எஸ்.வி.ராஜதுரை என் மீது தொடர்ந்த வழக்கு பற்றி அவரது வழக்கறிஞர் விஜயன் உதவியுடன் அவருக்குச் சாதகமான நண்பர்கள் உடைய ஜூனியர் விகடன் போன்ற இதழ்களில் செய்திகள் வெளியிட்டு வருகிறார். என் வாசகர்களுக்காக ஒரு விளக்கம்.
அன்னியநிதி
தமிழில் எழுதும் ஓர் எழுத்தாளனாகவும், வாசகனாகவும் எப்போதும் எனக்குள்ள ஓர் ஐயத்தை பதிவுசெய்தபடியே இருக்கிறேன். இங்கே பேசப்படும் கணிசமான கருத்துக்களுக்குப் பின்னால் அன்னிய நிதியுதவி இருக்கிறது என்பதுதான் அது.
இடதுசாரி இயக்கங்கள் சோவியத் நிதியுதவியை வெளிப்படையாகவே பெற்றவர்கள். பிறரை அவர்கள் ஏகாதிபத்திய நிதியுதவிபெறுபவர்கள் என குற்றம்சாட்டியிருக்கிறார்கள். தமிழில் ஐம்பதாண்டுகளுக்கும் மேலாக இந்த விவகாரம் அவ்வப்போது பேசப்பட்டிருக்கிறது.
சோவியத் ருஷ்யாவின் வீழ்ச்சிக்குப்பின், இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கு எதிரான சிந்தனைகளுக்காக ஏகாதிபத்தியச் சார்பு அமைப்புகளும், இந்தியப் பண்பாட்டுக்கு எதிராக மதமாற்ற அமைப்புகளும் நிதியளிக்கின்றன என்ற பேச்சும் பலமுறை பதிவாகியிருக்கிறது. குறிப்பாக இடதுசாரி இதழ்கள் பலமுறை இக்குற்றச்சாட்டுகளைப் பதிவுசெய்திருக்கிறார்கள்.
இங்கே பேசப்படும் ஒரு கருத்தைப் பரிசீலிப்பதற்கு முன் அதை எழுதியவருக்கு இந்தப் பின்னணி ஏதேனுமுண்டா என்பதையும் பரிசீலிக்கவேண்டுமென்பது இச்சூழலில் செயல்படும் ஒருவன் என்ற முறையில் என்னுடைய கோரிக்கை.
ஓர் எழுத்தாளனாகிய நான் அவ்வாறு நிதியளிக்கும் நிறுவனங்களின் கணக்குவழக்கு நூல்களைத் தேடிச்செல்லவோ ஆதாரங்களை அளிக்கவோ முடியாது. இவ்விஷயமாக இதுவரை பேசிவந்த இடதுசாரிகள் உட்பட எவரும் நேரடி ஆதாரங்கள் அளித்ததில்லை, ஏனென்றால் அது சாத்தியமே இல்லை.
ஆகவே தற்செயலாக அச்சில் வெளிவந்த செய்திகளையும், சம்பந்தப்பட்டவர்களாலோ அவர்களின் முன்னாள் நண்பர்களாலோ சுட்டப்படும் தகவல்களையும் வாசகர்களுக்குச் சுட்டிக்காட்டி அவற்றை முன்வைத்து வாசகர்கள் இதை விவாதிக்கவேண்டும் என்று கோரி வருகிறேன்.
இது எந்த தனிநபருக்கும் எதிரான கருத்து அல்ல. உண்மையில் தமிழ்ச்சூழலில் செயல்படும் பெரும்பாலானவர்களின் தனிவாழ்க்கையை நான் நன்றாகவே அறிவேன். சங்கடமூட்டும் உண்மைகளைக்கூட. ஒரு தருணத்திலேனும் ஒரு தனிநபரின் அந்தரங்க வாழ்க்கை பற்றிய விவாதத்தில் நான் இறங்கியதில்லை. அவர்களின் தனிவாழ்க்கை ஊடகங்கள் முழுக்க பேசப்பட்ட காலகட்டங்களில்கூட அவர்களைப்பற்றிப் பேசியதில்லை, எழுதியதில்லை. மாறாக அவர்கள் அந்தக் காலகட்டத்தைக் கடந்துவருவதற்கான உதவிகளையே செய்திருக்கிறேன். இங்கே தனிவாழ்க்கை ஊடகங்களில் பேசப்பட்ட எவரேனும் இல்லை என்று சொல்லட்டும் பார்ப்போம்.
