எஸ்.வி.ராஜதுரையின் வக்கீல் நோட்டீஸ்

வழக்குரைஞர் கே.விஜயன்

சட்ட அறிவிக்கை
பதிவஞ்சலில்
(அஞ்சல் ஒப்புகையுடன்)
உதகமண்டலம் 06-07-2012

பெறுகை
திரு ஜெயமோகன்
(தந்தையார் பெயர் தெரியவில்லை)
கதவு எண்.93, 5-வது குறுக்குத் தெரு
சாரதா நகர்
பார்வதிபுரம்
நாகர்கோவில்

அய்யன்மீர்,
பொருள்த் தெரிவு – தெளிவு – செறிவு – குறிப்பு

எமது கட்சிக்காரர் காலஞ்சென்ற திருமிகு.காளியப்பா மகன் மானமிகு எஸ்.வி.ராஜதுரை (எ) கே.மனோகரன் (வயது 72) அவர்கள் குறித்த உமது அவதூறு செய்தி, தகவல் – வெளியீடு பரப்பல் – தொடர்தல் – அவமதிப்பு, சமூக தகுதி குறைப்பு, மானநட்டம், மன உளைச்சல் ஏற்படுத்தியது – ரூ.20,00,000/- (இருபது இலட்சம் ரூபாய்) இழப்பீடு வேண்டல் – நிபந்தனையற்ற வருத்தம் தெரிவித்து அறிவிப்பு வெளியிட அறிவுறுத்த, எமது கட்சிக்காரர் குறித்த உமது செய்தி மறுத்தல் – உண்மை நிலை சுட்டல் – உமது பாசாங்கு, அறமற்ற முகமூடி கிழித்தல் – உம் தீய உட்கிடக்கையுடன் கூடிய சட்டத்திற்குப் புறம்பான வெளிப்படுத்துதல்களை திருத்திக் கொள்ள வாய்ப்பளித்தல் – விவரணைகள், விளக்கங்கள், எச்சரிக்கை, வினைமுன்சொல் – தொடர் சிறப்புரிமை தக்க வைப்பு – ஆள்வரை சிறப்புரிமை – இட ஆள்வரை தொடர்பமை குறிப்பு – குறித்து.
…..

எமது கட்சிக்காரர் நீலகிரி மாவட்டம், கோத்தகிரி, அணையட்டி சாலை, கார்சிலி தோட்டம், கதவு எண். 5/43 ஜே வில் வசிக்கும் காலஞ்சென்ற திருமிகு. காளியப்பா மகன் மானமிகு எஸ்.வி.ராஜதுரை என்றழைக்கப்படும் கே.மனோகரன் அவர்கள் சார்பாக, அவர் எம்கை அளித்துள்ள ஆவணங்கள் கண்ணுற்றும் சர்வதேசீய, இந்திய, திராவிட, தமிழ், தத்துவ, பத்திரிகை, ஊடகவியல் கோட்பாடு, சித்தாந்த, தொழிற்சங்க, சமூக, அரசியல், பொருளாதார ஆய்வு சாட்சிகள் கேட்டும், ஆய்ந்தும், சட்டத்தின்முன் செல்லத்தக்க நியாயம் சொல்லத்தக்கவை வழி நின்றும் எம் கட்சிக்காரர் தம் கூற்றினைக் கூரையாய்க் கொண்டு அவர்தம் உரையினை உறையாய்க் கட்டியும் அவர்தம் மொழிவழி சென்றும் அவர்தம் நீள் நெடிப் பணிச் சான்றுகள், கலை, இலக்கிய, தத்துவ, அரசியல், பொருளாதார களங்கள் நிர்ணயத்துற்றும், அவர்தம் மேன்மை நெடி பணி முடிவுகள் திரிபற அறிந்தும் எமது கட்சிக்காரரின் நிலைபாட்டை சட்ட, கருத்து வெளியீட்டு நியதி, நீதி, கோட்பாடு சார்ந்து பகுத்தும் வகுத்தும் தொகுத்தும் மெத்தப்படிப்பிடை மேனி நெடிப்பிடை முழுதும் அறிவார்ந்ததாய் வெளிக்காட்டப்படும் உமது கருத்து வெளியீட்டு பசப்புகள், உம்மொழியில் சொல்லின் ‘கேனத்தனங்களாய் புறந்தள்ளப்பட வேண்டுபவையாய் நடிப்பிடைத்துலங்கும் குப்பைகள் தவறிடை முளைத்த கசடுகளாய் கருத்துதுலகில் ‘கருப்பு’ கட்டி வரும் அபத்தம் சுட்டியும் பொறுப்புடை பொதியவெற்பனின் புத்தகம் விமர்சிக்கும் புத்தகன் மொழியில் சொல்லின் “குற்றம் சொல்லிப் பெயர் வாங்கும் இக்கால புலவர் வகையறாக்களில் ஒருவராய் நின்று, தான் அறிந்ததை மட்டுமல்ல, அறியாதது, தெரியாதது, புரியாததைக்கூட பக்கம் பக்கமாய் எழுதிப் பிரித்து மேய்ந்து தன்னுடைய உள்நோக்கங்களை உலகியல் நெறிகளாக மாற்றிச் சொல்லி…” தீய உட்கிடக்கையுடன் சட்டத்திற்குப் புறம்பாக கேவலப் புகழ் இலாபம் பார்க்கும் நோக்கில் _ ‘பிறரை இழிவுபடுத்தி தான் மேன்மைப்படும் முயற்சியில்’ சேறு வாரியிறைத்து எழுதியும் பேசியும் பரப்பியும் மேன் மக்களை – மென்மக்களை அவர்தம் சமூகத் தகுதியிலிருந்து கீழிறக்கி அவமானப்படுத்தி கடும் மன உளைச்சலும் மான நட்டமும் பொருளாதார நட்டமும் உண்டாக்கும் உம் ஈன செயல் சுட்டி அதைத் தொடர்வதை நிறுத்திட அறிவுறுத்தி உம்மால் உமது தவறான கருத்துப் பரப்பலால் எமது கட்சிக்காரருக்கு ஏற்பட்ட மன உளைச்சல், அவமானம், சமூகத் தகுதிக் குறைப்பு மாற்றிடப்பட வேண்டியும், ஈடுசெய்ய முடியாததெனினும் சட்ட நெறிகளுக்காக குறிப்பிட்ட வரையறைக்குள் அடக்கப்பட்டு, ரூ.20,00,000/- (இருபது இலட்சம் ரூபாய்) என எட்டப்பட்ட தொகையினை இழப்பீடாய் வேண்டியும் இந்த சட்ட அறிவிக்கை நீ கைபெற்று மனங்கொண்டு சட்டப்படி தீர்வு தந்திட வேண்டி உமக்கு அனுப்பப்படுகிறது.

