என் பெயர் [சிறுகதை]

’ஆய்வு ஒருங்கிணைப்பு மைய’த்திற்கு மாலை ஏழு மணிக்கு நான் வந்து சேர்ந்தபோது டாக்டர் ஹரிஹர சுப்ரமணியமும், டாக்டர் முகமது ஜலீலும் மட்டும்தான் வந்திருந்தார்கள். வெளியே நின்ற கார்கள் எனக்குப் பரிச்சயமானவை. தாமதமாகி விடவில்லை என்ற ஆறுதல் ஏற்பட்டது. என் அலுவலகத்திலிருந்து காரில் பத்து நிமிடத்தில் இங்கு வந்துவிடலாம். ஆனால், கிளம்புவது தாமதமாகிவிட்டது, வழக்கம்போல. விஞ்ஞானி என்ற பெயரில் நான் செய்வது நிர்வாக வேலை. இந்தியாவில் மிக அதிகமாகச் செய்யப்படும் வேலை. மேற்பார்வை, கண்காணிப்பு, கணக்கெடுப்பு, பதிவு செய்தல்…

டிரைவர் கதவைத் திறந்துவிட்டான். என் அந்தரங்க ஃபைல்களை எடுத்துக்கொண்டு இறங்கினேன். பருத்திப் புடவை மொட மொடப்பாகக் கசங்கியிருந்தது. ஒரு சில இடங்களில் நீவிவிட்டுக் கொண்டேன். முந்தானையைக் காற்று தூக்கிச் சுழற்றியது. இழுத்து வலது கையிடுக்கில் இடையுடன் அழுத்தியபடி நடந்தேன்.

ஆய்வு ஒருங்கிணைப்பு மையத்தின் முகப்பு மிகத் தேர்ச்சி பெற்ற தோட்டக் கலைஞர்களால் உருவாக்கப்பட்டது. ரோஜா தவிர வேறெந்தச் செடியின் பெயரும் எனக்குத் தெரியாது. விளக்குகள் பகல்போல எரிந்துகொண்டிருந்தன. கட்டடம் தட்டையாகப் பூமியோடு அழுந்தியதுபோல இருந்தது. வெண்சுதையாலானது போன்ற அமைப்பு. பிரிட்டிஷ் பாணி. இரட்டைத் தூண்களில் வழவழப்பு. முகப்பில் நின்றிருந்த கார் கண்ணாடிகளில் விளக்கொளிகள் தத்தளித்தன.

காவலர்கள் என்னை அடையாளம் கண்டு அனுமதித்தனர். உள்ளே மெத்தென்ற உயர்தரக் கம்பளம் விரிக்கப்பட்ட நீளமான வராண்டாவில் ஒரு காவலன் தொடர நடந்தேன். சுவர்களில் ஏதோ நட்சத்திர ஓட்டல்போல விலையுயர்ந்த அசல் ஓவியங்கள் வெண்கலச் சட்டத்திற்குள் இருந்தன. சில்லென்ற குளிரும் அமைதியும். ஆனால் எதுவுமே அக்கட்டிடத்தை அழகுறச் செய்வதில்லை. அது அனைவருக்கும் பதற்றத்தையும் ஆழ்ந்த அச்சத்தையும் அளிப்பதாகவே இருக்கிறது. ஒரு கொலை யந்திரம் அழகுற அமைக்கப்பட்டிருப்பதுபோல. கொலையா? அங்கு யாரும் கொலை செய்வதில்லை. அங்கு வன்முறையே இல்லை. ஆனால் ரகசியம் என்பதே ஒரு விதமான வன்முறைதானே.

