மீண்டும் காடு வழியாக நடை. காட்டுக்குள் கரடியும் பன்றியும் மண்ணை பிராண்டிக் குவித்திருந்தன. மரங்களுக்குக் கீழே புலி தன் எல்லைத்தடத்தை பதித்திருந்ததை கண்டோம். இருட்ட ஆரம்பித்தது. இன்னும் இருட்டினால் காட்டுக்குள் சிக்கிவிடுவோம் என பிரபு அச்சுறுத்தினார். இரவு அடங்கும் நேரத்தில் கல்லம்பாளையம் என்ற சிற்றூரை வந்து சேர்ந்தோம். கிட்டத்தட்ட நான்குகால்களில் நடந்தோம் என்று சொல்லவேண்டும். இடுப்பிலும் கால்களிலும் உக்கிரமான வலி.
கல்லம்பாளையம் சிறிய மலைக்கிராமம். நூறு வீடுகள் இருக்கலாம். அதன் தெருக்களைச் சுற்றி கம்பிகட்டி அதில் பிளாஸ்டிக் தண்ணீர்க்குப்பிகளை கட்டியிருந்தார்கள். யானைகள் அந்த குப்பிகளில் உடல் முட்டுவதை என்னவோ ஏதோ என நினைத்து நின்றுவிடுமாம். ஊர் முழுக்க நாய்கள். அவை ஊருக்குள் வனவிலங்குகள் நுழைவதை கண்காணிப்பதற்கு மிக அவசியமானவை.
பழங்குடிகள் நிரந்தமாக ஓரிடத்தில் தங்குபவர்கள் அல்ல. காட்டுக்குள் அலைபவர்கள். அதை கருத்தில்கொண்டே அவர்களுக்கான உண்டு உறைவிடப்பள்ளிகள் அமைக்கப்பட்டன. ஆனால் பெரும்பாலான பள்ளிகள் செயலிழந்து கிடக்கின்றன. காரணம் அரசு ஆசிரியர்களின் முழுமையான புறக்கணிப்பு. அங்கே பணியாற்றும் ஆசிரியர்கள் அனேகமாக மாதமிருமுறை மட்டுமே வந்துசெல்லக்கூடியவர்கள். மாதமொன்றுக்கு முப்பதாயிரம் ரூபாய் சம்பளம் வாங்கக்கூடியவர்கள் என்ற வகையில் பார்த்தால் அவர்களின் ஒரு வருகையின் கட்டணம் பதினைந்தாயிரம். அதற்கே பலருக்கு மனவருத்தமிருக்கிறது, அவ்வளவு தூரம் பேருந்தில் பயணம்செய்யவேண்டியிருக்கிறதே என. அவர்கள் அங்கே தங்கவேண்டுமென்பது பணிச்சட்டம். ஆனால் மிகச்சிலர் சிறிய ஊதியத்துக்கு உள்ளூரிலேயே ஏதாவது பத்தாம் வகுப்பு படித்த பெண் இருந்தால் அவளிடம் பொறுப்பை ஒப்படைத்து ஆயிரமோ இரண்டாயிரமோ கொடுத்துவிடுவார்கள். கணிசமானவர்கள் அதைச்செய்து வந்தார்கள். ஆனால் நாளடைவில் இன்று கல்வித்துறை அதிகாரிகள் இதை அங்கீகரித்து அவர்கள் ஆசிரியர்களிடம் லஞ்சம் வாங்க ஆரம்பித்திருப்பதனால் அப்படி பதில் ஆசிரியர்களை நியமிப்பதும் அனேகமாக நின்றுவிட்டது. கணிசமான உண்டு உறைவிடப்பள்ளிகளில் உள்ளூர் ஆயா ஒருவர் இருவேளை சோறு சமைத்து போடுவார். அத்துடன் சரி. பெரும்பாலும் பெண்பிள்ளைகளைத்தான் இங்கே கொண்டுவந்துவிடுகிறார்கள்.
ஆசிரியர்கள் இதற்காகச் சொல்லும் நியாயங்கள் நெஞ்சை உருக்குபவை. ஓர் ஆசிரியை ‘எனக்கும் கடமைகள் இல்லையா? நான் ஒரு மனைவி இல்லையா? தாய் இல்லையா? என்னிடம் கௌன்சிலிங்கில் காசு வாங்கிய அதிகாரியே நான் மலைக்குச் செல்லவேண்டாம் என்று சொல்லித்தானே வாக்குகளை வாங்கினார்’ என்று கண்ணீர்விட்டதாக நண்பர் சொன்னார்.