எமது கட்சிக்காரர் கொங்கு மண்டலத்தின் ஆரமாம் தாராபுரத்தின் காந்தி பொதுநல மன்றம் கண்ட காந்தீயவாதியும் கல்வி போதகருமான காளியப்பருக்கும் கருணையும் ஈகையும் கணவர் கொள்கையால் கொண்ட ஈர்ப்புமாய் இயங்கிய சரிநிகர் வாழ்க்கைக்கும் வாழ்க்கைப்பட்ட அங்கம்மாளுக்கும் அருமை மகனாய்ப் பிறந்து – கருத்துரிமையும் நட்பும் பாராட்டிய தந்தை, “அம்மா அடுக்கி வைத்த சாமியில் எந்த சாமியை வணங்கறது?” என்று கேட்க “ஈரோடு இராமசாமியை வணங்குங்கள்” என்று சொல்லுகிற வன்மையும் தன்மையும் வாய்த்திருந்த கே.மனோகரன் தனது 12ஆம் வயதில் எட்டிய பகுத்தறிவு கொள்கையிலும் ‘நூல் நூற்றல்’ கட்டாயம் என கால் நூற்றாண்டு காலம் வாழ்ந்த வீட்டினில் ‘நூல் கற்றல் விருப்பம்’ என மேல் நூற்றாண்டுக்கு அழைத்து வளர்ந்தவர் அவர் படித்தது பள்ளி இறுதி ஆண்டென்றாலும் தனது அரசியல், இலக்கிய, கலை, திரை, சமூகவியல், மானுடவியல், சூழலியல் உள்ளிட்ட துறைதோறும் ஆழ்ந்து தேடிய அறிவால் தேர்ந்து எழுதிய எழுத்தால், மெத்த படித்தோர் கரைத்து குடித்தோர் ‘கப்பம் கட்டி’ கடைத்தேறியவர் என பலரும் காத்திருக்க அறிவால், ஆழ்ந்த கொள்கை கொண்டிலங்கிய திறனாய்வு திறனால் பாரதிதாசன் பல்கலையில் பெரியார் உயர் ஆய்வு மய்யத் தலைவராய் இலங்கினார். அரசியலுக்காய் படிப்பை விட்டது போல் கொள்கை கருத்துவேறுபாட்டால் பல்கலை பொறுப்பையும் விடுத்தார் அடுத்து வந்த விருதுகளை எல்லாம் கொள்கைத் தோரணை காரணமாகவே தன் தோளில் தொங்கவிடாமல் தவிர்த்தவர் மனித உரிமைப் போராளிகளை பொது அங்கமாய்க் கொண்டிருக்கும் மக்கள் சிவில் உரிமைக்கழகம் (PUCL) அமைப்பின் தமிழ்நாட்டுத் தலைவர், பொதுச்செயலர், தேசீய துணைத்தலைவர் என பல்வேறு பொறுப்புகள் வகித்தவர்; எங்கெல்லாம் மனிதம் மிதிபடுகிறதோ உரிமை அடிபடுகிறதோ அங்கெல்லாம் சென்று உண்மை அறியும் குழுக்கள் மூலம் வேணவா பணிகளாற்றியவர் தூக்குக்கயிறுகளை முத்தமிட விதிக்கப்பட்டிருந்த கழுத்துகளுக்கு விடுதலை பெற்றுத்தந்தவர் ‘புதிய தலைமுறை’ ‘இனி’ எனும் கலை இலக்கிய இதழ்கள் மூலம் சமூகப் பணியாற்றியவர் சுதேசிப் போராளி ஜெயபிரகாஷ் நாராயணனின் தலைமையில் இருந்த, பேராசிரியர் ரஜினி கோத்தாரி, நீதியரசர் வி.எம்.தார்க்குண்டே உள்ளிட்டவர்களோடு இணைந்தும் இயைந்தும் பணியாற்றிய காலங்களில் ‘எக்கனாமிக் & பொலிடிக்கல் வீக்லி”, ‘செமினார்’, ‘தி இந்து’, ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ ‘மன்த்லி ரிவியூ’ போன்ற ஆங்கில பத்திரிகைகளில் தனித்தும் போற்றுதலுக்குரிய ஆய்வறிஞர் தோழர். வ.கீதாவோடு இணைந்தும் ஆக்கங்கள் அளித்தவர் அரசியல், சாதீயம், சமூகவியல் துறைகளில் பெருஞானமுற்றும் நீதியரசர் வி.ஆர்.கிருஷ்ண அய்யரின் மனிதநேய சித்தாந்தங்களை மனமேல் சுமந்து எழுத்திலிறக்கி களமிறங்கி போராடி வெற்றி பெற்றவர் மார்க்சிய, பெரியாரிய பொதுவுடைமை அமைப்புகள் அளித்த நிதிக்கொடையுடன் கூடிய விருதுகளைக் கூட தன் துணைவியார் நோயுற்று நலிவுற்று பார்வையற்று பரிதவித்திருந்த நிலைபோக்க நிதி உதவி தேவைப்பட்ட நேரத்திலும் மறுதளித்த மகத்துவத்துக்கு சொந்தக்காரர் மாண்பமை உயர்நீதி மன்ற நீதிமான்கள் தம் தீர்ப்பில் எடுத்தாளும் சிறப்பு பெற்ற கருத்துரைகள் அடங்கிய நூல்கள் ஆக்கியவர் தனித்த எந்த இயக்கத்தையும் கட்சியையும் சாராத சுதந்திரமான பெரியாரிய, அம்பேத்காரிய சிந்தனையாளராக தன்னை வெளிக்காட்டும் எம் கட்சிக்காரர் தன்னை ஒரு ‘சர்வதேசீய வாதி’ என்கிற முழு மனிதம் சார்ந்த வெளிப்படுத்துதலில் பெரு விருப்புடையவர் அதற்கான செயல்பாட்டு தளத்தில் இயங்குபவர்.

