சாதியும் ஜனநாயகமும்

மதிப்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு,

நான் காஞ்சிபுரம் மாவட்டத்தின் ஒரு கிராமத்தில் ஏரிப்பாசனத்தை நம்பியிருக்கும் விவசாயக் குடும்பத்தைச் சார்ந்தவள். உங்களுக்குக் கடிதம் எழுதும் தகுதி கூட எனக்கில்லையென்றே நினைக்கிறேன். உங்களைப் போல இரவும் பகலும் நான் வாசிக்க / எழுத நினைத்துக்கூட பார்த்ததில்லை.

சின்மயி பற்றிய பதிவில் நீங்கள் குறிப்பிட்டுள்ளதைப் பற்றி எனக்கு மேலும் சில விளக்கங்கள் தேவையென்பதால் இதை எழுதுகிறேன். சின்மயி / கைதாயிருப்பவர்கள் பிரச்சனை பற்றி எனக்குப் பேச ஏதுமில்லை. அது அவர்களின் சொந்தப் பிரச்சனை என்றே கருதுகிறேன். இந்த விவகாரத்தால் சின்மயி அவர்களின் சில ட்வீட்களைப் படிக்க நேர்ந்தது. இட ஒதுக்கீட்டிற்காகக் குரல் கொடுக்கும் தலைவர்களை Bull Crap என சொல்லியிருக்கிறார். இதை எந்த அறத்தின்படி சரியென்பீர்கள். அவர் மேலும் யாருக்கும் யாரும் குறைந்தவர் அல்ல என்றும் அதனால் இட ஒதுக்கீடு தேவை இல்லை எனவும் சொல்லியிருக்கிறார்.

எங்கள் கிராமத்தில் நவராத்திரியின் போது அம்மன் (உண்மையில் சீதை) தினமும் வீதியுலா வருவது வழக்கம். சிறு பிள்ளைகள்தான் சாமியைத் தூக்கி வருவார்கள். அப்படி வரும்போது ஒரு நாள் வைஷ்ணவரான அர்ச்சகர் என் தம்பியின் கை பட்டதற்காகப் பெரிய சண்டையை உருவாக்கினார். மறுபடி குளித்துவிட்டுத்தான் அர்ச்சனையைத் தொடர்ந்தார். இது நடந்த ஆண்டு 2000. நான் எப்படி அனைவரும் சமம் என ஒப்புக் கொள்ள முடியும்?

நான் பொறியியல் கல்லூரியில் சேர்ந்ததும் இட ஒதுக்கீட்டால்தான். இல்லையென்றால் இந்நேரம் எந்த வீட்டில் எத்தனை குழந்தைகளைப் பெற்று அல்லாடிக் கொண்டிருந்திருப்பேன் எனத் தெரியாது. நாங்கள் கனவிலும் கண்டிராத வாழ்க்கையை இப்போது வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

ஆனால் எங்கள் வாழ்க்கையின் துயரங்களை அறியாதவர்கள், இட ஒதுக்கீடும் மாமிசம் உண்ணுதலும் தவறென்று சொல்வது எப்படி அறமாகும்? நாங்கள் விதியின் வசத்தால் இப்படி வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என நினைத்த நாட்கள் உண்டு. அது துயரமான வாழ்க்கையென்பதே தெரியாத காலம் உண்டு. என் தாய்க்குப் பிறந்த 6 குழந்தைகளில் உயிரோடு இருப்பது 3 மட்டுமே. சத்துணவு போதாமை காரணமென சொல்ல வேண்டியதில்லை. மாதம் ஒரு நாளோ இல்லை இரண்டு மாதத்திற்கு ஒரு நாளோ கிடைக்கும் புலால்தான் எங்களுக்குக் கிடைத்த புரதமாக இருக்கும். 400 மில்லி தண்ணீர் கலந்த பால் வாங்கி அதில் மேலும் தண்ணீர் ஊற்றிக் குடித்தவர்கள் நாங்கள். எங்களுக்கு 2 ஏக்கர் நிலமுண்டு. ஆனால் அதை எத்தனையோ தருணங்களில் இழந்து இருப்போம். 2 ஏக்கர் நிலமிருப்பதால் நாங்கள் உண்மையிலேயே இன்று பணக்காரர் தான் என நினைப்பதுண்டு. ஆனால் சிறு வயதில் என் அம்மா கடனுக்காகத் தற்கொலைக்கு முயன்றது கூட உண்டு. அந்த இரண்டு ஏக்கரில் இதுவரை நல்ல விளைச்சல் என்ற ஒன்று இருந்ததேயில்லை.

போவோர் வருவோர் எல்லாம் இட ஒதுக்கீடு தவறென்று சொல்லும் போது நெஞ்சில் அழுத்தும் ஒரு வலியைக் கடந்து போவது சாதாரணமில்லை. உடன் படித்த / பணி புரியும் பிராமணர்கள் (பெண்களும் ஆண்களூம்) கணக்குப் போடும் வேகத்தைப் பார்த்து வியந்த நாட்கள் நிறைய. ஆனால் பிராமணர்களுக்குக் கணக்கு இயற்கையிலேயே சுலபமாக வரும் என மேலோட்டமாக சொல்லிச் செல்லும் வேளைகளில் எனக்கும் சொல்லத் தோன்றும் நாற்றெடுத்து நட, களையெடுக்க, அறுக்க சுலபமாக வருமென்று. பெருமையாகக் கருதியிருப்பார்களா?

