நீங்கள் ஓர் அரசியல்வாதி!

அன்புள்ள ஜெயமோகன்,

உங்களது பன்முக ஆளுமையில் என்னைக்கவர்ந்தது மதம் மற்றும் ஆன்மீகம் சம்பந்தமாக நீங்கள் எழுதியது. சமீபத்தில் சிவேந்திரனுக்கு நீங்கள் அளித்த பதிலைப்பற்றிய எனது கருத்தே இந்த மின்னஞ்சல். மேற்கொண்டு படிக்கலாமா வேண்டாமா என்பதை நீங்கள் எளிதில் தீர்மானிக்க உதவ, உங்கள் நேரத்தை நான் வீணாக்காதிருக்க இந்த முதல் பத்தியை இக்கடிதத்தின் கருப்பொருளை சொல்ல வருவதாக எடுத்துக்கொள்ளவும்.

நீங்கள் சிவேந்திரனுக்கான பதிலில் ஒரு அரசியல் நிலைப்பாடையே எடுத்திருக்கிறீர்கள்.

அரசியல் நிலைப்பாடு = ஒரு விஷயத்தில் தன் நலன் சார்ந்து முடிவெடுப்பது ஆனால் பொதுவெளியில் அந்த முடிவிற்கு வேறொரு காரணத்தைக் கூறுவது. அதன் மூலம் தன் சுயநலத்தை மறைப்பது. அதாவது hidden agenda

என்னுடைய இந்தக் குற்றச்சாட்டு உங்களுக்கு வருத்தம் அளிக்குமானால் அதற்கு நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். என்னுடைய தற்போதைய தெளிந்த மன நிலைக்கு உங்களுடைய எழுத்துக்களும் ஒரு காரணம். ஆகையால் நிற்க அதற்குத்தக என்பதற்கிணங்க, எனது தெளிவில் தோன்றிய கருத்தை எழுத்து மூலமாக இங்கே பதிகிறேன். இது அறச்சீற்றத்துடன் நான் கொடுக்கும் தீர்ப்பு அல்ல. அதற்கான தகுதி எனக்குக் கிடையாது

செந்திலுக்கு (நியூராலஜியில் மனம், தன்னிலை முதலியவற்றிற்கு விளக்கம் கொடுக்கமுடியும் அதுவே உண்மைக்கு வெகு அருகிலும் இருக்கும் என்ற வாதத்தை முன் வைத்தவர்) அளித்த பதிலில் மனம், தன்னிலை என்பதை மூளையின் நரம்புத்தொடர்பிலுள்ள மின்னோட்டத்தை வைத்து மட்டும் விளக்கி விட முடியாது. அது அவ்வளவு எளிய விஷயமில்லை அதை நரம்பியல் நிபுணர்களே ஒத்துக்கொண்டுவிட்டார்கள். என்று எழுதியிருந்தீர்கள் (அதாவது விஞ்ஞானத்தின் பக்கம் முழுவதுமாக சாயாமல் ஒரு நிலைப்பாடு)

பகவத்கீதையின் உரையில் ஆன்மாவை ஒரு கருத்துருவாக மட்டுமே, அலையலையாக வரும் பிரபஞ்ச நிகழ்ச்சிகளை முழுமையாக விளக்குவதற்காக எடுத்துக்கொள்ளப்பட்ட ஒரு கோட்பாட்டில் வரும் ஒரு கருத்து நிலையாக மட்டுமே கருதுகிறேன் என்னுடைய தனிப்பட்ட அனுபவத்துக்குள் வராதவரை அதைப்பற்றிய முடிவை எடுக்கமாட்டேன் என்று சொல்லியிருந்தீர்கள் (அதாவது இந்து ஞானத்தரப்பில் கூறப்பட்ட பதிலிலும் முழுவதுமாக உடன்பாடு இல்லை என்பதாக ஒரு நிலைப்பாடு)

இப்போது சிவேந்திரனுக்கான பதிலில், தீபாவளி ராக்கெட் உதாரணத்தைக் காட்டி இது போல் ஒரு காலகட்டத்தில் இந்த கேள்வியே நம் மனதில் இப்போதிருக்கும் எழுச்சியுடன் இருக்காது என்று ஒரு பதில். கடைசியாக உங்கள் குரு நித்யா கூறியதாக சிலவற்றைக் கூறிவிட்டு நான் எதையும் எத்திசையிலும் உறுதிப்படுத்திக்கொள்ளவில்லை, நான் காத்திருக்கிறேன் என்று கூறியிருக்கிறீர்கள். இதன் மூலம் கார்ப்பரேட் நிறுவனங்கள் மேற்கொள்ளும் அதே உத்தியை நீங்களும் பின்பற்றியிருக்கிறீர்கள். அவர்கள் கோவில் அம்மன் நடந்து வேறொரு கோவிலுக்கு போனது (சாலையில் உள்ள கால் தடங்களை காட்டி), பிள்ளையார் பால் குடிப்பது, எண்ணையில்லாமல் விளக்கு எரிவது போன்ற சில்லறைப் பரபரப்புகளை வைத்துக் காசு பண்ணுகிறார்கள். கொஞ்சம் படித்த பணமிருக்கும், பீட்சா பர்கர் சாப்பிடும் இன்றைய இளைஞர் சமுதாயத்திற்கு கார்ப்பரேட் சாமியார்கள் பிரபஞ்ச சக்தியோடு நீ உன்னை இணைத்து அழிவில்லா பெருவாழ்வு வாழ வழிகாட்டுகிறேன் என்று கல்லா கட்டுகிறார்கள்

நான் அதிகம் உணர்ச்சி வயப்படுபவன். நுண்ணிய உணர்வுகள் கொண்டவன் அதனால்தான் என்னால் இலக்கியத்தரத்தில் எழுதமுடிகிறது. வணிக எழுத்துக்களை எழுதும் வியாபாரி இல்லை என்ற பிம்பத்தை தரக்கூடிய வகையில் இதற்கு முன்னர் உங்களுடய சில பல அபுனைவுகளில் (கட்டுரையிலோ, வாசகர் கேள்வி பதில் மூலமாகவோ) பொதுவெளியில் வைத்திருக்கிறீர்கள். மரணம் பற்றிய உங்கள் “தீர்ப்பு ஒத்திவைக்கப்படுகிறது” என்ற பாதுகாப்பான முடிவின் மூலம் நீங்கள் அந்த உணர்ச்சியை கட்டுக்குள் வைக்ககூடிய அறிவுத்திறனும் உடையவர் என்று நான் நம்புகிறேன்

