மார்ட்டின் லூதரும் சங்கரரும் : ஒரு எதிர்வினை

அன்புள்ள ஜெயமோகன்,

வணக்கம்.

அருணகிரிக்கு நீங்கள் எழுதியுள்ள பதிலை படித்தேன்.

அண்மையில் ஆதி சங்கரரின் சூத்திர வெறுப்பு (ஆம் அவற்றை அப்படி மட்டுமே சொல்லமுடியும்) பகுதிகளை படித்து மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானேன். சிறுவயதிலிருந்து ஆதிசங்கரரை ஆராதித்து வந்தவன் என்ற முறையில், அவரை சிவனின் அம்சமாகவே என் நம்பிக்கை காலகட்டங்களில் எண்ணி வந்தவன் என்ற முறையில், அதன் பின்னரும் மனிஷா பஞ்சகம் மூலமாகவே அவரை கருதி வந்தவன் என்ற முறையிலும் அது சிதறிய போது அவர் மீது முழு வெறுப்பே ஏற்பட்டது. பல இடங்களில் உபநிடதங்கள் முன்வைக்கும் மிக அரிய மிகச்சிறந்த மானுட அறத்தை தன் விளக்கங்களில் சிதைக்க, திரிக்க சங்கரர் தயங்கவில்லை. இதையும் மீறி அவரது மேதமை பாண்டித்யம் ஆகியவற்றை நிச்சயமாக அவதானிக்க முடிகிறது. நீங்கள் அருமையாகக் கூறியிருப்பதை போல, ஆதி சங்கரரால் அவரது காலத்தின் சூழலை மீற முடியவில்லை.

அல்லது முடிந்ததா?

அவரைக் குறித்த ஐதீகக்கதை – காசியில் சண்டாளன் காலில் விழுந்து மனீஷா பஞ்சகம் பாடும் – அந்த பஞ்சகம் இன்று வரை நிலவும் சூழல் எதைக் காட்டுகிறது? அவரிடம் உபநிடத அறங்களுக்கு உண்மையான ஒரு இதயம் இருக்கத்தான் செய்ததா? சாதிய சழக்குகளுக்கு அப்பால் உபநிடத அறத்தை உணர்ந்த ஒரு சங்கரரை நாம் சென்றடைய முடியுமா? அதைத்தான் ஸ்ரீ நாராயண குரு செய்தாரா? அங்கே தான் காஞ்சி சந்திரசேகரேந்திர சரஸ்வதி தோல்வியடைந்தாரா? இக்கேள்விகள் எழுவதை தவிர்க்க இயலவில்லை.

அடுத்ததாக “நிறுவனமயமாக்கப்பட்டு ஆதிக்க அடையாளமாகக் குறுக்கப்பட்ட கிறிஸ்துவை மீட்டெடுத்தவர்களில் அவர் முதன்மையானவர் என்று நான் நினைப்பதற்குக் காரணம் இதுவே. கிறிஸ்துவின் சொற்கள் ஒருவர் தன் அந்தரங்க மன்றாட்டு மூலம் கண்டடையப்படவேண்டியவை என நான் நினைக்கிறேன்.” என நீங்கள் சொல்கிறீர்கள். கிறிஸ்தவ சமூக வரலாற்றை சிறிது ஆழ்ந்து பார்க்கும் போது இது ஆதிசங்கரரின் சிவ அம்சம் போலவே கட்டமைக்கப்பட்ட பிம்பம் மட்டுமே என கருத சாத்தியம் இருக்கிறது. உண்மையில் அருணகிரியின் கேள்வியில் அவர் கேட்காத ஒன்று ஆனால் ஆதி சங்கரருடனான ஒப்பீடான ஒரு விஷயம் வேறொன்று. அது ஆதிசங்கரரின் சூத்திர வெறுப்புக்கு நிகரான அல்லது அதைவிட தெளிவாக மார்ட்டின் லூதரிடம் காணக்கிடைப்பது, அவரது அவரது சூழலிலான ‘சூத்திர வெறுப்பு’ அல்லது ‘குடியானவர் ’ (peasant) மீதான வெறுப்பு.

