பெண் 4,பொதுவெளியில் பெண்கள்…

அன்புள்ள ஜெயமோகன்,

விஷயத்தை நீங்கள் முடித்துக்கொண்டீர்கள் என்றாலும் ஒன்றை மட்டும் கேட்டுக்கொள்கிறேன். பொதுவெளியில் கருத்துச்சொல்லும்போது கருத்துக்கள் கடுமையாகச் சொல்லப்படுவது இயல்புதானே? இதை எங்கே கட்டுப்படுத்திக்கொள்வது? ஒவ்வொன்றுக்கும் எல்லாரும் இதேபோல அவதூறுப்புகார் கொடுக்க ஆரம்பித்தால் எந்தவகை விவாதம் இங்கே நிகழமுடியும்? அந்தவகையில் இந்த செயல்பாடு சரியானதுதானா?

சாமிநாதன்

அன்புள்ள சாமிநாதன்

பொதுவாக இவ்வகை விஷயங்களில் உடனடியாக கருத்துச் சொல்வதில்லை. இது ஓர் உரையில் , உரையை ஆர்வமூட்டும்படி தொடங்கும்பொருட்டு, சொல்லப்பட்டு சட்டென்று விவாதமாகிவிட்டது. ஆகவே தொடர விரும்பவில்லை.

இப்படிச் சொல்கிறேன். இந்தவகையான ஒரு தாக்குதலை ஒரு ஆண் இன்னொரு ஆண் மீது கொடுத்திருந்தால் அதன் அர்த்தம் வேறு. இணையத்தில் நீங்கள் சாதாரணமாக பார்க்கலாம். என்மீதான அவதூறுகள் மட்டுமே ஆயிரத்துக்கும் மேல் கிடைக்கும். ஏன் என்னை மனநோயாளி என வசைபாடும் குறிப்பு ஆதாரபூர்வமாக இணையதளத்தில் உள்ளது. ஒரு மானநஷ்ட வழக்கு போட்டால் விளம்பரத்துக்கு விளம்பரமும் ஆகுமே.

மிகச்சமீபத்தில்கூட ஓர் அரசியல் எழுத்தாளர் நான் சொல்லாத ஒன்றை , என் கருத்துக்கு முற்றிலும் மாறான ஒன்றை, நான் சொன்னதாக இணையதளத்தில் எழுதியிருந்தார். அதை எனக்கு அனுப்பி ஆதாரமில்லாத அந்தப் பேச்சுக்கு நான் வழக்கு தொடரவேண்டும் என்றார்கள் சிலர். இவ்வாறு வெளிவந்த பெரும்பாலான உரையாடல்பதிவுகள் எல்லாமே பொய்கள் என்பதே என் பதில். எளிதில் நீதிமன்றம் சென்றிருக்கலாம். நீங்கள் சொல்வதுபோல அப்படிச் செல்ல ஆரம்பித்தால் அதற்குத்தான் நேரமிருக்கும். அதன் பின் கருத்துவிவாதமே இருக்காது.

விவாதங்கள் எல்லைகளை மீறுவது சாதாரணம். குறிப்பாக எழுத்தாளர்களுக்கிடையே அது என்றுமுள்ளதுதான். கருத்துக்கள் சார்ந்து கடுநிலைப்பாடு எடுப்பதும் அதன் விளைவாக சொற்கள் தடிப்பதும் நம்மிடையே சகஜம். என்வரையில் அபூர்வமாக ஒருபக்கச் சார்பான தீவிரமான கருத்தை வெளிப்படுத்தியிருக்கிறேன் என்பதை நான் அறிவேன். சமநிலை என்பது கடுமையான சுயகவனத்துடன் உருவாக்கவேண்டிய ஒன்று. உணச்சிகரமாக எழுதும்போது அவ்வப்போது தவறிப்போவதும்கூட. நான் உடனடி எதிர்வினையாற்றாமலிருக்க அதுவும் காரணம்

ஆனால் நான் எப்போதும் தரமற்ற சொற்களையோ, தனிப்பட்ட வாழ்க்கை நோக்கிய தாக்குதல்களையோ செய்ததில்லை. என் எதிர்வினை என்றுமே கருத்துக்களுடன் மட்டும்தான். பெரும்பாலான அவதூறுகள் அல்லது வசைகள் முன் மௌனமே என் பதில்.