நம்மிடம் இருப்பது அறிவு மற்றும் உணர்ச்சி. இதில் நம்மில் வெளிப்படும் உணர்ச்சியைப் பார்க்கும் பார்வையாளர்களாக மட்டுமே நாம் இருக்கிறோம். நமது சுய விருப்பத்திற்கேற்ப உணர்ச்சிகள் நம்மிடம் தோன்றுவதில்லை. அப்படி தானாக தோன்றாத அந்த உணர்ச்சியை நம்மிடம் இருப்பதாக எதிராளியை நம்பச்செய்ய நாம் ஒவ்வொரு சூழ்நிலையிலும் அதற்கேற்றார்போல் நடிக்கலாம். அப்படி நடித்தால் அது நம்முடைய அறிவால் ஒரு விளைவை எதிர்பார்த்து நாம் செய்யும் திட்டமிட்ட செயல்

நமது சுயநலம் சார்ந்து, பிரபஞ்சத்தின் ஒட்டுமொத்த நம்முடைய புரிதலை கணக்கில் கொண்டு, அதில் நம் இடத்தை, எதிர்காலத்தில் நாம் அடைய வேண்டியை இலக்குகளை கணக்கில் கொண்டு, சதுரங்கப்பலகையின் திட்டமிட்டு காய் நகர்த்துதலாக உங்களுடைய தற்போதைய நிலையை பார்க்கிறேன். அதுவே உங்களுடைய கட்டுரையாக, புனைவாக, தேர்ந்தெடுக்கப்பட்ட வாசகர் கேள்விக்கான பதிலாக, பேட்டியாக, சொற்பொழிவாக வெளிப்படுகிறது. அதற்காக முழுக்க முழுக்க உணர்ச்சியை மறைத்து, லௌகீகமே (புகழ் மற்றும் செல்வம்) குறிக்கோள் என்று இருக்கக்கூடியவராக உங்களை நான் கருதவில்லை.

உங்களுடைய வீழ்ச்சியை எதிர்ப்பார்த்து சிலர் இருக்கலாம். அவர்களுடைய வேலையை எளிதாக்கக்கூடாத வகையில் உங்களுடய செயல்கள் அமைய வேண்டுமென நீங்கள் சில நிலைப்பாடுகளை எடுக்கலாம். மற்றும் இந்த உலக வாழ்க்கையானது சிறு பிள்ளை விளையாட்டல்ல. சூழ்ச்சிகள் நிறைந்தது. இதில் வெகுளித்தனமாக மனதில் தோன்றும் உணர்ச்சிகள் அனைத்தையும் பொது வெளியில் பதிவு செய்ய முடியாது என்றும் நீங்கள் சில நிலைப்பாடுகள் எடுக்கலாம். இவ்வாறாக உங்கள் தரப்பை என்னால் பார்க்க முடிகிறது. மேலும் உங்கள் நிலையில் நான் இருந்தால் இதை விட இன்னும் கீழாகவே இருந்திருப்பேன் என்றும் தோன்றுகிறது

நான் உங்களுக்கு இரண்டு மின்னஞ்சல்கள் ஏற்கனவே அனுப்பியிருக்கிறேன். இரண்டிலும் உங்களை இலக்கியவாதி ஜெயமோகன் என்று விளித்திருந்தேன். மேலும் முதல் மின்னஞ்சலில் “உண்மையை தேடி இந்தியா முழுவதும் சுற்றி அலைந்த உங்கள் பாதங்களில் என் தலையை வைத்துப் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்” என்றும் எழுதியிருந்தேன். ஆனால் அது ஒரு வேளை உங்களுக்குக் கிண்டலாகத் தோன்றியிருக்குமோ என்று நான் சந்தேகிக்கிறேன். மேலும் அந்த அளவு உயரத்தில் தூக்கிவைத்ததும் ஒரு நேர்மையற்ற செயலாகவே எனக்குப் படுகிறது. ஏனென்றால் உங்கள் எழுத்திற்காக இது வரை ஒரு காசு செலவழித்ததில்லை. உங்கள் நூல்களை நூலகம் மூலம் இலவசமாகப் படிக்க முடிகிறது. உங்கள் தளமும் இலவசமாகவே படிக்க வைத்திருக்கிறீர்கள். நீங்கள் எதிர்காலத்தில் அதை சந்தா கட்டி படிக்கும் அமைப்பாக மாற்றினால், நான் எப்படி குமுதம், விகடன் தளங்களைப் படிப்பதை நிறுத்தினேனோ அதேபோல் இதையும் நிறுத்திவிடுவேன். ஆக உங்களிடமிருந்து ஒன்றைப் பெற நான் பெரிதாக நினைக்கும் எதையும் இழக்கத் தயாராக இல்லை (இந்த படிக்கும் எழுதும் நேரம், கணினி இவையெல்லாம் நான் பொழுது போக்குவதற்காக) அதேசமயம் என் வேண்டுகோளை ஏற்று அமானுஷ்யத்தைப் பற்றி நீங்கள் எழுத வேண்டும் என்று எதிர்பார்ப்பது என்னுடய நேர்மையற்ற விருப்பம். அதை மறைக்கவே உங்களை அந்த மின்னஞ்சலில் அவ்வளவு புகழ்ந்திருந்தேன் என்று தோன்றுகிறது. ஆகவே அந்த வேண்டுகோளை விலக்கிக்கொள்கிறேன். ஏனென்றால் அதை எழுதுவதன் மூலம் உங்களுக்கு என்ன பயன்? என்று நான் சிந்திக்கவில்லை

எனது பொழுது போக்கிற்காக முதலிலும், பின் அறிவு வளர்ச்சிக்காகவும் உங்கள் எழுத்துக்கள் இலவசமாகக் கிடைக்கிற வரையில் அதை தொடர்ந்து படிப்பேன். பிரதியுபகாரமாக ராமர் பாலத்து அணில் போல அலெக்ஸா ரேட்டிங் உங்களுக்குக் கிடைக்கும். மேலும் இதேபோல் அவ்வப்போது ஏதாவது மின்னஞ்சல் அனுப்புவேன். இது எழுத்தைக் கையாள்வதற்கான ஒரு பயிற்சியாக நான் எடுத்துக்கொள்கிறேன். அந்த வகையில் எனக்கு இது உபயோகம். மேலும் மின்னஞ்சலும் இலவசம். ஆனால் இந்த மின்னஞ்சலைப் படித்து உங்கள் நேரத்தை நான் வீணாக்கியதாக இருக்கக்கூடாது. ஆகையால் ஒவ்வொரு மின்னஞ்சலிலும் அதன் கருப்பொருளை முதல் பத்தியிலேயே தெரிவித்து விடுவேன். நீங்கள் இந்த மின்னஞ்சலை உங்கள் உபயோகத்திற்கேற்றாற்போல் பயன படுத்திக் கொள்ளலாம்

மொத்தத்தில் do whatever good you want to do for your society. But don’t forget to present your bill என்பதே நேர்மையானதாக எனக்குப் படுகிறது. அதாவது பரஸ்பர நலன். எங்கெல்லாம் எதிராளியின் நலன் நம் கண்ணுக்குப் படுவதில்லையோ அல்லது எங்கெல்லாம் எதிராளி அதை பொருட்படுத்துவதாக நமக்குக் காண்பிக்கவில்லையோ அங்கெல்லாம் யாரோ ஒருவர் ஏமாற்றத்துக்கு ஆளாகப்போகிறார் என்பது உறுதி!