இதனை சிறிது ஆழமாகவே காணலாம். மார்ட்டின் லூதர் வாழ்ந்த காலத்தில் ரோம பேரரசு என்பது இருந்தாலும், அது நாட்டுப்புறங்களில் பெரும் ஆதிக்கம் செலுத்த இயலாததாக இருந்தது. எனவே ஜெர்மானிய விவசாயக்குடிகள் கூட்டு விவசாயம் செய்வோராக இருந்தார்கள். ஆனால் ஜெர்மானிய தனித்துவம் மேலெழுந்த போது ஜெர்மானிய மேல்குலத்தார் மூலம் ரோமானிய தனியார் சொத்து சட்டங்கள் இந்த நாட்டுப்புற விவசாய சமுதாயங்கள் மீது இறுகின. பிரபுக்கள் மேற்குலத்தார் நிலங்களின் சொந்தக்காரர்கள் ஆனார்கள். அவர்களின் நிலங்களில் நிலமற்ற கூலிகளாக குடியானவர்கள் மாறினார்கள். இது அவர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இங்கு இரு மோதல்கள் இருந்தன. ஒன்று ஜெர்மானிய நிலப்பிரபுக்கள் மேல்குடிமக்கள் ரோமப் புனித அரசிலிருந்து தங்கள் விடுவித்து கொள்ளுதல் அதே நேரத்தில் தம் விவசாயக் குடிகளை நிலமற்ற குடியானவர்களாக மாற்றுதல்.[1]

இங்கு மார்ட்டின் லூதரின் குரல் ரோமானிய ஆதிக்கத்திலிருந்து ஜெர்மானிய மேற்குடிகளுக்கான விடுதலை குரலாக அமைந்தது. ஆனால் உணர்ச்சி வசப்படும் போதெல்லாம் அவரது குரலில் ஒரு கடும் வன்முறை இருந்தது. “ஏன் நாம் ரோம கத்தோலிக்க சபை அதிகாரிகளின் ரத்தத்தில் நம் கரங்களை கழுவக் கூடாது?” (1520) என்பது போல.[2] பின்னர் அவர் இதற்கு வருத்தம் தெரிவித்து ஒரு விளக்கமும் அளித்தார். ஆனாலும் உணர்ச்சி வசப்படும் போது கடுமையான வன்முறை அவரிலிருந்து எழுந்த படியே இருந்தது. இறுதி வரை.

லூதரின் பைபிள் மொழிபெயர்ப்பு 1539 இல்தான் வெளிவந்தது ஆனால் அதற்கு முன்னரே ஜெர்மனியில் 18 விதமான ஜெர்மானிய பைபிள்கள் வந்துவிட்டன.[3] ஆக ஜெர்மானிய குடியானவன் அவன் துயரத்தில் தன் ஆத்மாவில் ஏசுவுடன் உரையாடுவதற்கு லூதரின் மேற்குடிகளுக்கான கிளர்ச்சிக்கு முன்னரே தொடங்கிவிட்டான். 1520களில் விவசாய கிளர்ச்சி பெரிய அளவில் ஆரம்பித்தது. ரோம கத்தோலிக்கத்துக்கு எதிராக ஜெர்மானிய மேற்குடிகளுக்காக பேசிய லூதர் தமக்காகவும் பேசலாம் என நினைத்த விவசாயக் குடிகள் பெரும் ஏமாற்றமடைந்தனர். இதே காலகட்டத்தில் தொல்பழங்குடி மரபுகளின் கூறுகளும் கிறிஸ்தவமும் இணைந்த பல மரபொழுக்குகள் இப்போது கிளைத்தெழ ஆரம்பித்திருந்தன. உதாரணமாக லோடோவிக் ஹெட்ஸரைக் கூறலாம். இவருடைய கிறிஸ்தவம் ஞான-கிறிஸ்தவத்துடன் ஒப்புமை கொண்டதாக இருந்தது. இவரே விவிலியத்தை பொதுமக்களுக்காக மொழி பெயர்த்தார். எந்த கலகக்காரரையும் போல இவரும் விசித்திர சித்தரே. இவருடைய செய்கைகள் -குறிப்பாக மண உறவுகள் சார்ந்து- அதீதத்தன்மை கொண்டவையாக இருந்தன. கிறிஸ்தவ சூழலிலான தந்திரா மரபாகவே இதை இன்று இந்திய பாரம்பரிய உளவியல் சார்ந்து காண இயலும். இவர் எளிய மக்களிடமே சென்றார். அவர்களிடம் உரையாடினார். சில ஒழுக்கங்களை -உதாரணமாக முதன் முறையாக மது அருந்துவதை எதிர்த்து பிரச்சாரம் செய்த கிறிஸ்தவ இறையியலாளர் இவரே- அவர் போதித்தார். இறுதியில் முறையான மண உறவு இல்லை என அதிகாரிகளால் கொல்லப்பட்டார். குடியானவர்களின் கோரிக்கைகளை கிறிஸ்தவ இறையியலுடன் இணைத்து உருவாக்கப்பட்ட முக்கியமான ஒரு பிரசுரத்தை (Twelve Articles of the Peasants) உருவாக்கியதில் இவரது பங்கும் உண்டு.[4]