ஆனால் கல்லம்பாளையம் உண்டு உறைவிடப்பள்ளி அற்புதமான இடமாக இருந்தது. அங்கிருந்த ஆசிரியர் அங்கேயே தங்கி குழந்தைகளுக்கு பாடம் நடத்தினார். நாற்பத்தொரு குழந்தைகளுக்கு ஒரே ஆசிரியர். கரிய குள்ளமான உற்சாகமான அழகிய மனிதர். மொத்தச் சம்பளத்தையும் அந்தப்பள்ளிக்காக செலவிடுகிறார் என்றார்கள். ‘எனக்கு செலவுண்ணு ஒண்ணுமில்லசார். பையனும் பெண்ணும் நல்லா இருக்காங்க…இங்க மாசம் ரெண்டாயிரம் செலவானா அதிகம்…எல்லாம் இதுகளுக்குத்தான்…’ என்றார்.
உற்சாகமான அழகிய பிள்ளைகள் அந்திக்கருக்கலில் கூச்சலிட்டு விளையாடிக்கொண்டிருந்தன. பிள்ளைகளுக்கு கான்வெண்ட் குழந்தைகளைப்போல சப்பாத்துக்கள் சீருடைகள் எல்லாமே அவரே ஏற்பாடு செய்திருந்தார். இரு குழந்தைகள் ஐந்தாம் வகுப்பு முடிக்கப்போகிறார்கள் மேற்படிப்பை கவனித்துக்கொள்ளமுடியுமா என சிவானந்தனிடம் கேட்டார். அனுப்புங்க பாத்துக்கறேன் என்றார் சிவானந்தன். நானும் என் சிறிய உதவியை பள்ளிக்குச் செய்வதாக சொன்னேன். மானசீகமாக அவரது பாதங்களை வணங்கினேன். அறத்தில் அமைந்த பெரியவர்கள் எங்கும் நிறைந்திருக்கிறார்கள். மனிதனின் சுயநலத்தின், அற்பத்தனத்தின் எடையை அவர்களே சமன்செய்கிறார்கள்.
அங்கிருந்து தெங்குமராட்டா வந்து வனவிடுதியில் தங்கினோம். முழுநிலவு நாள். வானம் விசித்திரமான நிறத்தில் இருந்தது. ஒரு கோப்பை பீர் வழியாகப் பார்ப்பதுபோல என வேடிக்கையாக நினைத்துக்கொண்டேன். கலங்கியநீரில் பிரதிபலிப்பதுபோல என்று வேறுவகையாகவும் சொல்லலாம். வானில் விதவிதமான பறவைகள் சிறகடித்துச் சுற்றிவந்து விளையாடிக்கொண்டிருந்தன. முதலில் அவை வவ்வால்கள் என்று தோன்றியது. வவ்வால்கள் அல்ல என்று பின்னர் தெளிந்தது. இரவை அவை கொண்டாடிக்கொண்டிருந்தன
முழுநிலவை ஓரு பறவை பாதிமறைக்கும்போது பழைய டிராக்குலா படங்களின் அழகிய காட்சித்துளிகள் நினைவுக்கு வந்தன.ஓர் ஓநாயின் ஊளையும் கேட்டால் நன்றாக இருக்குமே என நினைத்துக்கொண்டேன். உடனே ஓநாயின் ஊளை எங்கோ கேட்டது. முதற்கணம் உடல் சிலிர்த்தது. அதன்பின் தர்க்கமனம் கண்டுகொண்டது, அந்த ஒலி கேட்க ஆரம்பித்த கணம்தான் அவ்வெண்ணம் உருவானது. அவ்வொலியை நான் உணர்ந்தது அரைக்கணம் பிந்தி என்பதனால் நினைத்ததும் ஓநாய் கத்துகிறது என தோன்றியிருக்கிறது
மலைப்பகுதிகளில் வெளியே அமர்ந்து இரவை அனுபவிக்கமுடியாது. குளிர் முக்கியமான காரணம். பூச்சிகள் அடுத்த காரணம் தமிழகத்தில் சமநிலத்தில் உள்ள காடுகள் அனேகமாக இல்லை. பெரும்பாலான காடுகள் மலைமீதுதான். ஆகவே நம்முடைய ஊருக்குநிகரான மிதமான குளிர் கொண்ட காடுகள் அனேகமாக இல்லை. அந்த வகையில் சத்தியமங்கலம் காடுகள் மிகமிக முக்கியமானவை. அங்கே வீசிய இதமான காற்றுக்காகவே அவ்வளவு களைப்பை அடைவது நியாயம் என்று தோன்றியது.
