அன்புள்ள ஜெயமோகன்,
இது நான் உங்களுக்கு எழுதும் இரண்டாவது கடிதம்.
நான் ஆரம்ப வாசகன். நான் படித்தவற்றை பகிர்ந்து கொள்ள, கலந்து ஆலோசனை செய்ய தகுந்த நண்பர்கள் எனக்கு இல்லை. ஆதலால் என் மனதுடனே வெகு நேரம் பேசிக்கொள்வேன்.
சமீப காலமாக அசோகமித்திரன் பற்றிய எண்ணங்கள் என் மனதை அரிக்கிறது.
அசோகமித்திரன் என்ற எழுத்தாளர் தமிழில் எழுதுகிறார் என்று பல பேருக்கு தெரியவில்லை. (புத்தகம் படிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்குக்கூட).
அசோகமித்திரன் பற்றிய கட்டுரைகள் மிகவும் குறைவாகவே வெளிவருகிறது. அவருடைய படைப்புகளை பற்றி மிகவும் சில விவாதங்களே நடக்கிறது. அவருக்காக நடக்கும் விழாக்களில் மிகவும் குறைவானவர்களே கலந்து கொள்கிறார்கள். அவருடைய புத்தகங்கள் பலருக்கு சரியாக கிடைக்கப்பெறவில்லை (2012 சென்னை புத்தக கண்காட்சியில் அவர் புத்தகங்களை தேடி அலைந்ததை வைத்து சொல்கிறேன்). அவர் எழுதிய மொத்த சிறுகதைகளையும், நாவல்களையும் பட்டியலிட ஒரு வலைதளம் இல்லை. அவரை பற்றிய ஆவணப்படம் இணையத்தில் கிடைக்கப்பெறவில்லை.
ஒரு கட்டுரையில் அசோகமித்திரன் சந்திப்பு அனுபவங்களை பகிர்ந்தீர்கள். அதில் அவர் நோபல் பரிசு பெற தகுதியானவர் என்று சொல்லியிருந்தீர்கள். எனக்கு மிகவும் மகிழச்சி அளித்தது. உங்கள் வீட்டு அறையில் இரண்டு புகைபடங்கள் மட்டும் உண்டு என்று ஒரு பேட்டியில் கூறினீர்கள். ஒன்று அசோகமித்திரனுடையது, இன்னொன்று காந்தியினுடையது. இந்த பேட்டி பார்க்கும் முன்னமே அசோகமித்திரனுடைய பெரிய புகைப்படத்தை நான் கட்டவிருக்கும் புது வீட்டில் வைக்க வேண்டும் என்று தீர்மானித்திருந்தேன். (He is role model for life)
அசோகமித்திரன் படைப்புகள் ஏற்படுத்திய என்னுடய மன அதிர்வுகளை உங்களின் எழுத்துக்கள் வழியாக பார்க்க எனக்கு ரொம்ப ஆசை. மற்றும் உங்கள் கட்டுரைகளின் மூலம் பலர் அசோகமித்திரன் படைப்புக்களை வாசிக்க நேரலாம்.
அசோகமித்திரன் பற்றிய ஒரு கட்டுரை தொகுப்பை நான் உங்களிடமிருந்து எதிர்பார்கிறேன். அதற்காக காத்திருக்கிறேன்.
நன்றி,
பாலா
அன்புள்ள பாலா,
அசோகமித்திரன் மீதான உங்கள் ஈடுபாடு மகிழ்வளிக்கிறது. சிலவருடங்கள் தொடர்ந்து வாசிக்க, பயணம் செய்ய தேவையான அளவுக்கு அவர் எழுதியிருக்கிறார். நர்மதா பதிப்பகமும் கிழக்கு பதிப்பகமும் அவரது படைப்புகளை நிறையவே வெளியிட்டிருக்கின்றன
அசோகமித்திரன் அனைவருக்குமான எழுத்தாளர் அல்ல. அவரது மிதமான எழுத்து கூர்ந்த வாசகர்களையே சென்றடைய முடியும். அத்துடன் அவரது எழுத்தின் உலகம் புற அளவில் பெருநகர் வாழ்க்கை என்ற சிறிய எல்லைக்குள் அடங்குவது. ஆகவே அவரை பொதுவாசகர்கள் அதிகமாக விரும்புவதில்லை. உண்மையில் அவர் இன்றுதான் இவ்வளவு வாசகர்களுடன் இருக்கிறார்.
அவரைப்பற்றி நான் அவ்வப்போதாக நிறையவே எழுதியிருக்கிறேன். அவருக்கு அறுபது வயதானபோது நான் ஒரு மலர் அவருக்காக தொகுத்து வெளியிட்டேன் [கனவு பிரசுரம்] அன்றுமுதல் பல கட்டுரைகள். விரிவான கட்டுரை நவீனத்துவத்தின் முகங்கள் [இலக்கியமுன்னோடிகள் வரிசை] என்ற நூலில் உள்ளது
ஜெ