மேற்கண்ட விவரணைகள் எமது கட்சிக்காரரின் பத்திலொரு பங்கு மேன்மையையே விளக்குமாயினும் அத்தகு பண்புடை – பகுத்தறிவுடை – மாண்புடை மனிதரை, ஏற்கெனவே மார்க்ஸ், பெரியார், அம்பேத்கார், அருந்ததிராய்… என தொடரும் பட்டியலில் இடம் பெறும் பெரும் மாமனிதர்களை இழிவுபடுத்துவதன் மூலம் உம் இருப்பை உறுதிபடுத்திக் கொள்கிற கேவலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் சில ‘ஜந்து’க்களின் கூட்ட்த்தைச் சேர்ந்தவர்கள் போல நீர், ஒரு சனாதன பார்ப்பார் – பெரு சாதிவெறியர் – மேலும் கீழும் இரண்டும் கெட்ட செளுக்கைகளின் முழு உறவினர் போல் உள் குமையும் வெக்கையால் எமது கட்சிக்காரரையும் வீண் சண்டைக்கு இழுக்கிற வேலையைச் செய்துள்ளீர். மானுடப்பார்வை, மானசீகப்பார்வை, அறவியல், உள்ளுணர்ந்து பார்ப்பது … என்னும் வார்த்தைகள் பயன்படுத்தி ஆகப்பெரும் எழுத்தச்சனாக காட்டிக்கொள்ளும் சிலர் போல் நீர் ‘கவிதாசரண்’ சுட்டிக்காட்டிய பொண்டாட்டி பேரிலான களவாணித்தனத்திற்கு’ சொந்தக்காரர் ‘என்பதும் “நடைமுறை விஷயங்களை விட கற்பனை உலகமே எனக்கு பிடித்திருக்கிறது” “…பொறுப்புகளற்று அலைந்து திரிகிற” “…உலகம் சார்ந்த பொறுப்புகளை கூடுமானவரை தவிர்த்து வருபவன்” என்கிற பொறுப்பற்ற ‘லும்பன்’த்தன இயல்பாலன் என்பது உம் மொழியிலேயே வெளிப்பட “…தமிழில் என்னளவுக்கு தீவிரமாக பாதிக்கக்கூடிய மொழி கொண்ட படைப்பாளி இல்லை என்பதை…” என்னும் அகங்கார பீற்றலுக்கும் நீர் சொந்தக்காரர் என்பது தெரிந்தும் உம்முடைய வார்த்தைகளால் சொன்னால் பல நேரங்களில் நீர் ஒரு ‘கேனயன்’ என்று விளங்கிக் கொண்டும் கூட விலகிக் கொள்ள முடியாமல் கொண்ட கொள்கைக்காய் அவசியத் தேவைகளுக்கு கிடைக்கிற ஆதாரங்களைக் கூட பற்றிக் கொள்ளாமல் அல்லாடிக் கொண்டிருக்கிற எமது கட்சிக்காரர் மீது நீர் தெளித்திருக்கிற சேறு உம்மாலே கழுவப்பட வேண்டும் என்ற எண்ணத்தில் உமக்கு இந்த சட்ட அறிவிக்கை என்பதை நினைவில் கொள்க.

