எனக்குத் திலகனைப் “பெருந்தச்சனாகத்” தான் அறிமுகம். 89 அல்லது 90 என்று நினைக்கிறேன். அந்த உருவமும் குரலும் மிகையில்லாத நடிப்பும் என்னவோ செய்தது.
“கிரீடம்” தான் என்னைத் திலகனின் தீவிர ரசிகனாக மாற்றியது. (தமிழில் அஜித்தை வைத்து அக்கிரமம் செய்தார்களே அந்தப் படம் தான். அசலுக்கும் போலிக்கும் என்ன வித்தியாசம் என்று இன்று வரை உங்களுக்கு வாழ்வில் விளங்கவில்லை எனில் இது இரண்டையும் அடுத்தடுத்துப் பார்த்து விடுங்கள்.)
மலையாள சினிமாவில் மிக முக்கியமான படங்களில் ஒன்றாகக் கொண்டாடப்படுகிற படங்களில் ஒன்று கிரீடம். ஒரு அச்சன் – மகனைப் பற்றியான கதை. வண்ணதாசனின் வரியில் சொன்னால் ஒரு அச்சனின் கதை அது.
ஒரு தந்தையாக, சாதாரண போலீஸ்காரனாக, மகனை எஸ்ஐ – யாகப் பார்க்க வேண்டும் என்ற விடாப்பிடியான கனவு கொண்டவனாக அந்தக் கனவுகள் நொறுங்கிப் போனவனாக அபாரமாக செய்திருப்பார்.
எங்கேனும் ஒரு வயதான, உண்மையான, கீழ்ப்படிதலான போலீஸ்காரரைக் காணும் பொழுது திலகனின் அந்தப் பாத்திரம் ஓர்மையில் வராமல் கடப்பது சாத்தியமில்லை.
ரௌடியாக ஆகி விட்ட மகனைக் கடைத் தெருவில் இரவு ரோந்தின்பொழுது டார்ச் வெளிச்சத்தில் அப்பனும் மகனும் பார்த்துக் கொள்கிற தருணம் வாழ்வின் துயரம் அறிந்தவர்களுக்கு ஒருபொழுதும் மறக்க முடியாத தருணமது.
கிரீடத்தின் இரண்டாம் பாகமான ” செங்கோல்” அதில் மகளைக் கூட்டிக் கொடுப்பவராக, அதை மகன் கண்டு பிடிக்கும் பொழுது தற்கொலை செய்து கொள்வதாக திலகனின் பாத்திரம். மகளை நாடகத்திற்கு நடிக்க அழைத்துப் போகும் தந்தை, அந்தப் பயணத்திற்கு “வேறு நோக்கங்களும்” உண்டு. அந்த நோக்கங்களை ஒரு சிறிய பெட்டியைக் கையில் பிடித்தபடி மகளோடு பேருந்து நிறுத்தத்திற்கு நடந்து போவதில் திலகனால் கொண்டு வந்து விட முடியும்.
குணச்சித்திரம், எதிர்மறை, நகைச்சுவை என எல்லாத் தளத்திலும் அவரால் இயங்க முடியும். கிலுக்கம், மூக்கற்ற ராஜ்ஜியம், சில குடும்பச் சித்திரங்கள் போன்ற படங்களில் அவரது அபாரமான நகைச்சுவை நடிப்பை உணர முடியும்.
அவரது விருப்பமான நடிப்பு குணச்சித்திரமும், எதிர்மறைப் பாத்திரங்களுமாகவே இருந்திருக்கும் எனத் தோன்றுகிறது.
“காட்டுக் குதிரா” என்றொரு படமுண்டு. அது முழுக்க எதிர்மறையான பாத்திரம். திலகன் மீது நமக்கு வெறுப்பு வராமல் நாம் அரங்கத்தை விட்டு வெளிவர முடியாது.
