கோரா- ஒரு கடிதம்

அன்புள்ள ஜெயமோகன்

அண்மையில் தாகூரின் கோரா நாவல் படித்தேன். காந்தியின் சனாதனம் குறித்து நீங்கள் எழுதியிருந்த ஒரு கட்டுரை மனதில் ஓடிக்கொண்டே இருந்தது. காந்திக்கும் கோராவுக்கும் சரியாகவே முடிச்சிட்டிருக்கிறீர்கள். அவர்களுடைய பழைமைவாதத்திலும் அந்தக் காலகட்டத்திற்குத் தேவையான ஒரு புரட்சி இருக்கத்தான் செய்கிறது.

காந்தியைப் புரிந்து கொள்வதற்குக் கோரா மிகவும் பயன்படுகிறான். நீங்கள் குறிப்பிட்டது போக, மேலும் ஓர் ஒற்றுமை – இருவரும் பழைமையை ஆதரித்துப்பேசிய போதும் அதை முழுக்கப்பின்பற்றவில்லை. கோரா தீண்டாமையைக் கேள்விகேட்காமல் நியாயப்படுத்துகிற வேளையிலேயே, ஏழைகளை அரவணைத்து அவர்களோடு உணவுண்டு, தங்கியிருந்து, தன் தொண்டர்களை அதிர்ச்சியில் ஆழ்த்துகிறான்.

காந்தியும் வர்ணாசிரமத்தை ஆதரித்துப்பேசிய ஆரம்ப நாள் களில்கூட நடைமுறையில் அதை நிராகரித்தே இருக்கிறார் என்பதே என் புரிதல். ஆனால் கோராவிலிருந்து காந்தி முன்னகர்ந்து பெரிதும் வேறுபட்டும் நிற்கிறார். கோரா கேள்வி கேட்காமல் பழைய பழக்கங்கள் அத்தனையும் தற்காலிகமாய் ஏற்றுக்கொள்ள வேண்டுமென்கிறான். காந்தி, சரியோ தவறோ, தன் பகுத்தறிவுக்கு உகந்தவற்றை மட்டுமே ஏற்றுக்கொள்கிறார்…மற்றவற்றைக் கடுமையாக நிராகரிக்கவும் எதிர்க்கவும் தயங்கு வதில்லை.

கோரா நாவலில் எல்லாவகைத் தரப்புகளும் ஆசிரியரின் சார்பு அதிகமின்றி அலசப்படுவது இன்றும் அதிசயிக்கவைக்கிறது. பாரதியோடான ஒப்பீட்டின்போது உங்கள் கருத்துகளோடு முரண்பட்டாலும், தாகூருக்கு நீங்கள் அளிக்கும் உயர்ந்த பீடத்தினை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.

தாகூர் காந்தியின் வருகைக்கு முன்பு எழுதிய இன்னொரு நாவலிலும் காந்தியின் தொடர்பினைக் காண்பவர் இருக்கின்றனர். ‘காரே பைரே’வின் (The Home and the World) சந்தீப். சந்தீப் சுதேசியம் பேசுகின்றவன், காந்தியின் ஒத்துழையாமை இயக்கத்தின் மீது தாகூருக்கு விமர்சினங்கள் இருந்தன என்பதைத்தவிர இருவரையும் இணைத்துப்பார்ப்பது பொருத்தமாயில்லை. சந்தீப்பை காந்தி என்னவாக ஆகியிருக்கக்கூடாது என்பதற்கு ஓர் எச்சரிக்கையாக வேண்டுமானால் கொள்ளலாம்.

காந்தியைப் பற்றி (திருக்குறளோடு இணைத்து) நான் மாணவர்களோடு தொடர்ந்து உரையாடிக்கொண்டிருக்கிறேன். அவரை அவர்களுக்குச் சரியான வகையில் அறிமுகப்படுத்தும் தேவை பெரிதும் உள்ளது. காந்தியைப் பற்றிய உங்களது எழுத்துகள் இன்றைவிடவும் அதிகமாய் அவர்களை அடையவேண்டும்.

இன்னொன்று – இதைச் சில நாள்களுக்கு முன்பே எழுதியிருக்கவேண்டும் – நாராயண் தேசாய் வருகை பற்றிய டாக்டர்.சுனில் கிருஷ்ணனின் குறிப்பை உங்கள் தளத்தில் வெளியிட்டமைக்கு நன்றி. மதுரை சென்று நாராயண் தேசாயுடன் நீண்ட ஓர் உரையாடலை நிகழ்த்திப் பின் சென்னையிலும் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அருமையான தருணங்கள் அவை.