உமது 20.06.2012 தேதியிட்ட ஜெயமோகன்.இன் வளைத்தளத்தில்

“ஃபோர்டு பவுண்டேஷனின் பெருநிதிக் கிழவரான எம்.டி.முத்துக்குமாரசாமி காலச்சுவடுக்கு நிதியளித்த ஒரு நிறுவனத்தின் மூலநிதி ஃபோர்டு பவுண்டேஷன் அளித்ததே என வெளிப்படுத்தியிருக்கிறார். மாறி மாறி இவ்வாறு வெளிப்படுத்துவார்கள் என்றால் நல்லது தான் என்றே நான் நினைக்கிறேன். தமிழில் க்ரியாவும் காலச்சுவடும் எஸ்.வி.ராஜதுரையும் எல்லாம் பெற்ற பணத்தின் அளவு சராசரி வாசகனுக்கு கொஞ்சம் பிரமிப்பைத்தான் அளிக்கும். நாம் சாதாரணமாக வாசித்துச் செல்லும் கருத்துகளுக்கு இவ்வளவு பணமதிப்பா என நாம் வியப்போம். அடுத்தமுறை கொஞ்சம் கவனமாக புத்தகங்களை புரட்டிப் பார்ப்போம்”

உமது 23.06.2012 தியதி வெளியீட்டில்

“நான் அக்கட்டுரையிலேயே சுட்டிகாட்டியபடி நிதியுதவிகள் பெரும்பாலும் பலவகையான அறிவார்ந்த நோக்கங்கள் சொல்லப்பட்டு விதவிதமான பண்பாட்டு அமைப்புகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் வழியாகவே அளிக்கப்ப்படுகின்றன. எம்.டி.முத்துக்குமாரசாமி போல உள்ளிருந்தே ஒருவர் சுட்டிக்காட்டும்போதே நமக்கு உண்மை தெரிகிறது இல்லையேல் வாய்பே இல்லை”

“…அந்த பிற நிதியுதவிகளைச் சுட்டிக்காட்டும்போது காலச்சுவடு, க்ரியா, நீங்கள் என மூன்று பெயர்களையும் எடுத்துச்சொல்லி நான் பேசியமைக்குக் காரணம் நீங்கள் மூன்று தரப்பும்தான் உங்கள் நூல்களிலேயே பெற்றுக்கொண்ட நிதியைப்பற்றிய குறிப்புகளை அளித்திருக்கிறீர்கள் என்பதுதான்.”

“…உங்களுடைய பெரியார் சுயமரியாதை சமதர்ம்ம் என்ற நூலின் முதற்பதிப்பின் நான்காம் பக்கத்தில் சிறிய எழுத்துக்களில் அதன் ஆராய்ச்சி மற்றும் வெளியீட்டுக்காக நிதியுதவி செய்த அமைப்பின் பெயர் அதிகாரபூர்வமாகவே குறிப்பிடப்பட்டிருந்தது என்பது என் நினைவு இதைப் புதியதாகவும் நான் சொல்லவில்லை”

மேற்படி உமது விவரிப்புகளின் அனைத்து சொல், தொடர், வாக்கியம் ஆகியன தனித்தனியாயும் ஒன்று கூடியும் கொண்டு கூட்டியும் தரும் பொருளனைத்தும் நீர் உமது ‘அதி அறிவு மேன்மைத்தனம்!’ காட்டி அறத்தால் கழுவப்படாது புறத்தே மூன்றாம் தர திரவியம் தடவி அதற்கு வசீகரமொழியான சுயதம்பட்ட பட்டம் சூட்டி அதில் சுருட்டி வைக்கப்பட்டிருக்கும் சமுக்காளத்தில் வடிகட்டப்பட்ட, இட்டுகட்டப்பட்ட, கட்டி சமைக்கப்பட்ட, உற்றுப்பார்த்து உதறிவீசின் சுற்றமெல்லா அசிங்க மணமேற்றும் நெடிமிக்கப் பொய்கள், புனையப்பட்ட செய்திகள் எமது கட்சிக்காரரின் புகழ் குலைத்து மான நட்டமேற்படுத்தி எமது கட்சிக்காரருக்கு மன உளைச்சல் உண்டாக்கும் உருப்படிகள் ஆகும்.

உம்முடைய மேற்படி அவதூறுக்கு ‘விடியல்’ பதிப்பகத்தின் நேரிய பதிப்பாளர் மரணப்படுக்கையிலும் மகத்தான புத்தகங்களை மனதுக்குள் கனாக்கண்டு வடிவம் கொடுக்க தன் இறுதி மூச்சையும் பிடித்துக்கொண்டிருக்கும் புனிதர் விடியல் சிவா எதிர்வினை ஆற்றியவுடன் உமது ‘பல்டி அடிப்பு’ உத்தி தொடங்குகிறது. மீண்டுமே சொரணை கெட்ட ஜந்துக்கள் தமக்கே உரித்தான மொகரக்கட்டை வார்த்தைகளில் முகமூடி பூட்டிக்கொண்டு முகமன் கூறும் முகமாக சிவாவின் உடல்நிலை… இத்யாதி விஷயங்களைப் பேசி சட்ட நடவடிக்கை என்றவுடன் சந்துக்குள் புகுந்து கொண்டு மன்னிப்பு சித்தாந்தம் பேசி ஓடிப்போனீர்.