வன்முறை இல்லையா? நான் சிரித்துக்கொண்டேன். விஞ்ஞானிகளின் மனப்பால் அது. அங்கு தயாரிக்கப்படும் ஏவுகணை ஒன்று சரியானபடி பயன்படுத்தப்பட்டால் – பயனா, அடடா! எத்தனை அபத்தமான சொல்லாட்சி – போரில் ஒரு லட்சம் மனித உயிர்களை அழித்து விடக்கூடும். மிக மெல்லிய குரலில் பேசக்கூடிய, கிருதா நரைத்த, மெலிந்த குளிர்ந்த விரல்கள் கொண்ட, தடித்த கண்ணாடிக்குப் பின்னால் உள்நோக்கித் திரும்பிய விழிகள் கொண்ட, மீசை வைத்துக்கொள்வதுகூட வன்முறை என்று கருதக்கூடிய மனிதர்கள் இரவு பகலாக அங்கு அவற்றைத் தயாரிக்கிறார்கள். மேம்படுத்துகிறார்கள். அவர்களில் நானும் ஒருத்தி.

மொடமொடப்பான கதர்ப்புடவை, கையில்லாத ஜாக்கெட், தடிமனான கண்ணாடி, உதட்டுப்பூச்சு, நரைத்த பாப் தலைமயிர். நான் கண்ணாடியில் என்னைப் பார்த்துக்கொள்ளும்போதெல்லாம் சரியான வேஷப் பொருத்தம் என்று எண்ணிக்கொள்வதுண்டு. ஆனால், இருபது வருடம் முன்பு இந்த வேடத்தை நான் முதலில் அணிந்தபோது இருந்த மனக்கிளர்ச்சிதான் என்ன? மேரி கியூரி! என் நோபல் ஏற்புரையின் சொற்றொடர்களை மாற்றி மாற்றி மனத்தில் புனைந்து கொண்டிருந்த காலம். முன் ஊகங்கள் நிரூபண முறைமை கோரி மனத்தில் முண்டியடித்த காலம்.

தெரிவுநிலை விஞ்ஞானியாகப் பொறுப்பேற்ற முதல்நாளே முழு உயர ஃபைல்கள் மேஜையை நிரப்பின. ஊழியர்களின் பயணப்படிக் கணக்குகள். அவற்றைப் பிறவற்றுடன் ஒப்பிட்டேன். கூட்டினேன். சிபாரிசு செய்தேன். பட்டுவாடா செய்தேன். மீண்டும் மீண்டும். வருடக்கணக்கில். மேலதிகாரிகளின் ஆய்வேடுகளை நகல் செய்தேன். அடிக்குறிப்புகளைத் தேடிச் சேகரித்தேன். இரு தளங்களுக்கு மட்டும் நான் அனுமதிக்கப்படவேயில்லை. ஆய்வகங்களுக்குத் தேவையான கொள்முதல்களை நிகழ்த்தும் துறை. ஆய்வுத் திட்டங்களை வகுக்கும் துறை. அவையிரண்டும் எப்போதும் தலைவருக்கு மிக நெருக்கமானவரிடமே இருந்தன.

இந்திய ஆய்வகங்களில் நடக்கச் சாத்தியமில்லாத ஒன்றுதான் ஆய்வு என்பது தொடக்கத்திலேயே புரிந்து போயிற்று. ஆய்வு வேலை என்றால் உளவுத்துறை திருடியோ வாங்கியோ கொண்டுவந்து தரும் திட்டங்களையும் வரைவுகளையும் வைத்து சிலவற்றை ஒப்பேற்றுவது என்றுதான் இங்கு அர்த்தம். என்னுடனும் பிறகும் வந்தவர்கள் பெரும்பாலானவர்கள் தேசம்விட்டுச் சென்றனர். செல்லமுடியாதவர்கள் படிப்படியாக உருமாறி குமாஸ்தாக்களாகினர். சினேகலதா ரெட்டி போலத் தற்கொலை செய்துகொண்டவர்கள் உண்டு. பிரதாப் நாயர் போல மனநிலை பிறழ்ந்தவர்கள் உண்டு. ஹரிஷ் பந்தோபாத்யாய் போலக் காணாமலானவர்கள் உண்டு.

