அன்புள்ள ஜெ,
உங்கள் வலையில் வரும் கடிதங்களை கூர்ந்து படிப்பதுண்டு. குறிப்பாக நான் கவனித்தது என்னவென்றால், மென்பொருள் துறையில் பணிபுரியும் உங்கள் வாசகர்கள் அனைவருமே தங்கள் தொழில் குறித்த அறிமுகம் செய்துகொள்ளும்போது “சாப்ட்வேரில் கூலித்தொழில் செய்கிறேன்” என்று சொல்வதன் காரணம் மட்டும் புரியவில்லை.
கூலித்தொழில் என்பது எந்தவிதத்திலும் மட்டமல்ல எனும்போதும், அதன் பயன்பாட்டு தொனி என்னை மிகவும் ஆச்சரியப்படுத்துகிறது. குளிர்சாதன அறையில் அமர்ந்து சுகவாசியாக செய்யும் வேலையை, கைநிறைய மட்டுமல்ல, வங்கி நிறைய, நமது அன்றாட தேவைக்கும் அதிகமாகவே வாரிக்கொடுக்கும் ஒரு வேலையை, கிராமத்திலிருந்து வந்திருந்தாலும் பல நாடுகளுக்கு நம்மை இலவசமாகவே அனுப்புகிற அங்கும் ஒரு நல்ல வாழ்கையையும் கொடுக்கிற ஒரு வேலையை கூலித்தொழில் என்று மீண்டும் மீண்டும் படிக்கும்போது ஆச்சரியமாகவும் அதிர்ச்சியாகவும் இருக்கிறது.
ஒருவனுக்கு வாழ்கையை கொடுத்த, செய்யும் தொழில்மேல் இவ்வளவு கீழான ஒரு மதிப்பீடு ஏன் என்பது புரியவில்லை. நான் கூட ஒருமுறை உங்களுக்கு எழுதும்போது, ஏற்கனவே இருக்கும் கமிட்மெண்ட்களுக்காக ஓடுகிறேன் என்று மட்டும் சொன்னதாகவே ஞாபகம். இது ஒருவகையான கற்பிக்கப்பட்ட தாழ்வுணர்ச்சி என்றே தோன்றுகிறது.
இப்படி ஓரிருவர் அல்ல, உங்களுக்கு எழுதும் பெரும்பாலானவர்களின் கூற்றாக இருப்பதால், அதையும் நீங்கள் திருத்துவீர்கள் என்று எண்ணியிருந்தேன். இந்தத்தொழில் எத்தனையோ குடும்பங்களை வாழவைத்திருக்கிறது, படிப்பு ஒன்றையே மதித்து வேலை தந்துள்ளது. எத்தனையோ பேர் நகரங்களில் வீடு மனைகள் கார் வாங்கி இதனால் பயன்பட்டுள்ளனர். விமானப்பயணங்கள் சாத்தியமாயிருக்கிறது. சகோதரிகளுக்கு சிறப்பான முறையில் திருமணங்கள் செய்ய இயன்றிருக்கிறது. எத்தனையோ சேவை நிறுவனங்களுக்கு உதவ முடிந்திருக்கிறது. அரசாங்கத்திற்கு 30% வரை வரி ஈட்டுத்தருகிறது. (இதில் கருப்புப்பணம் என்ற ஏமாற்று வேலை பலிக்காது, ஏனெனில் வரி பிடித்தம் செய்தபிறகே சம்பளம் கொடுக்கப்படுகிறது.). உங்களை இணையம் மூலமாக படிப்பதும் சாத்தியப்பட்டிருக்கிறது.
அனைத்துத்தொழில்களுமே கூலிக்காக செய்யப்படுபவையே. கூலி என்பது தேவையான அளவு வந்தபிறகு சமூக காரணங்களுக்கான படைப்புகளும் செய்யப்படுகிறது. நல்ல விஷயங்கள் இலவசமாக மட்டுமே செய்யப்படுவதில்லை. (விதிவிலக்குகளும் உண்டு)இப்படி எழுதுபவர்கள் ஒரு போலியான தாழ்த்துதல் முறையை கையாள்வதாக கருதுகிறேன். இப்படி எண்ணுபவர்கள் அந்த வேலையை விட்டுவிட்டு வெளியே வந்து வேறு வேலைகள் (தெரிந்தால்) செய்யலாமே? அல்லது இவர்களுக்கு இவர்களது அலுவலகங்களில் பணி உயர்வோ ஊதிய உயர்வோ மறுக்கப்பட்டால் எப்படி நடந்துகொள்வார்கள் என்பதும் தெரிந்ததே.