இட ஒதுக்கீடு பெற்ற நிறையப் பேர் இப்படி மௌனமாக இவர்கள் சொல்வதைக் கேட்டுக் கொண்டுதானிருக்கிறார்கள் என்றே நினைக்கிறேன். இட ஒதுக்கீட்டை ஆதரித்துப் பேசுவதே அறிவீனம் என நினைக்கும் இடத்தில் தான் நான் இருக்கிறேன். நான் இதற்காக அழுத இரவுகள் உண்டு. அறம் அறம் எனப் பேசும் உங்களுக்கு இதெல்லாம் தெரியாதா? திராவிட இயக்கங்களின் மேல் ஆயிரம் குறைகள் சொன்னாலும், நாங்கள் இட ஒதுக்கீட்டுக்காக அவர்களுக்கு ஓட்டு போடுவதில் தவறென்ன இருக்கிறது. நடைமுறை வாழ்க்கையில் ஆதிக்க சாதிகளின் கொடுமை உடல் ரீதியிலானது என்றால் கருத்தியல் தளத்தில் எங்களை தினம் தினம் எங்களின் உணவுக்காகவும் இட ஒதுக்கீட்டுக்காகவும் ஏசும் பிராமணர்களின் இம்மாதிரியான பேச்சுகள் ஏன் ஆபாசமாகக் கருதப்படக்கூடாது?

பிராமணர்கள் தமிழின் இலக்கியங்களிலும், கலைகளிலும், கல்வியிலும் சென்றிருக்கும் தூரம் அளவிடமுடியாதது. ஆனால் நாங்கள் அங்கு வர இட ஒதுக்கீடு இல்லாமல் முடியுமா? மன உறுதி வேண்டும், அனைவரும் சமம் என எழுதி விட்டால் பிரச்சனை தீர்ந்ததா?

இதை நீங்கள் சின்மயி பிரச்சனையாகக் கருத வேண்டாம் என வேண்டுகிறேன். சின்மயியைவிட அதிகமான எல்லைக்கு சென்று கருத்துகள் சொன்ன பல பேர் இணையத்தில் உண்டு. நீங்கள் இட ஒதுக்கீடு பற்றிப் பேசியிருக்கிறீர்களா என தெரியாது. இருந்தால் சுட்டி தரவும். தயவு செய்து என் பெயர்/மின்னஞ்சல் முகவரியை வெளியிட வேண்டாம். எனக்கு யாருடனும் விவாதிக்கும் திறனும் அறிவும் இல்லை என்றே நினைக்க விரும்புகிறேன். இது கோஸ்வாமி போன்றவர்கள் மட்டுமே செய்தியாகும் நாடு. நீங்கள் இந்தக் கடிதத்தை உதாசீனப் படுத்தினாலும் நான் இதை மறுபடி வேறொருவருடன் பேசப் போவதில்லை.

நன்றி,


*

அன்புள்ள க,

உங்கள் உணர்ச்சிகளைப் புரிந்துகொள்கிறேன்.

இட ஒதுக்கீடு பற்றி நான் நெடுநாட்களாகத் திட்டவட்டமாக என் கருத்துக்களைத் தெரிவித்து வருகிறேன். என் கருத்துக்களை நான் நினைப்பதைவிடவும் தீவிரமாகச் சொன்னவை .’நூறுநாற்காலிகள்’,‘வணங்கான்’ போன்ற கதைகள். அவற்றை நீங்கள் வாசிக்கலாம். இடஒதுக்கீட்டை இந்தியசமூகத்தின் மிகச்சிறந்த சமூகமுன்மாதிரி அமைப்பாக நினைக்கிறேன். இன்னும் இட ஒதுக்கீட்டுமுறை அமலாகாத உலகின் பலநாடுகள் இந்தியாவை அதில் முன்மாதிரியாகக் கொள்ளவேண்டுமென விரும்புகிறேன்.

இங்கே நான் சொல்லக்கூடியவை அவற்றுக்கு மேலேசென்று யோசிக்கவேண்டிய விஷயங்கள். ஒடுக்கப்பட்ட சாதிகளில் பிறந்த ஒருவர் வரலாற்றுணர்வும் நீதியுணர்வும் கொண்டிருந்தாரென்றால் பரிசீலிக்கவேண்டியவை. சுயநலத்தை மட்டுமே அவர் தன் நிலைப்பாடாகக் கொண்டிருந்தாரென்றால் இதை அவர் யோசிக்கவேண்டியதில்லை.


சாதியமைப்பு பற்றி…

இந்தியசமூகத்தின் சாதியமைப்பு என்பதை திராவிட இயக்கத்தவரின் மேலோட்டமான வெறுப்பரசியலினூடாக அன்றி அம்பேத்கார் முதல் டி.டி.கோஸாம்பி வரையிலான பேரறிஞர்களின் சமநிலை கொண்ட, விரிவான வரலாற்றாய்வுநோக்கினூடாக அணுகக்கூடிய ஒருவரை உத்தேசித்தே இதை எழுதுகிறேன்.

இந்திய சமூகம் சாதிச்சமூகமாக உருவானதை யாரோ சிலர் செய்த சதிவேலை என்று அணுகுவது முதிர்ச்சியான வரலாற்றுநோக்கல்ல. வரலாற்றில் ஒரு சமூக அமைப்பு உருவாகி வருவதென்பது மிகச்சிக்கலான பல்வேறு காரணிகளின் பின்னல் வழியாகத்தான். அது எவராலும் திட்டமிட்டு உருவாக்கப்படுவது அல்ல. ஒரு நிலப்பகுதியின் இயற்கைச்சூழல், அங்கே உருவாகிவந்த மானுட இனங்களின் இயல்பு ஆகியவற்றுடன் சம்பந்தப்பட்டது அது.