நான் எதிலும் சேரவில்லை. என் ஆறாவது வருடத்தில் அனந்த பத்மநாப அய்யங்காரின் ஆய்வேட்டை நானே எழுதி அது மூன்று சர்வதேசக் கருத்தரங்குகளில் கவனம் ஈர்த்தது. முதன்மையான விஞ்ஞான இதழில் பிரசுரமாயிற்று. அய்யங்கார் என்னை அறைக்கு அழைத்துக் கண்ணாடிச் சில்லு வழியாகப் பார்த்து ’நீ நம்ப பக்கமோன்னோ?’ என்றார். அப்பா பெயரைச் சொன்னேன். காகிதத்தைப் பார்த்துப் புன்னகை செய்தார். திருவிழாக் கூட்டத்தில் யானை போன வழியே பின்தொடர்ந்து போவதுபோல எளிதாக நான் முன்னேறினேன்.

கீர்த்தி நாயுடு தாவித்தாவி என் பின்னால் வந்தார். ’என்னம்மா பத்மாவதி, என்ன சமாச்சாரம்!’ என்றார்.

’எனக்கென்ன தெரியும்? எனக்கும் தகவல் வந்தது அவ்வளவுதான்.’

’அதைவிடு. உனக்கும் கிழவனுக்கும் மந்தர ஸ்தாயியில் ஒரு உறவு இருக்கிற விஷயம் யாருக்குத் தெரியாது?’

நான் ஒன்றும் சொல்லவில்லை. உயர் ஆய்வகங்களின் வம்பின் தரத்தை எட்ட வேண்டுமென்றால் நாலாந்தர மதுக்கடைகள் ஏழெட்டுப்படி இறங்கவேண்டும்.

விசாலமாகவும் வெளிச்சமாகவும் இருந்த எதிர்நோக்கு அறையில் மண் நிற இருக்கையில் அமர்ந்து கொண்டேன். கையில் காபிக் கோப்பையுடன் முகர்ஜி வந்து என்னருகே அமர்ந்து ஒன்றை நீட்டினான்.

’நன்றி.’

’என்ன ஆயிற்று பெண் விஷயம்? அட்மிஷன் கிடைத்ததா, இல்லையா?’

’ஆயிற்று, அவளுக்குப் பிடித்தமான கோர்ஸ்தான். ஆனால் ஊர்விட்டுப் போய் ஹாஸ்டலில் தங்கிப்படிப்பதில் அவளுக்கு இஷ்டமேயில்லை.’

’ஒரு வாரம். பிறகு வீட்டு ஞாபகமே இருக்காது.’

’நானாவது பரவாயில்லை. அவர் ரொம்ப தவித்துப் போகிறார்.’

’சொன்னால் தப்பாக நினைக்கமாட்டாயே. தென்னிந்தியர்களே இப்படித்தான். மிக மிக உணர்ச்சித் ததும்பலுடன் இருக்கிறீர்கள். குட்டிக்குட்டி குடும்பங்களாக ஒருவரோடு ஒருவர் ஒட்டியபடி, கவ்விப் பிடித்தபடி.’

’அதுதான் என்னைப் பொறுத்தவரை வாழ்க்கையின் அர்த்தம், சந்தோஷம் எல்லாமே.’

’உயர்நிலை விஞ்ஞானி பேசும் பேச்சா இது?’

’உயர்நிலையாவது விஞ்ஞானமாவது. இதோ பார் ஹிரேண், விஞ்ஞானத்திற்கும் நமக்கும் என்ன சம்பந்தம்? சம்பளம் தருகிறார்கள். கார், பங்களா, அதிகாரம், அந்தஸ்து அவ்வளவுதான். பேசாமல் தொலைத்துவிட்டு டெல்லிபோய் மஞ்சு கூடயே இருந்துவிடலாமா என்றிருக்கிறது.’

