என்னுடைய மூத்த வாசகர் ஒருவர் தென்காசியில் வங்கியில் பணியாற்றிய காலகட்டத்தில் அவருக்கு அதிகாரியாக இருந்தவர் லா.ச.ராமாமிருதம். அவர் அப்போதுதான் இலக்கியங்களை வாசிக்க ஆரம்பித்திருந்தார். கோயில்தெய்வம் கூடவே வாழ வந்துவிட்ட பரவசத்துடன் அவர் லா.ச.ராவைக் கொண்டாடினார். கூடவே எந்நேரமும் இருந்தார். லா.ச.ராவின் குடும்பம் சென்னையில் இருந்தது. நெடுங்காலம் அவர் வங்கி குமாஸ்தாவாக இருந்து அப்போதுதான் அதிகாரியாகப் பதவி உயர்வுபெற்று வந்திருந்தார். ஆகவே தென்காசியில் ஒரு வீடு எடுத்துத் தனியாகத் தங்கியிருந்தார். நண்பர் பெரும்பாலான நாட்களில் லா.ச.ராவுடனேயே இரவு தங்கிவிடுவதுண்டு
காரணம் லா.ச.ராவின் சமையல். லா.ச.ரா அவரைத் தன்னுடன் சாப்பிடும்படிச் சொல்லி மிகவும் மன்றாடுவாராம். ‘நமக்கு நாமே வக்கணையா சமைச்சுக்க முடியலை. அதிலே ஏதோ தப்பு இருக்கு. நீங்க சாப்பிடறேள்னா நான் சமைப்பேன். நானும் நல்லா சாப்பிடுவேன்’ என்றாராம். அந்த வாதத்தைச் சொல்லிச் சொல்லி நண்பர் சிரிப்பார். ஆனால் சமைப்பவர்களுக்குத் தெரியும் அது உண்மை என. சமையலும் ஒருகலைதான். ஆனால் வேறெந்தக் கலையையும் ஒரு ரசிகன் கூட இல்லாமல் ஆத்மசமர்ப்பணத்துக்காக செய்ய முடியும், சமையலை மட்டும் அப்படிச் செய்யமுடியாது.
லா.ச.ரா ரசத்தை மிக விரும்பிச் செய்வார் என்றார் நண்பர். மைசூர் ரசம், பன்னீர் ரசம், எலுமிச்சை ரசம்,நெல்லிக்காய் ரசம் எனப் பலவகைகளில் செய்வார். சமையல் செய்ததைப் பற்றிச் சொல்லும்போது ‘இன்னிக்கு ஒரு ரசம் வச்சேன் பாரு..’ என்றுதான் சொல்வார். உணவில் ரசம் சுவையாக ஆவதற்கு ஒரு வயது தேவைப்படுகிறது. இளமையில் அடர்த்தியான புரதமும் கொழுப்பும் கொண்ட உணவுகளை நாக்கு விரும்புகிறது. வயிற்றின் அனல் அணைய ஆரம்பிக்கும்போது நாக்கு மணத்தை மட்டுமே முக்கியமாக நினைக்க ஆரம்பிக்கிறது. அப்போதுதான் ரசத்தின் அருமை தெரியவரும்.
லா.ச.ராவுக்கு வெந்தயக்குழம்பு, சுண்டிய வத்தக்குழம்பு, உருளைக்கிழங்கு பொடிமாஸ் பிடிக்கும் என நான் சொன்னேன். நண்பர் ஆச்சரியமாக ‘நீங்க அவரைப் பார்த்திருக்கீங்களா?’ என்றார். ‘இல்லை…அவரோட எழுத்தில் இருந்தே இதையெல்லாம் தெரிஞ்சுகிடலாம்’ என்றேன். ‘ஆமாமா’ என்று நண்பர் தலையாட்டி சிரித்தார். காலையில் இட்லி சாப்பிடும்போது இரு சிறிய உருளை வெண்ணையும் சாப்பிடுவார். என்றார். ‘நான் அது கொழுப்பாச்சே…’ என்றேன். ‘ஆமா…ஆனா அவர் நல்லாத்தானே இருக்கார்?’ என்றார்.