மானுடநாகரீகம் உருவானவரலாற்றைப் பார்த்தால் இரண்டு வலுவான போக்குகள் நம் கண்ணுக்குப்படும். ஒன்று, ஈவிரக்கமற்ற வாழ்க்கைப்போட்டி. வலுவானவர்கள் எளியவர்களை வென்று அடக்கி சுரண்டி சமூகங்களை, அரசுகளை, சாம்ராஜ்யங்களை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். நாம் பண்பாடு என்று சொல்லக்கூடிய அனைத்துமே அந்தக் குரூரமான சுரண்டலின் விளைவாக உருவானவைதான்

இன்னொரு போக்கும் வரலாற்றில் உள்ளது. இந்த அடக்குமுறையும் சுரண்டலும் நிகழ்ந்துகொண்டிருந்தபோதே மனிதன் மெல்ல மெல்ல தன்னுடைய அறவுணர்வை உருவாக்கி வளர்த்துக்கொண்டே வந்தான். நீதி என்றும் அன்பு என்றும் சமத்துவம் என்றும் பல விழுமியங்களை உருவாக்கிக்கொண்டிருந்தான். படிப்படியாக அவற்றை மானுட மனங்களில் நிறுவிக்கொண்டே இருந்தான்.

ஒட்டுமொத்த வரலாற்றையும் இந்த இரு போக்குகளின் முரண்பாடாகப் புரிந்துகொள்ளலாம். ஆதிக்கத்துக்கும் நீதியுணர்வுக்கும் இடையேயான போராட்டம், அநீதிக்கும் நீதிக்கும் இடையேயான போராட்டம் என்று நாம் சாதாரணமாக இதைச் சொல்கிறோம்.

பொதுப்பேச்சில் அநீதி பெருத்துவிட்டது , கலிகாலம் என்றெல்லாம் சொல்லிக்கேட்டிருப்போம். ஆனால் வரலாற்றைப்பார்த்தால் படிப்படியாக நீதியின் தரப்பு வென்று மேலெழுந்து வருவதைத்தான் காண்கிறோம். வரலாற்றில் எப்போதும் இன்றுள்ளதுபோல நீதியும் சமத்துவமும் கருணையும் இருந்ததில்லை. நாளை இதைவிட மேலான சமூகமே உருவாகும்.

மனிதனை மனிதன் அடிமையாக்கிச் சுரண்டுவதற்கு மிக விரிவான வரலாற்றுப்பின்னணியும் காரணங்களுமுண்டு. நான் முடிந்தவரை எளிமையாகச் சொல்கிறேன். மனிதர்கள் வாழ்வதற்கான கடும்போட்டியில் குழுக்களாக ஆனார்கள். ஒவ்வொரு குழுவும் இன்னொரு குழுவைவிட வலிமைபெற்றாகவேண்டுமென்ற கட்டாயம் இருந்தது. அதற்கான வழி என்பது மேலும்மேலும் அதிகமான செல்வத்தை சேர்த்துக்கொள்ளுதல்.

செல்வத்தைச் சேர்த்துக்கொள்வதற்கு எளிய வழி வலிமைகுறைந்தவர்களைக் கொள்ளையடித்தல். சமீபகாலம்வரைக்கும்கூட பழங்குடிகளின் இயல்பு இதுவாகவே இருந்தது. சங்ககால இலக்கியம் முழுக்க நாம் காண்பது இந்தக் கொள்ளையைத்தான். ஆகோள்பூசல் என்று இதை சங்கப்பாடல்கள் சொல்கின்றன. எந்தக் குழு அல்லது குடி இப்படி மூர்க்கமாகக் கொள்ளையடித்து வலிமை பெற்றதோ அதுவே நீடித்தது. பிற குடிகள் அழிந்தன. புறநாநூறை மட்டும் வைத்து அப்படி அழிக்கப்பட்ட குடிகளின் ஒரு பட்டியலைப் போட்டுவிடலாம். நாமெல்லாருமே அந்த சமரில் வென்றவர்களின் வாரிசுகள்தான்.

விவசாயமும் தொழிலும் ஆரம்பித்தபோது கொள்ளையை விட லாபகரமானது அடிமைகளை வைத்துக்கொள்ளுதல் என்ற புரிதல் உருவானது. அடிமைகளின் உழைப்பில் இருந்து பெறப்பட்ட உபரி செல்வம்தான் அரசாங்கங்களை உருவாக்கியது. செலவம் அதிகரிக்க அதிகரிக்க அரசுகள் பேரரசுகளாக மாறின.

அடிமைமுறை உலகமெங்கும் இரு வகையில் இருந்துள்ளது. போரில் பிடிக்கப்பட்டு அடிமைகளாக்கப்பட்ட அன்னியர் ஒருவகை.தங்கள் சமூகத்திலேயே ஒரு சாராரை அடிமைகளாக ஆக்கி அவர்களை சுரண்டுவது இன்னொரு வகை. இரண்டுமே உலகிலுள்ள எல்லா சமூகங்களிலும் இவ்விருமுறைகளும் இருந்துள்ளன. நாம் காணும் எல்லா நாகரீகங்களும் அரசாங்கங்களும் இந்த சுரண்டலின் விளைவாக உருவாகி வந்தவைதான்.

ஒரு மக்கள் கூட்டத்தை அடிமைகளாக ஆக்கி நிறுத்துவதற்கு பிறப்படிப்படையில் அவர்களை பகுத்து இழிசினராக முத்திரைகுத்தி விலக்குவது வெற்றிகரமான வழிமுறை. உலகின் எல்லா சமூகங்களிலும் சாதிக்கு நிகரான பிறப்புசார்ந்த அடிமைமுறை இருந்துள்ளது. ஏதேனும் ஒருவகையில் தீண்டாமை நிலவாத சமூகங்களே இல்லை.