ஏனென்றால் நான் உறுதியான ஒழுக்கவாதி. அதனாலேயே பிறருடைய ஒழுக்கம் பற்றி எந்தத் தீர்ப்பையும் நான் அளிப்பதில்லை. ஒழுக்கம்சார்ந்து எவரையும் மதிப்பிடுவதுமில்லை. அது அந்நபரின் ஆன்மீகப்பயணம் சார்ந்தது, மிகமிக அந்தரங்கமானது என்பதே என் எண்ணம். வளர்ந்த மனிதர் ஒருவருடைய ஒழுக்கம் பற்றி விமர்சிப்பதற்கு அவரது குருவுக்கு மட்டுமே உரிமையுண்டு என்பதே என் தரப்பு.
நான் சொல்வது நம் சூழலில் உள்ள கருத்துக்களின் உண்மையான பெறுமதியை வாசகர்கள் மதிப்பிடுவதைப்பற்றி மட்டுமே. உண்மை மீதான விருப்பு ஒன்றால் மட்டுமே இயக்கப்படும் ஒன்றாகவே நான் என் குரலைக் காண்கிறேன். அந்தக் குரலை முன்வைக்கும் உரிமையும் பொறுப்பும் எழுத்தாளனாக எனக்கு உண்டு என்றே நினைக்கிறேன். ஆகவே நான் சொல்லும் எல்லாக்கருத்துக்கும் நான் பொறுப்பேற்றுக்கொள்கிறேன்.
நான் வழக்கறிஞனோ துப்பறிபவனோ அல்ல. நேர்மையான கருத்தியல்விவாத நோக்கில், உண்மை நிற்க வேண்டுமென்ற விருப்பில் என் கருத்துக்களைச் சொல்கிறேன். ஒருவேளை அதற்காக நான் தாக்கப்பட்டாலோ சிறைப்பட்டாலோகூட அதை என் பணியின் ஒரு பகுதியாகவே கொள்வேன். அதில் எந்த அச்சமும் இல்லை, வருத்தமும் இல்லை.
ஏனென்றால் என் சொந்த நலனுக்காகவோ சொந்தக் காழ்ப்புகளுக்காகவோ நான் செயல்படுவதில்லை. தமிழின் முதன்மையான படைப்புகளை எழுதிய எனக்கு புகழும் வாசகர்வட்டமும் எல்லாம் அந்நூல்களாலேயே வருகின்றன. இந்த விவாதங்கள் இலக்கியத்தளத்தில் எதிர்மறையாகவே விளைவுகளை உருவாக்குகின்றன என நான் அறிவேன். ஆனாலும் இதை நான் செய்வது நான் நம்பும் விழுமியங்களுக்காக மட்டுமே
ஓர் எழுத்தாளனாக என்னை மதிப்பிடவேண்டியது காலம்தான். என் காலகட்டத்தை நோக்கி நான் செய்யவேண்டியதைச் செய்தேன் என்ற நிறைவே எனக்குப்போதும்.
நமது கருத்துக்களின் பின்னாலுள்ள நிதிவலைப்பின்னல் பற்றி நான் தொடர்ச்சியாக கவனப்படுத்தி வருகிறேன். ஏற்கனவே இடதுசாரிகள் இதைப்பற்றிப் பேசியிருந்தாலும் நான் பேசும்போது அது மிகுந்த அழுத்தம் பெறுகிறது. வாசக மனதில் ஓர் ஆழமான பதிவை உருவாக்குகிறது. ஆகவேதான் நம் சூழலில் இத்தனை பதற்றம் ஏற்படுகிறது. நான் அதைப் புரிந்துகொள்கிறேன்.
