் கேட்டார்கள். நான் அப்போது ஒரு கட்டுரை எழுதி அதில் வெளியாகியது. அதில் தொடக்கத்தில் ஒரு சித்திரத்தை அளித்திருந்தேன்.

நான் வடகேரளம் வழியாகப் பயணம் செய்துகொண்டிருந்தேன். ஒரு கிராமிய நூலகம் கண்ணில் பட்டது. ஓடு போட்ட ஒற்றை அறைக் கட்டிடம். அதன் முன்பு பழைய மலையாள லிபிகளில் கறுப்புப் பலகையில் வெள்ளை எழுத்தில் எழுதப்பட்ட அறிவிப்பு ‘விஸ்வபாரதி வாயனசாலா’ அந்தக்கட்டிடமே அப்படியே உளுத்து செடிகள் அடர்ந்து நின்றிருந்தது. அதன் கதவு மட்கி பூட்டு துரும்பு பிடித்திருந்தது.

இன்றைய கேரளத்தின் சித்திரத்தைக் காட்டும் ஒரு குறியீடு அது. எழுபதுகள் வரை கேரளத்தை உலுக்கிய பண்பாட்டு அலைகள் இன்று வெறும் ‘·பாஸில்’ களாக மாறி ஆங்காங்கே உதிர்ந்து கிடக்கின்றன என்பதற்கான அடையாளம்.

கேரள மறுமலர்ச்சி என்பது நாராயணகுருவால் சென்ற நூற்றாண்டின் தொடக்கத்தில் முன்னெடுக்கப்பட்டது. நாராயணகுரு உருவாக்கிய சமூக சீர்திருத்த அமைப்புகள் சமூக தளத்திலும், பண்பாட்டுத்தளத்திலும், பொருளியல் தளத்திலும் பெரிய மாற்றங்களை உருவாக்கின.நாராயணகுருவுக்கு முன்னரே கேரளத்தில் பரவலாக இருந்த மிஷனரிகள் கல்வியை மக்களிடையே கொண்டுசெல்வதில் பெரும் பங்காற்றியிருந்தார்கள். அமைப்பு விஷயத்தில் நாராயணகுரு மிஷனரிகளையே முன்னுதாரணமாகக் கொண்டிருந்தார். அவர் உருவாக்கியது ஒரு ‘நாராயண மிஷன்’ என்றால் மிகையல்ல.

பொதுவாக இந்தியாவில் கல்வி வளர்ச்சியும் பண்பாட்டு மாறுதல்களும் ஐரோப்பியருடன் நேரடியாக தொடர்பு கொண்டிருந்த நிலப்பகுதியிலேயே அதிகமாக உருவாயின என்பதைக் காணலாம். இந்த உண்மை கொஞ்சம் கசப்பாக இருந்தாலும் இதை நாம் சிந்தித்தே ஆகவேண்டும். ஐரோப்பிய வகையான கல்வி சட்டென்று உலகத்தை நம் மக்களின் கண்களில் காட்டிவிடுகிறது.  வங்கத்துக்கும் கேரளத்துக்கும் இந்த வரலாற்று முன்னுரிமை வாய்த்தது.

மிஷனரிகள் வழியாக ஐரோப்பியர் அதிகமாக செயல்பட்ட தென்கேரளம் வடகேரளத்தை விட கல்வியிலும் பண்பாட்டு மாற்றத்திலும் முன்னின்றதை இப்போது கவனிக்கலாம். கேரளத்தை மாற்றியமைத்த பண்பாட்டு இயக்கங்கள் சமூக சீர்திருத்த இயக்கங்கள் தென் கேரளத்திலேயே உருவாயின. நாராயணகுருவின் அமைப்புச்சீடராக இருந்த டாக்டர் பல்பு மற்றும் சி.வி.குஞ்சுராமன், நாயர் சமூக சீர்திருத்தத்தை முன்னெடுத்த சி.வி.ராமன்பிள்ளை, மன்னத்து பத்மநாபன் போன்ற பெரும்பாலானவர்களில் ஆழமாக பாதிப்பு செலுத்திய ஐரோப்பிய ஆசிரியர்கள் உண்டு

இரண்டாவதாக தென்கேரள ஆட்சியாளர்களான திருவிதாங்கூர் மன்னர்களும் ஐரோப்பியக் கல்வி கற்றவர்கள். ஐரோப்பியர்களால் பாதிப்பு அடைந்தவர்கள். ஆகவே திருவிதாங்கூர் அரசு பிற சம்ஸ்தானங்களுடன் ஒப்பிடும்போது பிரமிப்பூட்டும் அளவுக்கு கல்விக்கு செலவிட்டிருக்கிறது. அதற்கு அடுத்தபடியாக நீர்ப்பாசனத் திட்டங்களில் பணம் செலவிட்டிருக்கிறது.

