வணக்கம் சார்,
தமிழ் எழுத்துலகில் உள்ள வன்மங்கள் இப்பொழுதுதான் புரிகிறது.உங்களுக்கு நேர்ந்தமையால்… இது என்னுடைய நேரடி அனுபவமாகவே உணர்கிறேன்.
நான் உங்களைப் படிக்க ஆரம்பித்த பிறகு நீங்கள் பெரிய விவாதத்துக்கு உள்ளானது இப்பொழுதுதான். நீங்கள் இதை மிக மன விரிவுடன் எதிர்கொள்ளும் விதம் மகிழ்ச்சியை அளிக்கிறது.
எனக்கு பலியின் தலை மீது கால் வைத்து வளர்ந்து கொண்டு இருக்கும் வாமனன் தான் ஞாபகத்துக்கு வருகிறான்.அவன் வளர்ச்சி முன் பலி, இந்த உலகு, விஸ்வம் எல்லாமே சிறியதாக மாறிக்கொண்டு இருக்கும். ஒரு எழுத்தாளராக, ஒரு விசில் ப்ளோயராகவும் நீங்கள் அந்த வாமனன் தான்.உங்கள் பண்பு, மன விரிவு முன் இதெல்லாம் சிறிய விஷயங்களாகவே மாறும்.
உங்கள் சக எழுத்தாளர்கள் உங்களிடம் உள்ள இந்த அறம் சார்ந்த கோபத்தை தேவையில்லாத ஒன்றாகவே கருதுகிறார்கள் ஏன் ?எஸ்.ரா. ஆனந்த விகடன் வாசகர் கேள்வி பதிலில் உங்களைப் பற்றி இதேதான் சொன்னார். நீங்கள் பெரிதாக மதிக்கும் அசோகமித்திரனும் சமீபத்தில் ஆ. வி. பேட்டியில் உங்கள் எழுத்து ஆளுமையை வியந்து கொண்டே… இதே போன்ற கவலையைத்தான் தெரிவித்தார்!
இவர்களுக்கு உங்கள் மீது மிக்க அன்பும், மரியாதையும் இருக்கலாம். ஆனால்,ஒரு எழுத்தாளன் தன் சுற்றியுள்ள சிறுமைகள் பற்றி நேரடியாகப் பேசுவதில் அப்படி என்னதான் தவறு?அவன் அப்படிப் பேசும்போதே… அதனால் தனக்கு நேரும் விளைவுகள் தெரிந்துதானே தைரியமாக முன்மொழிகிறான்?அவன் பேசும் விஷயங்களுடன் கருத்தளவு ஆமோதிக்கும் ஒருவர் அதற்க்கு தார்மீக ஆதரவு தெரிவிக்க வேண்டாமா? ஏன் தேவை இல்லாத விஷயங்களாகக் கருதுகிறார்கள்?
அன்புடன்,
ராஜு
***
அன்புள்ள ராஜூ,
இந்த வகையான விவாதங்களில் சற்று எல்லைமீறல் நிகழலாம்தான். ஆனால் அதை ‘வன்மம்’ போன்ற வார்த்தைகளால் குறிப்பிடுவது பிழை. கருத்துமுரண்பாட்டின் ஒரு தளத்தில் சிலசமயம் இதைப்போல நிகழ்ந்துவிடுகிறது. இது உலகமெங்கும் உள்ளதுதான்.
பொதுவாக இலக்கியச் சூழலுக்குள் நுழையும்போது அங்கே நிகழும் விவாதங்களை முதலில் கவனிப்பவர்கள் அதிர்ச்சியடைவதுண்டு. அவற்றை ‘சண்டை’ என்று புரிந்துகொண்டு ‘சமாதானமாகப்’ போகலாமே என்று ஆலோசனை சொல்லவோ, மோதல்களைக்கண்டு அருவருப்படையவோ முயல்வதுண்டு.
இலக்கியச்சூழலுடன் அறிமுகமற்ற, இலக்கியவாசிப்புக்கான மனஅமைப்போ புரிந்துகொள்ளும் ஆற்றலோ இல்லாத பெரும்பான்மையினர் இந்தப் பூசல்களைப்பற்றி மட்டுமே கேள்விப்படுகிறார்கள். இதை மட்டும் வைத்து இலக்கியஉலகம் என்பதே சண்டைபோடும் கும்பல் என்ற மனச்சித்திரத்தை உருவாக்கிக் கொள்கிறார்கள். அவர்களில் இன்னொருசாரார் இலக்கியத்தில் இதில்மட்டுமே ஈடுபட்டு தங்களை இலக்கியவாசகர்கள் என எண்ணிக்கொள்கிறார்கள்.