ஒருவர் பேசும்போது என்னிடம் சொன்னார், நீங்கள் சங்கீதத்தில் மிகத்தேர்ந்திருக்கிறீர்கள். எங்களுக்கெல்லாம் அந்த அளவு ஞானம் இல்லை என்று. நான் சொன்னேன், ஆமாம் நீங்கள் சங்கீதத்தில் அடிமுட்டாள். உமக்கும் அதற்கும் பலகாத தூரம். நீர் ஒரு ஞான சூனியம் என்று. அப்போது அவர் முகம் போன போக்கை பார்க்கவேண்டுமே. ஒருவர் தம்மை தாழ்த்திக் கொண்டு பேசும்போது, கேட்பவர் அதை அங்கீகரித்துச் சொன்னால் சொன்னவர் அதை எப்போதும் விரும்புவதில்லை போலும்.
உங்களை நான் கவனித்ததுண்டு. தம்மைத் தாழ்த்தி உம்மை உயர்த்தி எழுதும் போது ஒன்று உங்களிடமிருந்து பதில் வருவதில்லை. அல்லது அதைப் பற்றி நீங்கள் ஒருபோதும் பேசியதில்லை. ( நானும் அப்படி சில கடிதங்கள் எழுதியிருக்கிறேன்)
இந்த செய்யும்தொழிலை இழிவாக பேசும் மக்களுக்கு நீங்கள் நிச்சயம் மறுப்பு வெளியிட வேண்டும் என்று நினைக்கிறேன். நீங்கள் இது குறித்த உங்கள் கருத்தையும், செய்யும் தொழிலை மதிக்க வேண்டிய கட்டாயத்தையும் விளக்கமாக எழுதுவீர்கள் என்ற நம்பிக்கையில் இதை எழுதுகிறேன்.
அன்புள்ள ராம்
பல சந்தர்ப்பங்களில் இதை பலர் என்னிடம் சொல்லியிருக்கிறார்கள். இதில் ஒரு மரபான விவேகம் உள்ளது. ‘செய்யும் தொழிலே தெய்வம்’ என்பது அது. செய்யும் தொழில் மேல் உண்மையான ஆர்வம் இருந்தால் ஒழிய அதைச் சிறப்பாகச் செய்ய முடியாது. நிபுணர்கள் எனப்படுபவர்கள் தங்கள் துறைகளில் மிதமிஞ்சிய ஈடுபாடு கொண்டவர்களே. அந்த ஈடுபாடு காரணமாகவே அவர்களால் தொடர்ந்து இரவு பகலாக அதில் ஈடுபட முடிகிறது. சலிப்போ, சோர்வோ வருவதில்லை. கவனம் எப்போதும் குவிந்திருக்கிறது
செய்யும் தொழிலில் ஈடுபாடு இல்லாமல் போகும்போது படிப்படியாக வேலை சலிக்க ஆரம்பிக்கிறது. வேலையே நம் வாழ்க்கையின் பெரும்பகுதியை எடுத்துக் கொண்டிருக்கிறது என்பதனால் அந்தச் சலிப்பு நம் வாழ்க்கை முழுக்க பரவுகிறது. மெல்ல மெல்ல நாம் சிடுசிடுப்பும் சுய வெறுப்பும் கொண்டவர்களாக ஆகிறோம்.
மேலும் வேலையை நிராகரிப்பதன் வழியாக வேலையில் உள்ள நம்முடைய தோல்விகளை நம்மால் மறைத்துக் கொள்ள முடிகிறது. நம்முடைய தகுதிக்கு ஏற்ற வேலை இல்லை இது என்றும் நம்முடைய ஆற்றலைக் காட்ட இவ்வேலையில் இடமில்லை என்றும் நாம் நம்மைக் கற்பனை செய்து கொள்கிறோம். வேலையை விட நான் எவ்வளவோ மேலானவன் என்று எண்ணிக் கொள்வதன் வழியாக வேலையில் உள்ள நம் ஈடுபாடின்மைக்குச் சாக்கு கண்டு கொள்கிறோம்.
