எஞ்சிய சிரிப்பு

சோதிப்பிரகாசம் – தமிழ் விக்கி

1998 இல் நான் பின் தொடரும் நிழலின் குரல் என்ற நாவலை எழுதினேன்.சோவியத் ருஷ்யாவின் வீழ்ச்சியின் பின்னணியில் மார்க்ஸியக் கொள்கையில் உள்ள அறம் என்ன என்று ஆராயக்கூடிய நாவல்.அதற்கு ஆய்வுரைகளோ மதிப்புரைகளோ அதிகம் வரவில்லை, ஏராளமான வசையுரைகள் மட்டுமே வந்தன, வந்துகொண்டும் இருக்கின்றன. நான் பல கடிதங்களின் முதல் வரியை மட்டுமே வாசிப்பேன், என்ன சொல்லப் போகிறார் என்று தெரிந்துவிடும். நாவலை வாசித்துவிட்டு எழுதிய மறுப்புகள் அனேகமாக எவையுமில்லை. வாசித்தால் தங்கள் சொந்த நம்பிக்கை மாறிவிடுமோ என்ற பதற்றம் பெரும்பாலானவர்களிடம் இருப்பதாகத் தோன்றும்.

ஐந்து வருடம் முன்பு எனக்குத் தபாலில் ஒரு நீளமான ஆய்வுரை வந்துசேர்ந்தது. அது என்னை மிகவும் கடுமையாக மறுத்து நாவலை நிராகரிக்கும் மதிப்பீடு. ஆனால் நாவலை முழுக்க கணக்கில் எடுத்துக் கொண்டு, விரிவாக ஆராய்ந்து, எழுதப்பட்டிருந்தது. அதை எழுதியவர் மார்க்ஸிய ஆய்வாளர் சோதிப்பிரகாசம்.

அந்தக்கடிதம் எனக்கு நிறைவளித்தது. நிராகரித்தாலும் முழுக்க வாசித்துவிட்டு அதைச்செய்திருந்தார். ஆகவே அந்தக் கட்டுரைக்கு நான் ஒரு மிக நீளமான பதில் எழுதியிருந்தேன். அதில் சோதிப்பிரகாசத்தை முற்றாக மறுத்திருந்தேன். தன்னுடைய கடிதத்தில் சோதிப்பிரகாசம் நான் ஸ்டாலினியத்தை மார்க்ஸியமாக மயங்குகிறேன் என்று சொல்லி மார்க்ஸியம் ஒரு தரிசனமோ தத்துவமோ அல்ல அது ஓர் அறிவியல் , அதை நான் அறிவியல் ரீதியாகக் கற்க வேண்டும் என்று வாதிட்டிருந்தார். [அக்கட்டுரை அவரது ‘வரலாற்றின் முரணியக்கம்’ என்ற நூலில் பின்னிணைப்பாக உள்ளது.]

நான் எழுதிய பதிலில் என் நாவலில் மார்க்ஸியக் கோட்பாட்டை விமரிசனமேதும் செய்யவில்லை என்று சுட்டிக்காட்டியிருந்தேன். அந்நாவல் முழுக்க முழுக்க இடதுசாரி அரசியலானது கருத்தியலை எப்படி ஓர் அடக்குமுறை அதிகார ஆயுதமாகப் பயன்படுத்தியது என்பதையும் எல்லாக் கருத்தியல்களுக்கும் அப்படி ஒரு முகம் உண்டு என்பதையும் மட்டுமே விரிவாகப்பேசுகிறது. அப்படிப் பயன்படுத்தப்பட்ட கருத்தியல் என்ற அளவில் மார்க்ஸியம் விவாதிக்கப்படுகிறது.

அந்நாவலில் மார்க்ஸியத்தின் தத்துவார்த்தமான வரலாற்றாய்வுமுறையும் அதன் மனிதாபிமான நோக்கும் அதன் அறவியலும் மிக விரிவாக விளக்கவும் பட்டுள்ளன. ஆனால் மார்க்ஸியம் உருவாகி முக்கால் நூற்றாண்டுக்காலம் கழிந்தும் அது பல நாடுகளில் பலவகையில் விளக்கப்பட்டு அதனடிபப்டையில் அதிகாரம் கையாளப்பட்ட பின்னரும் ‘தூய மார்க்ஸியம்’ ஒன்று உண்டு அது மட்டுமே உகந்தது என்று சொல்வது ஒருவகை மதவாதமே என்று வாதிட்டிருந்தேன்.