இச்சூழலில்தான் நாராயணகுருவின் இயக்கம் உருவாகி பரவியது. நாயர் சமூக சீர்திருத்த இயக்கங்கள் உருவாயின. கேரளத்தை வடிவமைத்த முக்கியமான இதழ்கள்  இப்பின்னணியில் உருவானவை. மலையாள மனோரமா, நஸ்ராணி தீபிகா போன்ற இதழ்களில்  மிஷனரி பாதிப்பு. கேரள கௌமுதி போன்ற இதழ்கள் நாராயண குருவின் இயக்கத்தால் உருவானவை. மாத்ருபூமி நாயர் சீர்திருத்த இயக்கத்தின் விளைவு. பின்னர் இந்திய தேசிய காங்கிரஸின் குரலாக ஆகியது.

இவ்வியக்கங்களின் மேல்  ஏறி வளர்ந்ததே இடதுசாரி இயக்கம். இடதுசாரி இயக்கம் முதன்மையாக ஓர் அறிவியக்கம், அதன்பின்னரே அது ஒரு சமூக- பொருளியல் இயக்கம். இடதுசாரி இயக்கம் கிராமிய நூலகங்களை அமைப்பதையே தன் அடிப்படைச் செயல்பாடாகக் கொண்டிருந்தது. கிராமத்தில் ஒரு ‘வாயனசாலா’ ஆரம்பிக்கப்படுகிறது. இளைஞர்கள் திரட்டப்படுகிறார்கள். நாடகங்கள் போடப்படுகின்றன. மெல்லமெல்ல அது ஒரு கட்சி அலகாக ஆகும். வாசிப்புசாலை அக்காலத்தில் மிக முக்கியமான பண்பாட்டு மையம்.

நாராயணகுருவின் இயக்கமும் கிராமிய நூலகத்தை சார்ந்திருந்தது. பின்னர் எல்லா அரசியல் இயக்கங்களும் கிராமிய நூலகங்களை உருவாக்கின. சின்னஞ்சிறு கிராமத்தில்கூட நாலைந்து கிராமிய நூலகங்கள் உருவாயின. இவ்வாறு கேரளத்தில் கிட்டத்தட்ட ஒரு லட்சம் கிராமிய நூலகங்கள் உருவாயின. இவையே அங்கே வாசிப்புப் பழக்கத்தை உருவாக்கின.

செய்தித்தாள் வாசிப்பதென்பது கேரளத்தில் இன்றும் ஒரு போதை போல என்பதை காணலாம்.  ஐம்பதுகள் முதல் வாசிப்புப்பழக்கம் பெரிய ஓர் சமூக இயக்கமாக ஆகியது. எழுத்தாளர்கள் பெரும் புகழ்பெற்றார்கள். பதிப்புத்தொழில் பெரும் மலர்ச்சியை  அடைந்தது. பல லட்சம் வாசகர்கள் இலக்கியங்களை வாசித்தார்கள்.

இன்றும் இந்தியாவில் மிக அதிகமாக விற்கும் பிராந்தியமொழி நாளிதழ்களில் முதல் இரு இடங்களில் இருப்பவை மலையாள நாளிதழ்களே. ‘மலையாள மனோரமா’ ‘மாத்ருபூமி’. கேரளத்தில் இரண்டு லட்சத்துக்கு மேல் விற்பனைகொண்ட பத்து நாளிதழ்கள் வருகின்றன.  அதாவது ஒருநாளில் கிட்டத்தட்ட எழுபத்தைந்து லட்சம் நாளிதழ் பிரதிகள்

இதேபோல இந்தியாவில் மிக அதிகமாக விற்கும் முதல் இரு வார இதழ்கள் மலையாளத்தில்தான். ‘மலையாளமனோரமா வாரிக’, ‘மங்களம் வாரிக’. ஐந்து லட்சத்துக்கும் மேல் விற்பனைகொண்ட வார இதழ்கள் முப்பது உள்ளன. மொத்த வார இதழ்கள் இருநூறுக்கும் மேல்.