கடுமையான கருத்துக்களை, சொற்களைக்கூட நான் புரிந்துகொள்கிறேன். உலகமெங்கும் எழுத்தாளர்கள் நடுவே அத்தகைய தீவிரம் உள்ளது. பத்தாண்டுகளுக்கு முன் மரியா வர்கா லோசாவின் ஒரு பேட்டியில் அவர் சக எழுத்தாளர்களிடமிருந்து – ஒவ்வொருவரும் உலகப்புகழ்கொண்டவர்கள் – பெற்ற அவதூறுகள், வசைகளைப்பற்றிச் சொல்லியிருந்ததை வாசித்தேன்.அன்று ஒரு பெரிய திறப்பாக அந்த மனநிலையைப் புரிந்துகொண்டேன்.

டிவிட்டரில் அல்லது ஃபேஸ்புக்கில் என்னைப்பற்றி வரும் சொற்களை சிலசமயம் நண்பர்கள் எடுத்து அனுப்புவார்கள். கடுமையான வசைகள், அவதூறுகள். அனுப்பும் நண்பர்கள் கடுமையாகப் புண்பட்டிருப்பார்கள். ஆனால் எனக்கு ஒரு தருணத்திலும் அது வருத்தமளித்ததில்லை.

காரணம் அவற்றின் தற்காலிகத்தன்மைதான். நான் இலக்கியச்சூழலில் இருபதாண்டுகளைக் கடந்துவிட்டேன். இன்றுவரை வெளிவந்த எவ்வளவு வசைகளைக் கண்டிருப்பேன். அவையெல்லாம் எங்கே சென்றன? இவற்றை வெளிப்படுத்துகையில் உணரும் தீவிரம் என்பது மிகமிக அபத்தமான ஒன்று என உணர ஆறுமாதம் கழித்து வாசித்துப்பார்த்தாலே போதும்.

சென்ற இருபதாண்டுக்காலத்தில் என் மேல் மிகக்கடுமையான விமர்சனங்களை ,வசைகளை ,அவதூறுகளை எழுதிய எவரிடமேனும் நான் நேர்சந்திப்பில் சற்றேனும் நட்புக்குறைவாக ஏதேனும் சொல்லியிருப்பதாக எவரும் சொல்லமுடியாது. அவர்கள் சொன்ன வசைகள் எனக்கு நினைவுக்கு வரும், ஆனால் ஒரு புன்னகையையே அவை எழுப்பும். அவ்வாறு உக்கிரமான தாக்குதல்களுடன் அறிமுகமாகி இன்று நட்புடனிருக்கும் பல நல்ல வாசகர்கள், நண்பர்கள் எனக்கிருக்கிறார்கள்.

ஆனால் பொதுவெளிக்கு வரும் பெண்கள் மீதான ஒருங்கிணைந்த ஆணாதிக்கத் தாக்குதல், பாலியல்வசை, எந்தக் காரணத்துக்கானாலும், மிக அபாயகரமானது. அதன் காரணம் நம் சமூகம்தான். ஒரு பெண் அவதூறு செய்யப்பட்டால் அதன் விளைவாக அவருக்குக் கிடைக்கும் சமூக எதிர்வினை மிக மோசமானது. மிகப்பெரிய , மிக அநீதியான தண்டனை அது. ஒரு ஆண் எந்த அளவுக்கு அவதூறுசெய்யப்பட்டாலும் அந்த விளைவில் ஆயிரத்தில் ஒரு பங்குகூட அவனுக்குக் கிடைப்பதில்லை.

நான் இருபதாண்டுக்கால அலுவலக வாழ்க்கையிலும் இதையே கண்டிருக்கிறேன். ஆண் மீதான அவதூறு என்பது அதிகபட்சம் ஊழல்தான். ஆனால் பெண் ஊழியர் என்றால் முதல் குற்றச்சாட்டே பாலியல்சார்ந்துதான் இருக்கும். அது பெண்ணை எந்த அளவுக்குக் குரூரமாக அடித்துச் சாய்த்துவிடுகிறது என்பதை கண்டிருக்கிறேன். தைரியமும் திறமையும் மிக்க பெண்கள் கூட உடைந்து கதறுவதை, உணர்வுரீதியாக அழிந்தே போவதைப் பலமுறை கண்டிருக்கிறேன்.

