அன்புள்ள ஜெ அவர்களுக்கு
எங்கள் உறவுக்கார பாட்டி இறந்த பின் , அவரை பற்றி நான் கேள்விபட்டது ஒரு முறை காந்தி அடிகளை காண சென்ற போது காந்தி கேட்டு தன் வளையல்களை கழற்றி தந்தார் என்பது. இது போல் சம்பவம் உங்கள் கட்டுரை ஒன்றிலும் படித்தேன். காந்தி அவர்கள் குறிப்பாக நேரு அவர்களையம் மற்ற பணக்கார காங்கிரஸ் காரர்களை ஏன் விட்டு வைத்தார் ?
அரசியலில் தனி மனித வாழ்கை, பொது மனித வாழ்கை என்று பிரித்து பாராதவர் காந்தி. அதனாலேயே இந்த வினா.
அன்புடன்
யுகந்தர்
அன்புள்ள யுகாந்தர்,
உங்கள் கேள்வியில் உள்ள குழப்பங்களுக்குச் சாதாரணமாக அக்கால வாழ்க்கைவரலாறுகளை வாசித்தாலே பதில் கிடைத்துவிடும்
காந்தி இந்தியாவில் உள்ள அனைவரிடமும் ஒரே விஷயத்தைத்தான் சொன்னார். நாட்டுக்காக சொந்த செலவங்களை துறந்து கிளம்பி வாருங்கள் என்ற அறைகூவல் அது. தன் திட்டங்களுக்கான நிதிக்காக அவர் பெண்களிடம் நகைகளை கேட்டார்.
இந்த அறைகூவலை ஏற்றுக்கொண்டு பல லட்சம் பேர் அனைத்தையும் துறந்து அவரிடம் சென்று சேர்ந்தார்கள். பல லட்சம் பெண்கள் தங்கள் நகைகளை கழற்றிக்கொடுத்தார்கள். ஆனால் அவர் எவரையும் கட்டாயப்படுத்தவில்லை. அதை ஒரு நிபந்தனையாக ஆக்கவில்லை. அதை ஒருவகை மனமாற்றமாக, ஆன்மீகத்திருப்புமுனையாகவே அவர் முன்வைத்தார்.
காங்கிரஸில் அன்று காந்திக்கு பின்னால் சென்ற தலைவர்களில் பெரும்பாலானவர்கள் பிறப்பால் செல்வமும் கல்வியும் கொண்டவர்களாகவே இருந்தார்கள். அவர்கள் அவற்றை துறந்துதான் காந்திக்குப்பின்னால் சென்றார்கள். அவர்கள் எவரும் காங்கிரஸில் பணியாற்றியபோது பெரும் செல்வத்துடன் வாழ்ந்தவர்கள் அல்ல.
நேருவும் பட்டேலும் ராஜாஜியும் ராஜேந்திரபிரசாதும் எல்லாம் பெரும் செல்வத்தையும் வெற்றிகரமான தொழிலையும் துறந்துதான் சென்றார்கள். அவர்கள் மிகமிக எளிமையான வாழ்க்கையையே வாழ்ந்தார்கள்.சொத்து சேர்க்கவோ செல்வத்துக்கு உடைமையாளர்களாகவும் இருக்கவோ இல்லை.
நேரு தன்னுடைய குடும்பச் செல்வத்தை முழுமையாகவே காங்கிரஸுக்குக் கொடுத்துவிட்டுத்தான் காந்தியிடம் சென்றார். காங்கிரஸ்கமிட்டி கொடுத்த மிகச்சிறு தொகைக்குள்தான் அவர் வாழ்ந்தார். அவரது சரிதைகளில் மட்ட்மல்ல, அவரை மிகக் கறாராக அணுகி எழுதப்பட்ட எம்.ஓ.மத்தாய் போன்றவர்களின் சுயசரிதைகளிலேயே கூட இதைக் காணலாம்.
