கம்பனின் காமச்சித்தரிப்பு பற்றி நிறைய நண்பர்கள் கடிதங்கள் எழுதியிருந்தார்கள். பலர் கம்பராமாயண நூல்களைப்பற்றிக் கேட்டிருந்தார்கள். அதைப்பற்றி விரிவாகவே ஒரு நூல் எழுதலாம் என்று சொன்னார்கள். கம்பன் தமிழில் வள்ளுவருக்கு அடுத்தபடியாக மிக அதிகமாகப் பேசப்படும் படைப்பாளி. நூலகங்களில் கம்பராமாயண ஆராய்ச்சிகள் நிறைந்து கிடக்கின்றன. பொதுவாக கம்பன் குறித்த புலமை வெளிப்பாடுகள், கம்பனை சார்ந்து வெளிப்படுத்தப்படும் பக்தி ஆகியவற்றில் எனக்கு ஆர்வமில்லை. கம்பனை கவிஞனாக மட்டுமே காணும் நோக்குகளுடனேயே எனக்கு உடன்பாடு.
நான் வைத்திருக்கும் கம்பராமாயணப் பதிப்புகள் இரண்டு. மர்ரே ராஜம் பதிப்பித்த பழைய கம்பராமாயண பதிப்பு பிழையற்றது. எழுத்தாளர் பி.ஏ.கிருஷ்ணனின் தந்தை பக்ஷ¢ராஜ அய்யங்கார் அதில் பங்களிப்பாற்றியிருக்கிறார். இப்போதைக்கு மிகச்சிறந்த பதிப்பு கோவை கம்பன் அறநிலை வெளியிட்டுள்ள கம்பராமாயணம். முதன்மைபதிப்பாசிரியர் அ.ச.ஞானசம்பந்தம். உரையாசிரியர் அ.அ.மணவாளன். [மணி மேல்நிலைப்பள்ளி வளாகம் 88 நேதாஜி சாலை பாப்பநாயக்கன் பாளையம் கோவை.641007] பெரும் புகழ் பெற்ற வை.மு.கோபாலகிருஷ்ணமாச்சாரியார் பதிப்பு சமீபத்தில் மீண்டும் வெளிவந்துள்ளது என்று சொன்னார்கள்.
முன்னாள் சபாநாயகர் பி.ஜி.கருத்திருமன் கம்பராமாயணத்தின் சிறந்த பாடல்களை மட்டும் தெரிவுசெய்து அதனூடாக ஒரு கதையோட்டத்தையும் உருவாக்கி அமைத்த கம்பராமாயணம் முதல்கட்ட வாசகர்களுக்கு ஏற்றது.மறுபதிப்பு வந்துள்ளதா தெரியவில்லை.
*
இன்றும் கம்பன் வழியாக காமத்தைக் கண்டுகொண்டு சென்றேன். பெருங்காவியங்களில் காமமும் [சிருங்காரம்] வீரமும் மேலோங்கித்தெரியும் சுவைகளாக இருப்பதைக் காணலாம். அடித்தட்டில் துயரம் [கருணம்] ஓடிக் கொண்டிருக்கிறது. காவிய முடிவில் அனைத்தையும் தன்னில் அடக்கிக் கொண்டதாக அமைதி அல்லது நிறைநிலை [சாந்தம்] உருவாகிவரவேண்டும் என்பது நம் மரபு. கம்பராமாயணம் அந்த விதிகளுக்கு உரைகல்லாக அமையும் க்கம்.
அனைத்தையுமே உன்னதபப்டுத்துவது காவியங்களின் இயல்பென்பதனால் காப்பிய காமம் என்பது ஒருபோதும் இயல்பான மானுட வெளிப்பாடாக இருப்பதில்லை. அது முதலில் மனித உள்ளங்களில் காமம் நிகழும் விதத்தின் உச்சத்தை நோக்கிக் நம்மைக் கொண்டுசெல்கிறது. அனைத்து நுண்தருணங்களும் தொட்டுக்காட்டப்பட்டு, மேலும் மேலும் என கவிச்சொற்கள் எழுகின்றன. அதன்பின் காமம் ஒரு கருத்துநிலையாக அருவமாக்கப்படுகிறது. கம்பனில் காமம் கொண்டோர் இன்றியே காமம் தன்னளவில் ஒரு பேரிருப்பாக வெளிப்படும் தருணங்களைப் பார்க்கலாம்
அதன்பின் காமம் ஒரு பெரும் படிமமாக மெல்ல மெல்ல மாறுகிறது. உடலும் உடலும் கொள்ளும் ஈர்ப்பு என்ற நிலைவிட்டு இரு உள்ளங்கள் இணைவதற்கான துடிப்பாக மாறுகிறது. தன்னை அழித்து பிறிதுடன் கலப்பதற்கான மானுட இச்சையாக மாறுகிறது. தன்னைச்சுற்றியுள்ள இயற்கையுடனும் வாழ்க்கையுடனும் இணைந்து கொள்ளூம் பேராவலின் வெளிப்பாடாகிறது. கம்பனில் பெரும்பாலும் காமம் என்பது வாழ்வின்மீதான பெருங்காதலின் அடையாள வெளிப்பாடாகவே உள்ளது.