மீண்டுமே உலகளாவிய ஆய்வமைப்பான டபுள்யூ.எ.சி.சி. (W.A.C.C.) குறித்த கேரள, நைஜீரிய புளுகுகளிலும் உமது அப்பட்ட, கற்பனை உப்பிட்ட கூறல்களும் அவதூறு பரப்புதல்களுமே முன்னின்றுள்ளனவே யன்றி வேறொன்றுமில்லை.

“…அவர் சொன்னார்” “…இவர் சொன்னார்”, “…அந்த நண்பர்” “…அய்ந்தாண்டு” போன்ற சொல்லாடல்கள் உம்முடைய ஆதாரமற்ற அவதூறு பரப்பும் நோக்கம் மட்டுமே ஆன செயல்களை வெளிப்படுத்தி எமது கட்சிக்காரருக்கு கடும் மன உளைச்சலையும் சமூகத்தகுதிக் குறைப்பும் ஏற்படுத்தி இருக்கிறதே அன்றி வேறொன்றும் சாதிக்கவில்லை.

டபுள்யூ.எ.சி.சி. மீது உமக்கிருக்கும் ‘ஏதோ இழந்த’ கடுப்பும் அனாமத்து முத்துகிருஷ்ணன், உமது அங்காடி ரசிகன் பாண்டியன் உள்ளிட்ட உமது பலவீன முகமூடிகள், நீர் விரித்துள்ள சர்வதேச நிதிவலை… போன்றவை எதுவுமே எமது கட்சிக்காரரை ஆதாரப்பூர்வமாக நல்ல நோக்கோடு விமர்சனம் செய்வதாக அமையாமல் உமது வக்கிரத்தை நேர்மையும் நற்சிந்தனையும் சமூக அக்கறையும் பன்முக ஆளுமையும் கொண்ட எமது கட்சிக்காரர் தம் தோளில் தேய்த்து அதில் கொஞ்சத்தில் நீர் தோய்ந்தொழுகும் ஆர்வம் காட்டும் சபலமாகவும் வெளிப்பட்டு எமது கட்சிக்காரரை மன உளைச்சலுக்கும் அவரது சமூக தகுதி குறைப்புக்கும் ஆட்படுத்தி உள்ளது.

அடுத்து, 24.06.2012 தியதி உமது வெளியீட்டில்

“உங்கள் நிதியாதாரங்களைப்பற்றி ஆராய்ந்து கொண்டிருக்கிறேன். இன்னொரு தருணத்தில் விரிவாகவே எழுதுகிறேன். ஒன்று உங்களுக்காக வ. கீதா நிதி பெற்றிருக்கிறாரா? என்ற கோணத்தில் இரண்டு பாரதிதாசன் பல்கலையில் பெரியாரியலாய்வு இருக்கையில் கெளரவப்பேராசிரியராக நீங்கள் பணியாற்றியதை ஒட்டி அந்த இருக்கையின் நிதியாதாரம் என்ன என்று கோணத்தில்…”

மற்றும்

“எஸ்.வி.ராஜதுரை பற்றிய உங்கள் கருத்துகளை நான் ஏற்கவில்லை. அவர் நீங்கள் சொல்ல நினைக்கும் பொருளியல் நிலையிலும் இல்லை என்பதை நான் அறிவேன். எண்பதுகளின் இறுதியில் அவரது பொருளியல்நிலை எப்படி இருந்த்து? இப்போது எப்படி இருக்கிறது என அறியாதவனல்ல நான்! விருதுகளை ஏற்பதில் அவருக்கு பல தோரணைகள் தேவையாக இருக்கலாம்”.

“இந்த சின்ன்ஞ்சிறு விருதுகளுக்கும் சர்வதேசக் கவனத்தைப் பெற்றுத்தரும் பிரம்மாண்டமான கிறித்துவ நிதிவலைப் பின்னல்களின் உதவிகள் மற்றும் பிரச்சாரத்துக்குமான வேறுபாடு உங்களைவிட எஸ்.வி.ராஜதுரைக்குத் தெரிந்திருக்கிறது”.

“வ.கீதா நடத்திவரும் தன்னார்வக்குழு பற்றி ஒரு முழுமையான பொதுவிவாதம் தமிழில் தேவையாகிறது. நம் அறிவு ஜீவிகளுக்கும் தன்னார்வக் குழுக்களுக்கும் இடையேயான உறவுகள் பற்றி தன்னார்வக்குழு நடத்தும் எழுத்தாளர்களைப்பற்றி வெளிப்படையான பேச்சு உருவாகவேண்டும்”.

“எஸ்.வி.ராஜதுரை எனக்கு ‘பிரச்சனைகள்’ வந்திருக்கும் என ஊகிப்பதற்குக் காரணம் உண்டு”.