1518 இல் மார்ட்டின் லூதரின் கிளர்ச்சிக்கு ஒரு வருடம் பின்னர் கத்தோலிக்க மடாலயத்திலிருந்து வெளிவந்த ஒரு துறவியை இங்கு குறிப்பிட வேண்டும். ஏசுவை விடுவித்ததாக நீங்கள் சொல்லும் அத்தனையும் மிக கச்சிதமாக பொருந்துவது வரலாற்றில் வெறும் கலகக்கார விநோதராக கூடிப் போனால் ஒரு பத்தியில் அல்லது ஒரு அடிக்குறிப்பில் விட்டுச் செல்லப்படும் இந்த மனிதருக்குத்தான். அவர் தாமஸ் மண்ட்ஸர். லூதரின் ‘கிளர்ச்சியின்’ எல்லைகளை தெளிவாக தெரிந்து கொண்டு அவருடன் மோதியவர் இவர். ஆனால் இவருக்கும் பிரச்சனைகள் இருந்தன. காந்தி போல ஆன்மிக வலிமையும் நிர்வாகத்திறமையும் சரிசமமாக கொண்டு செயல்படக் கூடியவரல்லர் இவர். (அப்பேர்பட்ட காந்தியே அதிகாரத்தை மட்டுமே இலட்சியமாக கொண்டு இயங்கிய சில அரசியல் சக்திகள் முன் தோல்வி அடைந்தார்.). குடியானவர்கள் வெளியிட்ட பிரகடனத்தில் அவர்கள் கூறினர்:

இதுவரை மனிதன் நிலம் வைத்திருப்பது மரபாக இருந்தது. ஆனால் கிறிஸ்து நமக்காக ரத்தம் சிந்தி அதன் மூலம் நம் அனைவரையும் கீழானவர்களையும் மேலானவர்களையும் விடுவித்தார். எனவே மறைநூலின் அடிப்படையில் நாம் சுதந்திரமானவர்கள். அப்படியே இருப்போம்.[5]

இங்கு சங்கர-சண்டாள சந்திப்பை நினைவு கொள்ளலாம். மார்ட்டின் லூதரிடம் கேட்ட விவசாயக்குடிமகன் ஏறக்குறைய அதே வேறுபாட்டை மறுதலிக்கிறான். பரமார்த்திகம் வேறு உலக விவகாரியம் வேறு என்பதில்லை. ஏசுவின் இரத்தத்தில் அனைவரும் ஒன்று என்றால் பிரபும் விவசாயக்குடியும் ஒன்றுதானே என்கிறான். இதற்கு மார்ட்டின் லூதர் சொன்ன பதில் ஒரு கிறிஸ்தவ மனீஷா பஞ்சகமாகியிருந்திருந்தால் நிச்சயம் ஆன்மிக ஏசுவை கண்டடைந்த பெரும் மகானாக லூதரை நாம் அடையாளம் காணலாம்.

