கடிதங்கள்

ன்புள்ள ஜெ,
அக்னி நதியை உணர்ந்த ஒரு மனநிலையையும், வாசித்தறியாமல் அதன் பிரமிப்பினை
எட்டவியலாது என்கிற இன்னொரு மனநிலையையும் இக்கட்டுரை ஒருங்கே ஏற்படுத்தியது.

ஜி எஸ் தயாளன்

 

அன்புள்ள ஜி.எஸ்.தயாளன்,
நலமாக இருக்கிறீர்களா? நாம் சந்தித்துக்கொண்ட நினைவு வருகிறது. என் இணையதளத்தை வாசிக்கிறீர்கள் என்பது மகிழ்ச்சியை அளிக்கிறது. கிட்டத்தட நான் எழுதவந்த்போதே எழுதவந்தவர் நீங்கள். ஒருமாதிரி விலகியிருக்கிறீர்கள் என்ற எண்ணம் கொண்டிருந்தேன்

அக்னி நதி இந்தியமொழிகளில் எழுதப்பட்ட முக்கியமான நாவல். அது வரலாற்றை  அள்ளமுயலும் விதம்தான் காரணம். ஆஸ்திரேலியாவில் ஒரு கடையில் பொருகள் நடுவே ஒரு எவர்சில்வர் பந்தை போட்டிருந்தார்கள். மொத்த பொருட்களும் அந்தப்பந்தில் விசித்திரமாக கலந்து பிரதிபலித்தன. அதாவது பந்து அதைச்சுற்றியுள்ள கடையையே சுழற்றி வைத்திருந்தது. அதேபோல வரலாற்றை தனக்குரிய முறையில் சுழற்றிக்கொள்கிறார் கு அர்து ஐன் ஹைதர்

ஜெ

 எதிர்பாராது வந்த உங்கள் மின்னஞ்சல் வந்து நீண்ட நாட்களாகிறது. கடையை விழுங்கிய பந்து நினைவிலிருந்து கொண்டிருக்கிறது.

எழுத்தாளர் என்பது போல் எழுதவந்தவர் என்றொரு பட்டமும் இருந்தால் என்போன்றோருக்கு வசதியாக இருக்கும். நல்ல வாசகனாக கூட இல்லாமல் இருக்கிறோம் என்பது தான் சுயக் குறை. மாணவர்கள் போல் நாளையிலிருந்து நல்ல படிப்பேன் என்ற உத்திரவாதம் கூட சுயமாகசொல்லிக் கொள்ள முடிகிறதில்லை.

உங்கள் எழுத்தின் எல்லை விரிந்துகொண்டே இருக்கிறது. அபிப்பிராயங்களைதாண்டிய அவதானிப்புகளை உட்கொண்ட வரிகளால் வசீகரமும் செறிவும் கட்டுரைகளில் இழையோடு கின்றன.

உலகம் முழுக்கவிருந்து வரும் அஞ்சல்களை ஒற்றை ஆளாய் நின்று விளாசுகிறீ ர்கள்.நேரத்தை எங்கு கறக்கிறீர்கள்.

வித விதமான நிலப் பரப்புகள் தரும் புரிதல்க ள் இன்னும் சிறந்த படைப்புகளுக்குஏதுவாக அமையும். பயணம் சிறக்கட்டும்

ஜி.எஸ். தயாளன்

 


அன்புள்ள ஜெயமோகன்

அக்னி நதி என்ற நாவலைப்பற்றிய உங்கள் கட்டுரையைச் சமீபத்தில் வாசித்தேன். மிக அற்புதமான கட்டுரை. அந்தக்கட்டுரையே ஒரு நல்ல உயர்வான இலக்கிய படைப்பு போல இருந்தது. நான் இருபதுவருடங்களுக்கு முன்பு அக்னிநதி நாவலை வாசித்திருக்கிறேன். மிகவும் தற்செயலாக வாசித்தது. அந்தப்பெயர் ஆங்கிலத்தில் அறிமுகமான பெயர் போல இருந்தது. அப்போது அக்னிநதி என்னை பெரிதாக கவரவில்லை. இப்போது அக்னிநதி கிடைக்கிறதா? அவரது வேறு புத்தகங்கள் தமிழில் கிடைக்கின்றனவா?

