கனடாவில் வாழும் நண்பர் முரளி நான் மிக நெருக்கமாக உணரும் சிலரில் ஒருவர். அவரது எளிமையான உணர்ச்சிகரமான மனநிலை அவர்மீது பெரியதோர் ஈர்ப்பை உருவாக்கக் கூடியது. அந்த நெகிழ்ச்சியுடன் மட்டுமே அவரை எப்போதும் நான் எண்ணிக்கொள்கிறேன்.
ஆனால் காய்த்துப்போன அவரது கரங்களை பிடிக்கையில் அவரது இன்னொருபக்கமும் மனதுக்குள் ஓடும். மிகமிக அலைக்கழிப்பான வாழ்க்கை கொண்டவர் முரளி. விடுதலைப்புலிகள் அமைப்பின் முக்கியமான பொறுப்புகளில் இருந்தவர். ஐரோப்பாவில் பலநாடுகளில் பணியாற்றியிருக்கிறார். பலநாடுகளின் சிறைகளில் இருந்திருக்கிறார். பலநாடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டிருக்கிறார்.
முரளி இந்தியாவில் பணியாற்றியிருக்கிறார். வசந்தகுமாருக்கு நண்பர். என்னிடம் அவ்வப்போது தொலைபேசியில் பேசுவதுண்டு அவர்.
கனடாவிலிருந்தும் அவர் வெளியேற்றப்படும் சூழல்தான் இருந்தது. அப்போதுதான் ஒரு நிகழ்ச்சி. அவரது மகன் பிருந்தன் பூங்காவின் குளத்தில் மூழ்கி இறக்கவிருந்த ஒரு சிறுமியை காப்பாற்றினார். அம்முயற்சியில் அவர் உயிர்துறந்தார். அத்தகைய விஷயங்களை பெருமதிப்புடன் பார்க்கும் தேசம் அது என்பதனால் முரளியை அந்த அரசு அங்கீகரித்தது.
தன் நாடுதேடுதல்களைச் சொல்லிக்கொண்டே வந்தார் முரளி. நாடு வேண்டுமென்று ஆயுதமெடுத்த ஒரு மனிதன் காலூன்ற நிலம்தேடி அலைவதன் குரூரமான அங்கதத்தை உணர்ந்தபடி நான் சொல்லிழந்து நின்றுகொண்டிருந்தேன். அப்போதுதான் தன் மகனைப்பற்றிச் சொன்னார். அப்போது பெருமிதமா, துயரமா, அல்லது வாழ்க்கையின் அர்த்தமில்லாமையை உணர்ந்த விலகலா எது அவர் முகத்தில் தெரிந்தது என அறிய முடியவில்லை.என் வாக்கையின் சிக்கலான தருணங்களில் ஒன்று.
கடந்த 12.10.2012 அன்று கனடிய ஆளுநர் டேவிட் ஜோன்சனின் ஒட்டாவோ “றிடோ” வாசஸ்தலத்தில் இடம்பெற்ற தேசியவீரர் விழாவில் பிருந்தன் முதலாவாதாகக் கௌரவிக்கபட்டு விருது வழங்கப்பட்டார். முரளியும் மனைவி றஞ்சியும் விழாவில் கலந்துகொண்டார்கள். [நடராஜா முரளிதரனும், சத்தியசிறி] செய்தியைக் கண்டதும் முரளி என்னிடம் சொன்ன அந்த தருணத்தை நினைத்துக்கொண்டேன்.
பிருந்தன் முரளியைப்போலவே உணர்ச்சிகரமான, தைரியமான, மனிதர்கள் மேல் பிரியம் கொண்ட ஆளுமையாக இருந்திருப்பார் என நினைக்கிறேன். நான் அறிந்த பெரும்பாலும் அத்தனை புலிப்போராளிகளும் அப்படிப்பட்டவர்கள். பிருந்தனைப்போல எத்தனை குருத்துக்கள் அழிந்தன என எண்ணிக்கொள்கிறேன். இருந்திருந்தால் கலையில், இலக்கியத்தில், அறிவியலில், சிந்தனைத்துறைகளில் சாதனைகள் செய்திருக்கக் கூடியவர்கள். பெற்றோரின் கண்களை நிறைக்கும் இளைஞர்கள்.
முரளியின் கைகளை இந்நேரம் மானசீகமாக பற்றிக்கொள்கிறேன்.