“உயிர்எழுத்து மாத இதழில் நான் இந்திய அமைதிப்படை பற்றி எழுதிய குறிப்பின் முன்பகுதி மட்டும் எடுத்துப் பிரசுரிக்கப்பட்டிருந்தது. கூடவே அதற்கு பதிலாக முறிந்தபனை நூலில் இருந்து சில பகுதிகளும் அதனுடன் அவ்விதழின் ஆசிரியர் சுதீர் செந்தில் என்னை கடுமையாக வசைபாடி எழுதிய ஒரு குறிப்பும் இருந்தது”.

“இதழ் வந்த சில நாட்களுக்குள் எனக்கு ஏராளமான தொலைபேசி அழைப்புகள் வர ஆரம்பித்தன. செல்பேசியை எடுத்ததுமே காது கூசும் வசைகள். வேறு வேலையில் இல்லை என்றால் வசைபாடுபவர்கள் அனைவரிடமும் நான் பேசினேன். முக்கால்வாசிப் பேருக்கு நான் யாரென்றே தெரியவில்லை. என்னை இதழாளர் என்று நினைத்தார்கள். பாரதிய ஜனதா கட்சி எம்.எல்.ஏ. என்றுகூட ஒருவர் சொன்னார்”.

“என்னுடைய எண் எப்படிக் கிடைத்தது என்று கேட்டேன் “எஸ்.எம்.எஸ். வந்திச்சி. கூப்பிட்டு கண்டியுங்கன்னு சொன்னாங்க அதான்” என்றார்கள். அவர்களுக்கு உயிரெழுத்து இதழோ எஸ்.வி.ராஜதுரையோ சுதீர்செந்திலோ கூட யாரென்று தெரிந்திருக்கவில்லை. கிட்டத்தட்ட தமிழ்நாட்டில் உள்ள எல்லா தமிழ் அமைப்புகளுக்கும் என்னுடைய செல்பேசி எண்ணை குறுஞ்செய்தியாக அனுப்பியிருக்கிறார்கள் எஸ்.வி.ராஜதுரையும் சுதீர் செந்திலும், கண்டிக்கும்படி கோரி தொலைபேசியில் மன்றாடியிருக்கிறார்கள். கிட்டத்தட்ட இரண்டு வாரம் இருநூறு அழைப்புகள் வரை வந்தன. வசைகளை கேட்பதை ஒரு பயிற்சியாகவே வைத்திருக்கிறேன் என்பதனால் நான் அதை ஒரு பெரிய விஷயமாக நினைக்கவில்லை”.

எமது கட்சிக்காரர் மீதான மேற்கண்ட உமது தொடர் அவதூறுகள் உம்மை நீர் பெரிய ‘லார்டு லபக்’ கென உமது அடிப்பொடிகளுக்கு காட்டிக்கொள்வதற்கும் உமது அசிங்க பலவீனங்கள் புரிந்தவர்களுக்கு உம்மை ‘வின்னர் வடிவேலாக’ பார்ப்பதற்கும் வழக்கம்போல் பயன்பட்டிருந்தால் எம் கட்சிக்காரர் தன் பழைய கோட்டில் அமர்ந்த மலம் மொய்த்த ஈ – நீ! ச்சீ! போ! என உம்மை அருவெருத்து விரட்டி ஒதுங்கி இருப்பார். ஆனால் உமது அவதூறு பரப்பலின் பின்னாக, அடிநாதமாக உமது வக்கிரமும், மூன்றாந்தர முட்டாள்தனமும், அறிவுகெட்ட – அற நெறிசாரா ‘உம்பாஷை ஹம்பக்கு’களும் மீறி எமது கட்சிக்காரரின் மனமொடிக்கும், தகுதி குறைக்கும், உமது தீய உட்கிடக்கையின் மேலெழுந்த அவதூறு பரப்பும் நோக்கமும் இருப்பதாலே எமது கட்சிக்காரர் இந்த சட்ட அறிவிக்கை மூலம் உம்மை நிபந்தனையற்ற மன்னிப்பு கோரவும், இழப்பீடு வழங்கவும், எச்சரிக்கிறார் என்பதறிக.

எமது கட்சிக்காரரின் புரிதல்படி ஆகப்பெரிய ஒரு கொம்பனாகவோ உலகளாவிய மேன்மை தாங்கிய நிறுவனங்களின் அளப்பறிய சேவை தொடர்ச்சியை இடையிட்டு தடுக்க முடிகிற ‘பயில்வானாகவோ’ எந்த கேனத்தனத்தின் தொடர்ச்சியாகவோ பல கோணத்திலும் பல்வேறு அமைப்புகளின் பல்கலை கழகங்களின் ஆய்வு இருக்கைகளின் நிதியாதாரங்களை ஆய்கிற வீர்ர், உளவாளியாகவோ ஆன எவராகவோ நீர் இல்லை எனும்போதும் நீர் உம்மை ஒரு ஆகப்பெரிய கொம்பனாக, ‘ஃபுல்’ தடுக்கி (புல் தடுக்கி அல்ல) பயில்வானாக, ‘007 ஜேம்ஸ்பாண்டாக’ “பிடிக்கிலேனா விட்டிருங்கோ…” வசனம் மூலம் உம்மை புல்லரிக்க வைத்த உமது ‘பாஷை’யில் சொன்னால் அதிகம் அறிவில்லாத ‘அவளுக்கோ’ பிறரை சுரண்டுகிற அறிவு மட்டுமே உடைய ‘அவாளுக்கோ’ காட்டிக்கொள்வதற்காகவோ அதன்மூலம் எதையோ இறுக்கி கட்டிக்கொள்வதற்காகவோ ‘எங்கேயோ போற ஆத்தா எம்மேல ஏறும்’ சடங்கு பிடிக்காது உம்மை கண்டிக்கிறார் உம் செயலை சட்டத்தின்முன் அம்பலப்படுத்திட இந்த சட்ட அறிவிக்கை மூலம் முனைப்பு முன்னெடுக்கிறார்.