சிவம்

அன்புள்ள சிவம்

குர்ரதுலைன் ஹைதர் இலஸ்டிரேட்டட் வீக்லி இதழின் துணை ஆசிரியராக நெடுங்காலம் பணியாற்றினார். அதில் நிறைய சிறுகதைகள் ஆங்கிலத்தில் எழுதியிருக்கிறார். தமிழில் அவரது அக்னிநதி மட்டுமே வந்துள்ளது. இப்போது மறுபதிப்பு கிடைக்கிறது
ஜெ

 

அன்புள்ள ஜெயமோகன்;
வணக்கம். சாருவின் வசைகள் தலைப்பில் வெளியான கட்டுரை படித்தேன்..
நீங்கள் அவரின் வன்முறையின் தோல்வி கட்டுரையை புகழ்ந்து எழுதியதை படித்து விட்டு அவருடைய இணையத்தில் அதை படித்துப் பார்த்தேன் உண்மையிலேயே மிக நன்றாக இருந்தது,மறுப்பதற்கில்லை ஆனால் அதை படித்த பிறகும் அவரை வாழ்த்தி ஒரு கடிதம் எழுத வேண்டும் என்கிற ஆவலை உடனடியாக என்னால் கட்டுப்படுத்திக் கொள்ள முடிந்தது.
 அதற்க்கான காரணம் என்னை நானே பார்த்துக் கொள்ள முடிவதனாலும் ஏன் மூலமாக சாருவை பார்க்க முடிவதாலும் எனக்கு ஒரு பதினாறு பதினேழு வயதிருக்கும் அப்போது ஆன்மீக மற்றும் இலக்கிய உலகில் பெரும் சூறாவளியை கிளப்பப் போகிறோம் என்கிற எண்ணம் எனக்கு இருந்தது முதல் படியாக கதை எழுத ஆரம்பித்தேன் முதல் வரியை ஜெயகாந்தனில் திருடி இரண்டாவது வரியை ஜானகிராமனில் திருடி மூன்றாவது வரிக்கு லா சா ரா ஆனால் சந்தோஷ் ஏதேனும் ஒரு வரியில் வெளிப்படும் போது விரக்தி சுயநிந்தனை எந்த புத்தகத்தை படிக்கும் போதும் அந்த புத்தகம் நன்றாக இருந்தால் அதை நானே எழுதியதாக கற்பனை செய்து கொண்டே இருக்கும் சுகம் அலுத்துப்போனாலும் அந்த பழக்கத்திலிருந்து என்னால் விடுபட முடியவில்லை அது என்னுடைய பெருங்குறை. இதை ஏன் இங்கே சொல்லுகிறேன் என்றால்  சாருவின் இணையத்தில் அவருடைய எழுத்தை படித்த முதற் கணமே அவருடைய அகம் எனக்கு புரிந்து போயிற்று.
அவருடைய மனநிலையை துல்லியமாக உணர முடிந்தது என்னால்,உங்கள் எழுத்திலிருந்து உங்களையும் ஒருவாறு அனுமானிக்க முடிகிறது,இது சரியோ தவறோ இது என்னுடைய  இயல்பு அவருடைய வசைகளுக்கான உங்களுடைய எதிர்வினை வழக்கம் போல் சிறப்பாகவே இருந்தது.
அன்புடன்
சந்தோஷ் 

அன்புள்ள சந்தோஷ்

சாரு ஒரு பத்தி எழுத்தாளர். பத்தி எழுத்துக்குண்டன உரையாடல்தன்மை, விபரீதமாக யோசிக்கும் தன்மை, நகைச்சுவை, துணுக்குகள்: கிசுகிசுக்களை பரப்பும் தன்மை ஆகியவை அவரது பலங்கள்