தமிழ்ச்சமூகத்தை எடுத்துப்பார்த்தால் சங்ககாலத்திலேயே இழிசினர் என்ற சொல் புழக்கத்திற்கு வந்துவிட்டது. புறநாநூற்றில் இழிசினர் என்றும் புலையர் என்றும் மக்களைச் சுட்டும் வரிகளை காணலாம்.தொழும்பர் என்றும் உரிமைமாக்கள் என்றும் அடிமைகள் குறிப்பிடப்பட்டிருப்பதைக் காணலாம்.

இந்தவகையான சுரண்டலுடன் நீதியுணர்ச்சி மோதிக்கொண்டே இருந்திருக்கிறது. நீதியுணர்ச்சி வளரவளர நாம் நம்முடைய சமூக அமைப்பிலுள்ள அநீதியை நாமே காண ஆரம்பித்தோம். மெல்ல மெல்ல அதிலிருந்து விடுபட்டு இன்னும் மேலான சமூக அமைப்புகளை உருவாக்க ஆரம்பித்தோம்.

சாதிமுறை என்பது மனிதர்களைக் கீழ் கீழாக அடுக்கி உருவாக்கப்பட்டது. நம் சமூகம் இப்படி நூற்றாண்டுகளாக உருவாகி வந்துகொண்டே இருக்கிறது. மையச்சமூகத்தின் ஆதிக்கத்தின் கீழே எந்தச்சாதி கடைசியாக வருகிறதோ அதுவே தாழ்ந்த சாதி. அதன் உழைப்பை மேலே உள்ள சாதிகள் உறிஞ்சி மேலே உள்ள அரசுக்குக் கொடுக்கின்றன. அவ்வாறுதான் தமிழகத்தில் அரசுகளும் பேரரசுகளும் உருவாயின. இதைத்தவிர ஏதேனும் காரணத்தால் நிலத்தை இழந்து தோற்கடிக்கப்பட்ட சாதி காலப்போக்கில் அடிமைச்சாதியாக ஆவதும் உண்டு.

இன்றைய நம் நீதியுணர்ச்சியின்மீது நின்றுகொண்டு பார்த்தால் மனிதனை மனிதன் சுரண்டி ஒடுக்கும் முறை நம்மை மனம்கொதிக்க வைக்கும். அது இயல்பு. ஆனால் அதன் மறுபக்கமும் நம் பார்வைக்குப் படவேண்டும். அத்தகைய சுரண்டல் இருந்தமையால்தான் பேரரசுகள் உருவாயின. பேரரசுகளிடம் இருந்த பெரும் நிதிவசதியால்தான் பெரும் ஏரிகளும் கால்வாய்களும் வெட்டப்பட்டன. ஏராளமான நிலம் விவசாயத்துக்குக் கொண்டுவரப்பட்டது. பெரும் மரக்கலங்கள் கட்டப்பட்டு உலகளாவிய வணிகம் உருவானது. கட்டுமானம் மருத்துவம் போன்ற அறிவியல்துறைகள் வளர்ந்தன. கலையிலக்கியமும் சிந்தனையும் வளர்ந்தன. இவையெல்லாமே அடிமைச்சமூகங்களின் குருதியை உண்டு வளர்ந்தவை. ஆம், அப்படித்தான் வரலாறு செயல்பட்டுக்கொண்டிருந்தது.

அடிமைமுறை இல்லாமலானதற்குப் பல காரணங்கள். அறவுணர்வின் வளர்ச்சி ஒரு முக்கியமான காரணம். இயந்திரங்கள் வந்தது இன்னொரு காரணம். வேறுவகையில் பொருளியல்சுரண்டலை நிகழ்த்தும் சாத்தியங்களை முதலாளித்துவம் கண்டடைந்தது பிறிதொரு காரணம். அடிமைமுறை, அடிமைச்சமூகங்கள் தேவையில்லாமலான ஒரு காலகட்டத்தில் நின்று நாம் பேசுகிறோம்.

ஆனால் சமூகங்களை அடிமைகளாக ஆக்கிய அந்த மனநிலையும் அதை உருவாக்கிய கருத்தியலும் அவ்வளவு சீக்கிரம் போய்விடாது. அவை நூற்றாண்டுகளாக நம் சமூகமனதில் நீடித்தவை. நமக்கு சிறுவயதிலேயே கற்பிக்கப்பட்டவை. அவை தொடர்ச்சியான சமூகக்கல்வி மூலம், நீடித்த சமூக மாறுதல்மூலம்தான் அகலமுடியும். உலகமெங்கும் இதற்கிணையான பிறப்படையாளம் சார்ந்த உயர்வுதாழ்வுமனப்பான்மைகள், ஆசாரங்கள் ஏதேனும் வடிவில் தொடரத்தான் செய்கின்றன.

இவ்வளவு நீளமாக நான் சொல்லியிருப்பது சில ஒற்றைவரிகளை நிலைநாட்டும்பொருட்டுதான். சமநிலை கொண்ட ஒரு நவீன மனிதர், ஒருபோதும் தான் வாழும் சமூகத்தின் அமைப்புக்குத் தன் சமூகத்தில் ஒரு சாராரைக் குற்றம்சாட்ட மாட்டார். அச்சமூக அமைப்பு ஒரு வரலாற்று நிகழ்வு என எடுத்துக்கொள்வதே அவர் செய்யக்கூடியது.

