ஜெ,
எனக்குத் தெரிந்தவரை, தமிழ் OCR பற்றிய ஆராய்ச்சி சில நடந்துள்ளன. ஆனால் அவை பெரும்பாலும் ஒரு Ph.D அல்லது M.E பட்டம் வாங்க செய்யப்படும் முயற்சிகளே .
ஒரு நூலகத்தை இணையத்திற்குக் கொண்டுவர வெறும் ஆராய்ச்சி போதுமானதில்லை. http://mlr.com/DigitalCollections/products/ukperiodicals/ போன்ற தளங்களுக்குப்பின்னால், பெரும் உழைப்பும், செலவும், (சில மில்லியன் டாலர்கள்) மென்பொருள் தயாரிப்பு மற்றும் இதர மேலாண்மையும் தேவைப்படுகின்றன. நம் அரசாங்கமோ, கல்வி நிறுவனங்களோ அதற்குத் தயாரானவர்கள் இல்லை. அதற்கு செலவு செய்ய அரசாங்கம் தயாராக இருந்தாலும், ஒரு திருப்திகரமான product இருப்பதில்லை. தமிழ் இணையக் கல்விக்கழகம் போன்ற அரை வேக்காட்டுத் தயாரிப்பையே பார்க்க முடிகிறது.
இணையத்தில், இதுவரை தமிழின் வளர்ச்சிக்குக் காரண கர்த்தாக்கள் சில தனி மனிதர்களும், புலம் பெயர்ந்த தமிழர்களும், கூகிள் போன்ற நிறுவனங்களுமே. அரசாங்கங்களும், ஆராய்ச்சியாளர்களும் செலவும், விவாதமுமே சாதனை என்று திருப்தி அடைபவர்கள்.
ஞானாலயாவிற்குள் அரசாங்கத்தை விடுவது பற்றி உங்கள் கருத்துக்கு நான் மாறுபடவில்லை. தமிழ் OCR பற்றி மேலும் தகவல் சேகரிக்க முயற்சிக்கிறேன். Unofficialஆக சற்று சாதிக்க முடியம் என்று நினைக்கிறேன்.
– ஸ்ரீதர்
அன்புள்ள ஸ்ரீதர்,
கிருஷ்ணமூர்த்தி நூலகம் பற்றிய கட்டுரையை நான் எழுதவில்லை. ஜோதிஜி திருப்பூர் எழுதியது அக்கட்டுரை. நான் மறுபிரசுரம் செய்திருக்கிறேன்
இந்தியச்சூழலில் இதைப்போன்ற அமைப்புகளுக்கு ஒரு கட்டத்துக்குமேல்தனியார் நிதியுதவி கிடைப்பதில்லை. அரசு நிதியுதவி அதனாலேயே கோரப்படுகிறது
ஆனால் இன்றுவரை இம்மாதிரி முயற்சிகளைத் தமிழக அரசு ஆதரித்ததில்லை. எஸ்.வையாபுரிப்பிள்ளை அவர்களின் நூல்களை அரசிடம் கொடுக்க முயன்றார்ர்கள். முடியவில்லை, அந்நூல்கள் கல்கத்தா நூலகம் சென்றன
சென்னை ஓவியக்கல்லூரியின் முதல்வராகவும் சென்னை ஓவியர் சமூகத்தின் நிறுவனராகவும் இருந்த பணிக்கரின் பெரும் மதிப்புள்ள ஓவியங்களை வாங்கிக்கொள்ள தமிழக அரசு தயாராகவில்லை, அவை கேரள அரசுக்குக் கொடுக்கப்பட்டு இன்று திருவனந்தபுரத்தில் உள்ளன.
ரோஜாமுத்தையா செட்டியாரின் நூலகமும் தமிழக அரசால் புறக்கணிக்கப்பட்டது. சிகாகோ பல்கலை அதை வாங்கியமையால் அது ரோஜா முத்தையா நூலகமாக ஆகியது
அதைப்போலத் தமிழகம் சாராத ஓர் அரசு உதவிசெய்தால் கிருஷ்ணமூர்த்தி நூலகம் தப்பிப்பிழைக்கலாம்
ஜெ