சிறிய பாத்திரங்களில் கூட அவரால் நுட்பங்களைக் கொண்டுவந்து விட முடியும். ” நாடு வாழிகள்” படத்தில் பெரிய முதலாளிகளின் வீட்டில், முதலாளிகள் வளரத் தொடங்கிய காலத்திலிருந்தே, அவரோடு கூடவே இருக்கும், பெரிய திறமையற்ற விசுவாசமிக்க ஊழியனின் பாத்திரத்தை அத்தனை நேர்த்தியாகச் செய்திருப்பார். தமிழில் சொன்னால் கொஞ்சம் அல்லக்கை பாத்திரம் அது. ஆனால் அதைத் திலகனால் தான் அப்படிச் செய்ய முடியும். ” வரவேழ்ப்பில்” ஆர் டி ஓ அதிகாரி, “சதயத்தில்” நீதிபதி, “பிங்காமி” யில் சமூக சேவகன், “பஞ்சாக்கினி” -யில் பத்திரிக்கையாளன் என ஒருபாடு நல்ல பாத்திரங்கள் அவருக்கு உண்டு. அவரை மட்டுமே நம்பி எழுதப்பட்ட எடுக்கப்பட்ட திரைப்படங்கள் நிறைய உண்டு. பத்மராஜனின் மூணாம் பக்கம், லோகியின் கண்ணெழுதி பொட்டும் இட்டு, ரஞ்சித்தின் இந்தியன் ருபீ, அன்வர் ரஷீத்தின் உஸ்தாத் ஹோட்டல் என.
எதிலும் அடங்காதவராக இருந்தார் திலகன். தமிழில் வெறும் “பன்னீர்ஷெல்வம் ” என்ற விளியின் மூலம் அறியப்பட்டவராகவே அவர் இருந்தார். அது அவரது ஒரு பக்கம் மட்டுமே!
எனக்கு ஒரு ஆறேழு வருடங்களாய்த் தொலைபேசியில் அவரோடு பேசிக்கொள்கிற அளவிற்கான நட்பிருந்தது. தொலைபேசியில் மிஸ்டு-காலைப் பார்த்துவிட்டு “ஈ நம்பரிலிருந்து விளிச்சிருந்தல்லே” என அவர் கேட்கும் பொழுது எனக்கு ஆடிப்போகும். எத்தனையோ படங்களில் கேட்ட அவரின் மகத்தான குரல் அது. என்னோடு தமிழில் பேசவே முயற்சிப்பார். “சொல்லுங்கோ” என்பார். சிறுவயதில் மதுரை, ராமேஸ்வரம் எல்லாம் வந்திருப்பதாகச் சொன்னார். தனது இளமைக்கால நாடக அனுபவங்களைப் பற்றி எப்பொழுதேனும் சொல்வார். தன் குரல் தனக்கு மிகப் பெரிய பலம் என்பார். எந்த மொழியானாலும் தன் குரல் இல்லையெனில் தன் நடிப்பில் பாதி போய் விடும் என்பார். சிவாஜியோடு யாத்ரா மொழி படத்தில் நடித்ததை தன் வாழ்நாள் பாக்கியமெனக் கூறுவார்.
AMMA -வோடு (மலையாளத் திரைப்பட அமைப்பு) முரண்பட்டு, புறக்கணிக்கப்பட்டு படங்களே இல்லாத சமயத்தில் இனியும் தனக்கு இந்நிலை தொடர்ந்தால் கலாச்சாரத் துறை அமைச்சர் எம் ஏ பேபி வீட்டு வாசலில் தற்கொலை செய்துகொள்வேன் என ஆனந்த விகடனில் பேட்டி அளித்தார். ’ஏன் சார் இப்படி’ என்று கேட்டேன்! கைப்பாகச் சிரித்தார். ஒரு சிறிய மௌனத்திற்குப் பின் ” அது ஒரு வால்லாத வேதனையானு ” என்றார். அபிநயிக்கானு இல்லாது இருக்கினது தனக்கு ஒருக்கிலும் தாங்காம் பட்டிலா” என்றார். நான் அழைக்கும் பெரும்பாலான சமயங்களில் உடல் நலம் இல்லாதிருந்தார். ஏதாவது சூரணம் சாப்பிட்டுக் கொண்டிருப்பதாகச் சொல்வார். ஒருமுறை அவரை சந்திப்பதற்கான வாய்ப்பு கிடைத்து. நான் போக முடியவில்லை. அந்தக் குற்ற உணர்ச்சி என் வாழ்நாளுக்கும் இருக்கும்.
மலையாள சினிமா அவர் மரணத்தை முன் அறிந்தது. போன வருடம் அவர் மீதான தடைகள் நீக்கப்பட்டபோது இயக்குனர் ரஞ்சித் அதற்காகவே காத்திருந்தது போல அவருடைய ஆகச் சிறந்த பாத்திரங்களில் ஒன்றாகக் கருதப்படுகின்ற இந்தியன் ரூபி திரைப்படத்தை இவருக்காகவே இயக்கினார்.