அதற்கு சோதிப்பிரகாசம் மீண்டும் பதில் எழுதியிருந்தார். பல கடிதங்களுக்குப் பின்னர் தொலைபேசியில் உரையாடினோம். நான் ‘ஜெயமோகன் பேசறேன்’ என்று சொன்னதுமே சோதிப்பிரகாசம் கடகடவென்று சிரிக்க ஆரம்பித்தார். ஏன் சிரிக்கிறார் என்று புரியவில்லை. அதன் பின் தெரிந்தது அவரால் சிரிக்காமல் பேசவே முடியாது என்று

நான் ஏங்கிவந்த ஓர் உதாரண உறவுக்கான தொடக்கமாக இருந்தது அது– முழுமையான கருத்து மாறுபாட்டுடனேயே நெருக்கமான நட்பு நிலவும் உறவு. சோதிப்பிரகாசத்தின் கடைசிநாள் வரை எங்களுக்குள் ஒரு விஷயத்திலும் கருத்தொருமிப்பு சாத்தியமாகவில்லை. ஆனால் நான் அவருடன் மிக நெருக்கமாகவும் இருந்தேன்

சோதிப்பிரகாசம் உறுதியான கருத்துக்கள் கொண்டவர். அவற்றை மிக ஆவேசமாக வாதிட்டு நிறுவ முயல்பவர். ஆனால் ஒருபோதும் மாற்றுக்கருத்தாளரை மட்டம் தட்டிப் புண்படுத்தமாட்டார். அவர்களின் தனிப்பட்ட பலவீனங்களைத் தொட்டுக் காட்டமாட்டார். அனைத்துக்கும் மேலாக எதிர்த்தரப்பின் வாதங்களை அவற்றின் சிறந்த நிலைப்பாட்டை எடுத்துக்கொண்டு வாதிடுவார்.

சோதிப்பிரகாசத்தின் சிரிப்பை நான் எப்போதுமே கவனித்துவந்தேன். அதி தீவிரமாக வாதிடும்போதுகூட பேச்சு நடுவே கடகடவென சிரித்துக்கொண்டே இருப்பார். நான் ஒருமுறை கடுப்பாகி ‘கர்நாடகத்திலே சாம்பாரில் சீனியைப் போடுவார்கள்…நீங்கள் கோட்பாட்டு விவாதத்தில் சிரிப்பைக் கலப்பது அதைப்போலிருக்கிறது.’ என்றேன். அவர் மேலும் சிரித்துக்கொண்டு ‘நானெல்லாம் குலாப்ஜாமூனுக்குக் கொஞ்சம் கறி தொட்டுக்கக்கூடிய ஆளு…’ என்றார்

ஒருமுறை சோதிப்பிரகாசம் அவரது நண்பருடனான உறவில் உருவான சிக்கல்களைப்பற்றி என்னிடம் வருத்தப்பட்டார். நான் கிண்டலாக ”மார்க்ஸியக் கோட்பாட்டின்படி நீங்கள் நேராக அருகே இருக்கும் கட்சி அலுவலகத்துக்குச் சென்று அங்கிருக்கும் முழுநேர ஊழியர் முன்னால் மூலதனத்தைத் தொட்டுக்கொண்டு மண்டியிட்டு அமர்ந்து பாவமன்னிப்பு கோரவேண்டும். இல்லாவிட்டால் சமத்துவ சொர்க்கத்தில் பிரவேசனமில்லை” என்று சொன்னேன்.