என்னுடைய விமர்சன அணுகுமுறையில் தமிழின் மகத்தான சிறுகதைகள் பலவற்றை எழுதியவர். எப்போதுமுள்ள மானுட அகச்சிக்கல்களுக்குள் ஊடுருவிச்செல்பவை அவருடைய கதைகள். அரசியல் சமூகவியல் யதார்த்தங்களை அவை பொருட்படுத்துவதில்லை. அகயதார்த்தங்களை மட்டுமே தொட்டுவிட முயல்கின்றன. அக ஓட்டத்தை எழுதுவதற்கு லா.ச.ரா ஒரு மொழிநடையை உருவாக்கிக் கொண்டார். மனதில் எண்ணங்கள் ஓடும் தன்னிச்சையான ஓட்டத்தை அப்படியே மொழியில் எழுத முயலும் நனவோடை உத்தியில் இருந்து அவர் அதை உருவாக்கிக் கொண்டார்
ஆனால் லா.ச.ரா நனவோடை உத்தியில் எழுதவில்லை. அவரது எழுத்தை அகப்பேச்சு என்றுதான் சொல்லவேண்டும். அவரது கதாபாத்திரங்கள் தங்களுக்குள் பேசிக்கொண்டே இருக்கிறார்கள். அதே பாணியில்தான் ஒருவருக்கொருவரும் பேசுகிறார்கள். சொற்களை வைத்து விளையாடுகிறார்கள். தாவித்தாவிப் பல்வேறு விஷயங்களைத் தொட்டுச்செல்கிறார்கள். அத்துடன் லா.ச.ரா அவரது கூற்றாகப் புறவுலக வர்ணனைகளை அளிக்கிறார். அணிகளும் உவமைகளும் வர்ணனைகளும் ததும்பிய நடை அது.
லா.ச.ராவின் நடையில் மயங்கியவர்கள் பலர் தமிழ்ச்சூழலில் உண்டு. அந்த நடை அவரது இதழ்கள் போன்ற ஆரம்பகால கதைகளில் மெல்லமெல்ல உருவாகிவந்தது. பின்பு அதை அவர் ஒரு தொழில்நுட்பமாகவே செய்ய ஆரம்பித்து சாதாரணமான பல கதைகளை எழுதினார். லா.ச.ராவின் ஏராளமான சொல்லாட்சிகளில் எனக்கு உவகை இருந்தாலும் அந்த நடையில் பெரிய மயக்கமில்லை. நான் அவரில் முக்கியமாக நினைப்பது அவரது கதைகள் சாதாரண வாழ்க்கைக்குள் இருந்து ஆழமான அக உலகம் ஒன்றை உருவாக்கி எடுப்பதைத்தான். கனவுபோல, தொன்மங்கள் போல அவை உருவாகிவரும் கணங்களில் தமிழின் சாதனைச்சிறுகதைகள் உருவாகியிருக்கின்றன.
ஆனால் ஒருகட்டத்தில் அந்த அகதரிசனத்தையும் ஒருவகை பக்திப்பிரசங்கமாக அவர் மாற்றிக்கொண்டார். சில கலைஞர்களின் இயல்பு அது. அவர்கள் தங்கள் அறிவையும் திறனையும் மீறி எழுந்து பெரிய விஷயங்களைத் தொட்டுவிடுகிறார்கள். சின்னக்குழந்தைகள் மகத்தான அர்த்தமுள்ள கனவுகளைக் கண்டுவிடுவதுபோல. அவற்றை அவர்கள் விளக்க ஆரம்பித்தால் தெரியும் அவர்களுக்கும் அதற்கும் சம்பந்தமில்லை என. ஜனனி,தரிசனி என்றெல்லாம் கதைகளை எழுத ஆரம்பித்த காலகட்டத்தில் லா.ச.ரா அவரது அற்புதமான கனவுலகை அம்பாள்பக்தியாக அவரே விளக்க ஆரம்பித்திருந்தார்.