’சம்பளம்… கார்… பங்களா…’

’ஷிட். இவருக்கு இப்போதைக்கு மாறுதல் இல்லை. ஒரு காபி போடக்கூடத் தெரியாது. சமைத்துப் போட்டு சீராட்ட வேண்டும்.’

’ஸ்ரீரங்கம் டிகிரி காபி போடுவது சின்ன விஷயமா? அதற்கு ஏதாவது பயிற்சி வகுப்பு இருக்கிறதா?’

உள்ளிருந்து ஆடர்லி வந்து என்னருகே நின்றான். ’என்ன?’

’கூப்பிடுகிறார்.’

உள்ளே போனேன். கிழம் ஏதோ ஃபைலைக் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தது. நிமிராமல் உட்கார சைகை காட்டியது. பிறகு ’என்ன சொல்றான்?’ என்றது.

’யாரு?’

’தாடிக்காரன்?’

முகர்ஜியை கிழத்திற்குப் பிடிக்காது. தலை வணங்காதவன். அதைவிட முக்கியமாக உண்மையிலேயே விஞ்ஞானத்தில் ஆர்வம்கொண்டவன். அவனுடைய சில கட்டுரைகள் பிரசுரமாகி கவனிக்கப்பட்டிருக்கின்றன. கே.நாராயணசாமி சொல்வார்-வருடாவருடம் உயர் ஆய்வகங்களில் ’கடா வெட்டு’ உண்டு. ரொம்பத் துள்ளுகிற கடாக்களை ஒரே போடாகப் போட்டுவிடுவார்கள். முகர்ஜியின் கழுத்தில் அரளிமாலைபோட்டு நெற்றியில் குங்குமம் அப்பியாகிவிட்டது என்பது ரகசியமல்ல. அவனுடைய ஆய்வு கட்டுரையைப் பாராட்டி அப்துல் கலாம் கடிதம் எழுதியிருந்தார். கோபன் ஹெகன் போக அவன் அனுமதிகோரியபோது கிழம் அதை மறுத்தது. முகர்ஜி டெல்லி வரை போய்ப் பார்த்தான். கவுரவப் பிரச்னையாக எடுத்துக்கொண்டு ஜெயித்தது கிழம். அவர் கண்கள் மங்கலாக இடுங்கலாக இருந்தன. எத்தனை சதிகள் தந்திரங்கள் வழியாக இந்த இருக்கைக்கு வந்திருப்பார்!

’அவனுக்கென்ன?’ என்றேன்.

’ரொம்ப புத்திசாலி.’

’ஆமாம்.’

’கிரயோஜனிக் தளத்தில் அவனுக்குப் பெரிய எதிர்காலம் இருக்கிறது. அனேகமாகப் பறந்துவிடுவான்’ என்றார் ஆங்கிலத்தில்.

எனக்கு திடீரென்று முகர்ஜி மீது அனுதாபம் ஏற்பட்டது.

’மஞ்சு எப்பிடியிருக்கா?’

’அழுதுண்டே போறா.’

’பாவம். கொழந்தைதானே? இங்கியே அவளை எங்கியாச்சும் சேர்த்திருக்கலாம்.’

’கெடைக்கலியே. மார்க்கும் லட்சணமா இல்லை. என்ன சேய்றது?’

’ம்ம்’ என்று முனகினார். சிந்துபைரவி ராகம். இசையெல்லாம் தெரியாது. தெரிந்தது அதே நான்கு வரிதான்.
’மேலேருந்து ஓர் உத்தரவு வந்திருக்கு. ரஷ்யாவுக்கு ஒரு ரிசர்ச் குரூப் போறது. அதுக்குத் தலைமை தாங்கிப் போக ஒருத்தரை நாம அனுப்பணும்.’

திகிலில் என் வயிறு குளிர்ந்தது. ’அப்ப… ஹரி?’ என்றேன்.

’அவனுக்கு உடம்பு சரியில்லை.’

’என்னவாம்?’