சிவானந்தன் எனக்காக பழங்கள் வாங்கிவந்தார். மலையில் விளைந்த வாழைப்பழங்கள். ரசாயன உரமிடப்படாதவை. அந்தச்சுவையை நகரில் கிடைக்கும்பழங்களில் அறியமுடியாது. நாம் இந்த விவசாயநாகரீகத்தால் இழந்தது உணவின் நறுமணத்தைத்தான் என ஃபுகோக்கா சொல்கிறார். அந்த வரிகள் உண்மை என்பதை ஒவ்வொருமுறை மலைப்பகுதிகளில் பழங்களை உண்ணும்போதும் நினைத்துக்கொள்வேன்.
சிவானந்தன் அங்கே ஒருவரை அறிமுகம் செய்துவைத்தார். அவர் தன் வீட்டுக்கொல்லையில் இருநூறு வாழை நட்டு குலைதள்ளும் நிலையில் இருந்தபோது காட்டுயானைகள் வந்து மொத்தமாக அழித்துச்சென்றன என்றார். ‘எந்த வருத்தமும் இல்லாம அன்னிக்கு காடு அதுங்களோடதுதானே அய்யா? போகட்டும்னு சொன்னார். அபூர்வமான மனுஷன்’ என்றார் சிவானந்தன். நான் அவரைப்பார்த்தேன். ‘அதுங்களோட மண்ணிலே வந்து குடியிருக்கோமுங்க…அதுங்க சாப்பிட்டா தப்பில்லைங்க’ என்றார் அவர்.காடு இந்த வகை மனிதர்களை பாதுகாத்து அடுத்த தலைமுறைக்குக் கொண்டுசென்றால் நல்லது என நினைத்துக்கொண்டேன்
இரவு பத்துமணிவரைக்கும்கூட விழித்திருக்க முடியவில்லை. உள்ளே சென்று படுத்தவன் மறுநாள் காலைவரை என்ன நடந்தது எங்கிருக்கிறோம் என்றறியாமல் தூங்கினேன். கண்விழித்து எழுந்தபோது மெல்லிய வெளிச்சம். காலையின் ஒளி முதிர்வதற்கு முந்தைய சிலநிமிடங்களில் நிழலே இல்லாமல் ஒளி மட்டுமிருக்கும். அப்போது பார்க்கும் ஒவ்வொன்றும் துலங்கி அருகே தெரியும். நடந்துசென்று அங்கிருந்த ஒரே டீக்கடையில் டீ குடித்தோம்.
எட்டுமணிக்கு வனத்துறை ஊழியர் வழிகாட்ட காட்டுக்குள் சென்றோம். தெங்குமராட்டாவை சுற்றியிருக்கும் நிலங்களெல்லாம் முன்பு பழங்குடிகளுக்குக் கொடுக்கப்பட்டவை. அவை இன்று குத்தகைதாரர் கைகளில் உள்ளன. பட்டா நிலங்கள் அல்ல, நூறாண்டு குத்தகை. இன்னும் முப்பதுவருடம் அவை குத்தகையாக இருக்கும். இப்போது சத்தியமங்கலம் காடுகள் புலிகள் சரணாலயமாக அறிவிக்கப்படவிருப்பதனால் அந்நிலங்களை காலிசெய்ய வனத்துறை முயல்கிறது. மிக வளமான நிலங்கள். நான்குபோகம் விளையும் நீர்வசதி. ஆகவே குத்தகைதாரர்கள் மறுக்கிறார்கள்.