ஆனால் இதற்கெல்லாம் ஒரு மறுபக்கம் உள்ளது. நம் சமூகத்தில் ஒருவரின் இயல்பான திறமைகள் மலர்வதற்கான கல்விமுறை இல்லை. ஒருவர் தன்னை வெளிப்படுத்திக் கொள்வதற்கான துறையை தானே தேர்வு செய்து கொள்வது அனேகமாக சாத்தியமில்லாமல் இருக்கிறது. பலசமயம் அப்படி தெரிவு செய்து கொள்வது நம் பொருளியல் சூழலில் தற்கொலைக்கு நிகரான செயலாகவும் இருக்கிறது.
இங்கே இருப்பது தொழில் பெறுவதற்கான பயிற்சிதான், கல்வி அல்ல. சிறுவயதிலேயே எது அதிக வருமானம் வருகிறதோ அந்தத் தொழிலை குழந்தைகள் செய்ய வேண்டும் என அப்பாக்கள் எண்ணிக் கொள்கிறார்கள். ஆகவே பிள்ளைகளை அதற்கான பயிற்சியை நோக்கி ஒரே குறியாகச் செலுத்துகிறார்கள். குழந்தைகள் அந்தப் பாதையில் சென்று பெரும்பாலும் அதை அல்லது அதற்கு அடுத்தடுத்த இடங்களை தேர்வு செய்து தங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொள்கின்றன
எட்டாம் வகுப்பு முதல் பள்ளி இறுதி வரையிலான காலகட்டத்தில்தான் ஒருவரின் ரசனையும் ஆர்வமும் தீர்மானமாகிறது. பள்ளமான இடத்தை நீர் தேர்வு செய்வது போல அவரது தனியியல்பு அவருக்கான இடத்தை நோக்கிச் செல்கிறது. இவ்வயதில் பலவகையான வாய்ப்புகள் ஒருவர் முன் திறந்து விடப்பட வேண்டும். கலை, அறிவியல், இலக்கியம், பிற துறைகள். அதில் அவர் எதை நோக்கி தவிர்க்க முடியாமல் ஈர்க்கப் படுகிறாரோ அதுவே அவரது துறை.
ஒரு துறையில் தன்னால் சிறப்பாகச் செயல் பட முடிகிறது என உணர்ந்து அத்துறையில் மனம் தாவுவது என்பது இளமைப் பருவத்தின் பேரனுபவங்களில் ஒன்று. கடவுளே கண் முன் தென்படுவதைப் போல. கணிசமான வெற்றி பெற்ற மனிதர்கள் தாங்கள் தங்கள் துறைகளுக்கு தற்செயலாகவே வந்ததாகச் சொல்வார்கள். அது பாதி உண்மைதான். அவர்கள் முன் வரும் வாய்ப்புகள் தற்செயலானவை ஆனால் அதில் ஒன்றை அவர்கள் தேர்வு செய்வது தற்செயலே அல்ல
உண்மையில் இன்று நம் நாட்டில் இளைஞர்களுக்கு அந்த வாய்ப்புகள் உள்ளனவா? இல்லை என்றே சொல்வேன். என் நோக்கில் பிளஸ் டூ கல்வி முறை வந்த போதே அந்த வாசல்கள் மூடப் பட்டு விட்டன. எட்டாம் வகுப்பு முதல் மாணவர்கள் பிளஸ் டூ கல்வியை மட்டுமே மனதில் கொண்டு உக்கிரமான பயிற்சிக்கு உள்ளாக்கப் படுகிரார்கள். வேறு திக்கே இல்லாமல் அதை முடித்து ஒரு தொழிற் கல்விக்குப் போய் வேலையில் அமர்கிறார்கள்.
இவர்களில் சிலருக்கு அவர்கள் சென்று சேரும் தொழிலில் இயல்பாக ஓர் ஆர்வம் உருவாகிறது. அதில் அவர்களின் வெற்றி தோல்விகள் அடையாளப் படுத்தப்படும்போது அவர்கள் முழுமையாகவே அதில் இறங்கி விடுகிறார்கள். ஆனால் தன் இயல்பான திறமைகள் வெளிப்படும் ஒரு துறையைக் கண்டடைந்தவர்கள் சொற்பமே. ஆகவேதான் நம்மில் திறனாளர் அதிகம், படைப்பாளர் மிக, மிகக் குறைவு
இந்நிலையில் ஒருவருக்கு அவர் செய்யும் தொழிலுக்கு அப்பால் தன் ஆளுமை இருப்பதாக தோன்றுவதென்பது மிக இயல்பான ஒன்றே. சஞ்சய் சுப்ரமணியம் ஆடிட்டராக தொழில் புரிந்திருந்தால் ஆடிட்டர் தொழிலில் அவர் மன நிறைவு கொண்டு அதை நேசித்திருப்பார் என்று சொல்ல முடியாது. நேசிக்க வேண்டும் என்று கட்டாயப் படுத்தவும் முடியாது.