அன்புடன்

நாதன்

அன்புள்ள நாதன்,

முதலில் ஒன்று சொல்லிக்கொள்கிறேன். எனக்கு எதைப்பற்றி உறுதியாகச் சொல்ல முடியுமோ அதைப்பற்றி மட்டுமே சொல்கிறேன். சொல்லமுடியாத விஷயங்களைப்பற்றி எப்போதுமே சொல்ல முடியவில்லை என்பதே பதில்

நான் மறுபிறவி பற்றிய பதிலில் சுட்டிக்காட்டியவர்கள் எவரும் எனக்குப் ‘பிறர்’ அல்ல. நான் வழிகாட்டியாக, ஆசிரியர்களாகக் கொள்ளக்கூடியவர்கள். அவர்கள் சொன்னவற்றை நான் எனக்கு ஒப்புதல் இல்லை என எளிதில் நிராகரித்துவிட முடியாது.

அதேசமயம் எனக்கு அகத்திலோ புறத்திலோ அனுபவமாக ஆகாத ஒன்றை அவர்கள் சொல்கிறார்கள் என்பதற்காக நான் ஏற்றுக்கொள்ளவும் முடியாது. ஆகவே நான் செய்யக்கூடியது ஒன்றுதான். இன்று நான் இருக்கும் இந்த நிலையில் அதைப்பற்றி என்னால் உறுதியாக ஏதும் சொல்லமுடியாது என்ற நிலையை மேற்கொள்வது. அதுதான் என் நிலை

நாளை அவர்களின் வயதை நான் அடையும்போது அவர்கள் சொன்னதை நோக்கி நானும் செல்லலாம். நேர் எதிரிலும் செல்லலாம். எப்படியானாலும் அது என் வழியாகவே இருக்கும். அதைத் தெளிவாக முன்வைக்க எப்போதும் தயங்கமாட்டேன். இந்த விஷயத்தில் மட்டுமல்ல எந்த விஷயத்திலும். இதுவே நேர்மையான ஒருவன் கொள்ளக்கூடிய ஒரே நிலைப்பாடு என நினைக்கிறேன்.

இந்த விஷயத்தில் பெரிய சிக்கலோ, உள்ளடுக்குகளோ ஒன்றும் இல்லை. எவருக்கும் புரியும் எளிமையான ஒரு விளக்கம், ஒரு நிலைப்பாடு மட்டும்தான் இது.

இந்த தெளிவு எனக்கு இருக்கையில் நீங்கள் அரசியல் நிலைப்பாடு, சுயநலம் , கார்ப்பரேட் தனம் என்றெல்லாம் சொல்லும் குற்றச்சாட்டுகளை உங்களுடைய இப்போதைய மனநிலையைப் புரிந்துகொள்வதற்கே பயன்படுத்திக்கொள்கிறேன். கோபமெல்லாம் ஒன்றும் இல்லை.நீங்கள் என்னைப்பற்றி என்னவகையான பிம்பத்தை உருவாக்கிக்கொள்வதற்கும் சுதந்திரம் கொண்டவர். அந்த பிம்பம் உங்களுக்கு உதவியானதாக, வசதியானதாக உங்களால் உருவாக்கிக்கொள்ளப்படுகிறது, அவ்வளவுதான்.

பொதுவாக ஒருவர் சொல்லும் கருத்து நமக்கு உடன்பாடற்றதாக இருக்கும்போது அந்தக்கருத்தை மறுப்பதற்குப் பதிலாக அவரை நிராகரிக்க முயல்வது பரவலான மனநிலை. கருத்துக்களைத் தர்க்கபூர்வமாக உருவாக்கிக்கொள்ள முடியாதவர்களின் வழி அது.

ஆனால் உங்கள் கடிதம் அந்த வழக்கமான மனநிலையைக் காட்டவில்லை என அதன் பின்னால் வரும் நீண்ட சுயவிசாரம் காட்டுகிறது. சமீபகாலமாக நான் வாசித்த கடிதங்களில் ஒரு நுண்ணிய மனச்சிக்கல் எப்படியோ மொழியில் பதிவான ஒரு கடிதம் இது என்பதனாலேயே இதைக் கூர்ந்து கவனிக்கிறேன்.

நீங்கள் முதலில் ஒரு தீர்ப்பைச் சொல்கிறீர்கள். அதில் என்னை அரசியல்சுயநல நிலைப்பாடு எடுப்பவர் என்று சொல்கிறீர்கள். அடுத்து உடனே அதைச்சொல்லும் உங்களைப்பற்றி யோசிக்கிறீர்கள். உடனே மிகநுட்பமான ஒரு மனநாடகம் மூலம் உங்களுடைய ஆளுமையை இக்கடிதத்தில் கட்டி எழுப்பிக்கொள்ள முயல்கிறீர்கள்

உங்கள் பலவீனங்களை, உங்கள் தடுமாற்றங்களை, உங்களிடமிருப்பதாக ஒருசில இரட்டைநிலைகளைச் சொல்கிறீர்கள். ஏன் அவற்றைச் சொல்கிறீர்கள் என்றால் அப்படியெல்லாம் சுயத்தை ஈவிரக்கமில்லாமல் உரித்து வைக்கக்கூடிய நேர்மையான மனிதர் என உங்களை சித்தரிக்கிறீர்கள். திட்டமிட்டோ அல்லாமலோ அதைச் செய்திருக்கிறார்கள்

இது நாம் நம்முடைய பெரும்பாலான உரையாடல்களில் செய்வது. நாம் ஒன்றைச் சொல்லும்போதே அதைச் சொல்லும் இடத்தில் நம்மை எப்படி நிறுத்திக்கொள்வதென்றும் திட்டமிட்டுக்கொள்வோம். ஒருவரை ஒருவகையில் வரையறைசெய்யும்போது கூடவே நம்மை அந்த வரையறையை அளிப்பதற்குரியவராக வரையறை செய்துகொள்வோம்

‘அவன் அப்டிப்பட்டவனாக்கும் தெரியுமா….நமக்கென்ன. நாம நம்ம சோலியப்பாத்துட்டு இருக்கோம். ஏதோ மனசிலே பட்டத்தைச் சொல்றோம். நாமளும் ஒண்ணும் யோக்கியமில்லை. இருந்தாலும் சொல்றேன்’ என்று நாம் தெருவில் கேட்கும் உரையாடலில் வெளிவருவது இந்த இரட்டைமுனை அணுகுமுறைதான். ஆர்வமிருந்தால் நீங்களே உங்கள் கடிதத்தில் அதைக் கண்டுகொள்ளலாம்.