நேரு இன்று உருவாக்கப்படும் பிம்பங்களுக்கு நேர்மாறாக மிகமிக எளிமையான தனிவாழ்க்கை கொண்டவர். அவருக்கு உணவு, தங்குமிடம் போன்ற ஆடம்பரங்களில் பெரிய நாட்டமிருந்ததில்லை. இலக்கியவாதிகள் அறிஞர்களுக்குரிய மன அமைப்பு கொண்டவர். அழகு அவர்களுக்கு முக்கியம், ஆனால் போகம் முக்கியமல்ல.
ஒரு கட்டத்தில் நேருவுக்கு பயணங்களுக்கும் அன்றாட அலுவல்களுக்கும் காங்கிரஸ் பணம் அளிக்கமுடியாத நிலை ஏற்பட்டது. அவர் காங்கிரஸின் முக்கியமான தலைவர்களில் ஒருவராக ஆனபிறகு இந்நிலை. ஏதாவது இதழ்களில் வேலைக்குச் செல்லலாம் என்று நேரு நினைத்தார். அவருக்கு வேலைதர இதழ் ஒன்று சம்மதித்தது. காந்தியிடம் ஆலோசனை கேட்டார். எவருக்காவது பகுதிநேர டியூஷன் எடுக்கலாமென காந்தி ஆலோசனை சொன்னார். ஆனால் நேருவால் அது முடியவில்லை.
இந்தநிலையில்தான் அன்று எல்லா காங்கிரஸ்காரர்களும் இருந்தார்கள். நேரு இந்தியப்பிரதமாரக ஆனபின்னரும்கூட நடுத்தர வாழ்க்கையே வாழ்ந்தார். அவரது முக்கியமான வருமானமாக இருந்தது அவர் எழுதிய நூல்களின் வெளிநாட்டுப்பதிப்பகங்கள் வழியாக கிடைத்த பதிப்புரிமை தொகைதான். அதிலும் பெரும்பகுதியை அவரது தங்கை விஜயலட்சுமி பண்டிட் பிடுங்கிச்செலவழிப்பதைக் காணலாம். அவரது பெண் தொடர்புகள் உட்பட எல்லாவற்றையும் பிய்த்து பிடுங்கி முன்னால் வைக்கும் எம்.ஓ.மத்தாய்தான் அதையும் சொல்கிறார்.
ராஜேந்திரப்பிரசாத் இந்திய ஜனாதிபதியாக இருந்தபோது தனக்கு வரும் ‘அலவன்ஸுகளை’ மிச்சம் பிடித்து பேரப்பிள்ளைகள் பேரில் நிரந்தர வைப்பு நிதி ஒன்றை ஆரம்பித்தார். இது ஒரு பெரிய முறைகேடாக அன்று பேசப்பட்டிருப்பதை எம்.ஓ.மத்தாயின் நூலில் காண்கிறோம். இன்று இதேபோன்ற நிகழ்வுகள் அம்மனிதர்கள் எந்த அளவுக்கு எளிமையாக வாழ்ந்தார்கள் என்பதற்கான சான்றுகளாகவே உள்ளன.
இந்தியாவை ஆண்ட காங்கிரஸ் அரசியல்வாதிகளில் அனேகமாக அனைவருமே உடைமையற்றவர்களாகவே இருந்தனர். சிறிய அளவில் உடைமை இருந்தவற்றைக்கூட அவர்கள் பொதுச்சொத்தாக ஆக்கினார்கள். ராஜாஜியோ, டாக்டர் ராதாகிருஷ்ணனோ, மௌலானா அபுல்கலாம் ஆசாதோ, காமராஜரோ , இ.எம்.எஸ்ஸோ சொத்து எதையும் விட்டுச்சென்றவர்களல்ல.
இந்திராகாந்தியும் அந்த மரபில் வந்தவராகவே இருந்தார். அதிகபட்சம் ஓர் உயர்நடுத்தர வர்க்கத்து வாழ்க்கையையே அவர் வாழ்ந்தார். அவரது வீடு அலுவலகம் உடைகள் என அனைத்துமே சாதாரணமாகத்தான் இருந்தன.
