அன்புள்ள ஜெ,
உங்களது கவிதையையும், மனுஸ்ய புத்திரனின் கவிதையையும் படித்தபிறகு நான் எழுதியது. இவை இரண்டுமே என்னை எழுதத் தூண்டின. மனுஸ்ய புத்திரன் எழுதிய ரொம்ப நாளைக்கு பிறகான நல்ல கவிதையாக பட்டது. அவரது தோழியர்களின் கணவர் கவிதையும் எனக்கு ரொம்ப பிடித்தது.
உங்களின் கவிதையில் கொஞ்சம் சினிக்கல் தன்மை குறைந்து பதிவுபோலான தத்துவத்தன்மையையும், பெரிய கான்வாசில் இதெல்லாம் சகஜம்தானே என்கிற உணர்வும், இதிலிருந்து என்ன கற்றுக்கொள்ளப்போகிறோம், இதுவும் பழையதுபோல ஓன்றுதான என்கிற சின்ன உணர்வும் கல்லால் கலைக்கப்பட்ட கிணற்றலையாய் கவிதையில் தெரிந்தது.
மணி.
***
மதிப்பிற்குரிய எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களுக்கு
தேவராஜ் விட்டலன் எழுதும் கடிதம். நான் அசாமில் பணியாற்றுகிறேன். கடந்த ஒரு ஏழு மாதமாக தொடர்ந்து உங்களது வலைத்தளத்தை வாசித்து வருகிறேன். எழுத்தாளனாக என்னை நிலைநாட்டி கொள்வதில்தான் மனம் சந்தோசம் கொள்கின்றது. புத்தர் சொன்னது போல் ‘நீ எதுவாக நினைகிராயோ அதுவாகவே ஆவாய்’ என்ற வாக்கியத்தை எடுத்துக்கொண்டு நம்பிக்கையுடன் பயணிக்கிறேன். மனம் சோர்வுறும் நேரத்தில் உங்களது வலை தளத்தையும், எஸ். ராமகிருஷ்ணன் அவர்களின் வலைத்தளத்தையும் வாசித்து என்னை சீர்படுத்திக் கொள்கிறேன். பயணம் சிற்றிதழில் தொடர்ந்து நிகழ்வுகள் சந்தர்ப்பமானவை பதிவுகள் நிரந்தரமானவை’ என்னும் தலைப்பில் கட்டுரைகள் எழுதி வருகிறேன் . எனது முதல் நூல் ‘கைக்குட்டை கனவுகள்’ வெளியாகி உள்ளது.
புத்தகம் போட்டுவிட்டேன் ஆனால் அவற்றை மக்களிடம் கொண்டு செல்லும் வழிமுறைகள் தெரியவில்லை . இப்போது எனக்காக ஒரு வலைத்தளத்தை உருவாக்கி கொண்டு அதில் எழுதி வருகிறேன் நம்பிக்கையோடு பயணிக்கிறேன் . உங்களது விமர்சனத்தால் என்னை சீர்படித்தி விடுவீர்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.
http://vittalankavithaigal.blogspot.com
மகாவிட்டலன்
அன்புள்ள மகாவிட்டலன்
நம்பிக்கையுடன் எழுதுங்கள். உங்கள் மனதில் பட்டதை நீங்கள் நேர்மையாக எழுதினால் அதற்கு எப்போதுமே ஓர் இடம் இருக்கிறது. ஒருபோதும் குரோதங்களை எழுத்தில் கொட்டாதீர்கள்.
எழுது, அதுவே அதன் ரகசியம்
சுந்தரராமசாமியின் வரி. அதுவே நானும் சொல்லத்தக்கது
வாழ்த்துக்கள்
ஜெ