கேரள நூலகங்களில் பெரும்பாலானவற்றை பின்னர் கிரந்தசாலா சங்கம் என்ற அமைப்பு ஒருங்கிணைத்தது. அது ஒரு பேரியக்கமாக இன்று உள்ளது. பிரசுரத்துறையில் கேரள சாகித்ய பிரவர்த்தக சஹஹரண சங்கம் என்ற எழுத்தாளர் கூட்டுறவு அமைப்பு உருவாகி ஒரு காலகட்டத்தில் இந்தியாவிலேயே பெரிய பிரசுர நிறுவனமாக இருந்தது. தரமான இதழ்களாக பாஷாபோஷினி, மாத்ருபூமி,சமகாலீன மலையளம், மாத்யமம், கலாகௌமுதி போன்ற இதழ்களும் வந்துகொண்டிருக்கின்றன.

இந்த வகையான வாசிப்புப் பரவலாக்கத்தை இலக்கியத்தரத்துடன் நேரடியாக தொடர்புபடுத்திக்கொள்ளக்கூடாது என்று நான் எப்போதும் சொல்லிவருகிறேன். மலையாள இலக்கியம் என்பது ஒரு வெகுமக்கள் இயக்கமாக இருந்தமையாலேயே வெகுமக்களின் அரசியல் மற்றும் ரசனையின் போக்குகளுடன் சமரசம் செய்துகொண்டதாகவே அது இருந்து வந்திருக்கிறது. சராசரிக்கும் மேலான தரம் கொண்ட மலையாள எழுத்தே அளவில் அதிகம். தன்னுடைய தனித்தன்மையைச் சார்ந்து தன் படைப்பூக்கத்தை அமைத்துக்கொண்ட முக்கியமான படைப்பாளிகள் சிலரே.

அதேபோல அங்கே வாசிப்பின் அகலம் அதிகமாக இருந்தாலும்கூட ஆழம் ஒப்புநோக்க குறைவே. இப்போதல்ல எப்போதுமே. சிலநூறு வாசகர்களுக்குள் தமிழ் தீவிர இலக்கியம் நிகழ்ந்துகொண்டிருந்த போது தமிழில் எத்தனை தீவிர வாசகர்கள் இருந்தார்களோ அத்தனை தீவிர வாசகர்களே மலையாளத்தில் வாசிப்பு என்பது ஓர் பேரியக்கமாக இருந்தபோதும் இருந்தார்கள்.

இதெல்லாம் எண்பதுகள் வரை. எண்பதுகளுக்கு மேல் கேரளத்தில் நாம் பார்ப்பது வருத்தம் தரக்கூடிய ஒரு பெரும் சரிவை. தரமான பத்திரிகைகளின் விற்பனையில் வந்த சரிவை வைத்தே இதை ஊகிக்கலாம். எண்பதுகளில் மாத்ருபூமி வார இதழ் இரண்டரை லட்சம் பிரதிகள் வர விற்றது. இப்போது அதன் விற்பனை முப்பதாயிரம். இரண்டு லட்சம் விற்ற கலாகௌமுதி பத்தாயிரம் பிரதிகளுக்கு வந்துள்ளது. எல்லா தீவிர இலக்கிய இதழ்களிலும் இந்த வீழ்ச்சி உள்ளது.

புத்தக விற்பனை இன்றும் ஓரளவுக்கு நீடிக்கிறது. அதற்குக் காரணம் கிரந்தசாலா சங்கம் என்னும் அமைப்பு நூல்களை வாங்குவதுதான். ஆனால் தனிப்பட்ட வாசகர்கள் நூல்களை வாங்குவது மிகமிகக் குறைந்து விட்டது. இக்காரணத்தால் இப்போது வரும் நூல்களின் இயல்பும் மாறி விட்ட்டது. தனிப்பட்ட வாசிப்புக்கு உரிய நூல்களுக்கு பதிலாக பண்டைய நூல்களை பெரிய பெரிய நூலகத்தொகுப்புகளாக வெளியிட்டு அப்படியே அடுக்குகளுக்கு தள்ளி விட்டுவிடுகிறார்கள்.