அந்நிலையில் எல்லாச் சித்தரிப்புகளிலும் காமம் கலந்துவிடுகிறது. ஒரு நகரத்தெருவைச் சித்தரித்தாலும் சரி, வயல்வெளிகளையோ காட்டையோ காட்டினாலும் சரி, அது காமம் கவும் வெளிப்பாடு கொள்கிறது. பசித்த நாய்க்குட்டிகளுக்கு உரிய பேராவலுடன் கம்பனின் கற்பனை வாழ்க்கை மேல் பாய்ந்து விழுந்து திளைப்பதை, தன்னிலையழிவதை, அக்கவிதைகளில் காண்கிறோம்.
பளிக்கு வள்ளத்து வாக்கும் பசுநறுத்தேறல் மாந்தி
வெளிப்படும் தகைய ஆகி வெறியன மிழற்றுகின்ற
ஒளிப்பினும் ஒளிக்க ஒட்டா ஊடலை உணர்த்துமாப்போல்
களிப்புனை உணர்த்தும் செவ்விக் கமலங்கள் பலவும் கண்டார்
மிதிலைக் காட்சிப்படலம். விஸ்வாமித்திரன் துணைவர நகர் நுழைந்து செல்லும் நம்பியும் தம்பியும் கண்ட நகரத்தெரு. தெருவோரம் மலர்ந்த தாமரைகளைக் கண்டார்கள். தமிழ் இலக்கண மரபுப்படி அதில் தற்குறிப்பேற்ற அணியை அமைக்கிறார் கம்பர். பளிங்குக் கிண்ணத்தில் ஊற்றபட்ட தூய மதுவை அருந்தி வெறுஞ்சிரிப்பும் போதைப்பிதற்றலுமாக ஒளித்துவைத்தாலும் ஒளிக்க முடியாத ஊடலையும் களிப்பினையும் வெளிப்படுத்தும் தாமரைகள்!
செவ்வியல் கவிதைகளில் அணிகளை அலங்காரங்களாக, நயங்களாக மட்டுமே எடுத்துக் கொள்வது வழக்கமான முறை. இன்றைய வாசகன் அவற்றை கவிப்படிமங்களாக எடுத்துக் கொள்ள வேண்டும். பழைய முறையில் மரபாக எந்தப்பொருள் கொள்ளப்படுகிறதோ அதே பொருளை எடுத்துக் கொள்வார்கள். நவீன வாசகன் தன் கற்பனையை சிறகு விரிக்கச் செய்து தனக்குரிய பொருளைக் கண்டடைதல் வேண்டும்
கவிதையில் படிமங்களைக் கண்டடைவதற்கான வழி என்பது அவற்றை உடனடியாக காட்சிகளாக மாற்றி அறியமுயல்வதே. படிமத்தின் முதன்மையான தகுதியே அது முதலில் புற உலகில் காணத்தக்க நுட்பமான காட்சியாக இருக்கும் என்பதே.காட்சி என்ற நிலையிலேயே அது அழகானதாக இருக்கும். அதன்மீது ஏறும் அர்த்தம் என்பது அடுத்த நிலைமட்டுமே. புறக்காட்சியாக காண வாய்ப்பில்லாத ஒன்று படிமம் அல்ல– அது கவியுருவகம். [Metaphor]
இளமழைக்குப் பின் குளங்களில் தாமரைகள் இதழ்கள் குலைந்தும், தண்டு குழைந்தும் நிற்பதைக் கண்டு மெல்லிய போதையில் அவை நிற்கின்றன என்று நானே நினைத்ததுண்டு. இதழ்குலைந்த தாமரை மலர் அழகாக உடுக்கப்பட்ட பட்டுப்புடவை அதன் மடிப்புகள் கலைந்து விரிந்திருப்பதைப்போலவே தோன்றும். குமரிமாவட்டத்தில் குமாரகோயில் முதல் பார்வதிபுரம் வரை பேருந்தில் செல்பவர்கள் சாதாரணமாகக் கண்டுணர வாய்ப்புள்ள அனுபவம்தான் இது.
நீர்த்துளிகள் நிறைந்த தாமரை இதழள் மதுவுண்ட செவ்வுதடுகளா என்ன? அல்லது இமை சரிந்த ஈர நீலக்கண்களா? வெறியன மிழற்றும் இதழ்களின் வளைவா மலரிதழ்களின் சரிவுகள்? ஒளிப்பினும் ஒளிக்க முடியாத ஊடலையும் உவகையும் வெளிப்படுத்தும் காமம் ததும் மலர்கள் அலைததும்புகையில் மெல்ல தள்ளாடுவதைக் காண முடிகிறது.