உண்மையில் இவ்விளைவுக்காக நிறைவே கொள்கிறேன். நான் நினைத்தது நம் கருத்துச்சூழலில் புழங்கும் அன்னியநிதி என்ற விஷயம் கவனிக்கப்படாமல் போகக்கூடாது, ஒவ்வொரு வாசகனும் இதை உள்ளூரவேனும் உணர்ந்திருக்கவேண்டும் என்றுதான். அது நிகழ்கிறது.
தமிழ்ச்சிற்றிதழ் சூழலில் எவ்வளவோ கடும் விவாதங்கள் நடந்திருக்கின்றன. தனிமனிதத் தாக்குதல்களின் உச்சம் இங்கே நிகழ்ந்திருக்கிறது. அபூர்வமாகக் கைகலப்புகள் நடந்துள்ளன. எந்த தருணத்திலும் அவை ஊடக எல்லைக்குள்ளேயே நின்றுள்ளன. இப்போது இந்த விவாதம் சூழலில் வரவே கூடாதென்று நினைக்கிறார்கள். இதன் அடுத்தடுத்த படிகள் பேசப்படக்கூடாதென விரும்புகிறார்கள். அந்த அச்சத்தையும் தடுமாற்றத்தையும் புரிந்துகொள்கிறேன்.
நடந்தது என்ன?
அன்னியநிதி பற்றி ஓர் விவாதம் இயல்பாக இங்கே எழுந்து வந்தது. எம்.டி.முத்துக்குமாரசாமி ‘இந்தியா ஒரு தேசமே அல்ல’ என்றவகையில் கருத்து சொல்லும்போது அவர் பணியாற்றிய ஃபோர்டு ஃபவுண்டேஷனுடன் இணைத்தே அதை வாசகர் புரிந்துகொள்ள முடியும் என்று நான் எழுதினேன்.
விளைவாக எம்.டி.முத்துக்குமாரசாமி ஃபோர்டு ஃபவுண்டேஷனின் நிதி பெறும் பிறரை சுட்டிக்காட்டினார். ஃபோர்டு ஃபவுண்டேஷன் ஒன்றும் தவறான அமைப்பு அல்ல என்று சுட்டிக்காட்டுவதே அவரது நோக்கம். ஆனால் இந்திய அரசே ஃபோர்டு ஃபவுண்டேஷன் உட்பட அன்னிய நிதி பெறும் அமைப்புக்களைக் கண்காணிக்க ஆரம்பித்தபோது அவரது தரப்பு அடங்கிப்போனது.
அதன் நீட்சியாக நான் இந்திய எதிர்ப்பு பேசும் எஸ்.வி.ராஜதுரை போன்றவர்களின் நிதியாதாரங்களை வாசகர்கள் அறிந்துகொள்ளவேண்டியிருக்கிறது என நான் எழுதினேன். இதையே எஸ்.வி.ராஜதுரை அவதூறு என குற்றம் சாட்டியிருக்கிறார்.
எஸ்.வி.ராஜதுரையைத் தனிப்பட்ட முறையில் எனக்குத் தெரியாது, பொதுநண்பர்கள் மூலம் அறிந்ததோடு சரி. அவரது இலக்கிய நூல்களை வாசித்திருக்கிறேன். அவறைப்பற்றிய என் மதிப்பை எழுதியுமிருக்கிறேன்.அவர்மேல் எந்தக் கசப்பும் காழ்ப்பும் எனக்கிருக்க வாய்ப்பில்லை.
என்னுடைய கருத்தின் ஆதாரம் ஒன்றுதான். தமிழகத்தில் உள்ள தீவிர இடதுசாரிகளால் இருபதாண்டுக்காலத்துக்கும் மேலாக தன்னார்வக்குழுக்களிடம் நிதிபெற்று செயல்படுபவர் என்றும் அன்னியநிதி பெறும் அமைப்புகளுடன் தொடர்புடையவர் என்றும் எஸ்.வி.ராஜதுரை சுட்டிக்காட்டப்படுகிறார்.