இலக்கியவாசகன் ஒருவன் இத்தகைய கருத்துப்பூசல்களிலிருந்து விலகிச்செல்வதும், அதன் மூலம் தன் அந்தரங்க வாசிப்புலகைத் தக்கவைத்துக்கொள்வதும் இயல்பானதே. வாசகன் தன் அகத்தேடலுக்காக வாசிப்பவன். தனக்கு எது முக்கியமெனப்படுகிறதோ அதில் மட்டுமே ஈடுபட அவனுக்கு உரிமை உண்டு.
அதே சுதந்திரம் எழுத்தாளர்களுக்கும் உண்டு. எழுத்தாளர்களின் மனநிலையும் அக்கறைகளும் எழுதுமுறையும் வெவ்வேறானவை. தன்வாழ்க்கைநோக்கை சமகாலத்தின் எல்லாத் திசைகளுக்கும் விரித்துக்கொண்டு எதிர்வினையாற்றுபவர்கள் உண்டு. தன்னுடைய சிறியவட்டத்திற்குள் மட்டுமே அதைப்பரிசீலிப்பவர்களும் உண்டு. இருவகையினரையும் உலகமெங்கும் காணலாம். இருசாராருமே முக்கியமானவர்கள்தான். இருசாராரில் எவரும் மேல் கீழ் இல்லை.
தன்னுடைய உலகுக்குள் ஒடுங்கிக்கொள்ளும் எழுத்தாளர்கள் பொதுவாக விவாதங்களை அஞ்சுபவர்கள். விமர்சனங்களைக்கூட வெறுப்பவர்கள். மிகமிக மென்மையான உணர்வுகள் கொண்டவர்கள். ஒரு சிறு விமர்சனத்தைக் கேட்டால்கூட பலநாட்களுக்குத் தூங்கமுடியாமல் அவதிப்படும் ஏராளமான எழுத்தாளர்களை நான் அறிவேன். அவர்களே பெரும்பான்மை. அவர்கள் எதற்குமே எதிர்வினையாற்றுவதில்லை. எதிர்வினையாற்றாமலிருப்பது அவர்களுக்கு நல்லதும்கூட
பற்பல எழுத்தாளர்கள் என்னிடம் எஸ்.வி.ராஜதுரையின் அநாகரீகக் கடிதம் பற்றி ஆதங்கத்தையும் அருவருப்பையும் பகிர்ந்துகொண்டார்கள். நானே அவர்களிடம் ’எங்கேயும் பேசி வாயைநீட்டிவிடாதீர்கள், எதிர்வினைகளைத் தாங்கிக்கொள்ள உங்களால் முடியாது’ என்று மீண்டும் மீண்டும் எச்சரிக்க நேர்ந்தது.
ஏனென்றால் தமிழ்ச்சூழலில் இதற்கு இன்னும் விசேஷமான காரணங்கள் உள்ளன. தமிழில் ஒரு இருபதுவருடம் முன்புகூட இலக்கியம் என்பது பரவலாக அறிமுகமாகியிருக்கவில்லை. வணிக எழுத்தாளர்களே இலக்கியவாதிகளாக அறியப்பட்டிருந்தார்கள். வணிக எழுத்தாளர்களின் பொது இயல்பு வாசகர்களுக்குப் பிடித்ததை முன்வைப்பது என்பது. இலக்கியப்படைப்புகளும் அப்படித்தான் அமையும், கருத்துக்களும் அப்படியே அமையும். பெரும்பான்மையினரால் விரும்பப்படும்போதே அவர்கள் முக்கியமான எழுத்தாளர்களாக ஆக முடியும் என்பதே காரணம்.