செய்தொழில் பழித்தல் என்பது இங்கே தான் வருகிறது. அந்த தொழில் தேர்வு செய்தது அல்ல, விதிக்கப்பட்டது என்பதனால்தான். அந்நிலையில் ஒருவர் அந்தத் தொழிலுக்கு ஏற்ப தன் ஆளுமையை வெட்டிக் கொள்ள வேண்டும் என்பது கொடுமையானது என்றே நான் சொல்வேன். அந்தத் தொழிலை விட பெரியவராக அவர் தன்னை உணரும் சுயம் என்பது அவருக்கு மிக முக்கியமானது. அவருக்கு தன் இருப்புக்கான அடையாளமாக இருப்பதே அந்த சுயம்தான். அதை அவர் விட்டு விட வேண்டும் என நான் சொல்ல மாட்டேன். அதை அவர் சொல்வது செய்தொழிலுக்கு அநீதி இழைத்தல் என்றும் சொல்ல மாட்டேன்
உண்மையில் தன் உள்ளார்ந்த ஆற்றலைப் பற்றிய ஒரு புரிதலுடன் ஒருவர் இருப்பதை நான் சிறப்பானதாகவே நினைக்கிறேன். ‘நான் இது அல்ல இதற்கும் மேல்’ என்ற உணர்வு அவரை மேலேதான் கொண்டு செல்லும். வேலைக்கும் அப்பால் அவரது ஆளுமை விரிவடைவதற்கும் தன்னுடைய சொந்த தளங்களை தானே மெல்ல மெல்ல கண்டடைவதற்கும் அதுவே வழிவகுக்கும். ஜெயமோகன் எழுத்தாளன் ஆனது அப்படித்தான். பி. எஸ். என். எல் ஊழியராக திருப்தியுடன் வாழும் பிறரிடமிருந்து வேறுபட்டுத் தன்னை கண்டடைந்ததனால் தான்.
உலகம் முழுக்க கலை இலக்கியச் செயல்பாடுகள், அரசியல் சமூகச் செயல்பாடுகள், ஏன் ஓரளவு அறிவியல் செயல்பாடுகள் ஆகியவற்றில் மிகக்கணிசமான பகுதி அவற்றில் தொழில்முறையாக ஈடுபடாதவர்களால் நிகழ்த்தப் படுகிறது. செய்தொழிலுக்கு அப்பாற்பட்டு வளர்பவர்களால். அவை இல்லையேல் மானுடமே வளர்ச்சி குன்றி போய்விடும். ஆகவே செய்தொழில் பழித்தல் என்பது ஒருவகையில் ஒரு மீறல், ஒரு எம்பித் தாவும் முயற்சி.
பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் அரசு ஊழியர்கள் கலை இலக்கிய பண்பாட்டு நடவடிக்கைகளில் ஈடுபட தடை இருந்தது. சேவை விதிகளின் படி இப்போதும் அந்தத் தடை நீடிக்கிறது. ஆனால் இது சம்பந்தமான ஒரு தாவா வந்தபோது பண்டித ஜவகர்லால் நேரு அந்த கோப்பில் எழுதிய குறிப்பு மிக முக்கியமான ஆவணமாக இன்றும் கருதப்படுகிறது. எந்த மனிதனையும் ஏதேனும் ஒரு கட்டத்தில் தன் வளர்ச்சியை அவன் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று சொல்ல அரசுக்கு அதிகாரமில்லை என்று சொல்லும் நேரு தங்கள் அன்றாடத் தொழில்களுக்கு அப்பால் சென்று எதையாவது செய்பவர்களால்தான் கலையும் இலக்கியமும் வாழ்கின்றன என்கிறார். அந்தக் குறிப்பின் சட்ட ஆதரவால்தான் இன்றும் இந்தியாவில் என்னைப் போன்ற பல்லாயிரம் பேர் எழுதுகிறோம் வரைகிறோம் வாசிக்கிறோம்.