புதியஜனநாயகம் 1988 ஜூலை 16-31 இதழில் ஆர்.கெ என்பவரின் அதைப்பற்றிய விரிவான கட்டுரை எஸ்.வி.ராஜதுரையின் படத்துடன் வெளிவந்துள்ளது. அந்தக்கட்டுரைக்கு மறுப்பு தெரிவிக்கவோ மானநஷ்ட வழக்குபோடவோ எஸ்.வி.ராஜதுரை முயலவில்லை
எஸ்.வி.ராஜதுரை இந்தக்காலகட்டத்தில் கிளாட் ஆல்வரிஸ் என்பவரது தன்னார்வக்குழுவில் பணியாற்றினார். அந்தக் குழு அன்னியநிதி பெறக்கூடியது. அந்த விஷயத்தை அவரது இடதுசாரி தோழர்கள் சுட்டிக்காட்டினார்கள். அவர்கள் இந்தக்காரணத்தால் எஸ்.வி.ராஜதுரையை ஒதுக்கிவைத்தார்கள். இந்தவிஷயத்தை புலவர் கலியபெருமாள் எழுதிய ‘மக்கள்துணையோடு மரணத்தை வென்றேன்’ என்ற தலைப்பில் 2006இல் வெளிவந்த நூலில் 25 ஆம் பக்கத்தில் உள்ள ‘உருக்குமனிதர் குழந்தை மனது’ என்ற முன்னுரையில் எஸ்.வி.ராஜதுரையே எழுதியிருக்கிறார்
எஸ்.வி.ராஜதுரை எழுதிய ‘Towards a Non Brahmin Millennium: From Iyothee Thass to Periyar’ என்னும் ஆங்கில நூலின் முதல் பதிப்பில் முன்னுரையில் None of this would have been possible without the support of Pradip Thomas and World Association for Christian Communication who were there at the very beginning, and who enabled us to begin work”. என்று தெளிவாகவே சொல்லப்பட்டுள்ளது.WACC என்ற உலகளாவிய மிகப்பிரம்மாண்டமான அமைப்பு கிறித்தவ மதவாதச் சிந்தனைகளை உலகமெங்கும் ஊடகங்களில் பரப்புவதற்காக உருவாக்கப்பட்டது என்பது அவ்வமைப்பின் அதிகாரபூர்வ இணையதளத்திலேயே குறிப்பிடப்பட்டுள்ளது.
இதைத்தவிர பல்வேறு இணையதளங்களில் பல இடதுசாரி எழுத்தாளர்கள் எஸ்.வி.ராஜதுரை நிதியுதவி பெற்று எழுதுபவர் என்பதைப் பதிவுசெய்திருக்கிறார்கள். உதாரணமாக அசோக் யோகன் என்ற இடதுசாரிச் சிந்தனையாளர் ’இனியொரு’ என்னும் இடதுசாரி இணைய இதழில் ’எஸ்.வி.ராஜதுரை – பொய்கள், மறுபடி மறுபடி பொய்கள்!’ என்ற கட்டுரையில் எஸ்.வி.ராஜதுரை எவாஞ்சலிகா அக்காதமியா என்ற மதப்பரப்பு அமைப்பால் நிதியுதவிசெய்யப்படும் INSD என்ற அமைப்புடன் தொடர்புடையவர் என்று தெளிவாகவே குற்றம்சாட்டுகிறார்.
‘ ஆண்மையிருந்தால் நான் சொல்வது அவதூறு என நிரூபியுங்கள்’ என்கிறார். [ http://inioru.com/?p=7440 ] ராஜபட்சேவுக்கு ஆதரவானவர்கள் நடத்திய மாநாட்டுக்குச் சென்று புலிகளுக்கு எதிராக ராஜதுரை பேசுவதற்கு அந்நிதியுதவியே காரணம் என அசோக் யோகன் குற்றம் சாட்டுகிறார்.