சென்ற வருடம் ஒரு புத்தகக் கடையில் ஜோசப் முண்டசேரியின் சட்டச்சபைப் பேருரைகள் என்ற பெரும் நூல் வரிசையைப் பார்த்து அதை யார் வாசிப்பார்கள் என அங்கே இருப்பவர்களிடம் கேட்டபோது இந்நிலையைச் சொன்னார்கள். தனிநபர்களின் வாசிப்பு என்பது படிப்படியாக குறைந்து மிக அபூர்வம் என்ற நிலையை அங்கே அடைந்திருக்கிறது. இதழ்களில் வெளியாகாத ஒர் படைப்பை எவராவது கவனிப்பதென்பது இன்று அங்கே அறவே சாத்தியமில்லை. [இதைப்பற்றி முன்பே விரிவாக எழுதியிருக்கிறேன்]

இந்தச்சரிவை நாம் முதன்மையாக அங்கே இலக்கியத்தில் காணலாம். கடந்த இருபதாண்டுக்காலத்தில் கவனத்துக்கு வந்த முக்கியமான புனைகதையாளர் எழுத்தாளர் என எவரும் இல்லை. இருக்கும் ஓர் இடத்தை நிரப்பும் எழுத்துக்கள் மட்டுமே உள்ளன. கடைசியாக அங்கே படைப்பூக்கத்துடன் வெளிப்பட்ட எழுத்தாளர்கள் சகரியாவும் என்.எஸ் மாதவனும்தான்.

தமிழில் கண்மணி குணசேகரன், சு.வேணுகோபால் போன்று கடந்த பத்து வருடத்தில் எழுந்து வந்த சமீபத்திய எழுத்தாளர்கள் இதுவரை தமிழில் இல்லாத ஒரு சுவையை அதற்குச் சேர்க்கிறார்கள். எழுதப்படாத ஒரு நிலம் எழுதப்படுகிறது. ஜோ டி க்ரூஸ் போன்ற ஒருவர் அதிசயம்போல உருவாகி வருகிறார். இப்படி ஒன்று கால்நூற்றாண்டாக மலையாள புனைகதையில் நிகழவில்லை. சகரியாவையும் மாதவனையும் நகல்செய்யும் முயற்சிகளே நடந்துகொண்டிருக்கின்றன. கவிதையில் கல்பற்றா நாராயணன், பி.ராமன், செபாஸ்டின், பி.பி. ராமச்சந்திரன்  போன்று அபூர்வமாக சில புதிய குரல்கள் சாத்தியமாகியுள்ளன.

இதன் நீட்சியே இதழ்களில் உள்ள சோர்வு. தமிழ் இதழ்களில் இப்போதுதான் ஒரு தேக்கம் தென்பட ஆரம்பிக்கிறது. மனுஷ்யபுத்திரன் போன்ற இதழாளர்கள் சுதாரித்துக்கொண்டால் தாண்டிச்செல்லக்கூடிய தேக்கம்தான் அது. மலையாள இதழ்கள் தேங்கி கால்நூற்றாண்டு ஆகிறது. இன்றைய மலையாள அறிவியக்க இதழ்களில் முக்கால்பங்கு அன்றாட  அரசியல் கட்டுரைகள். இவை பெரும்பாலும் அவ்விதழ்களின் நிருபர்களாலேயே எழுதப்படுகின்றன. ஆங்கில இதழ்களின் கட்டுரைகளை தரமற்ற வகையில் தழுவி எழுதப்படும் இக்கட்டுரைகள் அனைத்துக்கும் ஒரே கோணம், ஒரே பேசுதளம்

இவற்றுக்கான நடை இரு வகை. ஒன்று அறுபதுகளில் கௌமுதி பாலகிருஷ்ணன் என்ற இதழாளரால் உருவாக்கப்பட்ட நடை. நக்கல், கிண்டல், நேரடித்தாக்குதல் கொண்ட நடை இது. ”அச்சுதானந்தனின் கொல்லைப்பக்கத் திண்ணையில் குந்தி இருந்து சட்டியில் மிஞ்சிய கஞ்சியில் துவையலைப்போட்டு கலக்கிக் குடித்து பழகிய ஆர்.எஸ்.பி எப்படி அக்குளில் இடுக்கிய துண்டை அவிழ்த்து தலையில்கட்டி திருவாய்க்கு எதிர்வாய் சொல்லும் துணிச்சலை அடையப்போகிறது…?” இந்தவகை. இன்னொன்று எழுபதுகளில் நக்சலைட் இதழ்களில் உருவாகி வந்தது. கெ.சச்சிதானந்தனின் நடை இதற்குச் சிறந்த உதாரணம். சம்ஸ்கிருதம் மண்டிய அறிவுஜீவி நடை. இவ்விருநடைகளிலும் ஒரே விஷயம் சலிக்கச் சலிக்க எழுதித் தள்ளப்படுகிறது.