இந்த நிராகரிப்பின் பின்னாலுள்ள உளவியல் என்ன? நீங்கள் சொன்னீர்கள் உங்களுடைய ஒரு கடிதத்தில் என் பாதத்தில் உங்கள் தலையை வைப்பதாக. உங்கள் ஒரு கடிதத்துக்கும் நான் பதில் அனுப்பவில்லை. அக்கடிதங்கள் காட்டிய மனம் எனக்குத் துல்லியமாகத் தெரிந்தது. அது ஒரு கண்டடைதல், அதிலிருந்து வரும் பிரியம் அல்ல. அந்த மனநிலை உங்களுக்கு அப்போது தோன்றிய ஒரு உணர்ச்சி மட்டுமே.

அப்படி ஒரு உணர்ச்சி எழுந்ததுமே அதைப்பற்றி உடனடியாக ஒரு சுயகண்டனம் உருவாகிறது. ரொம்பக் கீழே போய்விட்டோமோ என்ற எண்ணம். உடனே ஊஞ்சல் அடுத்த எல்லைக்குச் செல்கிறது. நிராகரிப்பு உருவாகிறது.

பல நவீன சாமியார்களின் சீடர்களிடம் இதைப்பார்க்கிறேன். அவர்கள் அந்த சாமியாரின் ஒரு பொதுப்பிம்பத்தைக் கண்டு ஈர்க்கப்படுகிறார்கள். தங்கள் சொந்த மனப்பலவீனத்தால் மிதமிஞ்சி உருகி வழிகிறார்கள். அப்படி உருகியதுமே உள்ளூர அவர்களின் அகங்காரம் புண்படுகிறது. அது கவனித்துக்கொண்டிருக்கிறது. அந்தச்சாமியாரிடம் ஏதேனும் குறை, அல்லது மாற்றுத்தரப்பு கண்ணில் பட்டுவிட்டதென்றால் உடனே நேர் எதிர் எல்லைக்குச் சென்றுவிடுகிறார்கள். வசைபாடுகிறார்கள். ஏமாற்றுக்காரன் என்கிறார்கள். பலர் செயற்கையாகவே காரணங்களை உருவாக்கிக்கொண்டிருக்கிறார்கள்

உங்கள் பழைய கடிதங்களை மீண்டும் வாசித்தேன். நீங்கள் பெருங்குழப்பத்தில் எதையெதையோ சொல்கிறீர்கள். ஆனால் அந்தக்குழப்பம் புரிதலின் சிக்கல்களால் வந்தது அல்ல.ள் தெளிவை நோக்கி நகரும் நோக்கம் கொண்டதும் அல்ல. நீங்கள் தெளிவை விரும்பவில்லை. குழப்பமாகவும் சிக்கலாகவும் பேசும்போது உங்களுக்கு உருவாகும் பிம்பத்தை விரும்புகிறீர்கள். எதையோ பெரிதாகச் சொல்லிவிட்டீர்கள் என நம்ப விரும்புகிறீர்கள்.

விதவிதமான முகங்களை உருவாக்கி ஒவ்வொரு வரிக்கும் ஒரு முகத்தை முன்வைத்து ஒரு குழப்பமான சொற்களனை உருவாக்கிக் கொள்கிறீர்கள்.அது வெறும் அகங்கார உத்தி என்றால் எனக்கு பிரச்சினை இல்லை. நீங்கள் அவற்றை அப்போது உண்மையில் நம்பி உங்கள் முகமாக முன்வைக்கிறீர்கள். அதுதான் ஒரு பரிதாபத்தை ஏற்படுத்துகிறது

எதை நம்ப விரும்புகிறீர்கள்? நீங்கள் நம்புவதை ஏன் பிறர் சொல்லவேண்டும் என எதிர்பார்க்கிறீர்கள்? அதை அவர்கள் சொல்லாவிட்டால் ஏன் ஏமாற்றம் அடைகிறீர்கள்?

உங்கள் கடிதங்களை நீங்களே கூர்ந்து வாசிக்கலாம். அது ஒரு நல்ல பயிற்சி. உங்கள் மனம் சிக்கிச் சுழலும் இடங்கள் தெளிவாகும். எழுத்துப்பயிற்சி அதற்குப்பின்புதான் தேவை

ஜெ

 

நாதன் பழைய இரு கடிதங்கள்

Oct 25, 2012 at 12:24 PM

1. மரியாதைக்குரிய இலக்கியவாதி ஜெயமோகன் அவர்களுக்கு,

நலமாக இருக்கிறீர்களா?

உங்கள் இணைய தளத்தை கடந்த ஒன்றரை வருடங்களாக வாசித்து வருகிறேன். நூலகம் வழியாக உங்களது படைப்புகள் சிலவற்றை வாசித்திருக்கிறேன். ரப்பர், கன்யாகுமரி மற்றும் ஓரிரண்டு சிறுகதை தொகுப்புகள். ஏழாம் உலகம் படித்தால் மனதை போட்டு பாடுபடுத்தும் என்பதால் அதை தொடவில்லை. உங்களை முதலில் அறிந்தது நான் கடவுளுக்கு நீங்கள் அளித்த விளக்கத்தை படித்த போதுதான். அந்த படம் வெளிவந்த பலமாதங்களுக்கு பிறகு அது என்ன மாதிரி படம் என்று தெரியாமலேயே, பாலா படம் என்பதற்காக அதை ஒரு நாள் கணினியில் பார்த்தேன். பிறகு அது ஏற்படுத்திய பாதிப்பிலிருந்து மீள்வதற்காக அது சம்பந்தமாக இணையத்தில் தேடிய போது நான் படித்த பல விமர்சனங்களுள் உங்களுடயதும் இருந்தது. எதற்கு குரு அவனை தந்தையுடன் அனுப்புகிறார், தாய் பாசத்தை எவ்வாறு கடக்கிறான். அந்த குருட்டு பெண்ணிற்கு ஏன் அப்படி ஒரு முடிவை அளிக்கிறான் பின் எதற்கு மறுபடியும் காசி திரும்புகிறான் என்று நீங்கள் அளித்த விளக்கத்தை படித்த போது இந்த படத்தில் இத்தகைய நுட்பங்கள் இருந்ததா? நாம் எவ்வாறு கவனிக்காமல் விட்டோம்? இந்த விமர்சகர் எப்படி இதனை கண்டுபிடித்தார் என்று ஆச்சர்யமாக இருந்தது அப்போது.