’தெரியவில்லை. அவன் உடம்பில் ஏதோ விஷத்தை ஏத்தியிருக்காங்க. கிருமியா, கதிரியக்கமா ஒண்ணும் தெரியலை. பாத்திட்டிருக்காங்க.’

ஹரியின் முகம் என் முன் வந்து போயிற்று. ஆராய்ச்சிக்குழு என்பது உண்மையில் உளவாளிகள் அடங்கியது. அதன் தலைமைக்கு ஒப்புக்கு ஓர் உயர்மட்ட விஞ்ஞானி. எப்போதுமே அவன்தான் பலியாவான். எனக்கு எல்லாம் புரிந்தது.

’முகர்ஜியைப் பொறுத்தவரை இது ஒரு பெரிய வாய்ப்பு. நிறைய தொடர்புகள். ஆராய்ச்சியோட எல்லாத் தளங்களையும் நேரடியாப் பாக்க வாய்ப்பு. என்ன சொல்றே?’

’உண்மைதான்.’

’வெல். அதான். நான் ஒவ்வொருத்தரையா கூப்பிட்டு விஷயத்தைச் சொல்லிடறேன். அப்புறம் ஆலோசனைக் கூட்டத்தில் உளறிக் கொட்டிண்டு இருக்கப்படாது. புரியறதோ?’

’சரி.’

வெளியே வந்தேன். முகர்ஜியும் நாயுடுவும் ரகசியமாகச் சிரித்துப் பேசிக் கொண்டிருந்தனர். இளம் பெண் விஞ்ஞானிகளைப் பற்றி, அவர்கள் உடலுறுப்புகளைப் பற்றி. வேறென்ன?

நான் இன்னொரு காப்பியை ஏந்திப் பெற்று உறிஞ்சினேன். இலேசாகத் தலைவலித்தது. இந்தக் கடாவெட்டு முடிந்து வீடு சேர்ந்தால் போதும். இந்த வேஷத்தைக் கலைத்துவிட்டுச் சமைக்க ஆரம்பித்தால் போதும். ஃபிரிட்ஜில் சப்பாத்தியும் குருமாவும் இருக்கிறது. எடுத்துச் சாப்பிடுகிறாரோ, அப்படியே டி.வி. பார்த்தபடி தூங்கிவிடுகிறாரோ.

எட்டரைக்கு இரகசிய ஆலோசனை அறைக்குள் கூடினோம். அனைவரும் அமர்ந்ததும் கதவுகள் மூடின. கடைசி ஆடர்லியும் வெளியேறினான்.

கிழம் முதலில் சம்பிரதாயமான பேச்சைத் தொடங்கியது. ஆய்வகத்தின் சாதனைகள், திட்டங்கள், அதில் அங்குள்ளவர்களின் பங்களிப்பு, எதிர்பார்க்கப்படும் சேவையின் தரம்… அனைவரும் நிதானமாக சகஜமாக இருந்தனர். பலியாடு யார் என்று தெரிந்துவிட்டதன் நிம்மதி. நாயுடு சில விளக்கங்கள் கோரினார். முகமது ஜலீல் தன் துறையில் தான் செய்துவரும் சில சீர்திருத்தங்களைப் பற்றிச் சொன்னார். கிழம் போலியான, ஆனால் சற்றும் மிகையற்ற வியப்புடன் அதைக் கேட்டுப் பாராட்டியது.

“உண்மையில் இநதச் சீர்த்திருத்தங்கள் புதியவை அல்ல. மதிப்பிற்குரிய தலைவர் இருபது வருடம் முன்பு கான்பூர் ஆய்வகத் தலைவராக இருந்தபோது அங்கு நடைமுறைப்படுத்தி வெற்றி கண்டவைதான். இது ஒரு வெற்றிகரமான நகல். மன்னிக்கவும், பதிப்புரிமை ஏதும் தரமுடியாத நிலையில் இருக்கிறேன்…’ ஜலீல் சொன்னார்.