சோதிப்பிரகாசம் வெடித்துச்சிரித்தார். ”செய்யலாம்தான். ஆனால் அந்தக் கிழவன் தப்பிவிட்டான். அவனை அப்போதே பிடித்து சிலுவையில் அறைந்திருந்தால் ஒரு நல்ல மதம் கிடைத்திருக்கும்”

பிறப்பால் கிறித்தவரான சோதிப்பிரகாசத்துக்கு அவரது அப்பா அந்தபெயரைச் சூட்ட அவரது தந்தைக்கு வடலூர் வள்ளலார் மீதிருந்த பற்றும் ஒரு காரணம். அவருக்கும் வள்ளலார் மீது பற்று இருந்தது. ‘ஆன்மா வயித்துல இருக்குன்னு கண்டுபிடிச்சான் பாரு அந்த சாமி….அவர மாதிரி மார்க்ஸிஸ்டுக்கு நெருக்கமா யார் இருக்காங்க?’ என்றபடி சிரித்தார்

முரண்பட்ட கருத்துக்களையும் வித்தியாசமான உணர்ச்சிகளையும் மட்டுமல்ல தன் சொந்தக்கருத்துக்களையும் அன்றாட வாழ்க்கையையும்கூட சோதிப்பிரகாசம் சிரிப்பாக மாற்றிக்கொள்கிறார் என்று கவனித்தேன். மிகமுக்கியமான ஒரு கருத்தை அவர் சொன்னாரென்றால் உடனே அதை அவரே நக்கலடித்து உரக்கச்சிரிப்பார்.

திருநெல்வேலி மாவட்டம் காவல்கிணறு அருகே பிறந்த சோதிப்பிரகாசம் சென்னைக்கு தன் சொந்தக்காரரின் மளிகைக்கடையில் வேலைபார்க்கும்பொருட்டு வந்தார். கொஞ்சநாள் பொட்டலம் மடித்தபின் ஒரு மில் தொழிலாளியாக வாழ்க்கையைத் தொடங்கினார். அப்போது சிவபூஷணம் என்ற தொழிலாளர் அறிமுகமானார். சிவபூஷணத்தின் குடிசைக்குச் சென்று அங்கே அவர் கொடுத்த மார்க்ஸியத் துண்டுப்பிரசுரங்களையும் நூல்களையும் வாசிக்க ஆரம்பித்தார்

ஆனால் சோதிப்பிரகாசத்தை மார்க்சியராக ஆக்கியது நூல்கள் அல்ல.நேரடிக் களஅனுபவம்தான். எழுபதுகளில் சென்னை மில்களில் கங்காணிகள் குட்டித்தெய்வங்கள். தொழிற்சங்க இயக்கம் ஆரம்பித்து கிட்டத்தட்ட நூறாண்டுக்காலம் கழிந்தும் தொழிலாளர்களை கங்காணிகள் அடிப்பதுண்டு. வசை மிகமிகச் சாதாரணம். ஏனென்றால் அன்று பெரும்பாலான ஆலைத்தொழிலாளர்கள் படிப்பறிவற்றவர்கள். எந்தத் தொழில்நுட்பப் பயிற்சியும் அற்றவர்கள். தொழிற்சாலையில் வேலைக்குச்சேர்ந்து மெல்லமெல்ல அவர்கள் வேலை கற்றுக்கொள்ளவேண்டும். தனித்திறன் கொண்ட தொழிலாளராக ஆவது வரை தொழிலாளர் அடிமைகள்தான்.

அடிவாங்கிய தொழிலாளர் ஒருவருக்காகப் பரிந்துரைசெய்யப்போய்த் தானும் அடிவாங்கிய சோதிப்பிரகாசம் அப்போது தனக்காக ஒருவர்கூட பேசவராததை அதிர்ச்சியுடன் கவனித்தார். அதுவே கிராமம் என்றால் எத்தனைபேர் நியாயம் சொல்லியிருப்பார்கள்? கிராமத்தில் இருந்த நியாயங்கள் ஆலைக்குள் எங்கே மறைந்தன? கிராமத்திலிருந்து வந்த அதே மனிதர்கள்தானே இங்கேயும் இருக்கிறார்கள்?

அந்தக் கேள்விக்கு விடைதேடித்தான் சோதிப்பிரகாசம் மார்க்ஸியத்துக்குள் வந்தார். அவருக்கு மார்க்ஸியம் அந்தப்புதிரை விளக்கியது. கிராமம் இன்னொரு யுகத்தில் இருக்கிறது. ஒரு ரூபாய் டிக்கெட் எடுத்து தொழிலாளர் வந்து சேரும் ஆலை இன்னொரு யுகத்தில் இருக்கிறது. நிலப்பிரபுத்துவ யுகத்தின் விழுமியங்கள் எதுவும் முதலாளித்துவ யுகத்தில் இல்லை. ’அங்க அவன் மண்ணிலே ஒரு மிருகம். இங்க யந்திரத்தோட ஒரு பகுதி. அந்த வேறுபாடு புரிஞ்சுது’ என்றார் சோதிப்பிரகாசம்.