நான் தமிழ் வணிக எழுத்துக்களையே படித்து வளர்ந்தவன். பிறகு 20 வயதில் ஆங்கில வணிக எழுத்தின் பக்கம் திரும்பிவிட்டேன். கொலை, கொள்ளை, யுத்தங்கள், உடல் இன்பம், பாசம், வெறுப்பு, துரோகம், பேராசை, தனி மனித சாதனை, ஏமாற்று, இதை ஒவ்வொரு நாட்டு மக்களும் ஒவ்வொரு கால கட்டத்திலும் தனி மனிதனாக, குழுவாக, இயக்கமாக, நிறுவனமாக எப்படி செய்தார்கள். இதுதான் நான் படித்தது. ஆங்கில வணிக எழுத்தில் தமிழை விட நம்பத்தன்மை இருந்தது, பிரம்மாண்டம், நுணுக்கங்கள் மற்றும் தொழில்நுட்பங்கள், சுருங்கச்சொன்னால் உலகத்தை ஆங்கில வணிக எழுத்தின் மூலமாகவே புரிந்து கொண்டென்

நீங்கள் யார் உங்கள் ஆளுமை என்ன என்று தெரியாமலெயே உங்கள் இணைய தளத்திற்கு ஓரிரு முறை வந்து சென்றிருக்கிறேன். நான் கடவுள் விமர்சனம் அவ்வாறு படித்தது. தற்செயலாக ஒருமுறை வந்த போது அறிவுத்திறன் என்றால் என்ன என்று நீங்கள் எழுதியதை படித்தேன். அது ஒரு அறிவியல் சிறுகதையில் ஒரு ஆன்மீக குருவை பேட்டி காண வந்திருக்கும் ஒரு நிருபரை பார்த்து ஒரு விஞ்ஞானி-மருத்துவர் கேட்டதற்கு பதிலாக அமைந்திருக்கும். அதை படித்தவுடன் எனக்கு தோன்றியது நீங்கள் வேறு தளத்தில் உள்ளவர். இத்தனை கூர்மையாக ரத்தின சுருக்கமான ஒரு விளக்கத்தை நான் அதுவரை படித்த எந்த நூலிலும் கண்டுகொள்ளவில்லை.

முதல் காரியமாக உங்களது “அனைத்து பதிவுகளையும்” திறந்து முதலிலிருந்து படிக்க ஆரம்பித்தேன். அப்போதுதான் தெரிந்தது உங்கள் பன்முக ஆளுமையும், எழுத்தின் வீரியமும், ஏழாம் உலகமும், உங்களது கதை வசனத்தில் வந்த பாலாவின் படமும், நான் கடவுளுக்கு நீங்கள் அளித்த விமரிசனம் ஏன் அத்தனை செறிவாக இருந்தது என்றும், உங்களது சர்சைக்குள்ளான சிவாஜி-எம்ஜிஆர் பகடியும் இன்னும் பலவும். நான் 97ன் இறுதியில் தமிழ்நாட்டிற்கு வெளியே வந்து விட்டேன். தமிழ்ப் பத்திரிகைகள் இணையத்தில் படிப்பேன். சந்தா கட்டித்தான் படிக்கமுடியும் என்றான பொழுது அதை ஒரு கசப்பு மருந்தாக எடுத்து கொண்டு அவற்றையெல்லாம் படிப்பதையே நிறுத்திவிட்டேன்

கதை புத்தகம் படிப்பது மெதுவாக குறைந்து கடந்த ஒரு வருடமாக சுத்தமாக நின்று விட்டது. உங்களுடைய படைப்புகளை நூலகத்தில் படித்ததோடு சரி. வேறு எதையும் படிப்பதற்கு ஆர்வமில்லை. பாட்டும் (இசையும்) அதே போல் கேட்பது குறைந்து பின் நின்று விட்டது. ஆங்கில சினிமா மட்டும் நூலகத்திலிருந்து இரவல் வாங்கி பார்க்கிறேன். தமிழ் சினிமா வார இறுதியில் தொலைக்காட்சியில் வருவதை பதிவு செய்து பார்க்கிறேன். என்னுடைய வாழ்க்கையும் இனிமையாக, சீரான வேகத்துடன், சலிப்பில்லாமல் கழிகிறது

என்னுடைய 41 வருட வாழ்க்கையில் நான் புரிந்து கொண்டதின் சாரம் இதுதான். பிரபஞ்சமானது இரண்டாக பிரிந்திருக்கிறது. ஒன்று, என்னுடைய உடம்பின் தோலால் எல்லை வகுக்கப்பட்ட இந்தப்பக்கத்தில் நான். இரண்டாவது தோலின் அந்தப்பக்கத்தில் உள்ள மற்ற அனைத்தும். கோட்டிற்கு இந்தப்பக்கத்தில் இருக்கும் பிரபஞ்சத்திற்கு பிரக்ஞை இருக்கிறது. அது அனைத்தையும் உணர்கிறது அதுவே நான். கோட்டின் அந்தப்பகத்தில் உள்ள பிரபஞ்சத்திற்கு செயல் முறை இருக்கிறது. அந்த செயல் விதியின் படியே அந்தப்பிரபஞ்சம் நிகழ்கிறது. அதை நான் அறிகிறேன், அறிய முற்படுகிறேன். எனது விருப்பமும் அதற்காக நான் பிரபஞ்சத்துடன் ஆற்றும் வினையே என் வாழ்க்கை. அந்த செயல்களில் தோன்றும் விளைவுகள் வாயிலாக அந்தப்பக்கம் உள்ள பிரபஞ்சத்தின் செயல்முறையையும், உணர்ச்சிகள் வாயிலாக இந்தப்பக்கம் உள்ள என்னையும் நான் இன்னும் ஆழமாக அறிந்து கொள்கிறேன். என்னுடைய அறிதல்களுக்கு தர்க்கரீதியாக என்னால் விளக்கம் அளிக்க முடிந்தால் நான் வாழும் இந்த உலகத்தை என்னால வரையறை செய்து கொள்ள முடியும் (எல்லாம் உங்கள் அறிவுத்திறன் என்றால் என்ன என்பதை படித்ததன் விளைவுதான்)

மேலும் பிரபஞ்சத்தில் நானும் உள்ளடக்கம் என்பதால் நானும் அந்த பிரபஞ்ச விதிப்படியே நிகழ்கிறேன்

எவற்றையெல்லாம் நான் வரையறை செய்து கொண்டு விட்டேனோ (முடிவெடுத்தல்) அது சம்பந்தமான அறிதல்களுக்காக நானாக மேலும் மேலும் தேடிச்சென்று அலைய வேண்டிய தேவையில்லை. அத்தகைய சந்தர்ப்ப, சூழ்நிலைகள் என் வாழ்க்கையில் எதிர்படும் போது நான் ஏற்கனவே முடிவெடுத்ததன் அடிப்படையில் என்னால் எதிர்கொள்ள முடியும். அவ்வாறு எதிர் கொண்டு நான் அடையும் அந்த அனுபவம் நான் ஏற்கனவே ஊகித்திருந்ததற்கு மாறாக அமையும் போது மட்டுமே என்னுடைய அது சம்பந்தமான வரையறையை நான் மறுபரீசீலனை செய்ய வேண்டியிருக்கும்