இந்த எந்தக்குற்றச்சாட்டுக்கும் எஸ்.வி.ராஜதுரை ஆதாரபூர்வமாக மறுப்பு சொன்னதோ மானநஷ்ட வழக்கு போட்டதோ இல்லை. ஆகவே ஒரு பொதுவாசகனாகிய நான் இவ்விஷயங்களை எஸ்.விராஜதுரையின் கட்டுரைகளின் இந்திய எதிர்ப்பு, இந்தியப்பண்பாட்டு எதிர்ப்புக் கருத்துக்களுடன் இணைத்துக்கொண்டு சிந்திக்கிறேன். இது நம் சூழலில் உண்மையின்மீதான பற்றுடன் செயல்படும் ஒவ்வொருவரும் செய்தாகவேண்டும் என நினைக்கிறேன். இதையே எழுதினேன்.
ஆக, இது தனிப்பட்ட அவதூறு அல்ல. இந்தக்குற்றச்சாட்டு நான் என் கற்பனையில் இருந்து உருவாக்கியதுமல்ல. எந்த உள்நோக்குடன் புனையப்பட்டதும் அல்ல. நம் கருத்துச்சூழலில் செல்வாக்குடன் உள்ள இந்த ஐயத்தை நான் என் சிந்தனைகளுக்கு ஆதாரமாகக் கொள்கிறேன்.
நான் இவற்றை எஸ்.இ.ராஜதுரை மேல் குற்றம்சாட்டவில்லை. ஏற்கனவே சூழலில் எழுத்துவடிவிலேயே இருந்துவரும் குற்றச்சாட்டுகளைச் சுட்டிக்காட்டுகிறேன்,அவ்வளவுதான். எஸ்.வி.ராஜதுரை இவற்றை ஆதாரபூர்வமாக மறுப்பாரென்றால் நான் என் கருத்தை மாற்றிக்கொள்கிறேன். மறுக்கவேண்டும் எனக் கோருகிறேன். இதில் என்ன அவதூறு உள்ளது?
ராஜதுரையின் அவதூறு
எஸ்.வி.ராஜதுரை விஷயமாக என் நண்பர் விடியல்சிவா ஒரு கடிதம் எழுதினார். அதில் எஸ்.வி.ராஜதுரையை ஆகா ஓகோ என புகழ்ந்திருந்தார். நான் அளித்த பதிலுக்கு அவர் அளித்த பதிலில் ‘என் சடலத்தைக்கூட நீங்கள் பார்க்கக் கூடாது’ என்று சொல்லியிருந்தார். அதுகுறித்து சிவாவிடம் பேச நான் முயன்றேன். அவர் பேசும் நிலையில் இல்லை, படுத்த படுக்கையாக இருக்கிறார் என்றார்கள். சிவா அவரது நோய்பற்றிப் பேசுபவரே அல்ல. ஆனால் எந்த நேரமும் தனக்கு நோய் நோய் என்று சொல்பவர் எஸ்.வி.ராஜதுரைதான். எனக்கு ஐயத்தை அளித்தது இது. மேலும் எஸ்.வி.ராஜதுரை விடியல் இணையப்பக்கத்தை சிலகாலமாக கவனித்துவருகிறார்.
எஸ்.வி.ராஜதுரை அவரே சிவா பேரில் கடிதங்களை அனுப்பியிருக்கிறார் என்று ரவி என்ற ஈழ எழுத்தாளர் எழுதியிருந்தார். சிவாவின் உயிர்நண்பர் , இயக்கத்தோழர் ரவி. சிவாவைப் பார்ப்பதற்காக இந்தியா வந்து சிவாவுடன் தங்கி இருந்தவர். சிவாவிடம் எஸ்.வி.ராஜதுரையின் கடிதத்தை அவர்தான் சொல்லியிருக்கிறார். எஸ்.வி.ராஜதுரை செய்தது மிகப்பெரிய அநீதி என்றும், ஒருபோதும் நோயைப்பற்றி பேசுபவரல்ல. அந்தக் கடிதம் சிவாவை புண்படுத்தியது என்கிறார்.