மேலும் இன்னொன்று உள்ளது. தன்னுடைய படைப்பு சக்தி வெளிப்படும் துறையில்தான் ஒருவன் தன்னைக் கண்டுகொள்ள முடியும். அதில்தான் அவன் நிறைவு அடைய முடியும். நிறைவு என நான் இங்கே சொல்வது உலகியல் நிறைவை அல்ல. ஆன்மீக நிறைவை. ஆத்ம சாட்சாத்காரம் [self realization] என நாம் சொல்வதை. அதற்குப் பதிலாக ஒரு துறையை தொழிலாக மட்டுமே எடுத்துக்கொண்டு அதில் திறமையை ஈட்டி வெற்றியை அடைந்து, அதன் பொருட்டு அதை நேசித்து வாழ்பவர்கள் மோசமான வெறுமை ஒன்றுக்குச் சென்று சேர்ந்திருப்பார்கள். அத்தகைய ‘வெற்றிகரமான’ லௌகீக வாழ்க்கை கொண்ட முதியவர்களை நாம் எங்கும் காணமுடிகிறது இப்போது
உழைப்பில் இருந்தும் தொழிலில் இருந்தும் உழைப்பாளி அன்னியமாவதென்பது ஒரு எளிய விஷயம் அல்ல. அது நவீன முதலாளித்துவத்தின் தவிர்க்க முடியாத விளைவாகும்.முதலாளித்துவம் உழைப்பில் இருந்த படைப்பூக்கத்தை மெல்ல மெல்ல இல்லாமல் செய்து உழைப்பாளியை தன் உழைப்பை விற்பவனாக ஆக்குகிறது. தன் கையால் ஒரு படகு செய்யும் தச்சனுக்கு இருக்கும் படைப்பூக்கத் திருப்தி அதன் மூலம் அவன் அடையும் மீட்புபடகுத்தொழிற்சாலை ஊழியருக்கு இல்லை. முதலாளித்துவம் முதிரும்தோறும் இந்த அன்னியமாதல் அம்சம் மேலும் மேலும் வலிமை அடைகிறது.இளம் ஹெகலியராக இருந்த கார்ல் மார்க்ஸ் இதைப்பற்றி சிந்தனைசெய்திருக்கிறார். அவரது சிந்தனைகளை இருத்தலியளார்களும் நவமார்க்சியர்களும் இரு வகைகளில் விரிவாக்கம்செய்திருக்கிறார்கள். இது விரிவான ஒரு விவாதத்தளம்.
அன்னியமாகும் தொழிலாளி தன் சலிப்பை போக்க கேளிக்கைகளை நாடுகிறான். இந்நூற்றாண்டில் கேளிக்கைகள் இந்த அளவுக்கு விசுவ ரூபம் கொண்டமைக்குக் காரணம் இதுவே. தன் துறையில் கட்டாய கடும் உழைப்பு, அதன் சலிப்பை தீர்க்க கேளிக்கைகளில் செலவிடப்படும் ஓய்வுநேரம் என ஒரு நவீன உழைப்பாளியின் வாழ்க்கை நடந்து முடிகிறது. அதில் படைப்பூக்கம் இல்லை. தானே ஒன்றைச் செய்வதன் மூலம் தன்னையும் தன்னைச் சூழந்த பிரபஞ்சத்தையும் கண்டடைவதன் உவகை இல்லை. அதன் மீட்பும் இல்லை
ஆகவேதான் நுண்ணுணர்வு கொண்ட, மீட்புக்கு ஏங்கும், உழைப்பாளி “நான் என்பது இந்த வேலை அல்ல” என அடிக்கடி உணர்கிறார். அதற்கு அப்பால் தன் ஆளுமையை உருவாக்கிக் கொள்ள முயல்கிறார். எனவே செய்தொழிலை ஒருவர் ‘அதுவல்ல நான்’ என நிராகரிப்பதென்பது ஒன்றும் பெரும்பாவமில்லை. அதை பண்டைய தர்ம சாஸ்திர விதிகளின் படி நோக்க வேண்டியதும் இல்லை. அது அவரது சுய அடையாளம் சம்பந்தமானது. தன் படைப்பூக்கத்தை எங்கே அவர் காண்கிறார் என்பதைச் சார்ந்தது அது.
ஜெ
மறுபிரசுரம்/ முதற்பிரசுரம் Jul 8, 2009 @ 0:04