சமீபத்தில் (கடந்த ஒரு மாதத்தில்) நான் எடுத்த அத்தகைய ஒரு முடிவு கார்ப்பரேட் சாமியார்கள் அத்தனை பேரும் ஏமாற்று பேர்வழிகள் என்று. அவர்களுக்கும் “30 நாட்களில் ஆண்மைக்குறைவுக்கு நிவர்த்தி. பத்தியம் கிடையது. பக்க விளைவுகள் ஏதுமில்லை” என்பது போன்று வரும் விளம்பரங்களுக்கும் அதிக வேறுபாடு ஒன்றுமில்லை. இந்த சாமியார்கள் வழிப்பறி கொள்ளையர்கள் அளவோ கோவிந்தா நாமம் பைனான்ஸ் பேர்வழிகள் அளவோ மோசமானவர்கள் அல்ல. “சினிமா நட்சத்திரங்களின் அழகு சோப் லக்ஸ்” என்ற அளவுக்கு ஏமாற்றுபவர்கள். இது சீச்சீ இந்தப்பழம் புளிக்கும்” என்பது போல் எடுத்த முடிவல்ல. நான் எந்த சாமியாரையும் நேரில் இதுவரை பார்த்தது கிடையாது. இது பற்றிய எல்லா விவரங்களும் இணையத்தின் மூலம் அறிந்தவையே

இவர்கள் ஏமாற்றுவது 2 வழிகளில்தான். இவர்களுடைய சக்தியை மிகைப்படுத்தி கூறுவது (நான் கையாலே தொட்டாலே உனக்கு ஞானம் வந்துரும்) மற்றும் இவர்களின் பயிற்சி முறைகளின் பலனை மிகைப்படுத்துவது (இந்தப்பயிற்சியை முடிச்சா வாழ்க்கையில் எங்கேயோ போய்விடலம்!)

ரஞ்சிதநித்யா நிகழ்வின் போது ஆன்மீகத்தை பற்றி அருமையாக விளக்கியிருந்தீர்கள். “குரு அடைந்த ஞானமானது பிரபஞ்சப்பன்மையை ஒருசேரப்பார்க்கும் ஒருவகை மன ஆழம். அதை எப்படி அவர் ஒரு பொருளில் சக்தியாக ஏற்றி உங்களுக்கு அளிக்க முடியும் என்று நம்புகிறீர்கள்?”. “மேலும் குண்டலினி மற்றும் அது பயணம் செய்யும் பாதையில் உள்ள சக்கரங்கள் இவைகள் எல்லாம் ஒரு குறியீடு மட்டுமே. பருப்பொருளாக அப்படி ஒன்றும் கிடையாது”

பகவத்கீதையின் உரையில் ஆன்மாவை ஒரு கருத்துருவாக மட்டுமே, அலையலையாக வரும் பிரபஞ்ச நிகழ்ச்சிகளை முழுமையாக விளக்குவதற்காக எடுத்துக்கொள்ளப்பட்ட ஒரு கோட்பாட்டில் வரும் ஒரு கருத்து நிலையாக மட்டுமே கருதுகிறேன் என்னுடைய தனிப்பட்ட அனுபவத்துக்குள் வராதவரை அதைப்பற்றிய முடிவை எடுக்கமாட்டேன் என்று சொல்லியிருந்தீர்கள்

மேலும் செந்திலுக்கு (நியூராலஜியில் மனம், தன்னிலை முதலியவற்றிற்கு விளக்கம் கொடுக்கமுடியும் அதுவே உண்மைக்கு வெகு அருகிலும் இருக்கும் என்ற வாதத்தை முன் வைத்தவர்) அளித்த பதிலில் மனம், தன்னிலை என்பதை மூளையின் நரம்புத்தொடர்பிலுள்ள மின்னோட்டத்தை வைத்து மட்டும் விளக்கி விட முடியாது. அது அவ்வளவு எளிய விஷயமில்லை அதை நரம்பியல் நிபுணர்களே ஒத்துக்கொண்டுவிட்டார்கள். பார்க்கும் வேட்கையே விழியானது என்பது போன்று எழுதியிருந்தீர்கள்

தொலைக்காட்சிக்கு நீங்கள் அளித்த ஒரு பேட்டியில் ஜோதிடம், மாந்திரீகம் போன்ற அமானுஷ்ய விஷயங்கள் ஒரு வித நுண்ணுணர்வால் செய்யப்படுவது, அது பற்றிய நேரடி அனுபவங்கள் எனக்குண்டு என்று நீங்கள் சொன்னதாக உங்கள் இணையதளத்தில் அது சம்பந்தமான அதாவது அதில் உங்கள் நிலைப்பாடு என்ன? என்ற ஒரு கேள்வியில் ஒருவர் குறிப்பிட்டிருந்தார்

உங்களுடைய சிறுகதை தொகுப்பில் இந்த மனம், தன்னிலை தொடர்பாக 3 கதைகள் படித்திருக்கிறேன்

1. விபத்தில் காலை இழந்த ஒருவருக்கு மாயக்கால் வெளிப்பாடு (Phantom Leg Syndrome) ஏற்படுகிறது. பின் சிகிச்சை பலனளிக்காமல் சில நாட்களில் இறக்கும் நிலைக்கு போகும் போது கேட்கிறார் “காலை இழந்த பிறகும் மூளையிலுள்ள மின் தொடர்பின் மூலம் கால் இருப்பது போன்று உணர்கிறேன். அப்படியானால் என் மூளையின் மின் தொடர்பை பாதுகாக்க முடிந்தால் விஞ்ஞானம் நன்கு வளர்ச்சி பெற்ற பின்னொரு காலத்தில் வேறு ஒரு உடலை செய்து கொள்ளமுடியுமல்லவா?” மேலும் “அறுவை சிகிச்சையில் இழந்த காலை எரியூட்டும்போது அதை நான் பார்க்கிறேன். அதேபோல் இந்த உடலை எரிக்கும் போது நான் வேறெங்காதிருந்து இதையும் அதேபோல் உணர்வேனா?”

2. மடாதிபதி பதவிக்கு பயிற்சி பெற்ற ஒருவருக்கு பதவி ஏற்கும் காலத்தில் தன்னுடைய மடத்தின் கொள்கைகளின் மீதே சந்தேகம் ஏற்படுகிறது. ஆனால் மடத்தின் தற்போதைய குரு சந்தேகம் என்பது உன்னை இந்தப்பிரபஞ்சத்தின் முன் நிறுத்துவதற்காக நீ ஏற்படுத்திக்கொண்டது. பிரபஞ்சமும் காலமும் உன் முன்னால் எல்லையற்று விரிந்து கிடக்கிறது அதன் முன்னால் ஒரு தூசியிலும் தூசியாய் உன்னை நீ உணர்கிறாய். உனது இருப்பை தக்க வைத்துக்கொள்வதற்கே நீ அனைத்தையும் சந்தேகப்படுகிறாய். மேலும் இது மிருக இச்சைப்படி வாழ்வதற்கான ஒரு சப்பைக்கட்டு (நொண்டிச்சாக்கு) மட்டுமே. குறைந்தபட்சம் மிருக இச்சைப்படி வாழ ஆசைப்படுகிறேன் என்பதையாவது தீர்மானமாக சொல்லி விட்டு போ என்கிறார்