தமிழ் வாசகர்கள் அத்தகைய எழுத்தாளர்களைக் கண்டு வளர்ந்தவர்கள். ஆகவே தன்னை மகிழ்விக்கக்கூடிய, தன்னுடைய கருத்துக்களையே தானும் கொண்டிருக்கக்கூடிய, தன் ரசனையை வளர்க்கக்கூடிய பொறுப்பும் கடமையும் கொண்டவன் எழுத்தாளன் என நினைக்கிறார்கள். இதை ஒரு நுகர்வோர் மனநிலை என்று சொல்லலாம். இங்கே எழுத்து பற்றிய எல்லா விவாதங்களிலும் நுகர்வோர்குரலே எழுகிறது என்பதைக் காணலாம்
புத்தகம் நுகர்பொருளாக இருக்கலாம், அது புத்தக வணிகனுக்கும் வாசகனுக்கும் இடையேயான வணிகம். இலக்கியமும் கருத்தியல்செயல்பாடும் வணிகமாக இருக்க முடியாது. எழுத்தாளனுக்கும் வாசகனுக்குமான உறவு எவர் எப்படிச் சொன்னாலும் ஒரு எல்லையில் ஆசிரியர்- மாணவர் உறவு. இன்னொரு எல்லையில் ஞானப்பரிமாற்றத்தின் இரு முனைகள் என்ற உறவு. ஆசிரியன் என்பவனும் சகமாணவனே என்பது நம் மரபின் விளக்கம்.
அத்தகைய புரிதல் நம் சூழலில் இல்லை. உலகம் எங்கும் எல்லா நல்ல எழுத்தாளர்களும் சமகாலச்சூழல் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைப்பவர்களே. அந்த விமர்சனங்கள் எழுத்தின் கலையாகவும் நேரடிக் கருத்துக்களாகவும் வெளிப்பட்டபடியே இருக்கும். அதுவே அவனை எழுதச்செய்கிறது.இப்படிச் சொல்லலாம். ஒத்துப்போவதன்மூலம் வணிக எழுத்தாளன் உருவாகிறான், முரண்படுவதன்மூலம் இலக்கியவாதி உருவாகிறான்.
நம் பொதுச்சூழல் அரசியல்வாதியையும் சினிமாநடிகர்களையும் மட்டுமே அவர்களிடம் ஆலோசனையோ அறிவுரையோ விமர்சனமோ சொல்லக்கூடிய இடத்தில் வைத்திருக்கிறது. பிற அனைவரையும் அது தன்னிடம் வாங்கித்தின்பவர்களாகவே நினைக்கிறது. தமிழ் எழுத்தாளர்கள் எவரும் எழுதிவாழ முடியாது. ஆனால் தமிழில் எந்த எழுத்தாளரின் கருத்துடன் முரண்பட்டாலும் உடனே ‘இவர்கள் எழுதிப்பிழைப்பவர்கள்’ என்ற இளக்காரமான வசை எழுவதைக் காணலாம்.
நம் பொதுச்சூழலை விமர்சித்து எந்த ஒரு சிறிய மாறுபட்ட கருத்து சொல்லப்பட்டாலும் எழுத்தாளர்கள் கீழ்த்தரமாக வசைபாடப்படுவதைத் தமிழில் காணலாம். புதுமைப்பித்தன் ,ஜெயகாந்தன், க.நா.சு.சுந்தர ராமசாமி, வெங்கட் சாமிநாதன், அசோகமித்திரன் முதல் இன்று வரை இந்த வழக்கம் தொடர்கிறது. நம் சூழலில் நல்ல எழுத்தாளர்கள் பெற்ற பாராட்டுகளை விட வசைகள் பலமடங்கு அதிகம். ஜெயகாந்தனை எழுத்தாள நாயே என அழைத்து எழுதப்பட்ட இருபது கவிதைகள் சில வருடங்களுக்கு முன் ஒரே மாதத்தில் வெளியாயின. அசோகமித்திரனை சோரபுத்திரன் என வசைபாடி எழுதப்பட்ட நான்கு கட்டுரைகள் அதே வருடம் வெளியாயின. கொஞ்சநாள் தாண்டியதும் சுந்தர ராமசாமியைப்பற்றி அதேபோன்ற வசைகள். இந்த மனநிலை பற்றி நான் அப்போது உயிர்மையில் ஒரு கட்டுரை எழுதியிருந்தேன்.
பொதுவாகக் கருத்துக்களே சொல்லாத எழுத்தாளர்கள்கூட ஒரு சிறிய வாய்ப்பு கிடைத்ததும் வசைபாடப்படுகிறார்கள். மிகச்சிறந்த உதாரணம் எஸ்..ராமகிருஷ்ணன், யுவன் சந்திரசேகர். இருவரும் கருத்துவிவாதங்களுக்குள் வர மறுப்பவர்கள். ஆனால் ஒரு பெண்கவிஞரின் பெயர் திரைப்படத்தில் தவறாகச் சொல்லப்பட்டது என்ற குற்றச்சாட்டின் பேரில் எஸ்.ராமகிருஷ்ன்ணன் மிகமிகக் கேவலமாக வசைபாடப்பட்டார். அந்த வசைபாடலுக்கு நம் சூழலின் அரசியல்கருத்தாளர்கள் எல்லாரும் கூடி நின்று கும்மியடித்தனர். எஸ்.ராமகிருஷ்ணன் பேசிய மேடையில் இருந்தார் என்பதனாலேயே யுவன் சந்திரசேகர் வசைபாடப்பட்டார்.