அன்புடன்,
த.கண்ணன்
www.seer7.com

அன்புள்ள கண்ணன்

கோரா தமிழில் வெளிவந்து ஐம்பதாண்டுகளாகியும் வாசிக்கப்படாத ஒரு நாவல். தீண்டாமை, சாதியொழிப்பு பற்றி போலியான சீர்திருத்தவாதம் பேசாமல் உண்மையான நடைமுறைச் சிக்கல்களையும் தத்துவப்பிரசினைகளையும் பேசிய இந்திய நாவல்கள் இரண்டு. கோரா முதன்மையானது. யு ஆர் அனந்தமூர்த்தியின் பாரதிபுரா அடுத்தபடியாக

உங்கள் குறிப்பு நீங்கள் கோராவை அணுகும் விதத்தைப் பற்றிய ஆர்வத்தையூட்டுகிறது. ஏன் இன்னும் விரிவாக எழுதக்கூடாது?

ஜெ

அன்புள்ள ஜெ

நன்றி. கட்டாயம் எனது வலைத்தளத்தில் இன்னும் விரிவாக எழுதுகிறேன். கோராவை நான் படித்ததும் ஆங்கிலத்தில்.

கோராவிலும் தீண்டாமையைத் தாகூர் கடுமையாகக் கண்டிக்கவே செய்கிறார். கோராவின் வளர்ப்புத் தந்தையே, அவன் பூர்வீகம் தெரிந்ததால், அவனைத் தீண்ட மறுப்பதாய்ச் சித்திரிக்கிறார்….கோராவே கிருத்துவ சேவகி வைத்துச்சமைக்கும் தன் தாயிடம் உணவு உண்ண மறுக்கிறான். (உ.வே.சா., தான் நேசித்த, தன் குருவான மீனாட்சிசுந்திரம் பிள்ளையின் வீட்டிலேயே உண்ணமுடியாத நிலையிருந்தது நினைவுக்கு வந்தது). அடக்குமுறையை உருவாக்கும் சாதிமுறையை மதத்திற்கு எதிரானது என்றும் பல இடங்களில் கூறுகிறார்.

ஆனால், சமூக மாற்றங்கள் வெளியிலிருந்து திணிக்கப்படுவதைத்தான் ஏற்றுக்கொள்ள மறுக்கிறார். சமூகத்திற்கு உள்ளிருந்துதான் நிலையான மாற்றங்கள் கொண்டுவர முடியும் என்பது இன்றுவரை நாம் கண்டுகொண்டேதான் இருக்கிறோம். இறுதியில் மதங்கள், கொள்கைகள், சித்தாந்தங்கள் எல்லாவற்றையும் விட மனித உறவுகளும் அறமும் தாம் முதன்மையானவை என்கிற முடிவினை நோக்கிச் செல்கிறார். தாகூர் பின்னர் தேசியவாதத்தையும் தாண்டி சர்வதேசியத்தை நோக்கி நகரத்துவங்கியதற்கான விதைகள் கோராவில் தென்படுகின்றன…கோராவை தேசியவாதம் பேசும் ஐரிஷ்-இந்துவாய்ப் படைத்ததே அதற்காகத்தானோ?

ஆனால் கோரா சொல்வது இதுதான் என்று எதையும் உறுதியாகக் கூறுவதும் சிக்கல்தான் – கோராவின் அழகே அதன் பன்முகத்தன்மையும் பரந்து விரியும் விவாதங்களுமே. விவாதங்களின் போக்கில் பலதளங்களில் முக்கியமான கேள்விகளை எழுப்பிச் செல்கிறார். உதாரணமாய், ஆங்கிலேயர்கள் நம்மீது திணித்த சட்ட அமைப்பு குறித்து. அரசாட்சி முறையில் மக்களுக்கு நீதி வழங்கும் பொறுப்பு மன்னனிடமே இருந்தது. இன்றைக்கு வக்கீல் வைத்துச் செலவு செய்து, நீதிக்காகப் போராட வேண்டிய கட்டாயம் ஏன் மக்கள்மீது சுமத்தப்பட்டிருக்கிறது என்று கேட்கும் கோரா வக்கீலை அமர்த்த மறுத்து சிறைக்குச்செல்கிறான். அங்கும் நாம் காந்தியைக் காணலாம்.

வலைத்தளத்தில் எழுதவதாய்ச் சொல்லிவிட்டு இப்போதே நிறைய எழுதிவிட்டேன் :-)

தூர்தர்ஷன்-1ல் சென்ற வாரம்முதல் திங்கள், செவ்வாய் இரவுகளில் 9.30 மணிக்கு கோராவைத் தொடராக ஒளிபரப்பத் தொடங்கியிருப்பதாய்ப் படித்தேன்.

‘பாரதிபுரா’வையும் படிக்கவேண்டும்.

அன்புடன்
த.கண்ணன்

முந்தைய கட்டுரைகாந்தி இரு கடிதங்கள்
அடுத்த கட்டுரைநீங்கள் ஓர் அரசியல்வாதி!