3. ஒரு வயோதிகர் பிரபஞ்சத்தை பற்றிய தன்னுடைய சித்தாந்தம் (ஒவ்வொரு முறையும் நவீன அறிவியல் சித்தாந்தம் அதற்கு மாற்று கூறும்பொழுது அதனையும் கற்று அதிலும் தன்னுடைய சித்தாந்தத்தையே “சாஸ்வத சுழற்சி தத்துவம்” நிலை நாட்ட முற்படுகிறார்) தகர்க்கப்பட்டு இந்த வாழ்க்கை பயனில்லாமல் கழித்து விட்டேனா? தப்பாக புரிந்து கொண்டுவிட்டேனா? என்று மருத்துவமனையில் கேட்டு உயிர் துறக்கிறார்

மனம், தன்னிலை, ஆன்மா, ஆன்மீகம் மற்றும் அமானுஷ்யம் இவைகள் அனைத்தையும் ஒன்றாக்கி இன்று கார்ப்பரேட் சாமியார்கள் பிரியாணி பிழைப்பு நடத்துகிறார்கள். இதில் ஆன்மீகத்தை பற்றி விரிவான கட்டுரைகள் எழுதிவிட்டீர்கள். தெளிவான, எளிமையான, கச்சிதமான நடை அதேசமயம் சுவாரசியமான முறையில் விஷயங்களை தொகுத்து அளிக்கும் திறன் (காந்தி வேக்ஸின் ஒரு சமீபத்திய உதாரணம்). நீங்கள் எழுத்தை தவமாக செய்து வருபவர் மட்டுமல்ல அதில் நேர்மையை கடைபிடிக்கும் கொள்கையில் சமரசம் செய்து கொள்ளாதவர். ஆகையால் நீங்கள் மனம், தன்னிலை மற்றும் அமானுஷ்யம் பற்றி விரிவாக, அது சம்பந்தமான அனைத்து விஷயங்களையும் உள்ளடக்கிய கட்டுரை எழுத வேண்டுமென உண்மையை தேடி இந்தியா முழுவதும் சுற்றி அலைந்த உங்கள் பாதங்களில் என் தலையை வைத்து பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

வணக்கத்துடன்

நாதன்.

கார்ல் ஸேஹனின் The Demon-Haunted World: Science as a Candle in the Dark நூலில் அவர்கள் நாட்டு அமானுஷ்ய விஷயங்களை (நம்மவருக்கு சித்தரின் ரசவாதம், கூடுவிட்டுகூடு பாய்தல் போல அவர்களுக்கு வேற்று கிரக வாசிகளின் பறக்கும் தட்டுக்கள், சூனியக்காரிகள்) எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என்பதை விளக்கியிருக்கிறார். ஆனால் அவற்றையெல்லாம் அவர் சொந்த அனுபத்தில் எதிர்கொண்டிருப்பதாக அதில் சொல்லவில்லை

*

Oct 25, 2012 at 12:24 PM

மரியாதைக்குரிய இலக்கியவாதி ஜெயமோகன் அவர்களுக்கு,

நலமாக இருக்கிறீர்களா?

உங்கள் அணையாவிளக்கின் சாராம்சத்தை இவ்வாறு உள்வாங்கிக்கொள்கிறேன். மனித குலத்தில் பிறந்த ஒவ்வொருவருக்கும் உள்ள அறிவு என்ற சாதனத்திற்கு பால பருவத்திலிருந்தே முறையாக பயிற்சி கொடுக்கப்பட்டால் அவர்களால் தங்கள் வாழ்க்கைக்கான பொருளீட்டித்தரக்கூடிய பயிற்சியை மட்டுமின்றி, வாழ்க்கையின் முழுமையையும் உணர்ந்து கொள்ள கூடிய கல்வியையும் அடையமுடியும். அவ்வாறு வாழ்க்கையின் முழுமையை உணர்ந்து வாழ்பவர்கள் பிரபஞ்சப்பெருவெளியில் தங்களின் இடத்தை உணர்ந்து கொண்டு, பிரபஞ்சத்துடன் இசைவுற்ற வினை/எதிர்வினை ஆற்றி தங்களை மென்மேலும் தொடர்ச்சியாக வாழ்க்கையில் மேம்படுத்திக்கொண்டு ஒரு நிறைவான வாழ்க்கை வாழ்வார்கள். அப்படிப்பட்ட மனிதர்கள் நிறைந்த சமுதாயம் இதை விட மேம்பட்டதாக இருக்கும். இதை ஒரு சில அறிவுஜீவிகளால் புரட்சியின் மூலம் நிகழ்த்திவிட முடியாது. இன்றைய பெற்றோர்கள் இதனை புரிந்து கொண்டு தங்கள் பிள்ளைகளை முறையாக வளர்ப்பதன் மூலம் எதிர்காலத்தில் இது சாத்யமாகலாம்.

இது ஒரு கூட்டத்தில் எழுச்சியூட்டுவதற்கு நிகழ்த்தப்பட்ட உரை என்பதால் இதில் மயிர்பிளக்கும் விவாதங்களை செய்யலாகாது என்பதை அறிகிறேன். ஆகையால் இதை தர்க்கமாக எடுத்துக்கொள்ளாமல், கருத்துக்களை தெளிவுபடுத்துவதற்காக என்ற வகையில் பின்வருவதை நோக்க வேண்டுகிறேன்