மெய்வரு போகம் ஒக்க உடனுண்டு விலையும் கொள்ளும்
பையரவு அல்குலார்தம் உள்ளமும் பளிங்கும்போல
மையரி நெடுங்கண் நோக்கம் படுதலும் கருகி
கைபுகின் சிவந்து காட்டும் கந்துகம் பலவும் கண்டார்.
பரத்தையரைச் சொல்லாமல் கம்பன் நகர முடியுமா என்ன? உடல்அளிக்கும் இன்பங்களை எல்லாம் உடன் இருந்து துய்த்து அதற்கு டவனிடமே விலையும் பெறும், பாம்புப்பத்திபோன்ற அல்குல் கொண்ட, பெண்டிர் பளிங்குப் பந்துகள் உருட்டி டுவதைக் கண்டார்கள். அவர்களின் உள்ளம் போலவே பந்தும் செல்லிடம் சேர்ந்து நிறம் பெற்றது. குறிப்பார்க்க கண்ணெதிரே செல்லும்போது விழிக்கருமை, உருட்டுவதற்கு கையில் எடுக்கும்போது கையின் செம்மை.
பரத்தமையின் இழிகுணமாக எப்போதும் சொல்லப்படுவதையே அவர்களின் எழிலாகவும் ஈர்ப்பாகவும் எண்ணிக் கொண்டாடுகிறது கம்பனின் கவிதை. நிலையில்லாத குணம். இடத்துக்கு ஏற்ப மேற்கொள்ளும் பாசாங்கு. காமம் அக்குணங்களிலும் தன் களியாட்டத்தைக் கண்டுகொள்கிறது.
பங்கயம், குவளை, ஆம்பல், படர்கொடி வள்ளை, நீலம்
செங்கிடை ,தரங்கம், கெண்டை, சினைவரால் இனைய தேம்ப
தங்கள் வேறு உவமை இல்லா அவயவம் தழுவி சாலும்
மங்கையர் விரும்பி டும் வாவிகள் பலவும் கண்டார்
தாமரைமலர், குவளைமலர் ,ஆம்பல்பூகக்ள் ,கொடி படரும் வள்ளை, நீலோத்பலம், செங்கிடையின் சடைத்திரிகள், நீலநீரலைகள்,கருங்கெண்டைமீன்கள், சினை கொண்ட வரால் மீன்கள் இன்னும் பலவும் நிறைந்த குளங்களில் அழகியர் நீராடுகிறார்கள். அவர்களின் உடலுறுப்புகளுக்கு தாங்கள் ஈடாக முடியாததை எண்ணி ஒவ்வொன்றும் வருந்தின. ஒவ்வொன்றும் பெண்ணுடலில் எதற்கு உவமையென எண்ணி மேலும் கற்பனை விரிக்கும் இளைஞனின் கண்களுடன் எழுதப்பட்ட கவிதை இது.
அவன் கண்களுக்கு அக்குளத்திலுள்ள பிற அனைத்துமே பெண்களின் அழகுகள் தனித்தனியாகப் பிரிந்து குளமெங்கும் படர்ந்து விரிந்ததாகவே தெரிகின்றன போலும். அக்குளமே பெண்மையழகை ஒரு கோப்பையென ததும்பத் ததும்ப நிரப்பி வைத்திருக்கிறது.
வாசிக்கையில் இன்னொரு நுண்ணிய வரி இக்கவிதைக்கு மேலும் அழகு சேர்க்க்கிறது. ‘தங்கள் வேறு உவமை இல்லா அவயவம் தழுவி’. நீராடும் பெண்டிர் தங்கள் இணையில்லாத உறுப்புகளை தாங்களே தழுவிக் கொண்டு நீராடுகிறார்கள்! நம் நீர்நிலைகளில் எப்போதும் காணும் காட்சி இது. நீராடுகையில் பெண்கள் தங்கள் தோள்களை தாங்களே அணைத்துக் கொண்டும் மார்புகளை இறுக்கிக் கொண்டும் மூழ்கி எழுகிறார்கள்! தங்கள் உடல் மீது கொண்ட பற்று. அல்லது மிக நுண்மையான ஒரு தன்னுணர்வு. அதற்குக் காரணம் குளமெங்கும் நிரம்பியிருக்கும் ஆண்களின் கண்கள்.
என்ன ஒரு மாய்மாலம். நகர் புகுந்த அவர்கள் கண்டது பெண்களை அல்ல, கமலமும், கந்துகமும், வாவிகளும் மட்டும்தான்.பாவனைகள் பேரழகு பெறும் உளநிலம் என்றால் அது காமம்தான். முடிவில்லாத பொய்கள் வழியாக அழகு பெறும் உண்மையே காமம் . காண்பவற்றில் எல்லாம் காட்சியளிப்பதும் தானோ பிறிதாகத் தோற்றம் தருவதும் காமம்தான். காமத்தின் அலகிலா விளையாட்டைச் சென்று தொட கவிதையின் அலகிலா நடனத்தால் மட்டுமே முடியும்.