எஸ்.வி.ராஜதுரையின் பங்களிப்பு…

பெருமதிப்பிற்குரிய ஜெமோ அவர்களுக்கு,

வணக்கம்.

இன்று தங்கள் வலைத்தளத்தில் வந்துள்ள எஸ்.வி.ராஜதுரையின் வக்கீல் நோட்டீசையும்,அதற்கு தங்களின் பதிலையும் படித்து உண்மையில் மிகுந்த வருத்தமும்,ஒருவகையில் அருவருப்பும் அடைந்தேன் என்றுதான் கூறவேண்டும்.

ஒரு வக்கீல் நோட்டீஸ் இந்த அளவுக்குத் தரம் தாழ்ந்து இருப்பதை அறிந்து துணுக்குற்றேன்.அதுவும் இது “மான நஷ்ட வழக்கிற்கான” நோட்டிசாம்! என்ன ஒரு ‘குரூர நகைச்சுவை’!. அவரின் வக்கீல் எப்படி இந்தமாதிரி அறிக்கையைத் தயார் பண்ணி அதில் கூட தானும் சேர்ந்து கைச்சான்றுஇட்டு அனுப்பி இருப்பது இன்னும் அதிர்ச்சியாக இருக்கிறது.

ஆனால் இதற்காக நீங்கள் வேதனைப்பட்டுப் பின்வருமாறு எழுதியிருப்பதுதான் என்னை மிகவும் சோர்வுக்கும்,வருத்தத்திற்கும் உள்ளாக்கியது.

 

“ உண்மையைச் சொல்லவேண்டுமென்றால் நான் மனம் உடைந்துபோனேன். எஸ்.வி.ராஜதுரைக்கே தெரியும், நான் அவர் நூல்களை வாசித்து வளர்ந்தவன். அதைப் பலமுறை எழுதியவன். இன்று அவரது திரிபுநிலைகளைக் கண்டு கருத்தியல் ரீதியாக முரண்படும்போதும் உள்ளூர அவர்மேல் ஆழ்ந்த மதிப்பு கொண்டவன். இந்த மொழியும் இந்த அவதூறும்தான் எஸ்.வி.ஆர் என்றால் என் மனதுக்குள் நான் கொண்டிருக்கும் அந்த பிம்பம் எவருடையது?

எஸ்.வி.ராஜதுரையை நேரில் கண்டால் அவர் கைகளைப் பற்றிக்கொண்டு நான் சொல்ல விரும்புவது இதைத்தான். ‘எஸ்.வி. ஆர், இதைப்போல கீழிறங்காதீர்கள். தயவுசெய்து…. தமிழ்ச்சிந்தனையாளர்களில் ஒருவராகக் கருதப்படும் உங்களை முன்வைத்து இத்தகைய கீழ்த்தரமான ஒரு வழக்கம் நம் சட்டச்சூழலில் உருவாக வேண்டாம். என்றோ ஒருநாள் உங்கள் நூலை வாசித்து மன எழுச்சியடைந்தவன் என்பதனால் நானும் உங்கள் மாணவனே. இந்தக் கீழ்த்தர மொழியாக உங்களை வாசிக்கையில் நான் அடைவது மரணத்துக்கிணையான ஓர் அனுபவம்… தயவுசெய்து புரிந்துகொள்ளுங்கள்….’”

நீங்கள் இந்த அளவு பெருந்தன்மையும்,மதிப்பும் காட்டுவதற்குத் தகுதி உள்ளவரா அவர் என்பது எனக்கு தெரியவில்லை.

அன்புடன்,

அ.சேஷகிரி.

அன்புள்ள சேஷகிரி

இப்போதும் என் சொற்களை உறுதியாகவே சொல்கிறேன். என் நவீனத்தமிழிலக்கிய அறிமுகம் உள்ளிட்ட நூல்களில் நான் சொன்ன வரிகள்தான். எஸ்.வி.ராஜதுரை அவர் எழுதிய நூல்கள் வழியாக தமிழின் முக்கியமான சிந்தனையாளர்களில் ஒருவரே.

அவரது பங்களிப்பை உங்களைப்போன்ற இளம் வாசகர்களுக்குச் சொல்லவேண்டியிருக்கிறது. ஒரு தொடக்க அறிமுகமாக இதைச் சொல்கிறேன்.

1. தமிழ்ச்சூழலில் மார்க்ஸியக் கோட்பாடுகள் வெறும் பொருளியல் அடிப்படையிலேயே பேசப்பட்டுக்கொண்டிருந்த ஒரு காலகட்டம் இருந்தது. பண்பாட்டை முழுக்க முழுக்கப் பொருளியலடிப்படையிலேயே அணுகிவந்தனர் அக்கால மார்க்ஸியர். அது இயந்திரவாத மார்க்ஸியம் என சொல்லப்பட்டது.