ஆனால் மார்ட்டின் லூதர் குடியானவர்களின் இந்த இறையியல் பயன்பாட்டுக்கு அளித்த பதில்:

இது கிறிஸ்தவ விடுதலையை கீழ்த்தரமான ஒன்றாக்கும் விஷயம். ஆபிரகாமும் இதர இறைவாக்கினரும் அடிமைகள் வைத்திருக்கவில்லையா? புனித பவுல் அடிமைகள் எப்படி நடக்க வேண்டும் என சொல்லியிருப்பதை படியுங்கள். எனவே குடியானவர்களின் இந்த கோரிக்கை புனித விவிலியத்துக்கு எதிரானது ஆகும். ஒரு அடிமை கிறிஸ்தவனாக இருந்து கிறிஸ்தவ விடுதலையைக் கொண்டிருக்கலாம். ஆனால் அந்த விடுதலை கிறிஸ்தவனான ஒரு நோயாளியோ ஒரு சிறைக்கைதியோ கொண்டிருக்கும் விடுதலைதான். குடியானவர்களின் இந்த கோரிக்கை அனைத்து மனிதர்களையும் சமமானவர்களாக்கிவிடும். அது ஏசு கிறிஸ்துவின் விண்ரசை இந்த மண் சார்ந்த அரசாக மாற்றும் நடக்கவியலாத முயற்சியாகும். ஏனெனில் ஒரு மண்ணக அரசானது சமத்துவமின்மை இல்லாமல் நிலைபெற முடியாது. ஒரு மண்ணக அரசில் சிலர் பிரபுக்களாக மேன்மக்களாக இருப்பார்கள். சிலர் விடுதலை பெற்ற மனிதர்களாக இருப்பார்கள் சிலர் சிறை கைதிகளாக இருப்பார்கள்.[6]

விவசாயிகளின் இந்த கலகத்தை அடக்க லூதர் வெளியிட்ட பிரச்சார பிரசுரம் (அச்சகத்தின் முக்கியத்துவத்தை லூதர் சிறப்பாக உணர்ந்திருந்தார்) கடும் வன்முறையை போதித்தது. லூதரின் எல்லா காலகட்ட எழுத்துகளிலும் இந்த வன்முறை பிரச்சாரத்தை தொடர்ந்து காணமுடிகிறது. எதிர்தரப்பை வேரும் வேரடி மண்ணுமற அழிப்பதை ஆண்டவன் அளித்த ஆணையாகவே கருதுபவர் அவர்:

குடியானவன் வெளிப்படையான கலகத்தில் ஈடுபட்டால் அவன் கிறிஸ்தவ இறை அருள் சட்டத்துக்கு வெளியே சென்று விட்டான். … இந்த காரணத்தினால் அந்த கலகக்கார விவசாயியை யாருக்கெல்லாம் முடிகிறதோ அவர் ஒவ்வொருவரும் போய் வெட்ட வேண்டும், கொல்ல வேண்டும், குத்த வேண்டும் – இதை இரகசியமாகவோ வெளிப்படையாகவோ செய்ய வேண்டும். ஏனென்றால், கலகக்காரனைப் போல விஷமான பாதிப்பு ஏற்படுத்தக் கூடிய பிசாசுத்தனமான வேறெவனும் இருக்க முடியாது. கலகக்கார விவசாயியைக் கொல்வது என்பது ஒரு வெறிபிடித்த நாயைக் கொல்வது போலத்தான்.