உமது அவதூறு செய்திகளுக்கெதிராய் சட்டப்படி நடவடிக்கைகள் தொடரும் என அறிவித்தவுடன் ஏதோ ஒரு முட்டாளின் பேச்சு கேட்டு மிரட்டும் தொனியில் உமது மரபியல்பின் தொடர் வரியில் ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் தோன்றுயரா அளவு அறஞ்சார்ந்த மனமும் ஆய்வு சார்ந்த அறிவும் அர்ப்பணிப்பு உணர்வும் உம்மைப் போன்ற வகையறாக்களால் அசைத்துக்கூடப் பார்க்க முடியாத துணிவும் நேர்மைத்திறமும் தனித்தியங்கும் தகுதியும் கொண்டிலங்கும் – இன்றைய காலகட்டத்தின் தனிப்பெரும் ஆய்வுலக நாயகி தோழர் வ.கீதாவை எல்லாம் வம்பிக்கிழுப்பது உமது தோன்றலின் பிறழ்வை யும் உமது அடிப்படை மனச்சான்று இன்மையையுமே காட்டுவதென்று புறந்தள்ளி மேல் செல்லினும் உமது “…ஆராய்வேன்” … “அவரது பொருளாதார நிலை அறியாதவனல்ல” “…விருதுகளை ஏற்பதில்… தோரணை” “…பொது விவாதம் தேவை….” “…உயிர் எழுத்து சுதீர் செந்தில் வசை”, “எஸ்.எம்.எஸ்.” ‘இத்யாதி… ‘இத்யாதி’ மிரட்டல் தொனி ‘கெக்கே பிக்கேக்கள்’ வெறுமனே உமது மன வக்கிர வடிகாலகவும் பெரியவர்கள் மீதான சேறு தெளிப்பின் மூலம் அந்தரங்கமாய் சொறிந்து கொள்வதற்கும் மட்டுமே பயன்பட்டு உமக்கு சிலிர்ப்பேற்படுத்தி அடங்கிவிடும் என நீர் நினைக்க – தம் கடமையே கண்ணாகக் கொண்டு மனிதநேயப் பணிகளுக்காக தம்மையே ஈகைச் சுடர்களாய் ஈந்து வாழ்பவர்களை தேவையில்லாமல் சீண்டி ‘பெரிய ஆளாக’ நினைக்கும் உம்மைப் போன்றவர்களுக்கும் சட்டம் தகுந்த சாட்டையடி கொடுக்கும் என்பதை உணர்த்திடும் முகமனே இந்த சட்ட அறிவிக்கை என அறிக.

 மேற்படி செய்திகள் உம்மால் சட்டத்திற்கு புறம்பாக தீய உட்கிடக்கையுடன் கூடிய நோக்கில் ஊடக நெறிக்கு எதிரான போக்கில் வெளியிடப்பட்டு பரப்பப்பட்டு எமது கட்சிக்காரரின் சமூகத்தகுதி குறைக்கப்பட்டு உள்ளது.
 எமது கட்சிக்காரர் உமது மேற்கண்ட செயலால் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளார்.
 எமது கட்சிக்காரரின் பல்லாண்டு கால அரசியல், சமூக, மாண்புகள் உம்மால் கீழ்நிலைப்படுத்தப்பட்டுள்ளன.
 எமது கட்சிக்காரர் உம்மால் தாங்கொணா துயரத்திற்கு ஆட்பட்டுள்ளார் அலைகழிப்பிற்கு உள்ளாகி உள்ளார்.
 எமது கட்சிக்காரருக்கு உம்மால் ஏற்பட்டுள்ள அவமானம் அவருக்கு ஈடு செய்யமுடியா இழப்பை ஏற்படுத்தி உள்ளது.
 மேற்குறிப்பிட்ட வெளியீடு பரப்புதல் எமது கட்சிக்காரருக்கு மான நட்டம் ஏற்படுத்தி உள்ளது.
 மேற்படி தகவல் பரப்புதல் மூலம் நீர் எமது கட்சிக்காரரை தகுதியிறக்கம் செய்துள்ளீர்.
 உமது வெளியீடு எமது கட்சிக்காரரை கொச்சைப்படுத்தி இழிவுபடுத்துகிறது.
 உமது மேற்படி செய்தி வெளியீடு அனைத்து நிலைகளிலும் எமது கட்சிக்காரருக்கு எதிரானதாக நிற்கிறது. எமது கட்சிக்காரரின் நற்பெயருக்கு களங்கம் விளைவித்துள்ள உமது மேற்படி அவதூறு செய்தி பரப்புதல் எம் கட்சிக்காரர் உம்மீது குற்றவியல், உரிமையியல் பிரிவுகளில் மான நட்ட ஈடு வழக்கு தொடர வழக்கெழுமூலம் எழுப்பி உள்ளது.
 உமது செயல் உம்மீது குறைந்தபட்சமாக குறிப்பிடினும் ரூ.20,00,000 (இருபது இலட்ச ரூபாய்) நட்ட ஈடு வழங்கிடக் கோரி வழக்கு தொடர ஏதுவாக உள்ளது.
 உமது செயல் உம்மீது இந்திய தண்டனைச் சட்டப்பிரிவுகள் 499, 500-ன் கீழ் வழக்கு தொடர காரணியாகி நிற்கிறது.
 உம்மீது சட்டம் சுட்டுகிற, எமது கட்சிக்காரர் உகந்ததெனவும் உசிதமெனவும் கருதும் பிற வகைகளிலும் நடவடிக்கைத் தொடர உமது அவதூறு பரப்பு தகவல் ஆதாரமாகிறது.