அந்தக்காலகட்டத்தில் மார்க்ஸியத்தின் உள்ளுறையாக இருந்த இன்னொரு பண்பாட்டு அணுகுமுறையை வெளியே கொண்டு வந்து விவாதித்தவர்கள் என தமிழ்ச்சூழலில் முதன்மையாகச் சொல்லப்படவேண்டியவர்கள் எஸ்.என்.நாகராசன், ஞானி ஆகியோர். அவர்களின் தொடர்ச்சியாக அவற்றை நேர்த்தியான நூல்களாக முன்வைத்தவர் எஸ்.வி.ராஜதுரை.

மனிதனின்உழைப்பில் உள்ள படைப்பூக்கத்தன்மையை நிலப்பிரபுத்துவமும் முதலாளித்துவமும் வெவ்வேறு வகைகளில் அழிக்கின்றன. அதன் விளைவாக உழைப்பில் இருந்து அன்னியமாகும் தொழிலாளி ஆன்மீகமான வெறுமையைச் சென்றடைகிறான். அந்த ஆன்மீக வெறுமையே அவனை கலாச்சார சிக்கல்களை நோக்கி கொண்டுசெல்கிறது.

மார்க்ஸ் அவரது இளம்வயதில் முன்வைத்த இந்த கோட்பாட்டை அவரே பிற்காலத்தில் நிராகரித்தார். ஆனால் மார்க்ஸால் நிராகரிக்கப்பட்டாலும் இது முக்கியமானது என உணர்ந்த அல்தூஸர் போன்ற பல ஐரோப்பிய அறிஞர்கள் இதை மேற்கொண்டு வளர்த்தெடுத்தனர்

இந்த அன்னியமாதல் கோட்பாட்டையும் அதையொட்டிய ஐரோப்பிய மார்க்ஸியச் சிந்தனையாளர்களையும் நல்ல தமிழில் அறிமுகம் செய்து தமிழக மார்க்ஸிய விவாதங்களில் ஒரு ஆரோக்கியமான பண்பாட்டு நோக்கு உருவாக எஸ்.வி.ராஜதுரையின் அன்னியமாதல் என்ற முக்கியமான நூல் வழிவகுத்தது

அதன் வழிநூல்களாகிய அல்தூசர் ஓர் அறிமுகம், பிராங்கப்ர்ட் மார்க்ஸியம் போன்றவையும் இன்றும் தமிழ் வாசகனுக்கு முக்கியமானவையே.

2. மார்க்ஸிய அறம் என்பது என்ன என்ற வினா தமிழ்ச்சூழலில் என்றும் இருந்தது. சம்பிரதாய மார்க்ஸியர்கள் அறம் என்பது ஆளும்வர்க்கத்தால் ஒடுக்க்கப்படும் சமூகங்கள் மீது ஒரு கட்டுப்பாடாக உருவாக்கப்பட்டது மட்டுமே என்ற கருத்தைக் கொண்டிருந்தார்கள். தொழிலாளிவர்க்கப்புரட்சி உருவாகும்போது அப்புரட்சியின் வெற்றியை சாத்தியமாக்கும் எதுவும் அறமே என்றும் , அதுவே புரட்சிகர அறம் என்றும், மார்க்ஸியர் அந்த அறத்துக்கு மட்டுமே கட்டுப்பட்டவர்கள் என்றும் சொன்னார்கள்

மார்க்ஸியஅறம் என்றால் என்ன என்ற கேள்வியை எழுப்பிக்கொண்டு விவாதித்த நூல்களில் எஸ்.வி.ராஜதுரையின் ‘ருஷ்யப்புரட்சி-இலக்கிய சாட்சியம்’ என்ற நூல் முக்கியமானது. புரட்சிகர அறம் என்பதை ஒரு சந்தர்ப்பவாதமாகப் புரிந்துகொண்ட ருஷ்ய மார்க்ஸியத் தலைமை எப்படி அறமில்லாத ஒரு நிலையை உருவாக்கியது, அது எப்படி படிப்படியாக அவர்களையே அழிப்பதாக ஆகியது என அது விளக்குகிறது.

அந்தத் தேடலை புஷ்கின், தல்ஸ்தோய், போரீஸ் பாஸ்டர்நாக் என பல இலக்கியமேதைகளின் ஆக்கங்கள் வழியாகச் சொல்லிச்செல்லும் அந்த நூல் ஓர் இலக்கியச் சாதனை. அதில் பாஸ்டர்நாக் பற்றிய பகுதி ஓர் உச்சம்.

எஸ்.வி.ராஜதுரையின் பங்களிப்பு இந்த அடிப்படையில் மிக முக்கியமானது. அவரது பிற்காலகட்ட ஆளுமைவீழ்ச்சிகள், சமரசங்கள் எப்படிப்பட்டவையாக இருந்தாலும் அவரது பங்களிப்பு நம் சிந்தனைச்சூழலில் அப்படியேதான் இருக்கும்.

ஜெ

முந்தைய கட்டுரைமொழி 8,மலையாளம் என்ற தூயதமிழ்
அடுத்த கட்டுரைஎஸ்.வி.ராஜதுரை-கடிதங்கள்