எங்கே இந்த நிலை மாற ஆரம்பித்தது? எழுபதுகளுக்குப்பின்னர்தான் என்பது என் மதிப்பீடு. அதற்குக் காரணம் நம் தேர்தல்முறையும் அதையொட்டிய நம் அரசியலும் மாறியதுதான். சுதந்திரம் கிடைத்த கால்நூற்றாண்டுக்குள் இந்தியாவில் மிகப்பெரிய அதிகார அரசியல் ஆட்டம் ஆரம்பித்தது. அதில் பெரும் வணிகநிறுவனங்களும் பெருமுதலீட்டாளர்களும் பங்கெடுக்க ஆரம்பித்தனர். வேறுவழியே இல்லாமல் இந்தியஅரசியல் பணத்தால் தீர்மானிக்கப்படுவதாக ஆகியது.
இந்த மாற்றத்தின்விளைவாக ஒவ்வொரு அரசியல் கட்சியும் பெரிய அளவில் நிதியை இறக்கித்தான் அரசியலை ஆடவேண்டிய கட்டாயம் உருவானது. அந்த நிதியை ஆட்சியாளர்கள் சேர்த்தாகவேண்டியிருந்தது. அதற்காக அவர்கள் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தவேண்டியிருந்தது. உயர்மட்ட ஊழலின் மூலக்காரணம் இதுவே. உயர்மட்ட ஊழலே கீழ்மட்ட ஊழலை உருவாக்கி வளர்த்து பேணுகிறது.
இப்படி ஊழலும் ஆட்சியும் பிரிக்கமுடியாதபடி ஆனதன் விளைவே இந்திராகாந்தியின் ஆளுமையில் உருவான தொடர்சரிவு. நேரு காலம் முதலே கட்சியின் நிதிக்கு முதலாளிகள் பணம் தருவது வழக்கமாக இருந்தது. பட்டேலும் ரஃபி அகமது கித்வாயும் அந்த நிதியை திரட்டுவதை மத்தாய் குறிப்பிடுகிறார். அதற்காக சில சலுகைகள் அவர்களுக்கு காட்டப்படுகின்றன. ஆனால் நேரு அதை கடைசிவரை அறியாதவராகவே இருக்கிறார்.
அங்கே தொடங்கிய அந்தப்போக்கு மெல்லமெல்ல வளர்ந்தது. அரசின் பெருந்திட்டங்களில் அந்த ஊழல் பரவியது. இந்திராகாந்தியின் ஆட்சிக்காலத்தில்தான் ராணுவபேரங்களில் ஆளும்கட்சி லாபம் பார்க்கும்போக்கு ஆரம்பமாகியது. சஞ்சய்காந்திதான் அதன் காரணகர்த்தா என்கிறார்கள்.
அங்கிருந்து தொடங்கி வளர்ந்து வந்த ஒரு காங்கிரஸையே நீங்கள் பார்க்கிறீர்கள். அதன் தொடக்கப்புள்ளியாக நீங்கள் நேருவை நினைக்கிறீர்கள். நேருவை மட்டுமல்ல இந்திராவைக்கூட அதைவைத்து மதிப்பிடுவது பிழையானது.
ஆனால் இந்த நிலைக்கான தொடக்கம் நேரு -அம்பேத்கர் வடிவமைத்த இந்திய அரசமைப்பிலேயே இருக்கிறதென நான் நினைக்கிறேன். எல்லா அதிகாரங்களையும் அரசாங்கத்திடம் குவிக்கும் ஓர் அரசமைப்புமுறையை அவர்கள் கொண்டுவந்தனர். அதை நிர்வாகம்செய்யும் அமைப்பாக காங்கிரஸை மாற்றினர். அதுவே அரசியலை ஊழல்மயமாக்கியது.
அதற்கு மாற்றான ஒருவழியாக காந்தி கடைசிக்காலத்தில் வலியுறுத்திய, ஜெ.சி.குமரப்பா போன்றவர்கள் விளக்கிமுன்வைத்த கிராமநிர்வாகக் கூட்டமைப்பு என்னும் அரசியலமைப்புமுறை இருந்திருக்கக் கூடும்
ஜெ