அன்புள்ள ஜெயமோகன்,
நான் தங்களுடைய “ஏழாம் உலகம்” தற்போதுதான் படித்தேன். “நான் கடவுள் ” ஒரு வித்தியாசமான தளமாக இருக்கிறதே அதன் மூலமான இந்த நாவலை படிக்க வேண்டும் என முன்பே நினைத்திருந்தேன் இப்பொழுதுதான் அதற்கான நேரம் வந்தது. மலைத்து போனேன். நாம் வாழும் இந்த உலகத்தில்தான் இந்த “மனிதர்களும் ” வாழ்கிறார்கள் என்று ஜீரணிக்கவே என்னால் முடியவில்லை.
“முத்தம்மை ” என்னை மிகவும் பாதித்த ஒரு பாத்திரப்படைப்பு . தாய்மை உணர்வு உணர கையும் காலும் தேவையில்லை என்று உணர்த்திய பாத்திரம். பால் தரும் பசுவைப் போல அவளைப் படைத்த விதம். அதை நமக்கு உணர வைக்கும் வார்த்தைகள் “அணைய விடணும்” “ஈனிட்டாள்” ஊனமுறுவதைக் குறைக்க ஒரு பக்கம் பெரு முயற்சிகள் அரசாங்கம் எடுத்துக் கொண்டு இருக்க, ‘உருக்களை’ உருவாக்குவதைத் தொழிலாகக் கொண்ட ஒரு கூட்டம், அதன் உச்சக் கட்டத் துயரம் பன்றிகள் புரளும் ஒரு மலக் கிடங்கிற்கு அருகில் ஒரு ஊனமுற்றஇளைஞனை அவளை அணையவிடும்போது,’’வேண்டாம் உடையோரே ! இவன் ஒற்றை விரல் காரன் வேண்டாம் ” என அவள் கதறக் கதற அவள் “கற்பழிக்கப்” படும் இடம். அப்படிப்பட்ட முத்தம்மையிடம் ஏற்பட்டிருக்கும் ரகசிய ஈர்ப்பைத் தன்னை மீறி வெளியிடும் போத்தி அடுத்த நிமிடமே மனதிலிருந்து அதனை அழித்து விடச் சொல்லும் அச்சம். இது மனித மனத்தின் விசித்திரக் கோலத்திற்கு ஒரு ஆழமான உதாரணம்.
முத்தம்மை போலவே என்னை மிகவும் அதிர வைத்த மற்றுமொரு பாத்திரம் “மாங்காடு சாமி” இரு கால்களும் இல்லாத அந்த சாமி வண்டியின் ஆட்டத்தில் கீழே விழுந்து கிடப்பதை சொல்லும்போது நான் சிறு வயதில் விளையாடிய பொம்மை கால ஓட்டத்தில் இரு கைகளும் இரு கால்களும் பிய்த்து எறியப்பட்ட நிலையில் ஒரு முண்டமாக மூலையில் கிடக்கும்.அதை வைத்தும் கூட விளையாண்டு கொண்டிருந்தது மெல்லிய நீரோட்டமாக நினைவிற்கு வருகிறது. தான் பிச்சைக்காரனாக இருக்கும் இடத்தில் ஒரு சாமியைப் போலக் கற்பனை செய்துகொண்டு தலையை உயர்த்தியடி பாடிக் கொண்டு இருக்கும் சாமி, தான் சாமியாகக் கொண்டு போய் வைக்கப்பட்ட இடத்தில் பாட மறுத்து ஒரு பிச்சைக்காரனைப் போலக் குரல் கொடுக்கும் இடம் நல்ல முரண்பாடு.
பண்டாரம் தன் மகளின் திருமண சாப்பாடு தருவார் என்று எதிர்பார்த்திருந்த நிலையில் அது கிடைக்காமல் போகும் போது ஏங்கிப் போவதும் அதற்காக அங்கிருக்கும் உடலால் ஊனமுற்று மனத்தால் நிறைவாய் இருக்கும் உருக்கள் தன்னிடம் இருப்பதை ஐந்தும் பத்துமாக சேர்த்து அவனை ஹோட்டலுக்கு அனுப்பி வைப்பதும் அங்கு அவன் வயிறும் மனமும் நிரம்பி வழிய உண்டு திரும்பும் போது “கையைக் கழுவினால் வாசம் போய்டும்னு கையே கழுவாம வந்தேன். “என்று சொல்ல அவன் வலது கையில் சாம்பார் மணமும் இடது கையில் பாயச மணமும் பார்த்து சந்தோஷிக்கும் உருக்கள் என் மனதிலிருந்து அழிய இன்னும் நெடுங்காலம் ஆகலாம்.
பாலச்சந்தரின் படம் பார்த்துத் திரும்பும் போது படத்தின் ஹீரோ , ஹீரோயினை விட மற்றவர்கள் நம் மனதை இறுக்கிப் பிடித்து வைத்திருப்பார்கள். அதை போல “ஏழாம் உலகத்தின்” ஒவ்வொரு உருக்களும் என் மனதை ஒவ்வொரு மூலைக்குமாய்ப் பிடித்து இழுக்கின்றன. என்ன செய்யப் போகிறேனோ தெரியவில்லை. உடல் ஊனமுறாமல் எல்லா வசதிகளுடனும் வாழ்வது ஏதோ பெருங் குற்றம் செய்தது போலத் தோன்றுகிறது. வாசித்த எனக்கே இதிலிருந்து மீளும் வழி(லி) தெரியவில்லை, எழுதிய நீங்கள் எப்படி தப்பித்தீர்கள். இறைவன் அருள் கிடைக்கட்டும்
அன்புடன்
ருஃபினா ராஜ்குமார்
அன்புள்ள ருஃபினா,
நன்றி
நீங்கள் சொல்வது உண்மைதான். நான் இளமையில் அலைந்த உலகில் சென்று பார்க்க என் மகனை நான் கண்டிப்பாக அனுமதிக்க மாட்டேன். அப்போது எதிர்காலம் என்ற சிந்தனையே இல்லாமல் இருந்தேன். அதற்கான மனநிலை அன்றிருந்தது. ஏழாம் உலகில் எதிர்காலமே இல்லை.
ஜெ