மார்ட்டின் லூதரின் வார்த்தைகள் நோய் வாய்ப்பட்டிருந்த மன அழுத்தத்தில் இருந்த ஒரு வயதான மனிதரின் குழம்பிய சொற்களல்ல. அவரது மரணத்துக்கு ஏறக்குறைய இருபது ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த வார்த்தைகள் அவை. அவ்வார்த்தைகளுக்கு தெளிவான விளைவுகள் இருந்தன. ஏனெனில் லூத்தரின் அறிவுரை வெறும் காகித அறிக்கை இல்லை. அது ஐரோப்பிய உயர் குலத்தினரால் அப்படியே சிரமேற்கொள்ளப்பட்டு செயல்படுத்தப்பட்டது. ப்ராங்ஹௌஸன் (Frankhausen) என்னும் ஒரு இடத்தில் மட்டும் விவசாயக்குடிகள் 5000 பேர் ஒரே நாளில் கொல்லப்பட்டனர். மொத்தமாக 100,0000 குடியானவர்கள் கொல்லப்பட்டனர்.[7] லூத்தர் இதில் மிகுந்த ஆனந்தம் கொண்டார். அவர் எக்களிப்புடன் கூறினார்:

மார்ட்டின் லூத்தராகிய நானே இக்கலக விவசாயிகளை ஒழித்தேன். ஏனென்றால், நானே அவர்களை (விவசாயிகளைக்) கொல்லும்படி (உயர்குலத்தினரைத்) தூண்டினேன். அவர்களின் இரத்தம் என் தலையின் மீது உள்ளது. ஆனால், அதற்கு ஆண்டவனே பொறுப்பு. ஏனென்றால், நான் சொன்னதெல்லாம் ஆண்டவன் எனக்கு ஆணையிட்ட அவரது இறைவார்த்தைகளையே.”[8]

இவை எல்லாவற்றுக்கும் பின்னால் தெளிவான அரசியல் காரணங்கள் லூதருக்கு இருந்தன. அவர் முதலில் விவசாயிகளிடம் அமைதி பேச்சு வார்த்தை நடத்தி பார்த்தார். அப்போது குடியானவர்களிடம் அன்பு காட்ட வேண்டும் அவர்களைக் கொடுமைப்படுத்தினால் ஏற்படும் கலகங்களுக்கு உயர்குடியினரே பொறுப்பேற்க வேண்டும் என்றெல்லாம் பேசியவர்தான் லூதர். ஆனால் ஒருகாலத்தில் அவருடைய நம்பிக்கைக்கு பாத்திரமாக இருந்த தாமஸ் மண்ட்ஸர் குடியானவர்களின் நம்பிக்கையை பரிபூரணமாக பெற்றிருந்தது அவருக்கு கடும் கோபத்தை உருவாக்கியது. மேலும் குடியானவர்கள் கிளர்ச்சிக்கு லூதரின் ரோமானிய எதிர்ப்பே காரணம் என கத்தோலிக்க பிரச்சாரம் நடந்தது அவருக்கு அச்சத்தையே ஏற்படுத்தியது. தாம் வேட்டையாடப்படுவோம் எனும் எண்ணம் அவருக்கு ஏற்பட்டதும் அவர் ஜெர்மானிய உயர்குடியினருக்கு ஆதரவாகவே செயல்படுபவர் என்பதை காட்ட வேண்டியதாயிற்று. மார்ட்டின் லூதரைக் குறித்து அவர் தரப்பிலிருந்து பரிவுடன் எழுதிய பிரிஸர்வ்ட் ஸ்மித் போன்ற வரலாற்றாசிரியர்கள் கூட இங்கு ஒரு விஷயத்தை குறிப்பிடுகின்றனர்:

அவர் செய்ததெல்லாம் சரிதான். ஆனால் அவர் தனது அடக்கமற்ற வேகத்தால் தவறிழைத்துவிட்டார். குடியானவர்களுக்கு அவர்கள் கோரிக்கைகளுக்கு அதிக அனுதாபமும் இரக்கமும் காட்டியிருந்தால் லூதர் குடியானவர்களின் நாயகனாகியிருப்பார். அவர் அதை செய்திருந்தால் அவர் பெயருக்கு இன்று ஏற்பட்டிருக்கும் களங்கத்திலிருந்து அவர் தப்பியிருப்பார்.[9]

தாமஸ் மண்ட்ஸர் கொல்லப்பட்டார். ஜெர்மானிய குடியானவர்கள் பின்னர் மிக மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டனர். அவர்களில் பெரும்பாலானோர் இதன் காரணமாக கத்தோலிக்கத்துக்கே திரும்பினர்.