“பண்டித ல்க்ஷணம் தோஷ தர்சனம்” என்பதை போல படித்தவர்கள் சுயநலவாதிகளாக இருந்து கொண்டு, தாங்கள் உண்ட உணவு செரிப்பதற்காகவும், போழுது போக்கிற்காகவும் எல்லாவற்றையும் விவாதம் செய்கிறார்களே தவிர ஒரு துரும்பை எடுத்து அந்தப்பக்கம் போடமாட்டார்கள். மேலும் ஈவேரா எவ்வாறு வசைபாடுவதை ஒரு புரட்சியாக செய்தாரோ அதையே இவர்களும் பின்பற்றுகிறார்கள். அதுவும் வெறும் நுனிப்புல் மேய்ந்துவிட்டு இவ்வாறு செய்கிறார்கள் என்று ஆதங்கப்படுகிறீர்கள். ஈவேரா காலத்தில் ஜாதியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவரின் தேவை இருந்தது. தனக்கு சாதகமாக ஒன்றை கண்ணுகொள்ளும்பொழுது அதில் உள்ள குறை நிறைகளையா பார்த்துக்கொண்டிருப்பது? அப்போது மூழ்கிக்கொண்டிருக்கும் பொழுது கைக்கு அகப்பட்டதை வைத்து கரையேற வேண்டியதுதான். அவர்கள் தங்களை உயர்த்திக்கொள்ள அவரை பயன்படுத்திக்கொண்டார்கள். அவர் தான் பிரபல்யம் அடைய அந்த மக்களை பயன் படுத்திக்கொண்டார். அந்த ஜாதிப்பிரச்னையால் பாதிக்கப்படாதவர் நீங்கள் (நானும்தான்) ஆகையால் நீங்கள் ஏன் அவரை குறை கூறுகிறீர்கள்? ரூபாய் நோட்டில் காந்தி இருக்கிறார். ஆனால் ஒவ்வொரு முறையும் அந்த ரூபாயை நான் பயன்படுத்தும்போது நான் அவரை பற்றி நினைத்ததே கிடையாது? எத்தனை பேருக்கு அந்த நினைப்பு இருக்கும் (அதாவது ஒவ்வொரு முறையும் ரூபாயை பெறும்/கொடுக்கும் போது) என்றும் எனக்கு தெரியாது. அதாவது இவர்களெல்லாம் கால வெள்ளத்தில் ஏற்கனவே அடித்து செல்லப்பட்டு விட்டவர்கள். ஆகையால் காலாவதியான விஷயத்திலிருந்து நிறைகளை மட்டும் சுட்டினால் போதுமே! ஏனென்றால் குறைகளை சுட்டுவதால் பிரச்னை தீரப்போவதில்லையே! (நிறைவை சுட்டுவதாலும் பிரச்னை தீரப்போவதில்லை. ஆனால் அது மேலும் புதிய பிரச்னைகளை உருவாக்காமலிருக்கும் அல்லவா?) இதன் மூலம் அவரை உயர்வாக கருதுபவர்களுடன் மறுபடியும் ஒரு குழாயடி சண்டை நடக்கும். ஈவேரா சிந்தனைவாதியா இல்லையா என்று நடக்கும் விவாதத்திற்கும், சினிமாவை பற்றி இன்றைய இளைஞர்கள நடத்தும் வெட்டி அரட்டைக்கும் என்ன வித்தியாசம்? விவாதத்தின் மூலம் அதில் பங்குபெற்ற அனைவரும் ஒருமித்த கருத்து உடையவர்களாக மாறியதாக எப்பொழுதாவது நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? மேலும் தாழ்த்தப்பட்ட சாதியில் பிறந்தவர்கள் இந்த ஜாதிப்பிரச்னை மேட்டுக்குடியினரின், பார்ப்பனீயத்தின் சதி என்பதை நம்பத்தான் விரும்புவார்கள். நான் ஜாதிக்கொடுமையால் பாதிக்கப்பட்டிருந்தால் நானும் அதைத்தான் நம்புவேன். என் பிரச்னையை என் வாழ்க்கை காலத்திற்குள் சரி செய்யமுடியாத உண்மையால் எனக்கு என்ன பயன்? மேட்டுக்குடியினரை வீழ்த்துவதால் என் பிரச்னையை சரிசெய்யமுடியும் என்பதை ஏற்றுக்கொண்டு அந்த நம்பிக்கையில் போராடி என் வாழ்க்கையை நகர்த்துவேனா? அல்லது இது மனித குலத்தின் வரலாற்று பிரச்னை. இதற்கு உடனடி தீர்வு கிடையாது. ஏனென்றால் இது ஒரு தனி மனித அல்லது ஒரு சிறு கூட்டத்தால் ஒரு இரவில் ஏற்படுத்தப்பட்டதல்ல. எவ்வாறு இது எவ்வாறு பல தலைமுறையாக சிறுகச்சிறுக காலத்தால் கொஞ்சகொஞ்சமாக திசை நகர்த்தப்பட்டு 180 டிகிரி திருப்பப்பட்டதோ அதேபோல் மறுபடியும் பல தலைமுறையின் மூலம் கொஞ்சகொஞ்சமாகவே திசை நகர்த்தப்பட்டு 180 டிகிரி திருப்பமுடியும். இது முழுக்க முழுக்க என் தலைமுறையில் முடிந்து விடக்கூடியது அல்ல என்ற உண்மையை ஏற்றுக்கொண்டு அமைதியாக இருப்பேனா?. நூறு தலைமுறை ஓடியாகிவிட்டது. இனி நூறு நாற்காலி வேண்டும் என்று இந்த உண்மையை முழுவதுமாக புரிந்து கொண்டு புனைவு எழுதிய நீங்கள் ஏன் மறுபடியும் பிரச்னையை கிளருகிறீர்கள்?. நீங்க நிகழ்த்திய அந்த விஜயதசமி உரையில் அந்த ஈவேரா வரியை எடுத்துவிட்டு பேசினால் எந்த விதத்தில் அந்த பேச்சின் எழுச்சியூட்டும் தன்மை குறைந்து விடும்? கொலையே செய்தாலும் நாயாடியின் பக்கம்தான் ஞாயம் இருக்கும் என்று நூறு நாற்காலியின் கதாநாயகன் சொன்னதை போல, ஈவேரா ஜாதியை எதிர்த்தவர் என்ற ஒரே காரணத்துக்காக நீங்கள் அவரை குறை சொல்லாமல் இருக்கலாமே? ஈவேரா என்பவர் விஷயத்தை முழுவதும் புரிந்துகொள்ளாமல் வெறும் வசைபாடுவதை ஆரம்பித்து வைத்து பின் கழகங்கள் அதையே ஒரு இயக்கமாக மக்களெங்கும் கொண்டு சென்று அதனால் இங்கு அறிவியக்கமே இல்லை. வெறும் குழாயடி சண்டைதான் நடக்கிறது என்கிறீர்கள். இதை சொல்லும் பொழுதெல்லாம் நீங்கள்தான் ஒரு குழாயடி சண்டையை ஆரம்பிக்கிறீர்கள் என்பது உங்களுக்கு தெரிகிறதா? அவர்கள் பார்ப்பனீயம், ஆதிக்க சாதிகள் என்று வெறும் பேச்சுடனேயே இதுவரை உள்ளனர். ஆகையால் இதை ஆதிக்க சாதிகள் பதில் பேச்சு பேசாமல் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டால் இன்னும் பத்து, இருபது வருடங்களில் அவர்களே இதை விட்டு விடுவார்கள்

ஆகையால் நீங்கள் இதற்கு முன் நான் எழுதிய மின்னஞ்சலில் கேட்டுக்கொண்டபடி அமானுஷ்யத்தை பற்றிய உங்கள் அனுபவங்களை எழுதுங்கள். சமுதாயத்திற்கு அது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அதனால்தான் நானும் உங்களை அதைப்பற்றி எழுதச்சொன்னேன். இதிலிருந்தே தெரியவில்லையா நான் எவ்வளவு நல்லவன் என்று?

பணிவுடன்

நாதன்

முந்தைய கட்டுரைகோரா- ஒரு கடிதம்
அடுத்த கட்டுரைபித்தம் [சிறுகதை]