இருபக்கமும் மஞ்சளும் கரும்பும் நெல்லும் விளைந்து பரந்திருந்த வயல்கள் நடுவே சென்ற சாலை மெல்ல புதர்க்காடுகளை அடைந்தது. காலையின் மிதமான ஒளியில் மௌனமாக நடந்துசென்றோம். ஒவ்வொரு ஒலியைச்சுற்றியும் மௌனம் ஒரு மென்மையான ஒளியை பரப்பி வைத்திருந்தது. சட்டென்று ஒரு மான் குறுக்காக ஓடிச்சென்றது. காடு எய்த உயிரம்பு போல. அந்த கணத்தின் பரவசத்தை பின்னர் நாங்கள் மான்கூட்டங்களைப் பார்த்துக்கொண்டே இருந்தபோது அடையவேயில்லை.
கொஞ்சநேரத்தில் ஜீப் வந்தது. அதில் ஏறிக்கொண்டு பானமரப்பட்டி என்ற இடத்துக்குச் சென்றோம். அது மோயாறின் கரையில் ஒரு சிறிய வனத்தங்குமிடம் மட்டுமே. பத்தடி உயரத்தில் கட்டப்பட்டது. பத்துபேர் இரவு தங்கமுடியும். அப்பகுதி தமிழகத்திலேயே அதிகமான வனவிலங்குநடமாட்டம் உள்ளது. மான்களை இங்கே மந்தை மந்தையாகப் பார்க்கமுடியும். பிளாக்பக் எனப்படும் அடர்நிற மான் காடுகளில் பொதுவாக அதிகம் காணப்படுவதில்லை. இங்கே சாதாரணமாக பிற மான்களுடன் சேர்ந்து பாய்ந்தோடுவதை பலமுறை கண்டோம்
நாங்கள் செல்லும்போது நன்றாக விடிந்துவிட்டது. உண்மையில் இன்னும் கொஞ்சம் அதிகாலையில் வந்திருந்தால் புலி வேட்டையாடுவதை கண்டிருக்கலாம். கால்தடங்களை, உண்டு முடித்த எச்சங்களை கண்டோம். மலைச்சரிவில் யானைக்கூட்டங்கள் மேய்வதை கண்டோம். மரக்கூட்டங்கள் நடுவே யானையைப்பார்ப்பது ஒருவகையில் மிக எளிது, இன்னொருவகையில் மிகக் கடினம். யானையை தேடினால் சிக்காது, அது மண்குன்றுமாதிரியேதான் இருக்கும். ஆனால் அசைவை தேடினால் அதன் காதுகளையும் துதிக்கையையும் உடனே பார்த்துவிடமுடியும். உருண்டு இருண்ட அப்பேரிருப்பை சிறிய பேன்போல ஆக்கும் மலையின் பிரம்மாண்டம் அப்போது நம்மை வந்து அறையும்.
மோயாறின் கரையில் அமர்ந்து காலை உணவை உண்டோம். இட்லியும் சாம்பாரும். இலைப்பொட்டலத்தில் சூடு ஆறாமலேயே இருந்தன அவை. காட்டில் நெடுந்தூரம் நடக்கும்போது உருவாகும் பசி எல்லா உணவையும் அபூர்வ சுவையுடையதாக ஆக்கிவிடுகிறது. அதன்பின் மோயாறின் கரை வழியாகவே காட்டுக்குள் நடந்து சென்றோம். பிரம்மாண்டமான நாவல்மரங்கள் விழுந்து விழ்ந்த இடத்தின் தடியில் இருந்தே முளைத்து பல மரங்களாக மாறி நின்றிருந்தன. நாவல்மரத்தின் தடி சிமிண்டால் செய்யப்பட்டது போலிருக்கும். தொட்டால் மனிதச்சருமம் போல மென்மையை உணரவும் முடியும்.
அந்தப்பகுதியில் சிங்கவால்குரங்குகள் அதிகம். ஒரு பெரிய சமூகத்தையே பார்க்கமுடிந்தது. தரையில் உதிர்ந்து கிடந்த பழங்களைப் பொறுக்கித் தின்றுகொண்டிருந்தன. அரைக்கணத்திலேயே எங்களைப் பார்த்து மதிப்பிட்டு பொருட்படுத்தப்படவேண்டியவர்களல்ல என்ற முடிவுக்கு அவை வந்திருப்பதை உணர முடிந்தது. வாலை செங்குத்தாகத் தூக்கிக்கொண்டு தரையில் வீசப்பட்ட ரப்பர்பந்துகள் போல எம்பி எம்பி பாய்ந்தன. நாய்க்குட்டியின் செல்லக்குரைப்பு போல ஒலியெழுப்பின.
