அன்புள்ள எழுத்தாளருக்கு!
வணக்கம் நலமா?
ஒரு ஏக்கருக்கு விலை பொருளை
விளைவிக்க ஆகும் செலவு விலையைத் தீர்மானிக்க வேண்டும். உற்பத்தி, தேவை
என்ற பொருளாதாரப் புலிகளின் கோட்பாட்டின்படி இருந்தால் விவசாயியின் நிலை
இதுவேதான். தண்ணீர் பாக்கெட்டின் விலை கூட அதன் உற்பத்தியாளனால்
தீர்மானிக்கப்படுகிறது. விவசாயத்தின் மிக முக்கிய பிரச்சினை இதுதான்.
மகாராஷ்டிரா விவசாயிகளைப் போலக் கூட்டமைப்பு இருந்தால் வியாபாரிகளின்
கொட்டத்தை அடக்கலாம். இங்கும் அந்த நிலைமை வரும். கிருஷ்ணகிரியில் அது
நடந்து கொண்டிருக்கிறது. பொருளாதார மேதைகள் ஆள் கூலி Rs. 75/- என்று
அறிக்கையை அனுப்புகிறார்கள். அவர்களுக்கு அது லாபகரமாகவே இருக்கும்!
தண்டபாணி
அன்புள்ள ஜெ.,
வால்மார்ட், டார்கெட் போன்ற பெரு நிறுவனங்கள் சிறுவணிகக் கொள்ளைக் கட்டமைப்பை உடைக்கும் என்பதற்கு நான் நினைக்கும் காரணங்கள்:
1) பிற நாடுகளில் பல மாஃபியாக்களை சமாளித்த அனுபவம் (ஆரம்ப நாட்களில் அமெரிக்கா உட்பட)
2) வினியோக மேலாண்மையில் (supply chain management) அவர்களின் முதல் தரத் திறன்
3) அரசாங்கமே கவிழ்ந்தாலும் பரவாயில்லை என்று காங்கிரஸையே இவ்வளவு தூரம் செயல்பட வைத்தவர்கள், மாஃபியாக்களையும் சமாளிப்பார்கள் என்று நம்பலாம்
4) எல்லாவற்றிற்கும் மேலாக, இவர்கள் தொலைநோக்குப் பார்வை உடையவர்கள். 10 வருடம் கழித்து வரும் லாபத்திற்கும் இப்போதே கணக்குப் போடுவார்கள். விவசாயத்தை அழிய விட்டுவிட்டு வணிகர்கள் வாழ முடியாது என்பது வால்மார்ட்டிற்குத் தெரியும்.
5) ரிலையன்சும், மோர்-ம் branded பொருட்களில் மட்டுமே அதிகக் கவனம் செலுத்துகின்றன. ஆனால், வால்மார்ட் போன்ற ஒரு கம்பெனி இந்தியாவில் non-branded பொருட்களுக்கு இருக்கும் பிரம்மாண்டமான வாய்ப்புகள் தெரியும். இந்த மாஃபியாக்களோடு ஒத்துப்போனால், தானும் இன்னொரு ரிலையன்ஸ் ஃப்ரெஷ்-ஆகக் குறுக்கப்பட்டுவிடுவோம் என்பதும் தெரியும்.
வால்மார்ட் பற்றிய இந்தச் செய்தி நம்பிக்கை அளிப்பதாக உள்ளது:
http://timesofindia.indiatimes.com/business/india-business/US-retail-giant-Walmart-to-source-locally-in-India/articleshow/16746424.cms?
நன்றி
ரத்தன்
திரு ஜெயமோகன்,
கொஞ்சம் புலம்ப விடுங்கள்.
உங்கள் கட்டுரையில் எழுதப்பட்டவற்றைப் பெரும்பாலும் ஏற்றுகொள்கிறேன். எங்கள் குடும்பத்துக்கும் விவசாயத்தில் இருந்து வரும் வருமானமே. திருமணதிற்கு பிறகான நகர வாழ்க்கை எல்லாவற்றையும் கடையில் வாங்க வைத்தது. அரிசி, எண்ணெய், தேங்காய், (எலுமிச்சை, கறிவேப்பிலை உட்பட.) 1990 இல் நான் தேங்காய்க்குக் கடையில் வாங்கும் போது கொடுத்த விலை 6 ருபாய். இப்போது 15 லிருந்து 18 ருபாய் சென்னையில். வியாபாரி எங்களிடம் தேங்காய் எடுக்கும் விலை (இன்றைய விலை) அதிகபட்சம் 6 ருபாய்.