நம் அடிப்படை மனநிலையில் இது இருக்கிறது. நமக்குக் கற்பிக்கப்படுகிறது. சொந்த மனைவியுடன் சண்டையிடும்போதுகூட அவளை வெல்ல சட்டென்று ஆபாசத்தை ஆயுதமாக்குவதைப் பல இடங்களில் கண்டிருக்கிறேன். அது அவளை சரித்துவிடும் என நமக்கு நன்றாகவே தெரியும். இந்த அடிப்படைக் கோளாறை மட்டுமே நான் இங்கே சுட்ட விரும்புகிறேன்

கடந்த அலுவலக வாழ்க்கையில் இதற்கிணையான பல நிகழ்வுகளைக் கண்டிருக்கிறேன். பெண்களிடம் ஆபாசமாக நடந்த பலரை சந்தித்திருக்கிறேன். பெரும்பாலும் அது அவர்களின் குடும்பப்பின்னணியில் இருந்து வருகிறது. அவர்கள் சொந்தமனைவியையே அப்படித் திட்டக்கூடியவர்கள். அலுவலகத்தில் இதைச்செய்யும்போது பலசமயம் பெண்கள் ஒடுங்கி விலகிச் சென்றுவிடுகிறார்கள். பெற்றோரோ, கணவனோ பின்னால் நிற்கும் அளவுக்கு வலுவான குடும்பப்பின்னணி கொண்ட பெண்கள் மட்டுமே புகார் செய்வார்கள்.

அப்புகார் வந்ததுமே அந்த ஆண் அந்தப் பெண் திமிராக இருந்தாள் என்றுதான் சொல்வான். தன்னை அவமதித்தாள் என்பான். ஒவ்வொரு பிரச்சினையிலும் ஒவ்வொரு பின்னணி விளக்கங்கள் அளிக்கப்படும். பலவகையான நியாயங்கள் பேசப்படும். உண்மையில் முக்கால்வாசி வழக்குகளில் பெண்கள் மீது தவறும் இருக்கும். என் அவதானிப்பில் இரு பிழைகள் பெரும்பாலும் பெண்கள் தரப்பில் காணப்படும். ஒன்று, முதிர்ச்சியில்லாமல் உணர்ச்சிகரமாகச் செயல்பட்டிருப்பார்கள். இரண்டு, தன் பிழைகளை இன்னொருவர் மேல் சுமத்தித் தப்பித்துக்கொண்டிருப்பார்கள். எல்லா அலுவலகங்களிலும் இப்படித்தான் இருக்கும் என நினைக்கிறேன்.

பாலியல்வசைபாடல் நிகழ்ந்திருந்தால் நான் ஒரு தருணத்திலும் அந்தப் பின்னணியை, ஆண் தரப்பு நியாயங்களைக் கணக்கில்கொண்டதில்லை. என் வரையில் பொதுவெளிக்கு வந்த ஒரு பெண் பொதுவெளியில் அவளை ஒடுக்கப் பயன்படுத்தப்படும் மோசமான ஆயுதத்தால் தாக்கப்பட்டிருக்கிறாள். அதுதான் முக்கியமான பிரச்சினை. அதை மட்டுமே நான் மையப்படுத்துவேன். வேறு என்ன நியாயத்தைப் பேசுவதும் அந்தத் தாக்குதலை மழுப்புவதாக மட்டுமே நடைமுறையில் பொருள்படும். என் நிலைப்பாடு அன்றும் இன்றும் இதுவே. இருபதாண்டுகளுக்கு முன் பெண் எழுத்தாளர்களைப்பற்றி சு.சமுத்திரம் எழுதிய ஒரு குறிப்புக்கு மிகக் கடுமையாக எதிர்வினையாற்றினேன். அப்போதிருந்த அதே மனநிலைதான் இன்றும்.

இந்த விவகாரத்தில் ஆபாசத்தாக்குதல் மட்டும் நிகழவில்லை என்றால் அதன் தளமே வேறு. அது ஒருபோதும் இந்தியச்சூழலில் அனுமதிக்கப்படலாகாது. அது இந்தியப்பெண்ணின் சமூகவாழ்க்கையையே அழித்துவிடும். அவளை மீண்டும் சமூகப்பங்களிப்பற்றவளாக ஆக்கிவிடும்.

நாளை நமது மகளும் பட்டங்கள் ஆளவும் சட்டங்கள் செய்யவும்வேண்டும். அதை மட்டும் நினைத்துக்கொள்ளுங்கள்

ஜெ

முந்தைய கட்டுரைகாந்தியின் பலிபீடம்
அடுத்த கட்டுரைகாசி