மலைமீது நின்று சுற்றி நின்ற பெரிய மலைகளை கவனித்தோம். மேற்குபக்கமிருந்த மலையில் கொஞ்சம் பசுமை அதிகம். கிழக்குபக்கமிருந்த மலை முட்புதர்க்காடுகளாலானது. ஒரு காடு என்பது எவ்வளவுபெரிய உயிர்ப்படலம் என உணரச்செய்யும் இடம் இது. பறவைகளின் குரல்கள் பெருநகரங்களில் மனித ஒலிகளுக்கிணையாகக் கலந்து ஒலித்தன. மலைச்சரிவில் காட்டு யானைகள் தாய்மடிக்குள் நிமிண்டிக்கொண்டே இருக்கும் குழந்தைகள் போல தழைகளை ஒடித்துத் தின்றுகொண்டிருந்தன.
மதியம் அங்கேயே சாப்பிட்டோம். இரண்டரை மணிக்கு நாங்கள் திரும்பவேண்டும். மூன்றரை மணிக்கு தெங்குமராட்டாவிலிருந்து பேருந்தில் பவானிசாகர் அணைக்கட்டுக்குச் செல்லவேண்டும். ஆனால் தொட்டுத்தொட்டு கிளம்ப மூன்று மணி ஆகிவிட்டது. தெங்குமராட்டாவின் விடுதிக்கு வந்தபோது பேருந்து கிளம்பிச்சென்றுவிட்டிருந்தது. ஜீப் ஓட்டுநர் உள்ளூர்க்காரர். பேருந்தை விரட்டிப்பிடிக்கும்படி சிவானந்தன் சொன்னார். உரத்தகுரலில் வசைபாடிவிட்டு வண்டியை எடுத்தவர் குறுக்குவழியாக காட்டுக்குள் ஜீப்பைச் செலுத்தினார். அப்படி ஒரு வழியில் அந்த வேகத்தில் ஒரு வண்டி செல்லும் என்பதே நம்பமுடியாததாக இருந்தது. நேராகச்ச் என்று நீர் நிறைந்தோடிய மோயாறில் இறக்கி உருண்ட பாறைகள் வழியாக மறுபக்கம் கொண்டுசென்றார். ஜீப்புக்குள் எங்கள் கால் வழியாக மோயாறு சுழித்தது. வழியில் ஒரு இடத்தில் டயர் பிய்ந்து வண்டி நின்றது. பத்தே நிமிடத்தில் அதை மாற்றி மீண்டும் மூர்க்கமாக ஓட்டி ஒரு மண்சாலையில் வந்து காத்து நின்றோம். எங்களை விட்டுவிட்டுச்சென்ற பேருந்து அப்போதும் வந்துசேரவில்லை.
பேருந்தில் பெரும்கூட்டம். அந்த நெரிசலில் ஒர் இளைஞன் செல்பேசியில் சினிமா பார்த்துக்கொண்டே வந்தான். தொழில்நுட்பம் வந்துசேர்ந்த இடம்! வண்டிக்குள் முழுக்க மனிதவாசனை. நகரத்தில் ஒரு நெரிசலான பேருந்தில் விதவிதமான ரசாயன வாசனைதான் வரும். இந்த வாசனையை நாற்றமென நம்பி அந்த வாசனையை விரும்பக் கற்றுக்கொண்ட காலககட்டமே நம்முடைய நாகரீகத்தின் வரலாறு
பவானிசாகரில் இறங்கினோம். உப்பில் ஊறவைத்த களாக்காய் வாங்கிச்சாப்பிட்டுவிட்டு டீ குடித்தோம். அந்த காட்டின் ருசி. நாகரீகத்தின் உப்பில் ஊறவைக்கப்பட்டது. எங்கள் காரை கோத்தகிரியில் இருந்து அங்கே வரச்சொல்லியிருந்தோம். காரில் ஏறிக்கொண்டதும் நான் அரைத்தூக்கத்தில் சொக்கி விழ ஆரம்பித்தேன். நீரில் பிம்பங்களாக என் ஆழத்திற்குள் தேங்கியிருந்த காடு சுருளவிழ ஆரம்பித்தது. இரவு ஏழரை மணிக்கு ஈரோட்டுக்கு வந்து சேர்ந்தோம்.
மேலும் படங்கள்