நான் சென்னையில் ஒருமுறை லா.ச.ராவைக் காணச்சென்றேன். அவரது புத்தகம் ஒன்றில் அந்த முகவரி இருந்தது. அம்பத்தூரில் அதை என்னால் கண்டுபிடிக்கமுடியவில்லை. அது போதாது என்று தெரிந்து திரும்பிவிட்டேன். பொதுவாக எழுத்தாளர்களைச் சந்திப்பதில் எனக்கு தீவிரமான ஈடுபாடு கிடையாது. எழுத்தாளர் அல்லாதவர்களைத்தான் நான் விரும்பிச்சென்று சந்தித்துவந்தேன். லா.ச.ராவை நான் விரும்பினால் சந்தித்திருக்கமுடியும். ஆனால் தட்டிப்போயிற்று
பலவருடங்களுக்குப் பின்னர் ஒரு சங்கடமான தருணம் ஏற்பட்டது. என்னுடைய நூல்வெளியீட்டு விழா ஒன்றுக்கு லா.ச.ராவைக் கூப்பிடலாம் என்று நண்பர் செந்தூரம் ஜெகதீஷ் சொன்னார். ‘எனக்கு லா.ச.ராவை நல்லாவே தெரியும், வருவார். நாம வண்டி மட்டும் ஏற்பாடு செஞ்சு குடுத்தாப்போதும்’ என்றார். நான் அவ்விழாவுக்கு லா.ச.ரா வருவதை ஒரு பெரும் கௌரவமாக எண்ணினேன். செந்தூரம் ஜெகதீஷ் சொன்னதை நம்பி நாங்கள் லா.ச.ரா பெயரை அழைப்பிதழில் போட்டோம்.
செந்தூரம் ஜெகதீஷ் லா.ச.ராவிடம் தொலைபேசியில் பேசிக் கூட்டத்துக்கு வரமுடியுமா என்று கேட்டிருக்கிறார். வருகிறேன் என்று லா.ச.ரா சொல்லவும்செய்திருக்கிறார். ஆனால் சுத்தமாக எல்லாவற்றையும் மறந்துவிட்டார். விழாவன்று மதியம் நான் அவரைத் தொலைபேசியில் அழைத்தேன். வண்டி அனுப்புகிறேன் என்றபோது ‘என்ன விழா?’ என்று லா.ச.ரா கோபமாகக் கேட்டார். நான் சொன்னேன். ‘இதோபாருங்கோ நான் வயசானவன். முடியாம இருக்கேன்…எங்கிட்ட கேக்காம நீங்களே எப்டி என் பேரைப் போடலாம்? இதெல்லாம் நன்னா இல்லை’ என்று திட்டினார்
நான் பதற்றமாக ’இல்லை சார்… உங்க கிட்ட பேசியிருக்கோம்…நீங்க ஒத்துக்கிட்டபிறகுதான்…’ என்றேன். ‘யார் பேசினா? நீங்க பேசினேளா?’ என்றார் அவர். ‘இல்லை…என் நண்பர் பேசினார்…’. ‘எங்கிட்ட அப்டி யாருமே பேசல்லை…நான் யார்ட்டயும் வர்ரதா சொல்லவுமில்லை’ என்றார். எனக்கு என்ன பேசுவதென்று தெரியவில்லை. ’கார் அனுப்பிச்சிடறோம் சார்’ என்றேன். ‘கார் அனுப்பினா வந்திருவான்னு நெனைக்கிறேளா? என்ன பேசறேள்:”
‘உங்களுக்கெல்லாம் ரைட்டர்னா ஒரு எளக்காரம். கூப்பிட்டா வந்திருவான்னு ஒரு நெனைப்பு. ஒரு மரியாதை வேணுமில்ல? என்ன நினைச்சிட்டிருக்கீங்க? நான் வயசானவன்…நடக்க முடியாது. நீங்க பாட்டுக்கு எங்கியாச்சும் கூட்டிண்டுபோய் விட்டுட்டேள்னா நடுத்தெருவிலே நிக்கணும்…’ அவர் சொல்லிக்கொண்டே போனார். நான் ‘சார், நான் உங்க பெரிய வாசகன். உங்களோட எல்லா எழுத்தையும் வாசிச்சவன். உங்க மேலே உள்ள மரியாதையினாலேதான்..’ என ஆரம்பிக்க அவர் காதிலேயே போட்டுக்கொள்ளாமல் ‘போனை வைங்கோ’ என்று சொல்லிவிட்டார்.