சிரிப்புகள். கிழம் சிரித்தபடி ’நோ நோ’ என்றது. “எல்லாம் உங்கள் கற்பனையும் திறமையும் தான்.எனக்குத் தெரியும் அது, மிஸ்டர் ஜலீல்.’

பிரபலமான ஆய்வக வேடிக்கை ஒன்று உண்டு. ’உனக்கு உயர்நிலை விஞ்ஞானியாகப் பதவி உயர்வா? அப்படி என்ன கண்டுபிடித்தாய்?’ என்று ஒருவன் கேட்டானாம். ’என் துறைத் தலைவரின் உடம்பில் மிக அரிப்பெடுக்கும் இடத்தை’ என்றானாம் வென்ற புத்திசாலி.

முகர்ஜி என் கண்களைச் சந்தித்தான். உதடுகளை மெல்ல அசைத்தான். அப்பளம் தின்கிறானாம். என் சிரிப்பை உதடுகளுக்குள் மறைத்துக்கொண்டேன்.

மெதுவாக வாள் உறையிலிருந்து வெளியே வந்தது. ’பார்த்தீர்களா, எத்தனை அழகான பூமாலை! எத்தனை மென்மையானது’ என்ற பாவனையில் ஒவ்வொரு கழுத்தாகத் தொட்டு வந்தது.

’உங்களுக்குத் தெரியும், நமது ஆய்வுகளை நாம் மேலும் செம்மைப்படுத்திக்கொள்வது இதே தளத்தில் ஆய்வுகளை மேற்கொள்ளும் பிறருடன் நமக்குள்ள உறவென்ன என்பதையும் நம்முடைய உள்வாங்கும் திறன் எந்த அளவு மேன்மைப்பட்டுள்ளது என்பதையும் பொறுத்துத்தான் உள்ளது…’

வாள் மேஜைமீது வைக்கப்பட்டாயிற்று. ஆட்டம் இறுதியை நெருங்கிவிட்டது. இனி பலிகடாவைச் சற்று முன்னால் நகர்த்த வேண்டியதுதான் பாக்கி. முகர்ஜியைப் பார்க்க எரிச்சலாக இருந்தது. என்ன பிறவி இது. ஒன்றுமே தெரியாமல் பரப்பிரம்மமாக இருக்கிறான்.

’ஒரு காபி சாப்பிடலாமே’ என்றார் தலைவர். உடல்களில் ஒருசில அசைவுகள் ஏற்பட்டன.ஒரு சில கணங்கள் கழிந்துதான் சிறு அதிர்ச்சியுடன் ஒன்றைக் கவனித்தேன். காபிக்காக யாருமே எழவில்லை. அறையின் மூலையில் காப்பி யந்திரமும் அட்டை தம்ளர்களும் இருந்தன.பார்வைகள் அவ்வப்போது வந்து என்னைத் தொட்டு மீண்டன. தலைவர் தீவிரமாக ஒரு ஃபைலைப் படித்தார். எல்லாரிடமும் ஒருவிதமான விறைப்பு நிலையும் செயற்கையான உதாசீன பாவனையும் இருந்தன.

என் கோப்பைக் காபியை எடுப்பதற்காக எழப்போன கணத்தில்தான் எனக்கு விஷயம் மின் அலையென உடலெங்கும் பரவிப் பிடிபட்டது. ஸ்னேகலதா ரெட்டி இருந்தவரை அவள்தான் காபியைத் தம்ளர்களில் பிடித்து ஒவ்வொருவருக்கும் அளிப்பாள். நட்பார்ந்த சிரிப்பு, சம்பிரதாயமான கிண்டல் என்று சகஜமாக அது நடைபெற்று வந்ததனால், அதிலிருந்த வித்தியாசம் என் பார்வைக்குக் கூடப் படவில்லை. இன்று அவள் இல்லை. ஆகவே காபி பரிமாற வேண்டியது என்முறை.