அக்குற்றச்சாட்டை நாம் ஒருவர் மீது சுமத்தும்போது நமக்கு நியாய உணர்வு இருந்தால் நாமும் குற்றவாளியே என உணர்வோம். இந்தியாவில் சாதிக்கொடுமையை செய்யாத எந்தச் சாதியும் இல்லை. ஐயமிருந்தால் உங்கள் சொந்த வீட்டை கவனியுங்கள். நீங்கள் எந்தச் சாதியாக இருந்தாலும் சரி, உங்களுக்குக் கீழே உள்ள சாதியை உங்கள் பெற்றோர் எப்படி நடத்தினார்கள், நடத்துகிறார்கள் என்று பாருங்கள். உங்கள் நீதியுணர்வு கூசிச்சுருங்கும்

பொதுவாக நாம் நமக்கு மேலிருக்கும் சாதியினர் நமக்கிழைத்த அநீதிகளை மட்டுமே நினைவுகூர்கிறோம். கோபம் கொள்கிறோம். நாமும் நம் முன்னோரும் இன்றும் இழைத்துவரும் கொடுமைகளை வசதியாக மறந்துவிடுகிறோம். தமிழக பிற்பட்ட சாதியினரிடம் இருக்கும் இந்த இரட்டைநிலை துணுக்குறச்செய்வது. தலித்துக்களை வெறுத்து ஒடுக்கி அவமதித்து அதை நியாயப்படுத்திக்கொண்டே அவர்கள் பிராமணர்களை சாதியவாதிகள் என முத்திரை குத்துவார்கள்.

நான் உயர்சாதியில் பிறந்தவன், ஆனால் நீங்கள் சொல்லும் அதே சாதிய அவமதிப்பை நானும் உணர்ந்திருக்கிறேன். ஒரு பிராமணர் சாப்பிடும் தட்டைத் தொட்டுவிட்டேன் என்பதற்காக. இந்தியாவின் பெரும்பாலான சாதியினர் உயர்சாதியினரிடம் இழிவை அனுபவித்திருப்பார்கள். கீழே உள்ள சாதியை விலக்கியும் வைத்திருப்பார்கள்.

மலைக்கிராமங்களில் செல்லும்போது பழங்குடிகள் சொல்லும் சாதிக்கொடுமைகளைக் கேட்க நேரும். பெரும்பாலான கொடுமைகள் தமிழகத்தின் தலித் சாதியினரால் செய்யப்படுபவை. தீண்டாமை உட்பட. தலித் சாதியினரிலேயே சக்கிலியர் போன்ற சாதியினர் இன்றும் அவர்களுக்கு மேலே உள்ள சாதியினரிடமிருந்து தீண்டாமைக்கொடுமையை அனுபவிக்கிறார்கள். இது நாம் அனைவருமே பொதுவாகப் பங்கிட்டுக்கொள்ளும் கடந்தகால நாற்றம். நாம் ஒன்றாக வெளிவந்தாகவேண்டிய இருள்.

நாம் நம் இருண்ட இறந்தகால மனநிலைகளில் இருந்து சுயபரிசோதனையால் நமது சுய முயற்சியால் மெல்ல மெல்ல வெளிவந்தாகவேண்டியிருக்கிறது. உயர்சாதியினர் தங்களை ஒடுக்குகிறார்கள் என்று புகார் சொன்ன ஈழவர்களிடம் ‘நாம் முதலில் தலித்துக்களை நம்மவர்களாக நினைப்போம், அப்போது நம் தார்மீகநிலை மேலே செல்லும், நம் சமத்துவம் நம்மைத் தேடிவரும்’ என்று சொன்ன நாராயணகுருவின் வழிமுறையையே நான் முன்னுதாரணமானதாக முன்வைப்பேன்.நான் அந்த குருமரபைச் சேர்ந்தவன்.

நாம் வெளியே வந்ததைப்போல அனைவரும் வெளிவந்திருக்கவேண்டுமென்பதில்லை. ஒருவர் நேற்றுவரை இருந்த சமூகமனநிலையை இன்றும் கொண்டிருந்தால் அவர் பண்பாட்டுப்பயிற்சி அற்ற பின்தங்கிய மனமுடையவர் என்றே பொருள். அவர் தன்னுடைய பின் தங்கிய கருத்துநிலையைப் பொதுவில் வைப்பாரென்றால் அதைக் கண்டிக்கவேண்டும் என்பது நாகரீகமுடையவரின் கடமை. அவரிடம் நெருக்கமிருந்தால் அவருக்கு உண்மையைக் கற்பிக்க முயலவேண்டும். அது சாத்தியமில்லை என்றால் அவரை முழுமையாக உதாசீனம் செய்துவிடலாம். அதில் நாம் புண்படுவதென்பது நம்முடைய பண்பாட்டுப்புரிதலும் வரலாற்றுப்புரிதலும் குறைவு என்பதாகவே பொருள்படும். விஷயமறிந்த ஒருவர் விஷயமறியாமல் உளறும் ஒருவரைக்கண்டு ஏன் புண்படவேண்டும்?


இட ஒதுக்கீடு பற்றி

இடஒதுக்கீடுக்காக திராவிட இயக்கத்துக்கு நன்றி சொல்வதைப்போல நகைச்சுவை ஏதுமில்லை. இட ஒதுக்கீட்டில் திராவிட இயக்கத்தினரின் பங்களிப்பு என ஏதாவது இருக்குமென்றால் அது தமிழகத்தில் பிற்பட்ட சாதியினரின் இட ஒதுக்கீடுக்காகக் குரல் கொடுத்தது மட்டுமே. தலித்துக்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டபோது ‘தன் மக்களுக்கு’ ஒன்றும் கிடைக்கவில்லை என்று புலம்பியவர் அதன் தலைவர் ஈ.வே.ரா

இடஒதுக்கீடு என்பது உண்மையில் இந்தியாவைப் பிரித்தாள்வதற்காக பிரிட்டிஷார் கொண்டுவந்த ஒன்று. ஒடுக்கப்பட்டவர்களுக்காக அது கொண்டுவரப்படவில்லை. பிரிட்டிஷாரை ஆதரித்த சீக்கியர், இஸ்லாமியர் முதலிய முன்னேறியவர்களுக்க்காகவே கொண்டுவரப்பட்டது.

பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் ஒடுக்கப்பட்டவர்களுக்கோ தலித் மக்களுக்கோ அவ்வரசு எந்த நன்மையையும் செய்யவில்லை. அவர்களுக்காக எந்த சீர்திருத்தத்தையும் கொண்டுவரவில்லை. பிரிட்டிஷ் ஆதிக்கமென்பது நேரடியான உயர்சாதி ஆதிக்கமே. சொல்லப்போனால் பிரிட்டிஷ் ஆதிக்க காலகட்டம் அளவுக்கு உயர்சாதியினர் முழுமையான அதிகாரத்துடன் விளங்கிய எந்த காலகட்டமும் இந்திய வரலாற்றில் இல்லை.

பிரிட்டிஷார் வருவது வரை இந்தியப்பெருநிலத்தில் எல்லா சாதிகளும் ஆதிக்கத்துக்கான போராட்டங்களில் ஈடுபட்டிருந்தன. ஒரு சாதி ராணுவபலம் கொண்டுவிட்டால் அது ஆதிக்கத்தை உருவாக்க முடியுமென்ற நிலை இருந்தது. இந்திய வரலாற்றில் மாடுமேய்த்த யாதவர்களும் நாயக்கர்களும் பெரிய சக்தியாக எழுந்து ஆதிக்கத்தை உருவாக்கியிருக்கிறார்கள். பல சிறிய சாதிகள் கூட அப்படி மேலெழுந்து வந்திருக்கின்றன

பிரிட்டிஷார் இந்தியாவில் இருந்த அத்தனை ஆதிக்கசக்திகளையும் அப்படியே அங்கீகரித்தனர். அவர்களுக்கு பிரிட்டிஷ் மைய அரசின் மகத்தான ராணுவ பலத்தைப் பின்பலமாக அளித்தார்கள். ஆகவே இந்தியாவில் எந்த ஒரு சாதியும் புதியதாக மேலெழுந்து வரமுடியாமலாயிற்று. பல சிறு ஆதிக்கங்கள் முழுமையாக அழிக்கப்பட்டன. இந்தியாவில் நிலத்தின் மீது சமூகத்தின் எல்லா சாதியினருக்கும் இருந்த கூட்டான உரிமை பறிக்கப்பட்டு நிலம் முழுக்கமுழுக்க உயர்சாதியினருக்கு உரிமையாக்கப்பட்டது

அதன்விளைவாக இந்தியாவின் ஒடுக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்கள் முழுமையாகவே உயர்சாதியினரான சிற்றரசர்கள், ஜமீந்தார்கள் மற்றும் கிராமத்தலைவர்களின் அடிமைகளாக விடப்பட்டனர். அந்த ஆதிக்கவர்க்கத்தினர் தனக்கு உரிய வரியைக் கொடுத்தால் மட்டும் போதும் என பிரிட்டிஷ் அரசு நினைத்தது. அந்த வரியை ஏற்றிக்கொண்டே சென்றது. அதன் மூலம் இந்தியாவின் மொத்த விளைச்சலையும் அள்ளிக்கொண்டு சென்றது.

விளைவாக உலகவரலாற்றிலேயே பெரிய பஞ்சங்கள் உருவாயின அந்தப் பெரும் பஞ்சங்களில் இந்திய மக்கள்தொகையில் நாலில் ஒருபங்கினர் செத்தழிந்தார்கள். கோடிக்கணக்கானவர் நாடுவிட்டு ஓடினார்கள். அவர்கள் அனைவருமே ஒடுக்கப்பட்ட சாதியினர். தொண்ணூறு சதவீதம்பேர் தலித்துக்கள். இந்திய வரலாற்றில் தலித்துக்களுக்கு நிகழ்ந்த மாபெரும் கொடுமை இந்தப் பஞ்சங்களே.

தலித்துக்களுக்கான இட ஒதுக்கீடு பிரிட்டிஷாரால் ஒரு தந்திரோபாயமாகவே அறிவிக்கப்பட்டது. அவர்களை இந்திய சமூகத்தின் மைய ஓட்டத்தில் இருந்து பிரித்துத் தங்களுக்கான ஆதரவாளர்களாக ஆக்க முடியும் என்பதற்காக. தலித்துக்களுக்கு அளிக்கப்பட்ட ஓதுக்கீடு அவர்களை இந்திய சமூகத்தில் இருந்து பிரித்துத் தனியாக இருக்கும்படியானதாக அமைய பிரிட்டிஷார் முயன்றார்கள்.

எப்படிக் கிடைத்தாலும் எல்லா சலுகைகளும் தங்கள் சமூகத்துக்குத் தேவை என்ற நிலைப்பாட்டில் அம்பேத்கார் இருந்தார். அதற்காக அதி தீவிரமாகப் போராடினார். ஆனால் இட ஒதுக்கீடு தலித்துக்களுக்கு இந்து சமூகத்தின் அங்கத்தினர் என்ற நிலையிலேயே அளிக்கப்படலாம் என்றும் சலுகைகள் மூலம் தலித்துக்கள் இந்திய சமூகத்தில் இருந்து பிரிக்கப்பட்டால் அது அவர்களுக்கு மேலும் எதிர்விளைவையே உருவாக்கும் என காந்தி நினைத்தார். இது அவர்களிடையே நிகழ்ந்த முரண்பாடு.