‘மிருகத்துக்கு ஊளையிட அனுமதி இருக்கு. எந்திரத்துக்கு கோஷம்போட அனுமதிய போராடி வாங்கிக்குடுத்திருக்கோம்….தொழிலாளர் இயக்கம்னா சும்மாவா?’ என்று அதற்கும் சிரித்தார் சோதிப்பிரகாசம்.

ஆர்.குசேலர், ஏ.எம்.கோதண்டராமன் போன்ற தொழிற்சங்க முன்னோடிகளுடன் பெற்ற அறிமுகம் சோதிப்பிரகாசத்தை கட்டமைத்தது. ஒரு காலகட்டத்தில் ஆலைப்பணி, தொழிற்சங்கப்பணிகளுக்கு மேலாக ஒவ்வொருநாளும் நான்கு மணிநேரம் வாசித்துக்கொண்டிருந்தார். மிக விரைவிலேயே அபாரமான ஆங்கில ஞானம் பெற்றார். கார்ல் மார்க்ஸின் மூலதனம் உள்ளிட்ட நூல்களை ஆங்கிலத்தில் விரிவாகக் கற்றார். மார்க்ஸியத்தைப் புரிந்துகொள்வதற்காக ஹெகல்,ஃபாயர்பாக் உள்ளிட்ட மேலைத்தத்துவ அறிஞர்களைக் கற்றார்.

சோதிப்பிரகாசம் தன் வாழ்க்கையைப்பற்றி சொல்வதை அறவே தவிர்ப்பவர். தன்னை ஒரு எளிய மனிதனாகவே குறிப்பிட்டு முன்னோடித் தலைவர்களைப்பற்றி மட்டுமே சொல்வார். அதிலும் தன்னை விலக்கியே விவரிப்பார். பல தருணங்களில் அவ்வப்போது கிடைத்த தகவல்கள் வழியாகவே அவரது வாழ்க்கையின் பல தளங்களை நான் உத்தேசமாக அறிய முடிந்தது. அவரிடம் அவ்வளவு பழகியபோதும்கூட அவரைப்பற்றி நான் அறிந்தது மிகக் கொஞ்சமே.

அவர் மக்கள் உரிமை மன்றம் என்றபேரில் சத்யா ஸ்டுடியோ அருகில் ஒரு அமைப்பை நிறுவி அதை முற்போக்குக் கலைகளை வளர்க்கப் பயன்படுத்தியிருக்கிறார். அப்போது பி ஆர் பரமேஸ்வரன், என் ராம் போன்ற பலர் அவருடன் சேர்ந்து பணியாற்றியிருக்கிறார்கள். கூவம் கரையின் குடிசைப்பகுதியில் மிக மோசமான சூழல்களில் சோதிப்பிரகாசம் வசித்து வந்ததைப்பற்றி அவரது நண்பர்கள் பலர் சொல்லிக் கேள்விபப்பட்டிருக்கிறேன்.கூவம் என்றாலே கொசுக்கடிதான். அதிலிருந்து தப்பும்பொருட்டு ஏதோ ஒரு தொழிற்சாலைக்கழிவை உடலில் பூசிக்கொண்டு தூங்குவதைப்பற்றி அவர் வேடிக்கையாக ஒருமுறை சொன்னார்.