இலக்கியம் என்பது- அது எவ்வகையைச் சேர்ந்ததாக இருந்தாலும்– முற்றிலும் வேறான ஒன்று. சாருவே உள்ளூர அதை நன்றாக அறிவார். அவரால் முதிராவாசகர்களை மட்டுமே எதிர்கொள்ள முடியும். இதுவே அவரது சிக்கல்
ஜெ

 

மரியாதைக்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு,
நலமாக இருக்கிறீர்களா?
இந்திய நிலப்பரப்பில் கேரளாவிற்கும் மேற்கு வங்காளத்திற்குமான ஒற்றுமையை கவனித்திருப்பீர்கள் என எண்ணுகிறேன். இரண்டு மாநிலங்களிலும் தரமான இலக்கியம்,தரமான சினிமா,கம்யூனிசம் மற்றும் காற்பந்து போன்றவற்றில் ஒற்றுமைகள் காணப்படுகின்றான. மக்களின் ரசனையை அவர்களின் வாழ்விடம்தான் தீர்மானிக்கிறாதா? இவ்விரு மாநில மக்களின் எண்ணங்கள், மற்றும் ர‌சனைகள் ஒத்துப்போவதற்கான காரணம் என்ன என கொஞ்சம் சொல்வீர்களா?
(தங்கள‌து வலைப்பக்கத்தின் வழியாக தங்களுக்கு தகவல் அனுப்ப இயலவில்லை)
வாசகன்,
பாலா.R,
சிங்கப்பூர்

 

அன்புள்ள பாலா,

உண்மை. கேரளத்துக்கும் வங்கத்துக்கும் இடையே உள்ள ஒற்றுமைகள் மலைக்க வைப்பவை. உண்மையில் கேரளத்தில் நிற்கும் அதே உணர்ச்சியை சிலசமயம் வங்கத்திலும் அடையலாம்

1. நில அமைப்பின் ஒற்றுமை. நீர் சூழ்ந்த நிலப்பகுதி. 2 . பெண்கள் கூந்தலை விரித்துப்போடுவது போன்ற சில பழக்க வழக்கங்கள் 3. மொழியின் உச்சரிப்பு. குறிப்பாக ஓ அதிகமாக பயன்படுத்துவது. ஓட்டோ , டோக்டர் போன்ற சொல்லாட்சிகள் 5. உணவில் மீனும் பெரிய அரிசியும்

பொதுவான வரலாற்றுச் சூழல்கள் உள்ளன. 1. சாக்தேய மதம் . இரு ஊர்களிலும் காளிதான் 2 . அதிகமான ஐரோப்பியர் தொடர்பு 3. மதச்சீர்திருத்த இயக்கங்கல்

இதன் விளைவே 1. எழுத்தறிவு 2 கம்யூனிசம்

ஆனால் வங்கம் கம்யூனிஸ்டுகளால் ஆளப்படுகிறது. ஆகவே அது இந்தியாவின் வறுமை மிக்க மாநிலங்களில் ஒன்று. நிர்வாகச்சீரழிவு, பொருளாதார குலைவின் கசப்பான முகம் கொண்டது. சோம்பேறிகளும் சண்டைக்காரர்களுமான மக்கள்

கேரளம் அப்படி அல்ல. அது பாதிநாள் காங்கிரசாலும் ஆளப்படுகிறது.  உள்ளூரில் மார்க்ஸியத்தால் சோம்பேறிகளாக ஆக்கப்பட்டிருந்தாலும் மக்கள் வெளிநாடுகளில் உழைப்பார்கள். மணியார்டர் பொருளாதாரத்தால் அது தப்பித்துக்கொண்டது

ஜெ

முந்தைய கட்டுரைவடகிழக்கு பிரியவேண்டுமா?
அடுத்த கட்டுரைகாந்தியின் வழி:கடிதங்கள்