எந்தக் கதாநாயகர்களோடு முட்டி மோதினாரோ அவர்களின் படங்களிலும் தடைக்குப் பிறகும் நடித்தார். மோகன்லாலோடு ஸ்பிரிட் படத்தில் நடித்தார். (இருவரும் சந்தித்துக் கொள்வது போல காட்சிகள் இல்லையென்றாலும் கூட).
மம்மூட்டியின் மகனின் இரண்டாவது படமான “உஸ்தாத் ஹோட்டல்” திலகனை மனதில் வைத்தே எழுதப் பட்டது. (மம்மூட்டியே தன் மகனுக்கான திரைப்படங்களைத் தேர்ந்தெடுக்கிறார் என்று சொல்கிறார்கள். அவருக்குத் திலகன் மையப் பாத்திரமாக இருக்கும் படத்தில் தன் மகன் நடிப்பதில் எந்த ஆட்சேபனையும் இல்லை).
ஒரு நல்ல நடிகனுக்கு உண்டான கௌரவத்தை சற்று தாமதமாகவேனும் மலையாள சினிமா அவருக்கு அளித்தது. உஸ்தாத் ஹோட்டல் படத்தின் முடிவு (ஏறக்குறைய அவரின் கடைசிப் படங்களில் ஒன்று) அவரது வாழ்விற்கான குறியீட்டு முடிவு போலவே இருக்கும். படத்தின் இறுதியில் எங்கோ சுவடுகளற்றுப் புகை போல் மறைவார். திரைப்படத்தில் அவர் எங்கோ வாழ்வதாக மற்றவர்கள் நம்புவார்கள்.
அந்தத் திங்கள் காலை ” திலகன் நம்மிடம் இருந்து விடை வாங்கி” என்று கோவில்பட்டி சரவணனிடம் இருந்து குறுஞ்செய்தி வந்திருந்தது. சென்னை நகரப் போக்குவரத்து தாறுமாறாக என் முன் பாய்ந்து கொண்டிருக்க, நான் மிகத் தனியனாய் உணர்ந்தேன். நண்பர்களுக்கு எஸ் எம் எஸ்ஸில் செய்தி அனுப்பினேன். மிகத் தனியனாய் உணருகிறேன் என்று ஜெயமோகனுக்கு குறுஞ்செய்தி அனுப்பினேன். “நானும் அப்படி உணர்கிறேன். எல்லா எழுத்தாளர்களைப் போல என்னிடமும் அவருக்கான கனவுப் பாத்திரங்கள் இருந்தன” என பதில் அனுப்பினார்.
திருவனந்தபுரத்திற்குப் போகலாம் எனப் புறப்பட்டால் அன்று மாலையே அனேகமாக அடக்கம் இருக்கும் என்றார் இயக்குனர் மதுபால். மதுரைத் தோழர் பிரபாகரன் அவர் எண்ணில் கூப்பிட்டுப் பாருங்கள் என்றார். அவர் இல்லாத அவர் எண்ணை அழைப்பது எத்தனை துயரம். யாரோ எடுத்து அன்று மாலையே என உறுதிப் படுத்தினார்கள்.
அறையிலும் இருக்க முடியாமல் வெளியிலும் திரிய முடியாமலும் நகரத்தில் அலைந்தேன். அவருடைய போனின் ரிங் டோன் பாடல் வரி இப்படி இருக்கும்,
“சந்த்ர கலபம் சாத்தி உறங்கும் தீரம்,
இந்த்ர தனுசின் தூவல் பொழியும் தீரம்,
ஈ மனோகர தீரத்து தருமோ இனி ஒரு ஜன்மம் கூடி,
எனக்கினி ஒரு ஜன்மமும் கூடி”
செங்கோல் படத்தில் மதுரம் ஜீவாமிர்த பிந்து என்ற பாடலில் “ஏகாந்த யாம வீதியிலே” என்ற வரியின் பொழுது கிராமத்துத் தெருவில் தள்ளாடியபடி நடந்து போவார் திலகன்.
நானும் அந்த இரவில் ஆதித்யா பாரில் இருந்து 12 மணிக்கு நாய்கள் குரைக்க கண்ணீரோடு பிரியமானவர்களை போனில் அழைத்தபடி (லிபி மாத்திரமே போனை எடுத்தார்) எப்படியோ பெருந் துயரத்தோடு என் அறைக்குப் போய் சேர்ந்தேன்.
“திலகன் அரங்கு ஒழிஞ்சு”.
சாம் ராஜ்