அந்த ஆலோசனை அறையில் ஒரு கணம் நான் நிர்வாணமாக நின்று கொண்டிருந்தேன். பிறகு மிகக் கனமான இரும்புக் கவசத்தால் என்னை முழுக்க மறைத்துக்கொண்டேன்.

மிக மெல்ல தலைவர் தன் ஃபைலை மூடினார். நான் என் ஃபைல்களில் ஒன்றை விரித்துத் தாள்களை உற்றுப் பார்த்தபடி புரட்டினேன். என் கவசம் மீது பார்வைகள் மோதித் தெறித்தன.

தலைவர் எழுந்து சென்று தன் காபியைப் பிடித்து வந்தார். பிறரும் எழுந்து சென்று பிடித்து வரும் சலசலப்பு. நாயுடு ‘ பத்மா, காபி சாப்பிடவில்லையா?’ என்றார்.

’இல்லை. ஏற்கனவே இரண்டு சாப்பிட்டுவிட்டேன்’ என்றேன்.

கிழம் ‘சரிதான், காபியை எந்த அளவு குறைக்கிறோமோ அந்த அளவு உடம்புக்கு நல்லது’ என்றார்.
காலிக் கோப்பைகளை ஒவ்வொருவராக எழுந்து சென்று குப்பைக் கூடையில் போட்டு மீண்டார்கள்.
கைக்குட்டையால் வாயை ஒற்றியபடி தலைவர் தொண்டையைச் செருமினார்.

’நல்லது நண்பர்களே! நாம் ருஷ்யாவிற்கு அனுப்ப வேண்டிய உயர்மட்ட ஆராய்ச்சித் தூதுக்குழு குறித்துப் பேசிக் கொண்டிருந்தோம்…’

வாள் உயிர்பெற்றது. நான் முகர்ஜியைப் பார்த்தேன். ஒவ்வொரு முகங்களாகப் பார்த்து மீண்டேன். என் குழந்தையின் முகம் நினைவில் வந்தது. என் கணவர். என் வீடு. எனது தனியறைப் புத்தகங்கள். என் தலை கனத்துக் கனத்து இரும்புக் கோளம்போல ஆகிக் கழுத்துத் தெறித்தது. எவ்வளவு நேரம் என்று தெரியவில்லை. எவ்வளவு சொற்கள் என்று அறியவில்லை.

அந்த இடம் வந்தது. வெண்ணெயை வெட்டிச் செல்லும் கத்திபோல அந்த வாள் என்னை வெட்டிக் கடந்து சென்றது. ஒவ்வொரு முகமும் தெய்வச் சிலைகளுக்குரிய சாந்த நிலையில் இருந்தன. அவ்வளவுதான். எல்லாம் முடிந்துவிட்டது.

ஆனால் எனக்கு இழப்புணர்வும் அச்சமும் பெருகி மார்பை அடைக்கவில்லை. கண்களில் கண்ணீர் கசியவும் இல்லை. நான் மிக மிக நிதானமாகவும் தெளிவாகவும் இருப்பதை நானே வியப்புடன் கவனித்தேன்.
’பத்மா என் மாணவி என்பதில் என் மனம் பெருமை கொள்கிறது. இந்தப் பெரும் பொறுப்பை…’
என் முன் இருந்த வெண்தாளில் பேனாவை மிக அழுத்தமாகப் பற்றி உழுவதுபோல எதையோ மீண்டும் மீண்டும் எழுதியபடி இருப்பதைத் திடீரென உணர்ந்தேன். அது என் பெயர் என்று பார்த்தபோது சட்டென்று ஒரு புன்னகை வந்தது.

-ஓம் சக்தி தீபாவளி மலர், 2000

முந்தைய கட்டுரைமொழி- 3,வையாபுரிப்பிள்ளையின் மரணமின்மை
அடுத்த கட்டுரைநெஞ்சுக்குள்ளே…