‘அந்தத் தகவல அந்த மொதலாளிக்குத் தெரியாம பாத்துக்கிட்டோம்…இல்லேன்னா அதுக்காக சம்பளத்திலே கால்வாசிய குறைச்சுகிடச் சொல்லியிருப்பான்’ என்றார் சோதிப்பிரகாசம், சிரிப்பினூடாக

அறுபதுகளில் நக்சலைட் இயக்கம் எழுச்சிகொண்டபோது சோதிப்பிரகாசம் தோழர் ஏ.எம்.கோதண்டராமனால் அதற்குள் இழுக்கப்பட்டார். சோதிப்பிரகாசத்தின் அதி உற்சாகமான இயல்புக்கும் பேசிக்கொண்டே இருக்கும் குணத்துக்கும் எப்படி ரகசிய இயக்கம் அவருக்கு ஒத்துவந்தது என்று எனக்கு இப்போதும் ஆச்சரியம்தான். நக்சலைட் இயக்கம் ஒடுக்கப்பட்டபோது அவர். தலைமறைவாக நெடுங்காலம் இருந்திருக்கிறார். தலைமறைவுவாழ்க்கையின் ஒரு பகுதியாகக் கொஞ்சநாள் வெளிநாட்டிலும் இருந்திருக்கிறார்.சோதிப்பிரகாசத்துக்கு ஏ.எம்.கோதண்டராமனுடன் இருந்த உறவைப்பற்றி அவரது நண்பர் சொ.கண்ணன் எழுதியிருக்கிறார்.

1978ல் பிரகடனம் என்ற சிறு பத்திரிகையை சோதிப்பிரகாசம் வெளியிட்டார். நான்கு இதழ்களுடன் அது நின்றுவிட்டது. அதன் பின்னர் வாழ்க்கையின் கேள்விகள் என்ற நூலையும் கார்ல் மார்க்ஸின் டாஸ் காபிடலின் முதல் அத்தியாயத்தையும் வெளியிட்டார். இக்காலகட்டத்தில்தான் சோதிப்பிரகாசத்துக்குப் பண்டைய தமிழிலக்கியத்தில் ஆழமான ஆர்வம் ஏற்பட்டது. எனக்குத்தெரிந்து பழந்தமிழின் இலக்கியங்களில் மிக ஆழ்ந்த புலமைகொண்ட மிகச்சிலரில் ஒருவர் அவர். அந்தப்புலமை அவரை தமிழ்த்தேசியம் பக்கமாகக் கொண்டுசென்றது என்று படுகிறது.

மார்க்ஸிய நம்பிக்கை சோதிப்பிரகாசத்துக்கு ஆழமாக நெஞ்சில் ஊறிய ஒன்று. அதை அவர் உறுதியாக நிரூபிக்கப்பட்ட அறிவியல் உண்மை என்றே எண்ணினார். அவ்வுண்மையின் திரிபுகளே ஸ்டாலினியம் மட்டுமல்லாது லெனினியமும் மாவோவியமும். மார்க்ஸியத்தின் சாரம் தேசிய இனங்களின் விடுதலையில் உள்ளது என்ற முடிவுக்குப் பிற்பாடு சோதிப்பிரகாசம் வந்துசேர்ந்தார். தேசிய இனங்களை அடக்கி ஒன்றாக்கிப் பெருந்தேசியங்களைக் கட்டி எழுப்ப லெனினும் ஸ்டாலினும் மாவோவும் முயன்றார்கள். ஆகவேதான் அங்கே பேரரசுக்கனவுகள் உருவாயின. அடக்குமுறை உருவாயிற்று என வாதிட்டார்.

தன் வாழ்நாளின் பிற்பகுதியில் சோதிப்பிரகாசம் தமிழ்த் தேசிய இன விடுதலை சார்ந்து ஆழமான ஆர்வம் கொண்டிருந்தார். தமிழின் தனித்தன்மை, தொன்மை ஆகியவற்றை நிறுவும் ஆழமான ஆய்வுநூல்களை எழுதி வெளியிட்டார். அவரது ‘திராவிடர் வரலாறு’ ‘ஆரியர் வரலாறு’ஆகிய இரண்டு நூல்களும் இவ்வகையில் குறிப்பிடத்தக்கவை.

மார்க்ஸிய விவாதங்களில் சோதிப்பிரகாசம் அவர்களின் பங்களிப்பை இன்னும் பலர் புரிந்துகொள்ளவில்லை. பல கலைச்சொற்களை அவர் மாற்றியமைத்தார்– உதாரணம் டைலடிக்ஸ் என்ற சொல் இயங்கியல்’ என்றும் பூர்ஷ¤வா என்ற சொல் முதலாளி என்றும்தான் மொழியாக்கம் செய்யப்பட்டு வந்தது. சோதிப்பிரகாசம் அதை முரணியக்கம் என்றும் முதலாளர் என்றும் மாற்றி அச்சொற்கள் வழக்கத்துக்கு வந்துவிட்டன. பல கலைச்சொற்கள் சோதிப்பிரகாசத்தால் உருவாக்கப்பட்டவை. தத்துவ விவாதங்களைத் தூயதமிழிலேயே நடத்தவேண்டுமென்ற அவரது ஆர்வத்தின் விளைவு அது. அவரது நூல்களின் பெரிய கலைச்சொல்லடைவுகள் முக்கியமானவை.