அந்த விழாவில் லா.ச.ரா கலந்துகொள்ளவில்லை. அவருக்கு உடம்புசரியில்லை என மேடையிலே சொன்னோம், எவரும் அதைத் தனியாகக் கேட்கவுமில்லை. மறுநாளே லா.ச.ராவை நேரில்சந்தித்துப் பேசவேண்டுமென ஆசைப்பட்டேன். முடியவில்லை, நான் உடனடியாகத் திரும்பவேண்டியிருந்தது. மறுமுறை சென்னைசென்றபோது அவரது விலாசத்தை தினமணி சிவக்குமாரிடம் விசாரித்து அறிந்து நேரில் சென்றேன்.
நான் சென்றபோது லா.ச.ரா சாய்வுநாற்காலியில் காலை மேலே தூக்கி வைத்துக்கொண்டு அமர்ந்து வாசித்துக்கொண்டிருந்தார். வாசித்துக்கொண்டிருந்த நூல் அபிதா. அவரே எழுதியது. சுந்தர ராமசாமி முன்பு வேடிக்கையாகச் சொல்லியிருந்தார் ‘லா.ச.ரா வெரோசியஸ் ரீடர், அவர் எழுதின புக்ஸை மட்டும்’ என்று. கண்கூடாகக் கண்டபோது என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை. புன்னகையுடன் ‘வணக்கம்’ என்றேன். ‘நமஸ்காரம். வாங்கோ’ என்றார்.
நான் தேடிவந்ததில் அவருக்கு மிகுந்த மகிழ்ச்சி என்று தெரிந்தது. சிவக்குமார் பெயரைச் சொன்னதும் அடையாளம் தெரிந்துகொண்டார். ஆனால் என்னையும் பத்திரிக்கையாளன் என எண்ணிக்கொண்டார். நான் அவரைப் பேட்டி எடுக்கவந்திருப்பதாக மனதில் பதிந்துவிட்டது. அப்போது என்னுடைய விஷ்ணுபுரம், பின்தொடரும் நிழலின் குரல் உட்பட பெரிய நூல்களெல்லாம் வந்து பரவலாகப் பேசப்பட்டுக்கொண்டிருந்தேன். லா.ச.ரா என்னைப்பற்றிக் கேள்விப்பட்டதேயில்லை. நான் என்னை நாலைந்துமுறை எழுத்தாளன் என்று சொன்னதையும் காதில் வாங்கவில்லை. அவர் எனக்கு பேட்டிகொடுப்பதிலேயே குறியாக இருந்தார்.
நான்தான் ’அன்னிக்கு உங்கள விழாவுக்கு கூப்பிட்டது. தப்பா போயிடுச்சு.நான் நேரிலே வந்து கூப்பிட்டிருக்கணும்…’ என்றேன். ‘எந்த விழாவுக்கு?’ என்றார். ‘செந்தூரம் ஜெகதீஷ் கூப்பிட்டாரே’ ‘எந்த ஜெகதீஷ்?’
சரிதான் என்று அந்தப் பேச்சை அப்படியே விட்டுவிட்டேன். நான் அவரை மதிக்கவில்லை என்ற எண்ணத்தைப் போக்கவேண்டும் என்று மட்டும்தான் என் திட்டம். ‘சார், நான் உங்க எழுத்துக்கள் எல்லாத்தையும் வாசிச்சிருக்கேன்’ என்றேன்.