அந்தத் தகவல் எனக்கு ஆழமான மனவருத்தத்தை அளித்தது. நான் ஒரு பொதுவெளியில் ஏற்கனவே பேசப்பட்ட ஒரு விஷயத்தைச் சுட்டிக்காட்டியதை எஸ்.வி.ராஜதுரை எதிர்கொண்டவிதம் மனக்கசப்படையச்செய்தது. [ http://ndpfront.com/tamil/index.php/articles/articles/guest/1342-2012-07-31-07-31-21 ]
ரவி எழுதிய குறிப்பு அனாமதேய இணையதளத்தில் வரவில்லை. ND FRONT என்ற அவர்களின் அரசியல் அவர்களின் அமைப்பின் அதிகாரபூர்வ இணையதளத்தில், அஞ்சலிக்கட்டுரையில் வெளிவந்துள்ளது. ரவியை நன்கறிந்த எஸ்.வி.ராஜதுரை அவர் மேல் அவதூறு வழக்கு தொடுக்கவில்லை. மறுக்கக்கூட இல்லை.
ராஜதுரை செய்தது அப்பட்டமான உளவியல் தாக்குதல். தன்னை உணர்சிவேடங்கள்மூலம் பாதுகாக்கும் செயல். அதற்காகவும் அவரது வேறு அவதூறுகளுக்காகவும் நான் அவர் மேல் அவதூறு வழக்கு தொடுக்கவிருக்கிறேன்.
இந்த வழக்கு
உண்மையில் இந்தியாவில் எந்த ஒரு கருத்தையும் தனிப்பட்ட தாக்குதலாகக் காட்டி, மனம் புண்பட்டதாகச் சொல்லி, நீதிமன்றம் செல்லமுடியும். அதன்மூலம் அக்கருத்தைத் தற்காலிகமாகத் தடைசெய்து நிறுத்தவும் முடியும். சொன்னவரை நீண்ட சட்டப்போருக்குள்ளாக்கவும் முடியும். ஆகவே கருத்துலக விவாதங்களை நீதிமன்றம் கொண்டுசெல்வதென்பது கருத்துலகையே முடக்குவதாகும்.
ஏனென்றால் அதை முன்னுதாரண வழக்கமாகக் கொண்டால் எஸ்,வி.ராஜதுரைன் ஒவ்வொரு கட்டுரைக்கும் அவரை நீதிமன்றம் இழுக்கமுடியும். அப்பட்டமான நேரடி வசைகளைக்கூட நீதிமன்றம் கொண்டுசெல்வது என்பது கருத்துலகச் செயல்பாட்டில் சரியான தொடக்கம் அல்ல. எஸ்.வி.ராஜதுரையின் தனிப்பட்ட அவதூறை நான் பொருட்படுத்தாதது இதனாலேயே. இப்போதுகூட எஸ்.வி.ராஜதுரை நீதிமன்றம் சென்றிருப்பதனாலேயே நானும் செல்கிறேன்.
இந்திய தேசியத்தின் மீதும் இந்திய அரசமைப்பின்மீதும் நம்பிக்கையற்றவராகத் தோற்றமளித்து இதுவரை பேசிவந்த ராஜதுரை இன்று நீதிமன்றம் மீது நம்பிக்கை கொண்டு செயல்பட்டிருப்பதை ஆச்சரியமாகவே பார்க்கிறேன்.
என்னுடைய தரப்பை நீதிமன்றத்தில் முன்வைக்கிறேன். இந்திய தேசிய நலனுக்க்கும், இந்தியாவின் சமூக ஒருமைப்பாட்டுக்கும் எதிராக முன்வைக்கப்பட்ட கருத்துக்களை ஐயப்படவும் விவாதிக்கவும் எனக்கு உரிமை உண்டு. அது தனிப்பட்ட அவதூறு அல்ல. அந்த விவாத உரிமையைத் தடைசெய்ய முயல்வது என்பது ஜனநாயக விரோதம்.
பார்வைக்கு http://inioru.com/?p=7440″>அசோக் யோகனின் கட்டுரை
http://ndpfront.com/tamil/index.php/articles/articles/guest/1342-2012-07-31-07-31-21″>ரவி எழுதிய கட்டுரை