வால்மார்ட் — அடுப்புக்கு பயந்து வாணலியில் விழுந்த கதையாகிவிடாதா? நீங்கள் கூறியிருப்பது போல் உள்ளூர் தாதாக்களின் வலையை வெளியூர் தாதாவை வைத்து அறுக்கலாம்தான். ஆனால் ஒண்ட வந்த பிடாரி காலப்போக்கில் என்ன செய்யும்? வந்தனா சிவா, சாய்நாத் இவர்கள் சொல்வதெல்லாம் முற்றாகப் பொய்யா? கோகாகோலா பற்றி எழுதினீர்கள். Kala Dera, ராஜஸ்தான், பிளாச்சிமடா இரண்டும் கோக் பின்விளைவுகள் தானே. கோக்குக்கெல்லாம் நாம் கொஞ்சமும் சளைத்தவர்கள் இல்லை. ஆறு, குளம் என்று
எல்லாவற்றையும் சாக்கடையாகும் நம்மோடு coke போட்டி போடமுடியாது.
நீங்கள் எவ்வளவு தூரம் கவனித்திருபீர்கள் என்று தெரியவில்லை. சென்னையில் நடைபாதை வியாபாரிகளிடம் சில காய் பழங்களின் விலை குறைவாகவும் சிலவற்றின் விலை அதிகமாகவும், அதே காய் பழங்களின் விலை ரிலையன்ஸ் போன்றவற்றில் அதிகமாகவும் மற்றும் குறைவாகவும் இருப்பதை கவனித்து இருக்கிறேன். ஒன்றில் குறைத்து ஒன்றில் ஏற்றுவதை ஒரு வித்தையாகவே இரு தரப்பும் செய்கிறார்கள். பழமுதிர்கள் அடிக்கும் கொள்ளை கேட்கவே வேண்டாம்.
சென்னை கபாலி கோயில் குளத்தை சுற்றி இருக்கும் நடைபாதை காய்கறி வியாபாரிகளிடம் எப்போதுமே விலை அதிகம். ஆனால் கொஞ்சம் தள்ளி மந்தவெளி நடைபாதைக் கடை போனால் விலை ஓரளவு குறைவு. இது என்ன விதமான விலை நிர்ணயம் என்று தெரியவில்லை. ஆக, இவர்கள் சொல்வது போல், ரிலையன்ஸ் போன்றவையும் நியாயமான விலைக்கு விற்பதில்லை. நடைபாதை வியாபாரிகளும் விற்பதில்லை. முதலில் எங்களைப் போன்ற நுகர்வோருக்கு நியாயமான விலை என்பது பற்றிய விவரமே எப்படி தெரியும்?
அதே போல் சென்னை கபாலி கோயில் குளத்தை சுற்றி இருக்கும் நடைபாதை காய்கறி வியாபாரிகளிடம் பேரம் பேச அதே தரத்துக்கு இறங்க வேண்டும். Intimidation is their tactics to which the spineless middle class easily succumbs to. காய்கறிக்காரன் முறைத்தால், எதிர்ப்பே இருக்காது. காதில் விழாதது போல் சொன்ன விலைக்கு வாங்குவதைப் பார்த்திருக்கிறேன்.
இதே விஷயம் மளிகைப் பொருட்களிலும் உண்டு. நில்கிரிஸ், பிக்பஜார் போன்றவை பெருமளவு வாங்கும்படி மறைமுகமாகக் கட்டாயபடுத்துகின்றன. சிறிய 100 கிராம் அளவில் எவையும் இருக்காது. எல்லாமே குறைந்தபட்சம் அரை கிலோதான். சரி அண்ணாச்சி கடையில் வாங்கலாம் என்றால் அவர்கள் பொருட்களைப் பாதுகாத்து வைத்து இருக்கும் லட்சணம் சாப்பிடவே தோன்றாது.
எவ்வளவுதான் அரசாங்கத்தை விமர்சனம் செய்தாலும், என்னுடைய தேர்வு அமுதம் அங்காடி தான். ஏதோ கொஞ்சம் ஒட்டுமொத்தமாக பில்லில் குறையும். காய்கறி பழங்களுக்குத்தான் வழி தெரியவில்லை. உங்களுடைய கட்டுரையில் கீழ்க்கண்ட பத்திதான் ஆறுதல். அந்த நாளும் வந்திடாதோ?
“இந்தியக் கிராமங்களை ஒருங்கிணைக்கும் ஒரு கூட்டுவினியோக அமைப்பு உருவாக முடிந்தால் இந்தப் பிரச்சினையைத் தாண்டமுடியும். அதற்கான காந்தியப்பொருளியல் சார்ந்த வழிகாட்டல்கள் ஐம்பதாண்டுகளுக்கு முன்னதாகவே ஜெ.சி.குமரப்பா போன்றவர்களால் முன்வைக்கப்பட்டுள்ளன. சந்தைப்பொருளியலுக்குள்கூட அமுல் போன்ற காந்திய அடிப்படைகொண்ட மக்கள்கூட்டமைப்புகள் இந்தப் பிரச்சினையை வெற்றிகரமாக சமாளிக்கமுடியும்.”
ஒரு கேள்வி: IRMA போன்ற கல்விக்கூடங்களின் பட்டதாரிகள் இதற்கு எதாவது வழி சொல்வார்களா?