காந்தி இது போன்றதொரு விவசாய எழுச்சியில் தாமஸ் மண்ட்ஸர் போலல்லாது நிச்சயம் தெளிவாகத் திட்டமிட்டிருப்பார் என்பதில் ஐயமில்லை. ஆனால் லூதர் போல அவர் செயல்பட்டிருப்பாரா அல்லது இத்தனை பெரிய படுகொலையில் எக்களிப்புடன் பேசியிருப்பாரா என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. நிச்சயம் மாட்டார். தங்கள் இதயத்துக்கு மிகவும் நெருக்கமாக நீங்கள் உணரும் டால்ஸ்டாயின் ஆன்மிக ஏசு மண்ட்ஸர் போல கூட நடந்திருக்க வாய்ப்பு உண்டு. ஆனால் மண்ட்ஸர் போல வன்முறை கலகத்தில் இறங்கியிருப்பாரா?

டால்ஸ்டாயின் அந்த ஏசுவின் ஆளுமையின் துகள்கள் மார்ட்டின் லூதரை விட தாமஸ் மண்ட்ஸரில் காணமுடியும். இன்னும் சற்று மண்ட்ஸரின் அக வளர்ச்சியின் பங்களிப்பாளர்களை நோக்கினால் அங்கு ஞான கிறிஸ்தவத்திலிருந்து (Gnostic Christianity) எக்ஹார்ட் வரை காண முடிகிறது. மண்ட்ஸர் சடங்குகளை -கிறிஸ்தவ முழுக்கு உட்பட- அக அடையாளங்களாக மாற்றுகிறார். உண்மையான முழுக்கு ஏசுவை வாழ்தல் (Imitation of Christ) என்றே கூறுகிறார். தாமஸ் ஹெம்பிஸ், எக்ஹார்ட் ஆகியவர்களின் தாக்கங்களை அவரில் காணமுடிவதாக வரலாற்றாசிரியர்கள் கூறுகிறார்கள். சட்டம், இலக்கணம், வரலாறு ஆகியவற்றின் அடிப்படையில்லாமல் அக-எழுச்சியின் அடிப்படையில் ஏசுவை அறியும் படி கூறும் இம்மனிதரில்[10] மீமாம்சத்தை தாண்டி அகஒளியைத் தேடும் ஒரு வேதாந்தியின் சாயல் இருக்கிறது.

அன்புள்ள ஜெயமோகன்,

உங்கள் டால்ஸ்டாயின் ஆன்மிக ஏசுவின் வரலாற்று உடலை உருவகித்தால் அதில் இத்தகைய ஏறக்குறைய மைய ஐரோப்பாவின் வரலாற்றாடலில் மறக்கடிக்கப்பட்டவர்களே இருப்பார்கள்.

இங்கிருந்தே சங்கரர் இத்தகைய ஒரு விவசாய கிளர்ச்சியின் போது எப்படி நடந்திருப்பார் என்பதை அனுமானிக்க முயற்சிக்கலாம். ஆனால் அதிர்ஷ்டவசமாக அனுமானிக்க வேண்டியதில்லை. சங்கரரின் தத்துவத்திலிருந்து சங்கரர் உருவாக்கியதாகவே ஐதீகக்கதைகள் கொண்ட தசநாமிகள் சம்பிரதாயத்திலிருந்தே கங்கை சமவெளியில் உருவான மிக முக்கிய குடியானவர்களின் கிளர்ச்சிக்குத் தலைமை தாங்கிய சுவாமி சகஜானந்தர் உருவானார்.[11] இதற்கு முன்னோடியாக ராமானுஜ ராமனந்த சம்பிரதாயத்தில் வந்த ராமானந்திகள் மொகலாய பேரரசுக்கு எதிரான குடியானவர்கள் கிளர்ச்சிக்கு தலைமை தாங்கினார்கள். இத்தகையத் துறவிகளின் வலைப்பின்னலின் சமுதாய பலம் அபரிமிதமானது. அவற்றை தமது அரசியல் இயக்க பரவலுக்கு பயன்படுத்தினார் ஒரு தலைவர். அவரும் தன்னை மிக கவனமாக ஒரு எளிய இந்திய விவசாயியாகவும், அதே நேரத்தில் துறவித்தன்மை கொண்டவராகவும் மக்கள் மனதில் தனது எளிமையாலும் ஆன்மபலத்தாலும் பதித்துக் கொண்டவர்தான். அவர் பெயர் – மோகன் தான் கரம் சந்த் காந்தி.[12] சண்டாளன் பாதம் வணங்கிய சங்கரரின் பாரம்பரிய நீட்சி இது.