இதன்பின் அதிகமாக இங்கே எழுதப்படுவது நினைவுகள். கடந்த பத்தாண்டுகளாக நினைவுகளை எழுதுவது கேரளத்தின் பெரிய மோகமாக இருக்கிறது. நக்சலைட் போராட்டமே கேரளத்தில் ஒப்புக்குதான் நடந்தது. ஆனால் அதைப்பற்றிய நினைவுக்குறிப்புகள் லத்தீன் அமெரிக்க நாடுகளின் புரட்சி நினைவுகளை விட அதிகம்.  ஜான் ஆபிரகாம், அரவிந்தன், நாயனார் போன்று வீரநாயகர்களை உருவாக்கி அவர்களைப்பற்றி எழுதித்தள்ளப்படும் கட்டுக்கதைகள் அடுத்தபடியாக. இதைத்தவிர வழக்கம் போல ஆங்கிலத்தில் இருந்து மொழியாக்கம்செய்யபப்டும் இலக்கியச்செய்திகள்.

பொதுவாக இவற்றில் வாசகர்களுக்கு ஆர்வம் முற்றாகவே முடிந்து விட்டிருக்கிறது. ஆகவே எல்லா இதழ்களும் மேலும் மேலும் சமகால அரசியல் அலசல்களுக்கு அதிக இடம் அளிக்கின்றன. ரஹ்மான் – ரசூல் பூக்குட்டி  ஆஸ்கார் வாங்கியபோது மலையாளத்தில் எப்படியும் முந்நூறு கட்டுரைகள் எழுதப்பட்டிருக்கும். நான் ஐம்பது கட்டுரைகளை பார்த்திருப்பேன். ஒரு நல்ல, அசலான கட்டுரை கிடையாது. எல்லாமே ஆங்கில இதழ்களில் இருந்து சுடப்பட்டவை — விதிவிலக்கு ஷாஜி எழுதிய கட்டுரை.

ஷாஜி எழுதிய கட்டுரையின் கதை பரிதாபகரமானது. அவர் தன் ஆங்கிலக்கட்டுரையை அனுப்பும்போதே அதன் மொழியாக்கம் தன் கவனத்துக்கு வந்தாகவேண்டும் என்று சொல்லியிருந்தார். ஆனால் அச்சான இதழ்தான் அனுப்பப் பட்டது. நவீன மொழியில் மிதமாகப்பேசும் அவரது கட்டுரை கீழ்த்தரமான ‘ரொமாண்டிக்’ நடையில் மொழியாக்கம் செய்யப்பட்டிருந்தது. உதாரணமாக ‘மணிரத்தினம் மெட்டு கேட்டபோது ரஹ்மான் அவருக்கு தேர்வு செய்ய ஏராளமான மெட்டுகளை கொடுத்தார்’ என்ற சொற்றொடர் ‘மணிரத்தினத்தின் மேஜைக்குமேல் ரஹ்மான் மெட்டுகளினாலான ஒரு வண்ணமலர்ச்செண்டையே வைத்தார்’ என்று மொழியாக்கம் செய்யபப்ட்டிருந்தது. ஷாஜி என்னைக் கூப்பிட்டு கிட்டத்தட்ட அழுதார்.

இந்த தேக்கநிலை தொடர்ச்சியாக பலரால் உணரப்படுகிறது. மாற்று முயற்சிகள் செய்யப்படுகின்றன. நானே சிலவற்றுடன் சம்பந்தப்பட்டிருக்கிறேன். அவை வெற்றிகரமாக நிகழவில்லை. காரணம் அவற்றுக்கு வாசக ஆதரவு இல்லை. அத்துடன் இன்னொன்று, மலையாளம் இன்னமும் இணையத்தில் வெற்றிகரமாக புழங்கும் மொழி அல்ல. இன்னமும் அதன் எழுத்துருச் சிக்கல்கள் தீர்க்கப்படவில்லை. பொருட்படுத்தத்தக்க ஒரு மலையாள இணைய இதழும் இல்லை.