காலக்கெடு / வினைச்சொல் / எச்சரிக்கை

மேற்படி எமது கட்சிக்காரரை அவர் மீது அவதூறு கிளப்பி அவரது சமூக தகுதி குறைத்திட உமது வளைத்தளத்தின் மூலம் தகவல் பரப்பி அவரையும் அவர் குடும்பத்தைச் சார்ந்தோரையும் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாக்கியதற்கு 15 தினங்களுக்குள் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரவும் ரூ.20,00,000/- (இருபது இலட்ச ரூபாய்) இழப்பீடு வழங்கிடவும் நீர் இதன் மூலம் அறிவுறுத்தப்படுகிறீர்.

இல்லையேல்…..

நீர்

“தன் தலையில் தானே மண் வாரியிட்டுக் கொள்ளும் யானை போல்” நீரே உமது முகத்திரை கிழித்து வெளிபட்டு உமது சித்து வேலைகளுக்கு உலைவைக்கப்படும் சூழலுக்கு ஆளாவீர்! பல்முனை வழக்கு சந்திப்பீர்!!

ரூ.20,00,000/- (ரூபாய் இருபது இலட்சம்) நட்ட ஈட்டு தொகையுடன் கூடி இந்த சட்ட அறிவிக்கை கட்டணம் ரூ.2,000/- (ரூபாய் இரண்டாயிரம்) சேர்த்து அளித்திட வேண்டியவராவீர்.

சிறப்புரிமை தக்கவைப்பு

உமது பொறுப்பற்ற, அசட்டையான, அபத்தமான பிறர் வாழ்வின் உள்ளுறை அறியா, உண்மை நிலை காணா தீய உட்கிடக்கையுடன், கடும் மன உளைச்சலும் ஈடு செய்ய முடியாத இழப்பும் ஏற்படுத்திய எம் கட்சிக்காரருக்கு எதிரான உமது குற்றவியல், உரிமையியல் செயல்பாடுகளை வேண்டும் வேளைகளில் சமூக, அரசியல், பத்திரிகைசார் களங்களில் முன்வைக்கும் உரிமையும் உமக்கு இணை அறிவிக்கை, விவரக்குறிப்பு, விவரணை, தொடர்பமை விளக்கம் அளித்திடும் உரிமைகளும் சிறப்புரிமைகளாக எம்மால் தக்க வைத்துக் கொள்ளப்படுகின்றன.

இந்த சட்ட அறிவிக்கையின் உள்ளடக்க உள்ளுறைக் கூற்றுக்களில் சுட்டப்பட்டுள்ளவை எமக்கு எதிரான உமது அவதூறுகளுக்கு மோசடிகளுக்கு எதிராக தொடுக்கப்படும் சட்ட முன்வைப்புகளுக்கு ஒரு முன் ஆவணமெனவும் கொள்க.

இந்த சட்ட அறிவிக்கை உமக்கு எதிராக தொடரப்படும் அனைத்து உரிமையியல், குற்றவியல், இழப்பு கேட்பீடு வழக்குகளுக்கும் ஆனது என்பதறிக!

வழக்கு இட ஆள்வரை பாதிக்கப்பட்டோர் வசிப்பிடமும், உமது வெளியீடு எம்மால் படிக்கப்பட்ட, உமது வெளியீடு உம்மால் பரப்பப்பட்ட எமது கட்சிக்காரரின் தகுதி தாழ்த்தப்பட்ட, எம் கட்சிக்காரரின் மானம் நட்டப்பட்ட, எமது கட்சிக்காரருக்கு சட்டப்படி வாய்ப்பிருக்கிற இடமாகவே அமையும் என்பதறிக!

வினைகளுக்கும் விளைவுகளுக்கும் விளையும் செலவுகளுக்கும் நீரே பொறுப்பு! நியாயம் எதிர்கொள்க!!

என படித்தேன் – கேட்டேன் – சரி

(கே.விஜயன், வழக்குரஞர்) எஸ்.வி.ராஜதுரை (எ) கே.மனோகரன்

முந்தைய கட்டுரைமொழி 6,மலையாளவாதம்
அடுத்த கட்டுரைஎஸ்.வி.ராஜதுரைக்கு அன்புடன்….