ஏனென்றால் காந்திக்குத் தெரியும், மேலும் சில ஆண்டுகளில் இந்தியா சுதந்திரம் பெறும் என்று. பிரிட்டிஷார் அளித்த சலுகைகளை உயர்சாதியினர் ரத்துசெய்தால் வலிமையற்ற சிறுபான்மையினரான தலித்துக்கள் எதுவுமே செய்யமுடியாதென்று அவர் அறிந்திருந்தார். அச்சலுகைகளை இந்தியாவின் உயர்சாதியினர் மனமாற்றம் அடைந்து தலித்துக்களுக்கு அளித்துப் பிராயச்சித்தம் செய்துகொள்ளவேண்டுமென சொன்னார். அவ்வாறு இந்துக்களான இந்தியர் அளிக்கும் சலுகைகளே தலித்துக்களுக்கு நீடிக்கும் என்று எண்ணினார்

இந்தியா சுதந்திரம் பெற்றபோது தன்னுடன் முரண்பட்டு அரசியலில் தோற்று ஒதுங்கி இருந்த அம்பேத்காரை அழைத்து சட்டஅமைச்சராக்கி அவர் கையாலேயே இட ஒதுக்கீட்டைக் கொண்டுவர வழியமைத்தவர் காந்திதான். அன்று அதற்கு உயர்சாதியினரின் எதிர்ப்பு இருந்தது. அதை ஒன்றுமில்லாமலாக்கியது காந்தியின் அபாரமான மக்கள்செல்வாக்கு. பழங்குடியினருக்கான இட ஒதுக்கீட்டுக்காகக் குரல்கொடுத்தவர்கள் காந்தியவாதிகள்தான்.

ஆகவே இட ஒதுக்கீடு என்பதற்காக எவருக்காவது நன்றி சொல்லவேண்டும் என்றால் அது காந்திக்கும் அம்பேத்காருக்கும் மட்டுமே.காந்தியின் குரலாக ஒலித்து, தேர்தலில் வென்று இட ஒதுக்கீட்டுக்கு மக்களாதரவைப் பெற்றுத்தந்த நேருவுக்கு அடுத்தபடியாக நன்றி சொல்லவேண்டும்..

இட ஒதுக்கீடு வந்தபின் ஒவ்வொரு சாதியும் தனக்குரிய பங்குக்காக முண்டியடித்தது. சண்டை போட்டது. இன்று இப்படி சண்டை போட்டு தங்கள் சாதிக்கு சில சலுகைகளைப் பெற்றுத்தந்தவர்களை இடஒதுக்கீட்டின் தந்தைகள் என நினைக்கும் வழக்கம் இந்தியா முழுக்க எல்லா சாதியினரிடமும் உள்ளது. அவர்களுக்கு காந்தியும் அம்பேத்காரும் ஒரு பொருட்டல்ல.


ஜனநாயகம் பற்றி…

உங்கள் கடிதத்தின் தன்னிரக்கத்தை விலக்கி வைத்து அதன் உள்ளடக்கத்தை நீங்களே இன்னொருவாராக நின்று வாசித்துப்பாருங்கள். உங்களுக்கே அதிர்ச்சியாக இருக்கும். இந்தியாவில் இன்று இட ஒதுக்கீட்டை ஆதரிக்கும் சாதிகள்தான் மிகப்பெரும்பான்மை. மிகமிகச்சிறுபான்மையினரே இட ஒதுக்கீட்டால் லாபம் அற்ற உயர்சாதியினர். கண்டிப்பாக இட ஒதுக்கீடு அவர்களுக்கு இழப்பே. அவர்களிலும் உங்களைப்போலவே ஏழைகள் ஏராளமானவர்கள் இருக்கிறார்கள்.

அவர்களில் கணிசமானவர்கள் தங்கள் மூதாதையர் செய்த ஒடுக்குமுறைக்கு பிராயச்சித்தமாக இட ஒதுக்கீடு இன்று தேவைதான் என்று ஏற்றுக்கொண்டவர்கள்தான். இந்தியாவில் இட ஒதுக்கீட்டுக்காகப் போராடிய பலர் உயர்சாதியினர். இட ஒதுக்கீட்டுக்காகப் போராடுபவர்களுக்கு வாக்களிப்பவர்களும் அவர்களே.

ஆனால் அவர்களில் ஒரு சாரார் இடஒதுக்கீட்டில் தாங்களுக்கு இழப்பு ஏற்பட்டிருப்பதற்காக வருந்தலாம். இட ஒதுக்கீடு தவறு என எண்ணலாம். அதில் மிகச்சிலர் அதைச் சொல்லவும் செய்யலாம். ஜனநாயக முறைப்படி தங்கள் கருத்தைச் சொல்லவும் அதைபரப்பவும் அவர்களுக்கு எல்லா உரிமையும் உள்ளது. இந்தியாவின் மக்கள்தொகையில் பெரும்பான்மையினர் அவர்கள் சொல்வதை ஏற்றுக்கொண்டால் அவர்கள் ஆட்சியைக் கைப்பற்றி இட ஒதுக்கீட்டை ரத்தும் செய்யலாம். அதுதானே ஜனநாயகம் என்பது?

ஆனால் இடஒதுக்கீட்டின் பலனைப்பெற்றுவரும் சாதியைச் சேர்ந்த நீங்கள், மிகப்பெரும்பான்மைத் தரப்பைச் சேர்ந்த நீங்கள், அப்படி ஒரு வாதத்தைச் சொல்லவோ , அந்தரங்கமாக உணரவோ கூட அவர்களுக்கு அனுமதி இல்லை என்கிறீர்கள். வரலாற்றுணர்வில்லாமலோ அல்லது வேறு காரணத்தாலோ அப்படிச் சொன்ன ஒரு பெண்ணை பாலியல் ரீதியாக வசைபாடுவதும் அவமதிப்பதும் நியாயமே என நினைக்கிறீர்கள் என்றால் அது எந்தவகை ஜனநாயகம்?