என் வாழ்க்கையில் என்னை மாற்றியமைத்த நண்பர்களில் சோதிப்பிரகாசம் முக்கியமானவர். மார்க்ஸிய வரலாற்றாய்வு நோக்கு மீது எனக்கிருந்த ஈர்ப்பை வலுப்படுத்தி விரிவாக்கம்செய்தவர் அவர். அவரது தமிழியக்க ஆர்வமும் என்னைத்தொற்றிக் கொண்டது. அதன் விளைவே ‘கொற்றவை’ என்ற தனித்தமிழ்ப் புதுக்காப்பியம். இலக்கியம் என்பது போதை என்ற எண்ணம் கொண்ட சோதிப்பிரகாசம் என் நாவல்கள் அனைத்தையும் கூர்ந்து படித்து அழுத்தமான கருத்துக்களைப் பதிவுசெய்திருக்கிறார். கொற்றவையை அவர் படித்த காலத்தில் அனேகமாக தினம் ஒரு கடிதம் வீதம் எனக்கு எழுதியிருக்கிறார்.

சோதிப்பிரகாசம் சுயமாகவே கற்றவர். முதுகலைப்படிப்புக்குப் பின்னர் சட்டம் படித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞரானார். அவரது அலுவலகத்தில் அவரைக் கடுமையாக விமரிசிக்கும் தோழர்களின் கூட்டத்துடன் அமர்ந்து உற்சாகமாக சிரித்து அரட்டையடிப்பவராகவே அவரைப் பலமுறை சந்தித்திருக்கிறேன். சோதிப்பிரகாசம் நட்பும் தோழமையும் அதன் உச்சநிலைகளில் திகழ்ந்த ஒரு இடதுசாரிப் பொற்காலத்தின் பிரதிநிதி. எத்தனையோ நண்பர்களுக்கு அவர்கள் வாழ்க்கையின் ஒளியாகவே அவர் இருந்திருப்பார் என்று படுகிறது.

அப்போது சங்கசித்திரங்கள் ஆனந்தவிகடனில் வெளிவந்துகொண்டிருந்தது. அதில் தருமபுரி நக்சல்பாரியினர் அப்பு,பாலன் இருவரின் நினைவகத்தைப் பற்றி ஒரு கட்டுரை எழுதியிருந்தேன். சற்று உணர்ச்சிகரமான ஒரு கட்டுரை அது. அதைப்பற்றி சோதிப்பிரகாசம் எழுதிய கடிதத்தில்’ இறந்தவன் கல்லறையில் முளரியை வைத்துக் கண்ணீர் உகுக்கும் கற்பனைவாதத்தில் எனக்கு நம்பிக்கை இல்லை. இறப்பு மனிதர்களுக்கானாலும் கருத்துக்களுக்கானாலும் இயக்கங்களுக்கானாலும் மிக இயல்பான ஒன்றே. வாழ்க்கை முன்னால் நகரட்டும்’ என்று எழுதியிருந்தார்.

நான் தொலைபேசியில் அழைத்தேன். ‘…என்ன ஒரு மெல்லுணர்ச்சி…மெல்லுணர்ச்சி ஆகாது. நம்மள அது பலவீனமா ஆக்கிரும்…சென்றது கழிந்தது. வந்தது தெரியாது. நடுவிலே நின்னிட்டிருக்கோம்…இன்றுதான் உண்மை’ என்றார்

சட்டென்று அவரது சிரிப்புக்கான காரணம் எனக்குப்புரிந்தது.

தேவநேயப் பாவாணர் விக்கி

முந்தைய கட்டுரைசுமித்ரா- கடலூர் சீனு
அடுத்த கட்டுரையூஜி