இந்தத் தேக்கநிலைக்கான காரணத்தை கேரள அரசியல்- சமூக சூழல்களில் தேடவேண்டும். முக்கியமான விஷயம் மார்க்ஸியக் கம்யூனிஸ்டுக் கட்சியின் வீழ்ச்சி.  ஓர் அறிவார்ந்த இயக்கம் என்னும் நிலையில் இருந்து சாதாரணமான அரசியல் கட்சி என்ற நிலை நோக்கி அது சரிந்து கால்நூற்றாண்டாகிறது. இ.எம்.எஸ் போன்ற பேரறிஞர்கள் வழிநடத்திய கட்சியில் அறிவுஜீவி என்று ஒப்புக்குக் கூட சொல்லமுடியாத அச்சுதானந்தன், பினராய் விஜயன் போன்றவர்கள் தலைமை வகிக்கிறார்கள்.

கேரள இளைய தலைமுறை இதனால் அறிவியக்கங்களில் இருந்து முற்றாக விலகிவிட்டது. சகரியா செய்தியில் அடிபடாத நாளே கேரளத்தில் இல்லை. ஆனால் நான் பல பொறியியல் கல்லூரி மாணவர்களிடம் சகரியா குறித்து கேட்டிருக்கிறென். ஒரே ஒருவர்தான் அவரைக் கேள்விப்பட்டிருந்தார். கேரள இளைய தலைமுறை இருவகைப்பட்டது. ஒன்று வெளிநாட்டுப்பணம், அல்லது வணிகப்பணத்தால் வளர்க்கப்படும் ‘அடிபொளி’ தலைமுறை. அவர்களுக்கு குடி தவிர ஈடுபாடே இல்லை. சாயங்காலம் ஆனால் ‘ரண்டெண்ணம் வீசினால்’ தான் குஷி. இன்னொரு தலைமுறை கட்சி அரசியலின் அடிதடி வழியாக வளர்ந்து கல்·ப் நாடுகளுக்கு போய் கூலிவேலை செய்கிறது.

தேக்கத்தில் மிகப்பெரிய தேக்கம் பொறியல் முதலிய தொழில் கல்வியிலும் உயர்கல்வியிலும் கேரளத்தில் உள்ளதுதான். எளியமுறையில் கூட தமிழ்நாட்டை கேரளத்துடன் ஒப்பிட முடியாது. சென்ற வருடங்களில் என் நண்பர்கள் அனைவருமே குழந்தைகளை சென்னையிலும் கோவையிலும்தான் கல்லூரிகளில் சேர்த்திருக்கிறார்கள். கேரளக் கல்வி அமைப்பை அடிதடிக்கட்சி அரசியல், தொழிற்சங்க அரசியல் முழுமையாகவே சீரழித்து விட்டது. சென்ற 2008 ல் கேரளத்தில் கல்லூரிகள் மொத்தமே 112 நாட்கள்தான் பணியாற்றியிருக்கின்றன!

இதில் இருந்து கேரளம் எப்படி மீளப்போகிறதென தெரியவில்லை. நான் முதலில் சொன்னதுபோல இன்றைய கேரளம் எழுபதுகள் வரை அந்நிலத்தை கொந்தளிக்க வைத்த சமூக இயக்கங்களின் எலும்புக்கூடு மட்டுமே

ஜெ

கேரளமும் சுதந்திரமும் ஒரு கடிதம்

 

 

இதழ்களும் மதிப்பீடுகளும்- ஒரு கடிதம்

விவாதிப்பவர்களைப்பற்றி

மலையாள இலக்கியம்

ஷாஜியின் வலைப்பூ

சுவரில் முட்டி நிற்கும் மலையாள சினிமா.

நித்யா கவிதை அரங்கு

கேரள வன்முறைஅரசியல்-நாகார்ஜுனன்

மலையாள கவிதைகளை புரிந்து கொள்வது குறித்து

முந்தைய கட்டுரைவாக்களிக்கும் பூமி – 2, பாஸ்டன்
அடுத்த கட்டுரைமலையாள இதழ்கள், கடிதங்கள்