எழுத்தாளனை வாசிப்பவர்கள் இங்கே குறைவு. அவன் பெயரை மட்டும் அறிந்து வைத்திருக்கிறார்கள். அவன் ஏதாவது கருத்தைச் சொல்லி, அல்லது சொல்லக்கூடும் என இவர்களாகவே நம்பிக் கோபம் கொள்ளும்போது இந்த மக்களுக்குத் தோன்றுவது கருத்துசொல்ல இவன் யார் என்பதுதான். இன்று வரை ஓர் எழுத்தாளனின் கருத்து பேசப்படும்போது அதிர்ச்சி கொண்ட குரல் எழுகிறது . ‘யார்யா இவன்”?’ உண்மையிலேயே அவர்களுக்குத் தெரியாது
தனக்கு ஓர் எழுத்தாளனைத் தெரியாதது அந்த எழுத்தாளனின் குற்றம் என்றே தமிழ்மனம் நம்புகிறது. தன்னை நோக்கி வந்தடையவேண்டியது அந்த ‘பிராண்டின்’ பணிதானே?
முன்பு பாரதி பற்றி ஒருவிவாதம் நடந்தது. அப்போது தமிழின் முக்கியமான பேராசிரியர் ஒருவரிடம் நான் விவாதித்தேன். அவரது இணையதளத்தில் ஒரு குரல். அவரது முதன்மை மாணவர்களில் ஒருவர் எழுதியிருந்தார். ‘சார்! யார் சார் இவரு?’
தமிழ்ச்சூழலில் ஆய்வுநடத்தும் ஓர் ஆய்வுமாணவருக்கு , யார் கண்டது ஒருவேளை அவரும் பேராசிரியராக ஆகியிருக்கலாம், இருபதாண்டுகளாக தமிழ்ச்சூழலில் தீவிரமாக இயங்கிவரும் நான் அப்போதுதான் அறிமுகமாகிறேன்! ஒரு பேராசிரியரிடம் விவாதிக்க இவனுக்கென்ன தகுதி என அந்தப் பாமர உள்ளம் பிரமிக்கிறது.
இந்தப் பாமரச்சூழலை நோக்கியே தமிழ் எழுத்தாளன் நான்கு தலைமுறையாகப் பேசிக்கொண்டிருக்கிறான். இந்தப் பாமரச்சூழலின் வன்முறையை எதிர்கொள்ள ஜெயகாந்தனோ க.நா.சுவோ துணியலாம். கு.அழகிரிசாமியோ கி.ராஜநாராயணனோ துணியமாட்டார்கள். அது பிழை அல்ல. அவர்களின் இயல்பு அதுவே
துணிந்து பேசக்கூடியவர்களுக்கு அவர்கள் யார் என்றும் அவர்களின் வரலாற்றுப்பாத்திரம் எது என்றும் தெரியும். ஜெயகாந்தனும் க.நா.சுவும் வாழ்வார்கள்.வசைபாடிகள் எங்கே? அவர்கள் அந்த அறிதலின் விளைவான தன்னம்பிக்கையுடன் பேசுகிறார்கள். ஜெயகாந்தன் சொன்னதுபோல அற்பத்தனங்களை அகங்காரத்தால் எதிர்கொள்கிறார்கள். வசைகளைத் தட்டிவிட்டுக்கொண்டு மேலே செல்ல அவர்களால் முடியும்
என்மீது வசைகள் பொழியபட்ட காலங்களில்கூட நான் என் நல்ல படைப்புகளை எழுதிக்கொண்டிருந்தேன். இப்போதும்கூட என் எழுத்தின் மிகச்சிறந்த மாதிரிகள் என நான் எண்ணும் இரு கதைகளை, ஒரு நீண்ட கட்டுரையை எழுதி முடித்தேன். ஆம், என்னை பாதிக்குமளவுக்கு வசைபாடும் குரல் கொண்ட எவரும் இன்றில்லை. அதற்கும் ஒரு தகுதி வேண்டும்.
ஜெ
எஸ்.வி.ராஜதுரையின் வக்கீல் நோட்டீஸ்
எஸ் வி ராஜதுரைக்கு அன்புடன்