ஆனால் சங்கரருக்கு இன்னொரு பரிமாணமும் இருக்கிறது. கோரக்பூர் கீதா பிரஸில் 1992 இல் வெளிப்படும் பரிமாணம் அது, 1525 இன் மார்டின் லூதரின் குரலை இந்த சங்கரரில் நிச்சயமாக கேட்க முடிகிறது:

பிராம்மணன் சண்டாளன் பசு யானை நாய் ஆகியவைகளுடன் சமமாகப் பழகுவது முடியாத காரியம். விவகாரத்தில் மாறுபாடு இருப்பது தவிர்க்க முடியாது. ஸாஸ்திரம் அவ்விதம் சொல்லவும் இல்லை. அது தக்கதும் இல்லை. ஏனென்றால் வித்தையும் வினயமும் உள்ள பிராமணனைத்தான் பூசிக்கமுடியும், சண்டாளனைப் பூசிக்க முடியாது. பசுவின் பாலைத்தான் குடிக்க முடியும். நாய்ப்பாலைக் குடிக்க முடியாது…. ஸ்ரீ சங்கராச்சார்ய ஸ்வாமிகள் சொல்லியிருக்கிறார்கள், ‘எண்ணத்தில் அல்லது மன அளவில் அத்வைதம் இருக்க வேண்டும். ஆனால் செயல் முறையில் எங்கும் இருக்கக் கூடாது.[13]

இந்த சங்கரரின் நீட்சி – காஞ்சியின் சந்திர சேகரேந்திர சரஸ்வதி அவர்கள்.

பணிவன்புடன்

அரவிந்தன் நீலகண்டன்

[1] Wendy S. Wilson, Gerald Herman, Critical Thinking Using Primary Sources in World History,(Martin Luther and the Suppression of the Peasant Revolt), Walch Publishing, 2004,பக்.16

[2] Herbert David Rix, Martin Luther: The Man and the Image, Ardent Media, 1983, பக்.86

[3] http://en.wikipedia.org/wiki/Bible_translations_into_German

[4] http://www.gameo.org/encyclopedia/contents/haetzer_ludwig_1500_1529

[5] Eric Voegelin, History of Political Ideas, Volume 4 (CW22): Renaissance and Reformation, University of Missouri Press, 1998, பக்.266

[6] அதே

[7] Preserved Smith, Life and Letters of Martin Luther, Routledge, 1910: 1968, பக்.164

[8] William Stang, The Life of the Martin Luther, BiblioBazaar, LLC, 2009, பக். 62

[9] Preserved Smith, பக்.167

[10] உதாரணமாக காண்க: Hughes Oliphant Old, The Shaping of the Reformed Baptismal Rite in the Sixteenth Century, Wm. B. Eerdmans Publishing, 1992, பக். 82-3

[11] வில்லியம் பிஞ்ச், Peasants and Monks in British India, University of California Prsss, 1996, பக்.133

[12] வில்லியம் பிஞ்ச், 1996, பக்.5

[13] சுவாமி ராம்சுகதாஸ், கர்ம-ரஹஸ்யம், கீதா பிரஸ், கோரக்பூர், 1992.

முந்தைய கட்டுரைகுமரி கிறித்தவத் தமிழ்
அடுத்த கட்டுரைசுராவின் குரல்