மங்கை
அன்பு ஜெயமோஹன், வணக்கம். தாங்கள் நடப்பு நிகழ்ச்சிகள் குறித்து எதிர்வினையாற்றுவதில்லை என்பது போல ஒருமுறை குறிப்பிட்டிருந்தீர்கள். ஆனால் சரியான நேரத்தில் சிறுவணிகத்தில் அன்னிய முதலீடு பற்றிய தங்கள் பதிவு மிகவும் துணிச்சலானது. இணையதளத்தில் இதை எழுதுவதற்கும் இன்றைய தமிழ்ச் சூழலில் மிகவும் அசாத்தியமான துணிவு வேண்டும். அறம் சார்ந்த வெளிப்பாட்டினால் மட்டுமே இது சாத்தியம். இந்த அளவு விவசாயிகள் சுரண்டப் படுகிறார்கள் என்பது குறித்து எனக்குத் தெரியாமலிருந்தது. நன்றி.
அன்பு
சத்யானந்தன்
பெருமதிப்பிற்குரிய ஜெமோ அவர்களுக்கு
வணக்கம்.
இன்று தங்கள் வலைத்தளத்தில் மேற்கண்ட தலைப்பில் எழுதிய கட்டுரை மிகச் சிறந்த ‘கண்திறப்பாக’ இருந்தது. நானும் இதுவரை வெளிநாட்டு முதலீடுகளால் நாமும்,நமது விவசாயிகள் மற்றும் சிறுவணிகர்களும் பெரிதும் பாதிக்கப்படப்போகி்றோம் என்றுதான் நினைத்தேன்.ஏனெனில் கடந்த இரு வாரங்களுக்கு முன் ‘துக்ளக்” பத்திரிகையில் இது சம்பந்தமாக இதை ஆதரித்து முன்னாள் அரசு அதிகாரி திரு.முருகன் அவர்களும் அரசின் இந்தச் செயலை எதிர்த்து பொருளாதார வல்லுநர் திரு.குருமூர்த்தி அவர்களும் கட்டுரை எழுதி இருந்தார்கள்.அதில் முருகன் அவர்கள் வைத்த வாதம் அவ்வளவு தூரம் ஏற்றுக் கொள்ளும்படியாக இல்லை.ஆனால் குருமூர்த்தி அவர்களோ அரசின் இந்தச் செயலினால் சிறுவணிகர்களும்,பொதுமக்களும் மிகவும் பாதிக்கப்படப்போகிறார்கள் என்று ஆணித்தரமாக எல்லோரும் ஏற்கும்படி எழுதி இருந்தார்.
ஆனால் உண்மைநிலையை நீங்கள்தான் துணிச்சலாக எழுதி உள்ளீர்கள்.எனது பள்ளிநாட்களில் எங்கள் ஊர் காய்கறி கடைகளில் வாங்க சென்றால் ஒவ்வொரு கடைகளிலும் ஒரே காய்கறியின் விலை வித்தியாசமாக இருக்கும் நமக்கு இருக்கும் பேரம் பேசும் திறத்திற்கு ஏற்ப விலை குறைத்துக் கொடுப்பார்கள்.ஆனால் இன்றோ இந்தக் கோடியில் இருந்து அந்தக் கோடி வரை எல்லா கடைகளிலும் ஒரே விலைதான்.எவ்வளவு அநியாய விலையாக இருந்தாலும் தேவை இருந்தால் வாங்கித்தான் ஆகவேண்டிய கட்டாய நிலை.அவர்களுக்குள் குழு அமைத்துக்கொண்டு நம்மிடம் கூசாமல் கொள்ளை அடிக்கிறார்கள்.இதே நிலைதான் பாவப்பட்ட விவசாயிகளுக்கும்போலும்.
உங்கள் கட்டுரையில் இருந்து ஒன்று மட்டும் தெளிவாகத் தெரிகிறது அரசின் இந்த நடவடிக்கையினால் பன்னாட்டு கம்பனிகளும் ,இங்குள்ள மாபியா வணிகர் கும்பல்களும் இதில் கைகோர்க்காதவரையில் இத் திட்டத்தினால் பொது மக்களுக்கும்,விவசாயிகளுக்கும் திட்டமாக நன்மைதான்.
மேலும் கடந்த தி.மு.க. வின் அவல ஆட்சியின் ஒரே நல்லதிட்டம் ‘உழவர் சந்தை’ என்பதிலும் சந்தேகமேயில்லை.
இனி என் சந்தேகம் குருமூர்த்தி போன்றவர்கள் கூட இதை எல்லாம் கணக்கில்கொள்ளாமல் ஏன் இதை முழுமூச்சாக எதிர்க்கிறார்கள் என்பது தான் ? முடிந்தால் தெளிவுபடுத்தவும்.
தங்களுக்கு மிக்க நன்றி.
அன்புடன்,
அ .சேஷகிரி,
ஆழ்வார்திருநகரி.