சில வருடங்களுக்கு முன் இடஒதுக்கீட்டுக்கு எதிராக வாதாடினார் என்பதற்காக ஒரு வழக்கறிஞர் கொலைநோக்குடன் தாக்கப்பட்டார். தமிழகத்தின் பெரும்பான்மைச்சாதியினரான அறிவுஜீவிகள் அதை ஆதரித்தனர். நான் அவ்வழக்கறிஞரின் தரப்பை ஏற்றுக்கொள்பவனல்ல. ஆனால் அவர் தாக்கப்பட்டதைக் கொடூரமான ஜனநாயகக் கொலையாகவே நினைக்கிறேன். தங்களுக்குத் தேவையானபோது பேசப்படுவதல்ல ஜனநாயக உரிமை, தன் எதிரிக்காகவும் அதே ஜனநாயக உரிமையை அளிக்கும்போதே நாம் உண்மையான ஜனநாயகவாதிகளாக ஆகிறோம்.

நீங்கள் ஜனநாயகத்தில் எளிய நம்பிக்கையாவது கொண்டிருந்தால் ஒருவர் இட ஒதுக்கீட்டுக்கு எதிராகப்பேசினால் அவரிடம் வாதிட, அவரை உங்கள் தரப்புக்கு மாற்ற மட்டுமே முயல்வீர்கள். அவர் அப்படி நினைப்பதே தவறு என்றும் ,அவரது எண்ணம் உடனடியாக அடக்கப்படவேண்டும் என்றும், அதற்கு வன்முறை அவதூறு எல்லாம் ஆயுதமாக்கப்படலாமென்றும் நினைத்தால் நீங்கள் என்ன நியாயத்தைப்பேசிக்கொண்டிருக்கிறீர்கள்?

நம் முன் இரு வழிகள் உள்ளன. முன்னரே சொன்ன இரு போக்குகளில் ஒன்றைத் தேர்ந்தெடுப்பது. ஒன்று அடக்குமுறை மற்றும் அதிகாரத்தின் வழி. நேற்று ஆதிக்கசாதி ராணுவவல்லமையால் உங்களை அடக்கிச் சுரண்டியது. பதிலுக்கு இன்று எண்ணிக்கைபலத்தால் ஜனநாயக அதிகாரத்தை அடைந்து நீங்கள் அவர்களை அடக்கி சுரண்டவேண்டும் என நினைக்கலாம். அவர்கள் கொஞ்சம் எதிர்ப்புத் தெரிவித்தால்கூட அவர்களை ஒடுக்கவேண்டுமென ஆசைப்படலாம். அதை நீங்கள் சொல்கிறீர்கள் என்றால் நான் ஒன்றும் சொல்வதற்கில்லை.

இரண்டாவது போக்கு என்பது அறத்தின் வழி. அதை நீங்கள் நம்பினால் இன்று நீங்கள் கேட்கவேண்டியது ஆதிக்கத்தை அல்ல சமத்துவத்தைத்தான். அது உங்கள் உரிமைக்காக மட்டுமல்ல உங்களை நேற்று ஒடுக்கிய சாதிகளின் உரிமைகளுக்காகவும் குரல்கொடுக்கும் மனநிலையையே உங்களிடம் உருவாக்கும். அவர்களின் குரலையும் அந்த மனம் கவனிக்கும். அவர்களையும் புரிந்துகொள்ள முயலும். அவர்களிடம் உங்கள் வரலாற்று நியாயங்களைச் சொல்லி புரியவைக்க, அவர்களை வென்று அழைத்துக்கொண்டு இன்னும் மேலான ஓர் அறம் திகழும் உலகை நோக்கிச் செல்லவே முயலும்.

நம்பமுடியாத ஒடுக்குமுறைச்சூழலில் பிறந்து வளர்ந்தும்கூட அப்படிப்பட்ட மனம் கொண்ட இலட்சியவாதிகளான பலரை நான் இன்று அறிவேன். அவர்கள்தான் என் நம்பிக்கை. அவர்கள் அம்பேத்காரைத் தலைவராகக் கொண்டவர்கள். எந்த திராவிட இயக்கத்தலைவரும் அந்த ஜனநாயக உணர்வைக்கொண்டவர் அல்ல.

ஆகவே கெ, தயவுசெய்து வெறுப்பின் மொழியில் பேசும் குரல்களில் இருந்து வெளியே வாருங்கள். ஒடுக்கப்பட்டவர்கள் விடுதலை பெறவேண்டியது புதிய ஒடுக்கப்பட்டோரை உருவாக்குவதற்காக அல்ல.. ஒடுக்கப்பட்டவர்களே இல்லாத சமூகத்தை உருவாக்குவதற்காகத்தான். அது அகிம்சையால், புரிந்துகொள்ளுதலால் மட்டுமே முடியும்.

நீங்களும் திராவிட இயக்கத்தில் இருந்து கொஞ்சம் நகர்ந்து அம்பேத்கார் அருகே வந்தால் அந்த நியாயத்தைப் புரிந்துகொள்ள முடியும். நேரடியாக அம்பேத்காரின் நூல்களைப் படியுங்கள். நம் காலகட்டத்து போதிசத்வனின் பெருங்கருணை உங்களையும் ஆட்கொள்ளட்டும்

அன்புடன்

ஜெ

நூறுநாற்காலிகள் 1
நூறுநாற்காலிகள் 2 நூறுநாற்காலிகள் 3 நூறுநாற்காலிகள் 4

வணங்கான் 1 , வணங்கான் 2 ,3

முந்தைய கட்டுரைகூடங்குளமும் சுஜாதாவும்
அடுத்த கட்டுரைமொழி-1,மொழி எதற்காக?