‘என் எழுத்தா? நான் ஒண்ணுமே எழுதலையே’’ என்றார். எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. ‘நான் ஒண்ணுமே எழுதறதில்லை…அவ எழுதறா. நான் அவ கையிலே பேனா. பேனாவுக்குத் தெரியுமோ பாஷையும் சாகித்யமும்? எழுதறது அவள். எழுத்துக்கு முன்னாடி கண்ணா மாறி நிக்கிறதும் அவள். நடுவிலே நீ நான் இது அதுன்னு என்னென்னமோ கோலங்கள். என்னென்னமோ பாவங்கள்’ அவரது நடையை அவரே மனப்பாடம் செய்து பேசுவதுபோலிருந்தது.
‘சிந்தாநதியிலே உங்க சின்னவயசு பற்றி எழுதியிருந்தீங்க?’ என ஆரம்பித்தேன். ‘எது சின்ன வயசு? எத்தனை ஜென்மாக்களை சேர்த்து நமக்கு வயசாகிறது? எத்தனை வயசானாலும் அன்னைக்கு நாம் குழந்தைகள் இல்லை என்றாகுமா?’
நான் அதை லாகவமாக வளைத்து எளிமையாகக் கொண்டுசெல்ல முயன்றேன். ‘…வீட்டிலே வேற யார் இருக்காங்க?’ .’யாரெல்லாமோ இருக்காங்க…அகத்தில் இருக்கிறதனால அகம். அகமுடையாள்னா என்ன? அது அவளன்றி வேறு யார்?’முதிர்ந்து தசை தொங்கும் முகம். முகத்தின் ஒரு பக்கம் சற்றே இழுத்துக்கொண்டது போலிருந்தது. அடர்த்தியான நரைத்த புருவங்கள். புருவநரை காரணமாகத் தன்னை இளம்பெண்கள் கிழம் என நினைப்பதைப்பற்றி அவரது பல கதாபாத்திரங்கள் புலம்புவதுண்டு.
அவரது மனைவி வீட்டில் இருக்கிறார்களா என எண்ணிக்கொண்டேன். அவரது கதைகளில் எப்போதும் எதிர்மறையாகவே மனைவியைச் சித்தரித்திருப்பார். பணத்தாசைகொண்ட, கலையார்வம் இல்லாத, அவரை மதிக்காத , ஆனால் வக்கணையாகப் பேசும் மனைவி. எழுத்தாளர்களின் தன்வரலாறுகளில் இதுதான் சிக்கல். அவர்களின் குடும்பங்களை சம்பந்தப்படுத்திக்கொள்ளாமல் நம்மால் வாசிக்கமுடியாமலாகிறது. ஆனால் எவரும் வெளியே வரவில்லை.
‘எழுத்தும் எழுதுவதும் என்ன? எழுதுவதை எழுதிவிட்டோம் என்று எண்ணிக்கொண்டு இருந்துவிட முடிகிறதா என்ன?’ என்று லா.ச.ரா சொல்லிக்கொண்டே சென்றார். ‘டேய் ராமாமிருதம்..என்னடா நினைச்சிருக்கே? நீ எழுதினதை நீயா சொல்லிண்டிருக்கே?’ என்று எங்கோ சுவரைப்பார்த்துக்கொண்டு உரக்கக் கூவினார்.
இருபதுநிமிடங்களில் நான் கிளம்பிவிட்டேன். சாலார்ஜங் மியூசியத்திற்குள் சென்று திரும்பிய உணர்வு. எங்கே கைநீட்டினாலும் ஒரு தூசடைந்த அலங்காரப்பொருள் தட்டுப்படுவதுபோல. எதையாவது உடைத்துவைத்துவிடப்போகிறேன் என்ற பதற்றம் இருந்துகொண்டே இருந்தது. ‘காபி சாப்பிடுங்கோ’ என்றார். ‘இல்லை…வேண்டாம்’ என்று கிளம்பிவிட்டேன்.
வழியில் நின்று புன்னகை செய்தேன். லா.ச.ரா அந்த சாய்வுநாற்காலியில் படுத்து ஒரு நாற்பது வருடமாகியிருக்கும் என்று தோன்றியது. சிம்மாசனங்கள் வயதாகும்தோறும் பின்னால் சாய்ந்து சாய்வுநாற்காலிகளாகிவிடுகின்றன என்று நினைத்துக்கொண்டேன்.